Last Updated : 03 Mar, 2020 10:48 AM

 

Published : 03 Mar 2020 10:48 AM
Last Updated : 03 Mar 2020 10:48 AM

இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல! 

மார்ச் 3- சர்வதேச வன உயிர்கள் தினம்- சிறப்புக் கட்டுரை

நீரும், நிலமும், காற்றும், ஆகாயமும், ஏன் அண்டவெளியும் எனக்கானது, என்னுடையது என்ற மனிதனின் குறுகிய எண்ணம்தான் காடுகள் ரிசார்ட்டுகளாக மாறவும், யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டவும், வன உயிர்களை மருந்துக்காகவும், அலங்காரப் பொருட்களுக்காகவும் வேட்டையாடவும் அவனுக்கு முட்டாள்தனமான துணிச்சலைத் தந்திருக்கிறது.

'முட்டாள்தனம்' என்பது சற்றே தடிமனான வார்த்தையாகக் கூடத் தெரியலாம். ஆனால், வன உயிர் ஆர்வலர்கள் மனிதனின் இந்தப் போக்கை 'முட்டாள்தனம்' என்றுதான் வரையறுக்கின்றனர்.

நான் மனிதன் என்ற ஆதிக்க சிந்தனையாலேயே வனங்கள் அழிகின்றன என்று குற்றஞ்சாட்டுகின்றனர். மனிதனின் ஆதிக்கத்தால் வன உயிரினங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அலைகின்றன என வருந்துகின்றனர்.

இந்த வருத்தத்துக்கு அக்கறைக்கு ஒரு சர்வதேச வடிவம் கொடுக்கப்பட்டது. மனிதனால் அழிந்துவரும் வன விலங்குகளைக் காக்கவும், இயற்கைச் சமநிலையைப் பேணவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச வன விலங்குகள் தினம் (மார்ச் 3) கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி, 68-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மார்ச் 3 'சர்வதேச வனவிலங்குகள்' தினமாக அறிவிக்கப்பட்டது.

வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கரு (Sustaining all life on Earth) இந்த பூமியை எல்லா உயிர்களுக்குமானதாக உருவாக்குவது.

இந்த கரு உணர்த்த விரும்புவதும் 'இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல' என்ற படிப்பினையைத் தான்.

சிறப்பு தினம், பிரத்யேகக் கரு எல்லாம் சரி, வனத்தைப் பற்றியும் வன விலங்குகள் பற்றியும் இன்று ஒரு நாள் மட்டும் நாம் பேசினால் போதுமா? புரிதலற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிடுமா என்றால் நிச்சயமாகக் கிடையாது. தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கே வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம். சர்வதேச உச்சி மாநாடுகள், கருத்தரங்குகள் எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

நாம் வாழும் நாட்டில் நமது மாநிலத்தில் இந்தப் புனிதமான பணியை நிறைய பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் இயற்கை ஆர்வலர்கள் என்று வகைப்படுத்தி பொறுப்பு மொத்தமும் அவர்களிடத்திலேயே இருப்பது போல் ஒதுங்கி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படி இருக்காதீர்கள். திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஆர்.ராமமூர்த்தியையும் அவரது மகள் ஆர்.திவ்யபாரதியையும் அவர்களின் பணி என்னவென்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியப் பணியாக சாமான்ய மக்களிடம் குறிப்பாக குழந்தைகளிடம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வனத்தைப் பற்றி பேசி வருகின்றனர்.

சர்வதேச வன விலங்குகள் தினத்தில் ராமமூர்த்தி, பாரதி வாயிலாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இந்து தமிழ் இணையதளம் மகிழ்ச்சி கொள்கிறது.

விவசாயி ராமமூர்த்தியிடம் நாம் வைத்த முதல் கேள்வியே உலக அரங்குகள் வேண்டாம் உள்ளூர் பள்ளி, கல்லூரிகள் தான் வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் வித்தியாசமாக இருக்கிறதே?

இதற்கு ராமமூர்த்தியின் பதில், "சிறு வயதிலிருந்தே யானைகள் பிடிக்கும். யானைகளைப் பார்ப்பதற்காகவே வனப்பகுதிகளுக்குச் செல்வேன். அப்போது யானைகளுடன் வனத்தின் மற்ற அழகையும் ரசிக்கத் தொடங்கினேன். என் மகள் வளர்ந்த பின்னர் அவர் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் சிறப்பு நாட்டம் கொண்டவராக உருவாகியிருந்தார். அவருடன் பல வனங்களுக்கும் சென்றிருக்கிறேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் காண வேண்டும் என நாங்கள் இருவருமே முடிவு செய்தோம். மகள் திவ்யா எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களுடன் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் வாயில்களைத் தட்டினோம். இன்று இதோ எங்களால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு காக்கா, குருவி தவிர வேறு பறவைகளே தெரிவதில்லை. அதே கிராமத்துக் குழந்தையிடம் கேட்டால் ரெட்டைவாலி, கருவாட்டுவாலி என்று பெயர் சொல்லி சரியாகக் குறிப்பிடுகிறார்கள். நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இயற்கைச் சூழலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் வளரும்போது எஞ்சியிருக்கும் காடுகளையாவது அழியாமல் பார்த்துக் கொள்வார்கள்" எனக் கூறுகிறார்.

தந்தை உற்சாகத்தில் சற்றும் குறையாது பேசுகிறார் திவ்யபாரதி (24). திவ்யா தனியார் கல்லூரியில் ஆங்கில மொழிப் பயிற்றுநராக இருக்கிறார். ஆனால், விடுப்பு கிடைக்கும்போதெல்லாம் தந்தையுடன் வனங்களுக்குப் பயணப்படுகிறார். வன உயிர்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். வனத்தின் வனப்பும் ஆவணமாகிறது. அவற்றை இயற்கையின் வாசம் மாறாமல் எடுத்துக் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்குப் பயணப்படுகிறார். இதை ஏன் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நாம் வாழும் இதே பூமியில்தான் இத்தனை இத்தனை அரிய விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் நீர்வாழ் உயிரினங்களும் வாழ்கின்றன. அவற்றை நாம் காணத் தவறக்கூடாது. இயற்கையின் மதிப்பை இளம் வயதிலிருந்தே கற்றுக்கொடுத்தல் அவசியம். அதுவும் குறிப்பாக வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது உணவுப் பொருட்களை குரங்குகள், மான்களுக்கும், பறவைகளுக்கும் கொடுக்கக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறோம். அது வனவிலங்குகளின் உணவுப் பழக்கவழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை "தமிழகக் காடுகளும் பல்லுயிர்களும்" என்ற தலைப்பில் பேசிவருகிறோம்" எனக் கூறினார்.

இந்த பூமியை எல்லா உயிர்களுக்குமானதாக உருவாக்குவது என்ற கருவை நோக்கி வெகு சிறப்பான ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கும் தந்தையும் மகளும் ஆச்சர்யத்தைத் தருகின்றனர்.

சர்வதேச வன விலங்குகள் தினத்துக்கான திவ்யபாரதி சொல்ல விரும்பியது:

இந்த பூமியில் மனிதர்களே இல்லாமல் போனாலும்கூட இங்குள்ள தாவரங்களும் விலங்குகளும் பூச்சிகளும் பறவைகளும் இன்னும் பல வன உயிரிகளும் எப்போதும் போலவே இருக்கும் இயங்கும். ஆனால், இவை ஏதும் இல்லாமல் போனால் மனிதனால் வாழ முடியாது. மனிதன் இதை முதலில் உணர வேண்டும். இயற்கையைப் பற்றிய தவறான புரிதல்களால் தன்னைத் தானே கட்டிவைத்திருக்கும் மனிதன், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும்.

தன்னுடைய விழிப்புணர்வு வாசகத்தை சொல்லி முடித்த திவ்யா, வன விலங்குகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்படும் திட்டங்களை வரவேற்றுப் பேசினார்.

"புலிகள் பாதுகாப்பு திட்டம் (ப்ராஜக்ட் டைகர்), யானைகள் பாதுகாப்பு திட்டம் (ப்ராஜக்ட் எலிஃபன்ட்) போன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவை. பெரும்பான்மைச் சமூகம் வனத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கும் போது அரசாங்கமே இதுபோன்ற திட்டங்களை அறிவித்து அதை அடிமட்டத்தில் இருந்து செயல்படுத்த முயல்வது நல்ல பலன் தரும். ஆனால், என்னைப் போன்றோரின் கோரிக்கை புலி, யானைகள், இன்னும் பிற பெரிய விலங்குகள் மட்டுமே இயற்கை சமநிலைக்கு முக்கியமானது என்ற பிம்பம் தோற்றுவிக்கப்படக் கூடாது என்பதே. எறும்பு தின்னிகளும், கழுதைப் புலிகளும், அரிய வகை ஆந்தைகளும், பாறு கழுகுகளும் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த பூமியில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் பூமி உயிர்ப்புடன் இருக்க தனது பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால், நமக்கு அதன் பங்களிப்பின் அவசியம் தெரியவில்லை புரியவில்லை என்பதற்காக அவற்றை அழிவில் இருந்து மீட்டெடுக்காமல் போய்விடக் கூடாது" என்ற முக்கியமான வாதத்தை முன்வைத்தார்.

அந்த தற்சார்பை சிதைத்து விடாதீர்கள்..

வன விலங்குகளைப் பாதுகாப்பதும் வனத்தைப் பாதுகாப்பதும் முக்கிய இலக்காகும்போது காட்டுக்குள் இருக்கும் பூர்வகுடிகளை அப்புறப்படுத்துவதும் நடைபெறுகிறது. இது ஆண்டாண்டு காலமாகவே பெரும் விவாதப் பொருளாக இருக்கும் சூழலில் விவசாயி ராமமூர்த்தி தனது பார்வையை முன்வைத்தார்.

"என்னைப் பொறுத்தவரை பூர்வக்குடிகள் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடர்வனங்களில் வாழ்பவர்கள் தற்சார்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதற்காகவும் அவர்கள் கையேந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினால் நம்மைப் போல் நல் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்களையும் நம்மைப் போல் கூலி வேலையும், மது போதையும் என்று அடிமையாக்க வேண்டுமா என்பதே எனது கேள்வி. அவர்களுக்கு யானை பயங்கரமான மிருகம் கிடையாது, புலி கொடூரமான விலங்கு கிடையாது, பாம்புகள் நச்சுப் பிராணிகள் கிடையாது. அவற்றுடன் இயையந்த வாழ்க்கையை அவர்களுக்கு வாழத் தெரிந்திருக்கிறது. அவர்கள் இயற்கையோடு ஒன்றியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இயற்கைக்குமான அந்த உறவை அறுத்தெடுக்கும் முயற்சி மா பாதகமான முயற்சி. அதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை" என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.

தும்பியும், நரியும், பூனையும், தவளையும் கூட முக்கியம்

"சர்வதேச வன விலங்குகள் தினத்துக்கான தனது வேண்டுகோளாக மக்களுக்கு அவர் முன்வைப்பது, வனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்; பின்னர் வனத்தைப் பாதுகாக்க கைகோத்து வாருங்கள் என்பதே.

யானையும் புலியும் இல்லாவிட்டால் ஒரு காடு வளமான காடாக இருக்காது என்பதை நீங்கள் மேம்போக்காக அறிந்த அதே வேளையில் தட்டானும், தவளையும் இல்லாமல் போனாலும் வளம் போய்விட்டது என்பதை அறிய முற்படுங்கள் என்கிறார்.

மனிதன் இயற்கையை சுரண்டிக் கொண்டே சென்றால் இன்று குடி தண்ணீருக்கு கேனை நம்பியிருப்பது போல் நாளை சுத்தமான காற்றை சுவாசிக்க பிராண வாயு சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்துவிட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.

இன்று விவசாயிகளுக்கு மயில் பெரும் சவாலாக இருக்கக் காரணம் விவசாய நிலங்களை ஒட்டிய வனப்பகுதியையும் வனவிலங்குகளையும் அழித்ததே என்று சுட்டிக் காட்டுகிறார். குள்ளநரி, வங்கநரி, காட்டுப் பூனைகள் எல்லாம் மயில்களின் முட்டைகளை உண்டு வாழ்ந்தன. நாம் அவற்றை அழித்தோம் அதன் விளைவாக மயில்கள் பெருகி அவை விவசாய நிலங்களை அழிக்கின்றன" என்ற அடிப்படை நெறியை நமக்கு விளக்குகிறார் ராமமூர்த்தி.

இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல என்பதை மனிதன் எப்போது உளப்பூர்வமாகப் புரிந்து கொள்கிறானோ அன்று தான் இந்த பூமியை எல்லா உயிர்களுக்குமானதாக மீண்டும் கட்டமைப்பது சாத்தியமாகும். இன்றைய தினம் (மார்ச் 3) மட்டுமல்ல எல்லா நாளும் இதை கருத்தில் கொள்வோம்.

குழந்தைகளிடம் விண்வெளி பற்றியும் வேற்று கிரகங்கள் பற்றியும் மட்டுமே பேசாமல் காடுகள் பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் அதனுள் அவற்றோடு இயையந்த வாழ்க்கையை வாழும் பூர்வக்குடிகள் பற்றியும் பேசுவோம். நாமும் அங்கிருந்துதான் வந்தோம் என்று தெரிந்தால் அவர்கள் வன எதிரிகளாக நிச்சயம் மாற மாட்டார்கள்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x