Last Updated : 26 Feb, 2020 02:54 PM

 

Published : 26 Feb 2020 02:54 PM
Last Updated : 26 Feb 2020 02:54 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 13 - உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமா?

இந்த வாழ்க்கையின் உன்னதமே நம்பிக்கைதான். யாரோ யார் மீதோ, நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறவுகளிடமும் நண்பர்களிடமும் மனைவி குழந்தைகளிடமும் மேலதிகாரியுடனும் உடன் பணிபுரிபவர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அறிந்தவர்களிடமும் நம்பிக்கையுடனே பழகுகிறோம். நம்பிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

நம்பிக்கை என்பது ஒருவகையான எதிர்பார்ப்பு. சிலதருணங்களில் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிறது. நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. ‘உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமா?’ என்கிற ஒற்றை வார்த்தைக்குள் ஓராயிரம் காயங்களும் வலிகளும் அவமானங்களும் நிறைந்திருக்கின்றன. ’அவன் எவ்வளவு மோசமானவன்னு தெரியும்தானே. அவனைப் போய் எப்படி நம்பினே? நம்ப வைச்சுக் கழுத்தறுத்துட்டான் பாரு’ என்று சொல்லும் போது, நம்ப வைத்து கழுத்தறுத்தல் எனும் வார்த்தையைக் கூர்ந்து கவனித்தால், அப்படி நம்ப வைத்து கழுத்தை அறுப்பது என்பது உயிரே போய்விடுகிற அளவிலான பெருந்துயரம் வாய்ந்தது என்பதாகவே நினைக்கிறேன்.

‘இவனை நம்பலாம். நம்பி லட்ச ரூபா கூட கொடுக்கலாம். துரோகம் பண்ணமாட்டான்’ என்று சொல்லும் வகையிலான, சொல்லி நெகிழும்படியான பாஸிட்டிவானவர்களும் இருக்கிறார்கள்.

ஊரில் எனக்கொரு நண்பன் இருந்தான். அவனும் இன்னொரு நண்பனும் மிக நெருங்கிப் பழகினார்கள். டீன் பருவத்தில், இருவரும் எங்கு பார்த்தாலும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள். ஒருநாள்... எல்லோரும் உட்கார்ந்து பேசுகிற, பேசி அரட்டையடிக்கிற ஸ்கூல் கிரவுண்டில், இருவருக்கும் சண்டை. கட்டிப்புரண்டு சண்டை. உருண்டுபுரண்டு அடித்துக்கொண்டார்கள். நாங்கள் அவர்களை விலக்கிக் கொள்வதற்குள் படாதபாடுபட்டோம். சட்டை கிழிந்து, முகம் கிழிந்து, மூக்கு உடைந்து ரத்தம் வந்து... இருவரும் எதிரும்புதிருமாக நின்றார்கள். எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம். அதிர்ச்சி.

கடும்கோபத்தில் இருந்த நண்பன், எங்களிடம் சொன்னான். ‘இவன் என்ன தெரியுமாடா பண்ணிருக்கான்? நான் லவ் பண்றேன்னு எல்லாருக்குமே தெரியும். அவ கொடுத்த லெட்டரையெல்லாம் இவன்கிட்டதான் கொடுத்து பத்திரமா வைச்சிருக்கேன்னும் உங்களுக்குத் தெரியும். லெட்டர்ல இருக்கற விஷயம், உங்க எல்லாருக்குமே தெரியும்.

ஆனா, அதையெல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு இவன் என்ன பண்ணினான் தெரியுமா? அந்தப் பொண்ணைப் போய் மிரட்டிருக்கான். ‘உங்க அண்ணன்கிட்ட இந்த லெட்டரையெல்லாம் கொடுத்தா என்னாகும்னு தெரியுமா?’னு கேட்டிருக்கான். ‘நீ எழுதின லெட்டர்லாம் எங்கிட்டதான் இருக்கு. உன் அண்ணன்கிட்ட கொடுக்காம இருக்கணும்னா, எனக்கு முத்தம் கொடு’ன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிருக்கான்.

உங்க எல்லாரையும் விட நான் இவனை எவ்ளோ நம்பினேன். இப்படிப் பண்ணிட்டானேடா’’ என்று சொல்லிவிட்டு, எக்கிப் போய் அவன் முகத்தில் ஒருகுத்துவிட்டான். அடிவாங்கியவன் இடிச்சபுளியென இருந்தான். அடித்தவன் கதறியழுதான். அங்கே, நட்பு விரிசலானது. நம்பிக்கை பொய்த்துப் போனது.

அதன் பின்னர், காலேஜ், படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று காலங்கள் ஓடிவிட்டன. தொப்பையும் வழுக்கையுமாக இருக்கிற நண்பன், அந்தக் காதலையும் காதலியையும் மறந்தேபோனான். கடிதங்களையெல்லாம் அவனிடமிருந்து வாங்கி, அப்போதே எரித்துவிட்டான். ஏதோவொரு காரணத்துக்காக காதல் உதறினான். அந்த நட்பையும் நண்பனையும் சுத்தமாக வெறுத்து ஒதுக்கினான். பார்த்தாலும் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. நம்பிக்கை என்பது துரோகமாக மாறியதை உணர்ந்த தருணம் அது!

அந்த நண்பர் மிகப்பெரிய பணக்காரர். பரம்பரைச் சொத்துகளே ஏராளம். வீடுவாசலும் காடு கழனியும் எக்கச்சக்கம். அவருக்கு எல்லாமுமாக இருப்பவர் காளமேகம் அண்ணன். என் வயதைக் கடந்த பலரும் அவரை காளமேகம் அண்ணன் என்றுதான் அழைப்பார்கள். நானும் அப்படித்தான் அழைப்பேன்.

முதலாளி எப்போது தும்முவார், ஒருநாளைக்கு எத்தனை முறை தும்முவார், காலை முதல் இரவு வரை எங்கெல்லாம் செல்வார், என்னெவல்லாம் செய்வார் என அத்தனையும் அவரின் மனைவிக்குக் கூட தெரியாது. காளமேகம் அண்ணனுக்குத்தான் அத்துபடி. முதலாளியின் ப்ளஸ், மைனஸ் எல்லாமே அவருக்குத் தெரியும்.

ஆனால் முதலாளி குறித்து எந்த நெகட்டீவ் விஷயங்களையும் வெளியே கசியவிடமாட்டார். அப்படி எவரேனும் ஏதேனும் கேட்டால் கூட, சுள்ளென்று கோபமாகிவிடுவார்.

எல்லோருக்கும் கண்ணாடி பங்களா முதலாளி. ஆனால் காளமேகம் அண்ணனுக்கு மட்டும் ‘சம்மு’. அவர் பெயர் சண்முகம். அதைச் செல்லமாக, சிறுவயதிலிருந்தே ‘சம்மு’ என்றுதான் அழைத்து அவருக்குப் பழக்கம்.


வீட்டில் பெயிண்ட் அடிக்க ஆள் கூட்டி வருவதில் இருந்து, தோட்டத்து மோட்டார் பழுதை சரிசெய்வது, நெல் மூடைகளை வீட்டுக்குக் கொண்டுவருவது, விற்ற காசை கணக்குப் பண்ணுவது, கணக்குப் பண்ணிய பணத்தை ‘சம்மு’வின் மனைவியிடம் ஒப்படைப்பது, அவரின் அப்பாவின் திதி எப்போது, சென்னையில் படிக்கும் மகனுக்கு அனுப்பும் பணம்... என விரல் நுனியில் வைத்திருப்பார். ஒவ்வொரு தருணத்திலும் அவற்றை நினைவுபடுத்தி, அதைச் செயலாக்குவார்.

‘ஒரு முந்நூறு ரூபா இருந்தா குடுங்க அப்பச்சி. அடுத்த மாசம் தாரேன்’ என்று யாரிடமாவது கேட்பார் காளமேகம் அண்ணன். ‘ஏம்ப்பு... உன் சண்முகத்துக்கிட்ட கேட்டா கொடுப்பானேப்பா. சம்பளத்துல கூட கழிச்சிக்கமாட்டானே...’ என்று கேட்டால், ‘சம்பளத்துல கழிசுக்கமாட்டான். அதனாலதான் அவன்கிட்ட கேக்க சங்கோஜமா இருக்கு அப்பச்சி’ என்பார் அண்ணன். ‘முப்பத்தி நாலு வருசப் பழக்கம். இருபத்தி ஏழு வருசமா, அவன் வீட்டு வேலை மொத்தத்தையும் பாத்துக்கிடுறேன் நான். இதுவரைக்கும் சம்பளம் போக, எதையும் எப்பவும் கேட்டதில்ல நான். பழக்கத்துக்கு அது நல்லதில்லீங்களே...’ என்று விளக்கமாகச் சொல்லும் காளமேகம் அண்ணன், எப்போதுமே வியப்புதான்.

‘சம்மு’ என்கிற சண்முகத்துக்கு, கோனாபட்டுப் பக்கத்தில் யாருடனோ ‘தொடுப்பு’ உள்ளது என்று ஒரு பேச்சு உண்டு. அப்போது மட்டும் காளமேகம் அண்ணன் காரை ஓட்டிக்கொண்டு, சண்முகத்துடன் செல்லுவார். ஆக, ‘கோனாபட்டு’ மேட்டர் காளமேகத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்பார்கள் ஊரில்.

‘இதை காளமேகத்துக்கிட்ட தப்பித்தவறிக் கூட கேட்டுப்புடாதப்பா. வெளுத்தெடுத்துருவான். காளமேகம் கழுத்துல கத்தியை வைச்சுக் கேட்டாலும் சொல்லமாட்டான்யா. உசுரை விட அவனுக்கு சண்முகம்தான் பெருசு’ என்று ஊர்ப்பெருசுகள் நக்கலாகச் சிரித்துக்கொண்டே பேசிக்கொள்வார்கள்.

அப்படியொரு இடியான சம்பவம், ஊரில் எவருமே எதிர்பார்க்கவில்லை. சண்முகம் வீட்டில் ஏதோ விசேஷம். உறவுக்காரர்களெல்லாம் வந்திருந்தார்கள். அந்தசமயத்தில், சண்முகத்தின் மனைவி, காளமேகம் அண்ணன் மீது சந்தேகப்பட, விஷயம் பெரிதாகிப் போனது. சண்முகமும் அதை நிஜமென நம்பி, அவரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார். பின்னங்கழுத்தை இறுகப் பிடித்தார். ‘வெளியேபோடா நாயே...’ என்று தரதரவென இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளினார். 52 வயது காளமேகம் அண்ணன், வாசல் மண்ணில், நிலைகுலைந்து விழுந்தார். ‘என்னடா சம்மு... நீயுமாடா நம்புறே?’ என்று வேட்டி சட்டையில் ஒட்டியிருந்த தெருமண்ணை தட்டியபடியே கேட்டார். ‘என்னடா சம்மு. முதலாளி மாதிரி உங்கிட்டயும் நடந்திருக்கணும். உன்னை வைக்கவேண்டிய இடத்துல வைச்சிருக்கணும். என் மூஞ்சிலயே முழிக்காதே துரோகி’ என்று எட்டி உதைவிட்டார். மீண்டும் குப்புற விழுந்து முகம் முழுக்க மண்ணாகி, ரத்தம் வடிந்த காளமேகம் அண்ணனை தெருவே திரண்டு வந்து தூக்கியது. ஆறுதல் சொல்லியது.

டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயைக் காணோம் என்றும் அதை இவர்தான் எடுத்திருக்கவேண்டும் என்று உறவுக்காரர் சொன்னதும் சண்முகத்தின் மனைவிக்கு அப்படியொரு கோபம், ஆவேசம். வீடே அதகளாமாகி சத்தம் போட்டுக்கொண்டிருந்தாள். சண்முகத்திடம் அழுகையும் எரிச்சலுமாகச் சொல்ல, உறவுக்காரர்களுக்கு மத்தியில் குறுகிப் போனார் சண்முகம். உஷ்ணமானார். மனைவி சொன்னதை நம்பினார். காளமேகம் அண்ணனை அடித்து உதைத்து வெளியே தள்ளினார்.

பத்து நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை காளமேகம் அண்ணன். பிறகு வெளியே வந்தவரிடம் ஏகத்துக்கும் விசாரிப்புகள். ‘என்னப்பா காளமேகம். உன்னைப் போய் திருடன்னு சொல்லிட்டாய்ங்களே. அந்த கண்ணாடி பங்களா வீட்டுக்கு எவ்ளோ உழைச்சிருப்பே’ என்றார்கள். ‘நீயும் அந்த சண்முகம் பயலும் எம்புட்டு வருசமா பழக்கம். உன்னைப் போய் சந்தேகப்பட அவனுக்கு புத்திகித்தி கெட்டுப் போச்சா?’ என்று ஆறுதல் சொன்னார்கள்.

இப்படியான பேச்சுகளில் சட்டென்று நகர்ந்துவிடுவார் காளமேகம் அண்ணன். கொஞ்சம் உரிமை எடுத்துப் பேசுகிறவர்களிடம், சண்முகத்தைத் திட்டுகிறவர்களிடம், ‘யாரையும் குறை சொல்ற அருகதையோ அறிவோ நமக்குக் கிடையாது. சம்முவை திட்டாதீங்க. எந்த ஜென்மத்துக் காயமோ... யாருக்கு வலி கொடுத்தேனோ... அது இப்ப வந்து கணக்கு நேர்பண்ணிட்டுப் போவுது. அவ்ளோதான்’ என்பார்.

மிக நெருக்கமான நண்பர்கள், ‘காளமேகம். அந்த சண்முகம் பயலுக்கு கோனாபட்டுல யாரோடயோ தொடுப்பு இருக்குதாமே. உண்மைதானே அது’ என்று நூல்விட்டுப் பார்ப்பார்கள். பொசுக்கென்று கோபம் வந்துவிடும் காளமேகம் அண்ணனுக்கு. நான்கைந்து முறை, கைகலப்பில் முடிந்திருக்கிறது. ‘இந்த உடம்பை ரெண்டா வெட்டிப் போட்டாக்கூட எங்கிட்டேருந்து சம்முவைப்பத்தி எதுவும் அசிங்கமா வாங்கிடமுடியாது. அவன் தாண்டா எனக்கு உசுரு’ என்று சொல்லிவிட்டுச் செல்லும் காளமேகம் அண்ணன், மனதில் மிக உயர்ந்த இடத்தில் நிற்கிறார்.

‘அவன் எம் மேல நம்பிக்கை வைச்சத்தை சாகற அளவுக்கும் காப்பாத்துவேன். அவ்ளோதான்’ என்ற காளமேகம் அண்ணன், அந்த கண்ணாடி பங்களா வீட்டு வாசலை மிதித்தது, சண்முகத்தின் மறைவின் போதுதான்!

‘அண்ணே... என்னை மன்னிச்சிருங்கண்ணே. காணாமப் போன ஆயிரம் ரூபா அன்னிக்கி நைட்டே கிடைச்சிருச்சுண்னே. கேவலம் அந்தப் பணத்துக்காக, உம் மேல நான் சந்தேகப்பட்டு, அதை அவர்கிட்ட சொல்லி... எவ்ளோ ரசாபாசமாயிருச்சு. இம்புட்டு வருசத்துல, அவர்கிட்ட சொல்ல எனக்குத் திராணியில்லண்ணே. என்னை மன்னிச்சிருண்ணே’ என்று சண்முகத்தின் மனைவி, காளமேகம் அண்ணனின் காலைப் பிடித்துக் கொண்டு கதறினார். சண்முகத்தின் மரண இழப்பையும் கடந்து, காளமேகம் நம்பிக்கைக்கு உரியவன் என்பதே அங்கே பேசுபொருளாக இருந்தது.

நம்பிக்கை சிதையும் இடம் வாழ்வில் மிக மிக மோசமானது. அந்தக் காயத்துக்கு மருந்தே இல்லை. மாறாக, நினைக்க நினைக்க, காயமும் வலியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வலியால் துடித்துப் போவோம். காயத்தால் குமைந்துவிடுவோம். மன்னிப்புக் கேட்க மனமிருந்தாலும் அந்த மன்னிப்பை வழங்குவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்.

சித்ராவை அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. அவரின் அக்கா பெயர் நினைவில்லை. பெயர் முக்கியமும் இல்லை. பதின் பருவத்தில் நாங்கள் காதலித்தோம். அதைக் காதல் என்று சொன்னாலும் காதல் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாதுதான். ’ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்றெல்லாம் பாடி, சிக்னல் கொடுத்து, இருட்டில் பேசிக்கொண்டும், கடிதம் பரிமாறியுமாக இருந்தது... அற்புதமான காலைப் பொழுதில் (ஒரு Fine Morning) முற்றிலுமாக கலைந்துபோனது. அது வேறுவிஷயம்.

அந்த அக்காவை கடந்து பத்து வருடங்களுக்கு முன்பு, பேராவூரணி பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தேன். ‘நல்லாருக்கியளா?’ என்று விசாரித்தார். நானும் விசாரித்தேன். அந்த விசாரிப்புகளில், சித்ரா பற்றியும் இருந்தது.

‘அவளைப் பத்தி கேக்காதீக. மனுஷியா அவ. அக்கான்னும் பிரியம் இல்ல. ஒறவுன்னு மரியாதை இல்ல. பாழாப்போன சமூகம் பத்தின பயமும் இல்ல. நம்பி வீட்டுக்குள்ளே வுட்டதுக்கு அவ புத்தியைக் காட்டிட்டாப்பா’ என்று சொல்லிவிட்டு, தரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.பிறகு அவரே தொடர்ந்தார்.

’கல்யாணமாகி ஆறாவது வருசத்துல, கர்ப்பப்பைல கட்டி வந்து ஆபரேஷன் அதுஇதுன்னு போச்சு. அப்ப, குழந்தைகளைப் பாக்கவும் வீட்டைப் பாத்துக்கவும் சித்ராதான் வந்தா. ஊர்லேருந்து வந்தவ, ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சு அலைஞ்சு பாத்துக்கிட்டா. அப்படிப் பாத்துக்கிட்டவ, எம் புருஷனையும் பாத்துக்கிட்டா. ரெண்டுபேருக்கும் என்னவோ ஏதோ... ஆகிப்போச்சு. நானும் பலவாட்டி, அரசல்புரசலாச் சொல்லிப்பாத்தேன். கத்திப்பாத்தேன். கேக்கல.

ஊர்ல அப்பாகிட்ட சொன்னேன். தம்பிகிட்ட சொன்னேன். ரெண்டுபேரும் சேர்ந்து அடி அடின்னு வெளுத்தெடுத்தாங்க. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்னாங்க. இவ வேணாம்ங்கறா. அத்தானைத்தான் கட்டிக்கிடுவேன்னு வீம்பாச் சொன்னா. பொத்துன்னு வாய்லயே போட்டாங்க. மாப்பிள்ளையும் பாத்தாங்க. இதுக்குள்ளே இந்த ரெண்டு நாய்களும் ஊரைவிட்டே ஓடிப்போச்சு. எம் புருசன், பொண்டாட்டியான என்னைப் பத்தியும் கவலைப்படலை. மூணு குழந்தைகளைப் பத்தியும் கவலைப்படலை. அக்காவோட வாழ்க்கை என்னாகுமோனு என் தங்கச்சியும் நினைக்கல.


என் மாமியார்தான் எனக்கு சாமி மாதிரி நின்னுச்சு. இப்பவும் நின்னு, என்னை காபந்து பண்ணிட்டிருக்கு. பசங்களைக் கூப்பிட்டு, வக்கீலைக் கூப்பிட்டு, ஊர்ப்பெரியவங்களைக் கூப்பிட்டு, அந்த ஆளுக்கும் சொத்துபத்துக்கும் சம்பந்தமில்லைன்னு கையெழுத்து வாங்கி, இன்னொரு பத்திரத்துல, வீட்டையும் நிலத்தையும் எம்பேருக்கு எழுதுறதா கையெழுத்து போடச் சொல்லி... அன்னிக்கி அவய்ங்களைப் பத்திவிட்டதுதான். சொந்த அக்காவுக்கே இப்படி நம்பிக்கை துரோகம் பண்றவளைப் போய் நல்லாருக்காளானு விசாரிக்கிறீங்களே தம்பி? பொண்டாட்டி, புள்ளைங்களைவிட அவதான் முக்கியம்னு ஓடிப்போன புருஷனைக் கேக்கறீங்களேப்பா?’ என்று சொல்லி முதுகு குலுங்க அழுத அந்த அக்கா, முந்தானையால், மொத்த முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.

ஆனாலும் நிற்கமாட்டாது வந்துகொண்டே இருந்த அழுகையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நம்பிக்கை துரோகம் தந்த அழுகை, தீரா நதியென நினைக்கும்போதெல்லாம் கண்களில் இருந்து கன்னம் வழியே பெருக்கெடுத்துக்கொண்டேதான் இருக்கும்.
‘நான் வரேன் தம்பி. நல்லா இருங்க’ என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்துபோன அக்காவின் முதுகையும் அவள் சென்ற திசையையுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

துரோகம் இருக்குமிடத்தில், நம்பிக்கை நசிந்துபோகிற உறவுகளுக்கு மத்தியில் அன்பு ஒருபோதும் இருக்காது. பாசாங்கு இல்லாத நம்பிக்கை இருந்துவிட்டால், அங்கே அன்புக்குப் பஞ்சமில்லை!


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x