Published : 10 Feb 2020 07:54 AM
Last Updated : 10 Feb 2020 07:54 AM

மந்தநிலையை மாற்றாத பட்ஜெட்

இந்தியாவில் இப்போது இருக்கும் பொருளாதார மந்தநிலையைப் போக்க இரண்டு வழி இருக்கிறது. ஒன்று நுகர்வை அதிகரிப்பது. இரண்டாவது முதலீடு. இந்த பட்ஜெட் இரண்டாவது வழியைத் தேர்வு செய்துள்ளது. அதுதான் நல்ல வழியும் கூட.

முதல் வழியான நுகர்வு, வங்கி பரிமாற்றம் மூலம் மக்களின் கையில் அதிக பணத்தை புழங்கச் செய்யும். மக்கள் பணத்தை செலவழிப்பார்கள். பொருட்களை வாங்குவார்கள். தேவை அதிகரிக்கும். தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும். அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். புதிய ஊழியர்கள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த சங்கிலித் தொடர்,பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

இரண்டாவது வழியான முதலீடு மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். வேலை மூலம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவர்கள் பொருட்களை வாங்குவார்கள். தொழிற்சாலைகள் முழு வேகத்தில் இயங்கும். மேலும் வேலை வாய்ப்பு உருவாகும். இந்த சங்கிலித் தொடர் மூலம் மந்தநிலை மாறும். இந்த இரண்டாவது முறையை நான் வரவேற்கிறேன். முதலீடுகள் மூலம் புதிய சாலைகள். நீர்வழித் தடங்கள், குடிநீர் பைப்லைன்கள், வீடுகள், மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் அமல் செய்யப்படும். இதற்கு ரூ.103 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அதன்பிறகு, இந்தநெருக்கடியை போக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை விளக்கியிருக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பல திட்டங்களை அவர் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பட்ஜெட் உரையில்தான் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தாலும்அதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார் நிர்மலா சீதாராமன். நெருக்கடி இருக்கும்போதுதான் சீர்திருத்தங்களைக் கொண்டு வர முடியும். அப்போதுதான் இவற்றால் வரும்குறுகிய கால சிரமங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

வேளாண் துறையில் சீர்த்திருத்தம்

உதாரணமாக, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் சீர்திருத்தமான நீண்ட கால குத்தகை மூலமான ஒப்பந்த விவசாயத்தை உறுதி செய்திருக்கிறார். மத்திய அரசு தொடர்ந்து இது குறித்து பேசி வந்தாலும், மாநில அரசுகள் அக்கறை காட்டாமலேயே இருந்து வருகின்றன. இதுபோன்ற முக்கிய சீர்திருத்தங்களை அமல் செய்யத் தேவையான சலுகைகளைத்தான் நாம் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தோம். நிலம் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருந்தால், மக்கள் பெரிதும் மகிழ்ந்திருப்பார்கள்.

உள்ளூர் தொழில்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் இறக்குமதிக்கு மாற்றான தோல்வி அடைந்த திட்டத்தையும் வாபஸ் பெறவில்லை. இது பட்ஜெட் உரையில்எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பொருளாதார ஆய்வு அறிக்கை உருவாக்கியிருந்தது. மேக் இன் இந்தியா திட்டம், அசெம்பிள் இன் இந்தியா திட்டமாக உருவெடுக்கும் என கூறப்பட்டிருந்தது.

சீனா பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள சூழலில் இந்த திட்டங்களை அமல் செய்ய இதுவே தகுந்த நேரமாகும். பல பொருட்களுக்கு வரி குறையும் என எதிர்பார்த்திருந்த சூழலில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருக்கும் எந்த நாடும் வளமான நாடாக உருவாக முடியாது. ஏற்றுமதியை பொருத்தவரை அரசுமிகப் பெரிய தோல்வியை அடைந்துள்ளது. அதற்கு புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்காததும் முக்கிய காரணமாகும். வியட்நாமுடன் ஒப்பிடும்போது, கடந்த 7 ஆண்டுகளாகவே இந்தியாவின் ஏற்றுமதி தேக்கநிலையிலேயே இருக்கிறது. இதே காலகட்டத்தில் வியட்நாமின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

சாத்தியமான பட்ஜெட்

இந்த பட்ஜெட் மூலம் பொருளாதாரம் உடனடியாக மீண்டு விடாது. இருந்தாலும் இது நடைமுறையில் சாத்தியமான சிறப்பான பட்ஜெட்டாகும். பொருளாதார எழுச்சியை உடனடியாக ஏற்படுத்தும் எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. 2008-ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து, பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு அதனால் பிரச்சினைகள்தான் எழுந்தன. அதுபோன்ற நிலை மீண்டும் உருவாக நிதியமைச்சர் இந்தமுறை இடம் கொடுக்கவில்லை. மொத்தத்தில் உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதம் அளவுக்கு அதிரிக்கவும் செலவுகளைக் குறைக்கவும் பட்ஜெட் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுப்பதில் உறுதியான நிலை, தொழிலதிபர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நிறுவன சட்டத்தில் பல குற்றங்களை தண்டனைக் குற்றங்களில் இருந்து நீக்கியது மற்றும் வரி செலுத்துபவர்களை துன் புறுத்துவதை தடுக்கும் வகையில் வரி செலுத்துவோர் குறை தீர்ப்பு மையம் போன்ற விஷயங்களை வரவேற்கலாம். மோடி அரசு இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தினாலே, அது மிகப் பெரிய வெற்றியாகத்தான் இருக்கும்.

உள்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருக்கும் எந்த நாடும் வளமான நாடாக உருவாக முடியாது. ஏற்றுமதியை பொருத்தவரை அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. அதற்கு புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்காததும் முக்கிய காரணமாகும். குர்சரண் தாஸ்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x