

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அண்மையில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று எச்சரித்துள்ளது.
அந்த ஆய்வின்படி, கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதனால், நாட்டில் புலி பாதுகாப்பு போல சிறுத்தைகளை பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் அது படிப்படியாக ஒழியும் என்று வன உயிர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆய்வை, பெங்களூருவில் உள்ள, வன உயிரின கல்வி மையம் மற்றும் டேராடூனில் உள்ள, இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
இதற்காக, சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள், வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆய்வில் சுப்ரியா பட், சுவங்கர் பிஸ்வாஸ், டாக்டர் பிகாஸ் பாண்டவ், டாக்டர் சாம்ராட் மண்டல், டாக்டர் கீர்த்தி கே. காரந்த் ஆகிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
ஆய்வு முடிவுகள் குறித்து சி.டபிள்யூ.எஸ். அமைப்பின் தலைமை பாதுகாப்பு விஞ்ஞானி கீர்த்தி கே கரந்த், "எங்கள் ஆய்வு முடிவுகள் கவலைக்குரியவை. மனிதர்களுடனான மோதலே சிறுத்தைகள் பேரழிவுக்கு காரணம். சிறுத்தைகளைக் காப்பாற்ற, புலிகள் பாதுகாப்புத் திட்டம் போன்று ஒன்று வகுக்கப்பட வேண்டும்" என்றார்.
கடைசியாக 2014-ல் புலிகள் கணக்கெடுப்புடன் எடுக்கப்பட்ட சிறுத்தைகள் கணக்கெடுப்பில் 12,000 முதல் 14,000 வரை சிறுத்தைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே சிறுத்தைகள் இருப்பதாகத் தெரிகிறது.