Last Updated : 13 Mar, 2020 03:57 PM

 

Published : 13 Mar 2020 03:57 PM
Last Updated : 13 Mar 2020 03:57 PM

50-வது அத்தியாயத்தில் இந்து தமிழ் திசையின் Rewind With Ramji

இந்து தமிழ்திசை இணையதளத்தின் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘Rewind With Ramji' எனும் நிகழ்ச்சி, 50-வது அத்தியாயத்தை நெருங்கியது.

இந்து தமிழ் திசை இணையதளத்தில் இருந்து, பல நிகழ்ச்சிகள், யு டியூப் வழியே ஒளிபரப்பாகி வருகின்றன. இன்னும் ஏதேனும் செய்தால் என்ன என்று அடிக்கடி குழு நண்பர்களுடன் பேசிக்கொள்வது உண்டு. பழைய நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பேட்டி எடுத்தால் என்ன என்று தோன்றியது. அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பேட்டியாக, மனம் திறந்த உரையாடலாக, கலந்துரையாடல் போல் இருந்தால் நன்றாக இருக்குமே... என பேசிக்கொண்டபோது, அப்போது ’இந்து தமிழ் திசை’ ஆன்லைனில் பணிபுரிந்த நண்பன் அரவிந்த் சட்டென்று சொன்ன டைட்டில்தான்... 'Rewind With Ramji'.


ஓகே செய்யப்பட்டு, ஒருமாதமாகியும், நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. முதல் பேட்டி, ஒருகட்டத்தில் மிகப்பெரிய அளவில் கோலோச்சியவராக இருக்கவேண்டும் என நினைத்ததும் ஒரு காரணம். அப்போதுதான் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் சாரிடம் ‘ஒரு கை ஓசை’ சம்பந்தமாகப் பேசினேன். ‘சார்... நீங்க ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் டைரக்ட் பண்ணி, 40 வருஷமாவுது சார். அதுக்காக ஒரு பெரிய பேட்டி வேணும் சார்’ என்றதும், ‘சரி ராம்ஜி, அடுத்த வாரத்துக்கு மேல எடுத்துக்கலாம்’ என்றார்.


ஒரு மழை நாளில், ஞாயிற்றுக்கிழமை வேளையில், பேட்டி அளித்தார். கிட்டத்தட்ட நான்கரை மணி நேரப் பேட்டி அது. ‘சார், நடுநடுல சட்டையை மாத்திக்கலாம் சார்’, ‘இப்போ இந்த சோபால உக்கார்ந்துக்கிட்டுப் பேசுறோம் சார். அப்புறமா, இங்கே நின்னுக்கிட்டே பேசுறோம் சார்’, ‘சார், வேஷ்டி கட்டிக்கிட்டு ஒரு சேப்ட்டர் இருந்தா நல்லாருக்கும் சார்’... என்று சொன்னதற்கெல்லாம் சம்மதித்தார். நான்கரை மணி நேரப் பேட்டி. நடுவே போன் பேசுவது, ‘சீக்கிரமா முடிச்சிருங்க’ என்பது, நேரமாக ஆக, டீட்டெய்ல் சொல்லாமல் மேம்போக்காகச் சொல்வது... இப்படியாக எதுவுமில்லாமல், ஆத்மார்த்தமாக, ஆரம்ப எனர்ஜியுடனும் ஈடுபாட்டுடனும் பேட்டி கொடுத்த பாக்யராஜ் சார், உண்மையில் ஆச்சர்ய, அதிசய, அன்பு நிறைந்த மனிதர்தான்!


கிட்டத்தட்ட ஐந்து பாகங்கள் வந்து, நேயர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.


‘ஆசை’ படத்தின் 25-வது வருடம். அதையொட்டி, இயக்குநர் வஸந்த் எஸ் சாய் சாரிடம் பேட்டி எடுத்ததும் ‘ஆசை’ மட்டுமின்றி, அதற்கு முந்தைய வாழ்க்கை குறித்தும் அஜித் குறித்தும் அவரின் குருநாதர் கே.பாலசந்தர் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.


கமலா காமேஷ் பேட்டியும் தித்திப்புச் சந்திப்பாக அமைந்தது. பழசையெல்லாம் அத்தனை அழகாக ஞாபக அடுக்கில் இருந்து சொல்லிக்கொண்டே வந்த விதம் பிரமிப்பாக இருந்தது. கணவர் காமேஷ், இயக்குநர் விசு, நாடகம், சினிமா, பாரதிராஜா, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கடலோரக்கவிதைகள்’, சத்யராஜ், எம்ஜிஆர் என தன் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துகொண்டார்.


‘உதிரிப்பூக்கள்’ படம் வெளியாகி 40 வருடங்கள். இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த நடிகரும் இயக்குநருமான ‘யார்’ கண்ணன், பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் ‘உதிரிப்பூக்கள்’ என டைட்டில் வைத்ததே இளையராஜாதான் என்பதான தகவல்களும் சுவாரஸ்யமாக இருந்தன.


நடிகர்கள் ஆனந்த்பாபு, பிரதாப் போத்தன், பாண்டு என்றும் பேட்டிகள் வெளியாகின. நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன் சார், இரண்டு மூன்று முறை பேசிய பிறகு ஒத்துக்கொண்டார். சொன்ன நாளில், அங்கே சென்று கேமிராவை செட் செய்துகொண்டிருந்தபோது, ‘ஒருவிஷயம் ராம்ஜி, இதுதான் நான் கொடுக்கக்கூடிய முதல், முழு வீடியோ பேட்டி’ என்றார். நல்ல கதாசிரியர் அவர். கதைசொல்லியாகவும் இருந்தார். மனம் திறந்து பேசினார். விட்டேத்தியாக சினிமாவை அணுகியதையும் வெளிப்படையாகப் பேசினார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வாழ்வியலை உணர்த்திக்கொண்டே இருந்தார்.


மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அந்தப் பேட்டி, மிகவும் பேசப்பட்டது. ஏராளமான நேயர்கள் ரசித்தார்கள். சிவசந்திரனைக் கொண்டாடினார்கள். இரண்டு லட்சம், இரண்டரை லட்சம் கடந்து பாராட்டுகள் பலவற்றைப் பெற்றது.


நடிகை வடிவுக்கரசி மேடம். முதல் போன் அழைப்பிலேயே, பேட்டிக்கு சம்மதித்துவிட்டார். ஆனால் நேரமும் நாளும் சொல்லவே இல்லை. இடையே பத்துமுறையாவது பேசியிருப்போம். தட்டிக்கழிக்கும் நோக்கமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள் சொல்ல, அதை உணர்ந்து தொடர்ந்து தொடர்பிலேயே இருந்தேன். இப்படியான பேச்சினூடே, எழுத்தாளரும் என் குருநாதருமான பாலகுமாரன் சார் பற்றி அவர் பேசியதும், பல வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய தொடராக நான் எழுதிய திருப்பட்டூர் பிரம்மா கோயில் பற்றி பேசியதும், ஆச்சரிய எபிசோடுகள்.


ஒருநாள் காலை சொன்ன நேரத்துக்கு வந்தார். கிட்டத்தட்ட இரண்டேகால் மணி நேரப் பேட்டி. மனதின் அடியாழத்தில் இருந்து அவர் பேசிய பேச்சுகள், பார்த்த நேயர்களின் அடிமனதைத் தொட்டது. ’அம்மா அம்மா’ என கொண்டாடினார்கள். நான்கைந்து எபிசோடுகள். ஒரு பாகம் மட்டுமே ஐந்து லட்சத்தைக் கடந்தது என்பதுதான், வடிவுக்கரசிம்மா பேட்டியின் ஒருசோறு பத உதாரணம்.


’ஸாரி சார், ஜெமினி மேம்பாலத்துக்கிட்ட நல்ல டிராபிக். அதான் லேட்டாயிருச்சு’ என்றேன்.
‘நல்ல டிராபிக்தானே. கெட்ட டிராபிக்தான் பிரச்சினை’ என்றார் சட்டென்று!


வேறு யார்? பார்த்திபன் சார்தான். அவரின் பேட்டியும் அவர் அலுவலகத்தில் மண் கப்பில் வழங்கிய தேநீரும் மறக்கமுடியாத ருசி. தோல்விகளையும் காயங்களையும் ஏமாற்றங்களையும் வெற்றிகளையும் ஒளிவுமறைவில்லாமல், சாயங்கள் பூசாமல் சொன்னார். ‘ப்ரோமோ’ வித்தியாசமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவரிடம் சொன்ன இரண்டுவிஷயங்களையும் ஏற்றுக்கொண்டார். அவற்றை இன்னும் மெருகேற்றிச் சொன்னார். அது பார்த்திப ஸ்டைல் டச்!

’என்னடா இவரு? சரியாப் பேசமாட்டாரோ?’ என்று தயங்கித் தயங்கி இயக்குநர் கஸ்தூரிராஜாவின் அலுவலகம் சென்றோம். ஆனால், பேட்டி தொடங்கிய பதினைந்தாவது நிமிடத்தில் இருந்து, அவர் பேசிய பேச்சுக்களெல்லாம் டச்சிங். அத்தனை யதார்த்தம்.
டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் சாரும் அப்படித்தான். பிறந்தது முதலான அவர் வாழ்க்கையைச் சொன்னார். பட அனுபவங்கள், நடிகர்களுடனான அனுபவங்கள் என பகிர்ந்துகொண்டார். நடிகை சத்யபிரியாம்மாவின் குரலும் பேசுகிற ஸ்டைலும், வில்லத்தனத்துடன் இருக்கும். பயந்துபயந்து பேசினேன். அதை அவரிடம் சொன்னபோது வெடித்துச் சிரித்தார்.

மதியம் இரண்டுமணிக்கு என்றார். தயாராக உட்கார்ந்திருந்தார். கலகலவெனப் பேச்சைத் தொடங்கியவர், நான் ஸ்டாப்பாக, சுவாரஸ்யம் குறையாமல் பகிர்ந்துகொண்டார். ஏகப்பட்ட அனுபவங்கள். சிரிக்கச் சிரிக்கப் பேசினார். சிரிக்கவைத்துப் பேசினார்.


எடிட்டர் மோகன் சாரும் அப்படித்தான். அடேங்கப்பா... நூறு எபிசோடுக்கான கதைகளும் அனுபவங்களும் வைத்திருக்கிறார். மிகச்சிறந்த கதைசொல்லி. எதையும் மிகைப்படுத்தாமல், உள்ளது உள்ளபடி, நடந்தது நடந்தபடி சொன்ன விதம்... வியப்பும் மலைப்புமாக இருந்தது.
சித்ரா லட்சுமணன் சாரும் சுவாரஸ்ய மனிதர். ஒவ்வொரு விரலிலும் ஓராயிரம் தகவல்கள். ‘பசி’ சத்யா மேடம், மதுரையில், நாடகத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்து சொல்லத்தொடங்கினார். ‘பசி’ படமும் அதன் அனுபவமும் சிரிக்கவும் நெகிழவும் செய்தது.


இதோ... இன்றைய ‘பசி’ சத்யாவின் நான்காவது எபிசோடு... 'Rewind With Ramji'யின் 50-வது எபிசோடு.


ஒளிப்பதிவு நண்பர்களுக்கும் இணையதளக் குழுவில் உள்ள அத்தனை நண்பர்களுக்கும் முக்கியமாக, ’இந்து தமிழ் திசை’யின் யுடியூப் நேயர்களுக்கும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் நன்றியை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x