Last Updated : 29 May, 2014 10:00 AM

 

Published : 29 May 2014 10:00 AM
Last Updated : 29 May 2014 10:00 AM

வயதானவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற முடியுமா?

பிறப்புச் சான்றிதழ் தொடர்பான கட்டுரைகளைப் படித்துவிட்டு வாசகி ஒருவர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். “நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம்தான். அந்தக் காலத்தில் படிப்பறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் எனது தந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கவில்லை. ஆனால், இப்போது சில அரசு நடைமுறைகளுக்காக அவருக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளது. இதுகுறித்து விளக்கமாக சொல்லவும்” என்று கேட்டிருந்தார். அதையும் பார்ப்போம்...

ஓர் ஆண்டுக்கு பிறகு பிறப்புச் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?

குழந்தை பிறக்கும்போது ஏதேனும் காரணங்களால், பிறப்பை பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம். குறிப்பாக, முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பிறந்தபோது பிறப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. எனவே, குழந்தை பிறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு பிறப்பை பதிவு செய்ய வேண்டுமானால், குற்றவியல் நீதிபதியின் ஆணையைப் பெற்றுதான் பதிவு செய்ய முடியும்.

அதற்கான நடைமுறைகள் என்ன?

அதற்கு non-availability சான்றிதழ் பெற வேண்டும்.

non-availability சான்றிதழ் என்றால் என்ன?

புதிதாக பதிவு செய்யப்படும் உங்கள் பிறப்பு மற்றும் பெயர் ஏற்கெனவே வேறு எங்குமே (எந்த உள்ளாட்சி அமைப்பிலும்) பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே non-availability சான்றிதழ்.

அந்த சான்றிதழை எப்படி பெறுவது?

தொடர்புடைய உள்ளாட்சி அலுவலகத்தில் இதற்கான படிவம் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகாரிகள் அதை சரிபார்த்து, வேறு எங்கும் பதிவுகள் இல்லை எனில் அதன் பிறகு சான்றிதழ் தருவார்கள்.

அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்?

Non-availability சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் குழந்தை பிறந்த இடம் மற்றும் தேதிக்கான ஏதேனும் ஓர் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிரசவச் சீட்டு, குடும்ப அட்டை அல்லது வேறு ஏதேனும் மாற்று ஆவணத்தை இதற்காக சமர்ப்பிக்கலாம். அவை உண்மையானதா என்று அதிகாரிகள் விசாரித்து, சரி பார்ப்பார்கள். பின்பு குழந்தையைவிட பத்து வயது மூத்தவர் வந்து, அவருக்கு நீதிமன்றத்தில் சாட்சி கூற வேண்டும். நீதிபதிக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றால் பிறப்புச் சான்றிதழ் தரலாம் என்று ஆணை பிறப்பிப்பார். அதன் பிறகு, உள்ளாட்சி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை கொடுப்பார்கள்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x