

"இது ஒன்றும் அற்புதமான காரியமல்ல. என்னை யாரும் பின்பற்ற வேண்டாம். நான் இதை உறுதியாகச் சொல்கிறேன். ஒருவரை நீங்கள் பின்பற்றத் தொடங்கினால், உண்மையை உங்களால் பின்பற்ற முடியாது" ஜே.கே. என வாஞ்சையுடன் அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஹாலந்து நாட்டிலுள்ள ஓமன் நகரில் 1929 ஆகஸ்ட் 3-ல் நடத்தப்பட்ட ஆண்டு நட்சத்திரக் கூட்டத்தில் கூடியிருந்த 3,000 மக்களுக்கு முன்னிலையில் ஆற்றிய உரை இது.
உலக குருவின் வருகையை அறிவிக்க ‘ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் இன் தி ஈஸ்ட்’ எனும் அமைப்பு 1911-ல் நிறுவப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்து அந்த உலக குரு ஜே.கிருஷ்ணமூர்த்திதான் என அன்றைய சென்னை தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவரான அன்னிபெசண்ட்டும் அவரது நண்பர்களும் அறிவித்தனர். ஆனால், அப்போது ‘உலக குரு’ எனும் தன் பதவியைத் துறந்தார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
அபரிமிதமான சொத்துகள் கொண்டிருந்த அந்த அமைப்பையும் கலைத்தார். உண்மையான ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்பவரிடம் எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது. அவர் மதப் பீடங்களுக்குள் முடங்கிவிடக் கூடாது என்று கூறியவர் உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கத் தொடங்கினார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனபள்ளி எனும் சிற்றூரில் 1895 மே 11-ல் பிறந்தார் ஜே.கே. 10 வயதில் தன் தாயைப் பறிகொடுத்தார். பள்ளிப் பருவத்தில் பலவீனமான உடல்நிலையுடன், படிப்பில் பின்தங்கியும் இருந்த ஜே.கே-வை அவருடைய ஆசிரியர்களும் தந்தையும் அடிக்கடி அடிப்பதுண்டு. அத்தகைய நாட்களில் இயற்கையுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டார். 1907-ல் சென்னை அடையாரில் உள்ள தியாசஃபிகல் சொசைட்டியில் வேலையில் சேர்ந்தார் அவரது தந்தை. ஜே.கே-விடம் அசாத்தியமான ஞானத்தைக் கண்ட சார்ல்ஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டர் அவர் எதிர்காலத்தின் அற்புதமான ஆன்மிகக் குருவாகவும் சொற்பொழிவாளராகவும் வருவார் என ஆரூடம் கூறினார். அதன் பிறகு ஜே.கே-வுக்கும் அவரது இளைய சகோதரர் நித்யாநந்தாவுக்கும் வெளி நாட்டில் உலகத் தரம் வாய்ந்த கல்வி அளிக்கப்பட்டது. ஜே.கே-வையும் நித்யாநந்தாவையும் தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவரான டாக்டர் அன்னிபெசண்ட் வளர்க்கத் தொடங்கினார். 1911-ல் எதிர்காலத்தில் உலகை வழிநடத்தப்போகும் குரு ஜே.கே-தான் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 3 ஆகஸ்ட் 1929 அன்று “நான் யாருக்கும் குரு அல்ல” என ஜே.கே. அறிவித்தார். “யாரும் யாருக்கும் ஆன்மிக விடுதலைப் பெற்றுத்தர முடியாது. உண்மை அடைவதற்குப் பாதை ஏதும் இல்லை. எந்த மதமோ, எந்த இயக்கமோ உண்மையைத் அடைய உங்களுக்கு உதவ முடியாது” என்று கூறினார். இதன் மூலம் ஆன்மிகவாதிகள் மற்றும் தத்துவ ஞானிகளின் மரபை உடைத்துத் தத்துவ உலகில் ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தினார்.