

"என் வாழ்க்கையை நாசப்படுத்துபவர்களே என் நண்பர்கள்தான்" என்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களின் வேலையை, உறவுகளை, மகிழ்ச்சியைக் கெடுக்கும் சில சம்பவங்களை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
'கல்லூரியில் இருந்தது போலவே இருக்க வேண்டும்; அந்த நாட்களுக்குத் திரும்ப வேண்டும்' என்று கூறுபவர்கள் நண்பர்களா உங்களுக்கு? இரண்டு இள வயதுப் பையன்களுக்கு அப்பாவாக, 40 வயதுக் குடிகாரராக இருப்பவர் உங்கள் நண்பரா? ஆனாலும், 'சாகும் வரை எனக்கு வயது பதினெட்டு தான்' என்று கூறுபவரா அவர்? இது நல்லதற்கு இல்லை. ஒரே மாதிரியாகக் கடைசி வரை வாழ, வாழ்க்கையொன்றும் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை.
அத்தகைய நண்பர்களுடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லையா? மோசமான அந்த உறவுமுறையில் இருந்து வெளியே வந்துவிடுங்கள். இல்லையென்றால் மொத்த நட்பையுமே அது முறித்துவிடும். காலத்தின் கட்டாயத்துக்காக பிடிக்காத நட்பில் இணைந்திருப்பது யாருக்குமே நல்லதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் நண்பர்கள் மாறும்பொழுது, அவர்களுடனான உங்கள் பிணைப்பும் நிச்சயம் மாற வேண்டும்.
உங்களின் நண்பர் செல்லும் வழி சரியாக இல்லையென்றால் சொல்லித் திருத்தப் பாருங்கள். முடியவில்லையா? அவர்களை விட்டு வெளியே வரத் தயங்காதீர்கள். நிச்சயம் அவரைவிடச் சிறந்த நண்பர் உங்களுக்குச் சீக்கிரத்திலேயே கிடைக்கக்கூடும்.
மணமான நண்பர்களின் நச்சரிப்பு
திருமணமான உங்களின் நண்பர்கள், அவர்களுக்குத் தெரிந்த நண்பனை/ நண்பியைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களா? நிச்சயம் நீங்கள் அந்த 'நண்பர்கள் குழு' பலிபீடத்தின் தியாகச் செம்மலாய் இருக்கக்கூடும்.
குழுவின் இணக்கத் தன்மையைக் குலைக்காமல் இருக்க, வெளியாட்களை உள்ளே விடாத தனிக்குழுக்கள் பல உண்டு. ஆனால் அந்த பொதுவான சமூக வட்டத்திற்குள் மட்டுமே சரியான ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எதற்கு?
பெற்றோர்கள், உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது எவ்வளவு மோசமோ, அவ்வளவு மோசம் நண்பர்கள் வற்புறுத்துவதும்.
வாழ்க்கை முழுவதும் உங்களோடு வாழப் போகிற வாழ்க்கைத்துணை யாரென்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நண்பர்கள் ஆய்வு நடத்தித் தேர்ந்தெடுத்தவர்களைப் புறந்தள்ளுங்கள்.
பொறாமை பிடித்த நண்பர்களிடம் இருப்பது
உங்களின் நண்பர்களும் மனிதர்கள்தான் என்பதை மறக்காதீர்கள். ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக வாழ்க்கையைத் தொடங்கிய இரு நண்பர்களில், ஒருவர் மட்டும் இப்போது உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். அப்போது பொறாமை ஏற்படுவது மனித இயல்பே. உண்மையான நண்பன் என்பவன், தன் பொறாமை என்னும் அரக்கனைப் புதைத்துவிட்டே உங்களுடன் பழகுவான். எல்லாரும் அப்படியே இருப்பார்களா என்ன?
சிறப்பான வேலை கிடைத்து வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். உங்களைப் பிரிவதில் வருந்துவதாகக் கூறி, கோபப்பட்டு, அழுது புலம்பும் நபர், நீங்கள் சென்ற பின்னர் சந்தோஷப்படலாம். அவர் நட்பான எதிரி.. 'நண்திரி' (நண்பர்+எதிரி) என்று சொல்லலாம்.
மற்றொரு நண்பர், நீங்கள் கிளம்ப எல்லா உதவிகளையும் செய்து, அங்கிருந்து பேச உங்களை ஸ்கைப்பிலும் இணைத்துக் கொள்ளலாம். உண்மையான நண்பன் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களோடு மட்டுமே பேசுங்கள்.
'நண்திரி' தவறான வழியில் உங்களை நடத்திச் செல்வார். நீங்கள் வெற்றியாளராக இருப்பது குறித்து நீங்களே வருத்தப்படும்படி செய்வார். கவனம் தேவை.
நண்பர்கள் கூட்டத்தின் ஏ.டி.எம்.
ஒவ்வொரு தடவை வெளியே போகும்போதும், ஒட்டுமொத்த நண்பர்கள் கூட்டத்துக்கே ஏ.டி.எம்.ஆக இருக்கிறீர்களா? உங்களின் ஒவ்வொரு முயற்சிகளும், உங்களின் தோழர்களால் விமர்சிக்கப்படுகிறதா? இந்த இரண்டில் ஒன்றுக்காவது ஆம் என்றால், நீங்கள் அங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். அத்தகைய நண்பர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகளே. நண்பர்கள் அல்ல.
இரத்தத்தை உறிஞ்சும் அவர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்களை நீங்களாகவே ஏற்றுக் கொள்ளும் நண்பர்களைக் கண்டுபிடியுங்கள். புதிய நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்வது கடினம்தான். ஆனால் ரகசியமாக உங்களைத் தூற்றும் நண்பர்களைச் சுற்றி வாழ்வதும் எளிதில்லையே?
தமிழில்:க.சே. ரமணி பிரபா தேவி