Last Updated : 06 Aug, 2015 10:17 AM

 

Published : 06 Aug 2015 10:17 AM
Last Updated : 06 Aug 2015 10:17 AM

இன்று அன்று | 1925 ஆகஸ்ட் 6: விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி சுரேந்திர நாத் பானர்ஜி

வங்கதேசத்தின் பிரதான நகரமான பாரிசால் அந்நியப் பொருட்களைப் பகிஷ்கரித்து சுதேசிப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தியபின், விடுதலைப் போராட்ட வீரர்களின் தலைநகரமாக மாறியது. 1905-ல் வங்கதேசம் பிரிக்கப்பட்ட பின் அமைதி இழந்த பாரிசால் நகர மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் ஆவேசமாகக் களம் இறங்கினர். ‘வந்தே மாதரம்’ என யாரும் கோஷம் எழுப்பக் கூடாது என ஆங்கில அரசு அப்போது தடைவிதித்தது. விடுதலைக்கான எழுச்சியை ஒட்டுமொத்தமாக ஒடுக்க 600-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாரிசால் வீதிகளில் அணிவகுத்தனர்.

சற்றும் அஞ்சாத விடுதலைப் போராளிகள் 14 ஏப்ரல் 1906-ல் பாரிசாலில் இந்திய தேசிய காங்கிரஸின் வங்க மாகாண மாநாடு நடத்தினர். மாநாட்டில் கலந்துகொண்ட சுரேந்திர நாத் பானர்ஜி “தடை ஆணையின்படி ஆங்கிலேயப் பிரதிநிதிகளை வரவேற்கும்போது வந்தே மாதரம் பாடக் கூடாது. தவிர, இதர நேரங்களில் வந்தே மாதரம் பாடத் தடையில்லை” என ஆயிரக்கணக்கான தேச பக்தர்கள் முன்னிலையில் சிம்மக்குரல் எழுப்பினார். வெகுண்டெழுந்த காவல்படையினர் கூடியிருந்த பொதுமக்கள், தலைவர்கள் என அனைவர் மீதும் கொடூரமாகத் தடியடி நடத்தினர். சுரேந்திர நாத்தும் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஆங்கிலேய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தைத் துணிச்சலாக விமர்சித்தார். அதன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது. விடுதலையான கையோடு உற்சாகமாக மாநாட்டில் மீண்டும் கலந்துகொள்ளப் புறப்பட்டார்.

ஏகாதிபத்தியத்துக்கு ஒருபோதும் தலைவணங்காத சுரேந்திர நாத் பானர்ஜியை ஆங்கிலேயர்கள் ‘சரண்டர் நாட் பானர்ஜி’ என்றே அழைத்தனர். ‘ராஷ்டிர குரு’ (தேசத்தின் குரு) என வாஞ்சையோடு அழைக்கப்படும் அவர், நவீன இந்தியாவைத் தோற்றுவித்தவர்களின் முன்னோடி ஆவார். இந்தியாவின் முதல் அரசியல் அமைப்பான இந்திய தேசியச் சங்கத்தை நிறுவியதும் அவர்தான்.

1848-ல் கொல்கத்தாவில் பிறந்த சுரேந்திர நாத், குழந்தைப் பருவம் முதலே சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார். இந்தியாவில் இளங்கலை சட்டம் படித்துவிட்டு, 1871-ல் இங்கிலாந்தில் இந்திய ஆட்சிப் பணி துறைக்கான தேர்வில் வெற்றிபெற்றார். ஆனால், ஆங்கில அரசு பணி அமர்த்த மறுத்தது. நெடிய போராட்டத்துக்குப் பிறகு பதவி பெற்றும் பயனில்லை. 1874-ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தியா திரும்பியவர், ஈஷ்வர் சந்திர வித்யா சாகர் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். தன் எழுச்சிமிக்க உரையால் மாணவர்களுக்குத் தேசபக்தியும் விடுதலை தாகமும் ஊட்டினார். அவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவர் அன்று நரேந்திரநாத் என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர்.

1892-ல் வங்காளச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 1902-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். 1879-ல் ‘பெங்காலி’ எனும் பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டு, வெகுஜன மக்களிடம் சுதந்திர வேட்கையைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். சுதந்திரப் போராட்டத்துக்கான காரணகர்த்தாவாக விளங்கியவர் 1925 ஆகஸ்ட் 6 அன்று காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x