Published : 04 Feb 2020 04:30 PM
Last Updated : 04 Feb 2020 04:30 PM

திருவாரூர் இளைஞரின் சர்வதேச சாதனை: புகழ்பெற்ற சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசை!

தமிழ்ப் பண்ணிசை, கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை உள்ளிட்ட இந்திய நிலப்பரப்பின் செவ்வியல் இசைக்குச் சற்றும் குறைவுபடாத மேற்கத்தியச் செவ்வியல் இசை சிம்பொனி. தேச எல்லைகளைக் கடந்து இன்றைக்கும் வாழும் இசையாக இருக்கும் சிம்பொனியில், சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ராஜன் சோமசுந்தரம்.

தமிழரின் வியத்தகு கவிதைச் சாதனைகளில் திருக்குறளுக்கு இணையாகப் பார்க்கப்படுபவை சங்கத் தமிழ்ப் பாடல்கள். அவற்றிலிருந்து, பாடப்பட்ட பொருளின் உலகப் பொதுமைக்கும் தமிழரின் பரந்த மனப்பான்மை, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் பண்பாட்டு விழுமிய முதிர்ச்சியிலும் புகழ்பெற்ற ஏழு பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசையமைத்திருக்கிறார் ராஜன்.

இவரது சிம்பொனி இசைக் குறிப்புகளுக்கு உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி இசைக்குழுவுக்குத் தலைமை வகித்துவரும் மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரி இசை நடத்துநராக பணிபுரிந்திருப்பதுடன், டர்ஹாம் சிம்பொனி இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் வாசிப்பில் உருவாக்கியிருக்கும் அப்பாடல்களின் தொகுப்புக்கு ‘சந்தம்: சிம்பொனி மீட்ஸ் கிளாசிகல் தமிழ்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்று தலைப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்காவில் சிகாகோ தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் அரங்கேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த இசை ஆல்பத்தின் இரண்டாம் பாடலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பாடல் ‘வேரல் வேலி’ (குறுந்தொகை: பாடல் 18 ). – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கபிலர் எழுதிய இப்பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்கிறார். சங்கத் தமிழும் சிம்பொனியும் இணைந்திருக்கும் இந்த இசைச் சாதனைக்கு இணையத்தில் வரவேற்பு பெருகிக்கொண்டிருக்கும் வேலையில் அமெரிக்காவிலிருந்து ராஜன் சோமசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது…

இந்த இசைத் தொகுப்புக்கு சிம்பொனி இசை சேர்க்கும் எண்ணம் எப்படி வந்தது?

காலம் தாண்டிய விஷயங்களுக்கு செவ்வியல் இசையே மிகப்பொருத்தமானது. நம் மரபிசை, மேற்கத்திய மரபிசை இரண்டுமே காலம் காலமாய் பாடப்பட்ட இசையின் செவ்வியல் வடிவம் தானே. இசைத்தொகுப்பைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு முன்பே, முதல் பாடலுக்கு இசை வடிவம் கொடுக்கும் போதே, வயலின்கள், வியோலாக்கள், செல்லோ, டபுள் பாஸ், காற்று வாத்தியக்கருவிகள் என முழு சிம்பொனியின் இசையை எழுதியிருந்தேன். ஒரு பண்பாட்டின் உச்ச சாதனை ஒன்றைச் சொல்லும் கவிதைகளுக்கு, அந்த பிரம்மாண்டம் தேவையென்று நான் உணர்ந்திருக்கலாம்.

அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனியை வழிநடத்தும், மேஸ்ட்ரோ என்று அன்புடன் அழைக்கப்படும் வில்லியம் ஹென்றி கர்ரியைத் தொடர்பு கொண்டேன். முதல் சந்திப்பிலேயே நேரடியாக "நான் பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி போன்ற மேதைகளின் இசையை வாசிப்பவன். நான் ஏன் உன் இசையை வாசிக்கவேண்டும்?" என்று கேட்டார். நான் அவருக்கு சங்கப் பாடல்களைப் பற்றிய ஏ.கே ராமானுஜத்தின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைச் சொன்னேன். "These poems have stood the test of time, the founding works of a whole tradition. Not to know them is not to know a unique and major poetic achievement of Indian civilization".

இத்தகைய புகழ்பெற்ற காலாதீதமான கவிதைகளுக்கு, இசை வரலாற்றில் முதன்முறையாக சிம்பொனியுடன் சேர்த்து பிரம்மாண்ட இசைத்தொகுப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன் என்று சொன்னேன். 2000 வருடங்களுக்கு முன்பே ‘யாதும் ஊரே..’ போன்ற ஒரு கவிதையை எழுதியிருப்பார்கள் என்று அவர் நம்பவில்லை! பிறகு அவராக படித்துப் பார்த்து உண்மை என்று உறுதி செய்துகொண்டபிறகு, தொடர்பு கொண்டார். முழு சிம்பொனி இசைக்கோப்பையும் பார்க்க வேண்டும் என்றார். எல்லாவற்றையும் பார்த்த பிறகு உற்சாகமாய் களத்தில் இறங்கினார்.

இப்போது பாடலை வெளியிட்ட பிறகு என்னை அழைத்து, அமெரிக்க மக்களுக்கு இசை நிகழ்ச்சிகள் வழங்கும்போது, மற்ற சிம்பொனிகளுக்கு நடுவில், ‘யாதும் ஊரே பாடலை பாடலாமா?’என்று கேட்டார். மூதாதையின் கவிதை, என் இசையில், தமிழ் தெரியாத மக்களையும் சென்று சேருமென்றால் அது நான் மிகவும் பெருமைப்படும் விஷயம் என்றேன்.

ஏழு பாடல்களுக்குமான பாடகர்களை எப்படி தேர்வு செய்தீர்கள்? இசைப் பதிவு எப்படி நடந்தது?

நம் மரபிசையின் சாயலும், ஆனால் அந்தந்த கவிதைகள் சுட்டும் உணர்ச்சிகளும் இணைந்து வரவேண்டும் என்று தெளிவாக இருந்தேன். அதனால், வெவ்வேறு பாடல்களுக்கு அவற்றின் உணர்ச்சி யாரின் குரலில் சிறப்பாக வெளிப்படும் என்பதையும், ஒட்டுமொத்த இசைக்கோர்ப்பில் பாடகரின் குரல் எப்படி பொருந்தும் என்பதையும் பொறுத்து வெவ்வேறு பாடகர்களைத் தேர்வு செய்தோம். பொதுவாக, இசைக்கூடத்திற்கு வந்து 4 மணிநேரத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்வார்கள். ஆனால், இந்த இசைத்தொகுப்பிற்காக பாடகர்கள் 3 வாரங்கள் பயிற்சி செய்த பிறகு பதிவு செய்ய வந்தார்கள். அது அவர்கள் சங்கக்கவிதைகளின் மீதும், இந்த இசைத்தொகுப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையைக் காட்டுகிறது.

இந்த இசைத்தொகுப்பைக் கொண்டுவர உங்களைத் தூண்டியது எது; அதேபோல சங்கக் கவிதைகளைத் தேர்ந்தெடுக்க தமிழறிஞர்களை நாடினீர்களா?
எழுத்தாளர் ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல்தான் எனக்கு முதல் உந்துதல். அவருக்கு மனமார்ந்த நன்றி. சங்கச் சித்திரங்கள் நூலில் வாழ்வின் சில அசாதாரண தருணங்களில் எப்படி சங்கப் பாடல்கள் நினைவில் எழுந்து வந்து அபாரமான பொருள்கொண்டன என்று எழுதியிருப்பார். அது எனக்கு ஒரு பெரிய திறப்பை அளித்தது.

ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது 'அச்சுடை சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி' என்ற வரியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு வரியை எழுதிட்டாளே என்று மனைவியிடம் புலம்பிக்கொண்டு தூக்கமின்றி தவித்தேன்.

சிறுவயதில் கிராமங்களில், கணவனை இழந்த பெண்கள் நாட்கணக்கில் அழுவதைப் பார்த்திருக்கிறேன். சிலநாட்கள் அழுது, கண்கள் வறண்டு, தூணில் சாய்ந்து வேறு உலகத்தில் இருப்பதையும். இத்தனை வருடங்கள் கழிந்தும் அவர்களை இவ்வளவு துல்லியமாக நினைவில் வைத்திருப்பதை கண்டு நானே திடுக்கிட்டேன்.

அதையே யோசித்துக் கொண்டிருந்தவன், என்னையறியாமல் அதை ஒரு மெட்டில் பாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். இரண்டு மணி இருளில் எழுந்து இசைக்கூடத்திற்குச் சென்று கண்ணில் நீருடன் அந்த மகத்தான கவிதைக்கு இசை எழுதினேன். அதுவே தொடக்கம்.

2000 வருடங்களாக யாரும் செய்யாத முயற்சி. அந்த அச்சம் வந்தவுடன், நான் மதிக்கும் எழுத்தாளர்களைத் தொடர்புகொண்டேன்., எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் மூவருக்கும் நன்றிகள் கோடி. இவர்கள் மூவரின் வழிகாட்டுதலிலேயே இந்தத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

இசைத் தொகுப்பு ‘சந்தம்’என்று தலைப்பு சூட்ட என்ன காரணம்?
சங்கக்கவிதைகளில் எதுகை மோனை பெரும்பாலும் இல்லை. ஒவ்வொரு வரியிலும் வார்த்தைகளின் எண்ணிக்கையும் வேறு வேறு. ஏறத்தாழ உரைநடைதான். அதன் வடிவத்தின் அழகியல் பிடி கிடைக்கவில்லை. அதனாலேயே இவ்வளவு புகழ்பெற்ற கவிதைகளுக்கும் இதுவரை யாரும் இசையமைக்க முயலவில்லை என்று நினைக்கிறேன். நான் படித்த எந்த சங்கக்கவிதையும், பாடலுக்குரிய எந்த சந்தத்திலும் அடங்குவது போல தெரியவில்லை.

ஆனால், அந்தக் கவிதையை அறிந்துகொள்வதும், பலவிதமாய் பொருள்கொண்டு மிதந்துகொண்டிருப்பதுவும் மட்டுமே என் வேலை. என்னையறியாமல் இக்கவிதைகள் தங்களின் இசை வடிவங்களை அடைந்து கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இசைக்கான எல்லா தர்க்கங்களையும் தாண்டி அவற்றுக்கான சந்தம் உருவாகி வந்துகொண்டிருந்தது. அதனாலேயே இத்தொகுப்பிற்கு சந்தம் என்று பெயரிட்டேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்களின் பாடு பொருளில் உறைந்திருக்கும் உணர்ச்சி நிலைகள் மெட்டுகளில் வெளிப்பட்டிருப்பதற்கு இசைக் கற்பனையில் ஏதேனும் உத்தியைக் கையாண்டீர்களா?
அதை உத்தி என்பதைவிட உறுதி என்று சொல்லலாம். இந்தப் பாடல்களை உருவாக்கும்போது இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தேன்.
1. மெட்டுகள் நம் செவ்வியலிசையின் சாயல் கொண்டும், பின்னணி இசை மேற்கத்திய மரபிசை சாயலுடனும் இருப்பதை விரும்பினேன். இன்னும் சில வருடங்களில் நம் செவ்வியலிசை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

2. கர்னாடக இசையின் சாயலில் மெட்டுகள் இருந்தாலும், எல்லா பாடல்களையும் பக்தி உணர்வுடன் மட்டுமே தற்போது பாடப்படுவதுபோல் வந்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தேன். அந்தந்த கவிதைகள் சுட்டும் உணர்ச்சிநிலையை மட்டுமே காட்டுவதே அந்தக் கவிதைகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

அடுத்து இசையில் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?

இசையில் வேறு யாரும் செய்யாத முயற்சிகளைச் செய்வதில் ஆர்வம். தமிழில் அதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

நான் திருவாரூரில் பிறந்தவன். காவிரியில் நீர் வரத்தொடங்கும் ஆடிப்பெருக்கு, 18-ம் பெருக்கு என்பது பெரிய கொண்டாட்டம். விடிவதற்கு முன் எழுந்து கிளம்பி காவிரிக்கரை செல்வதிலிருந்து, நாள் முழுவதும் நண்பர்களுடன் சப்பரம் ஓட்டி பின் மாலையில் களைத்து வீடு வரும் வரை பெரும் கொண்டாட்டம். இந்த விழாவை வளமை, பசுமை, கன்னிமை என்று வளர்த்தெடுத்து இயற்கையை வணங்குவார்கள். இதைப் போன்ற பெரிய பண்பாட்டு விழாக்களை பற்றி எத்தனை பாடல்கள் நம்மிடம் உள்ளன? அதனால், தமிழ்நாட்டின் பண்பாட்டை ஒட்டிய கொண்டாட்டங்களுக்கு என்று ஒரு இசைத்தொகுப்பைக் கொண்டுவரலாம் என்று எண்ணமிருக்கிறது.

பாரதியின் ‘வெடிபடும் அண்டத்து இடி பல தாளம் போட’ என்ற பாடலை சமீபத்தில் படித்தேன். இந்தப் பேரண்டம் மொத்தமாக அழிந்து, மீண்டும் சக்தியும் சிவனும் சேர்ந்து உலகம் உருவாகும் காட்சியை வார்த்தைகளே வெடித்து சிதறும் படி எழுதியிருப்பார்! ஆனால், அதன் இசை வடிவத்தைக் கேட்டால், அந்தப் பாடலின் மகத்துவம் சற்றும் தெரியாது. உலகமே வெடித்தழிந்து மீண்டும் உருவாகும் சித்திரத்தை நெருப்புமிழச் சொல்லும் ஒரு பாடல் இசையில் எப்படி ஒலிக்க வேண்டும்! அப்படிப்பட்ட இசை வடிவம் கொடுத்து அதை ஒரு தனிப்பாடலாகக் கொண்டுவர இருக்கிறேன்.

சமீபத்தில், மரியாதைக்குரிய எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் 300-400 வருடங்களுக்கு முன், இங்கே குடியேறிய மக்கள், வறண்ட நிலத்தில் இருந்து புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்கும் சித்திரம் வரும். அம்மக்கள் அவர்கள் செய்து முடித்தது மட்டுமின்றி, செய்ய நினைப்பதையும் ஏற்கெனவே செய்ததுபோல ஒரு நாட்டுப்புறப் பாடலை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து இருப்பார்கள். அது, வழிவழியாக பல தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்ட பாடலா, அல்லது கி.ரா.வே எழுதிய பாடலா என்பது தெரியவில்லை. அது என்னை கவர்ந்தது. அதேபோல எழுத்தாளர் ஜெயமோகனின் காடு நாவலில் கருநீலியைப் பற்றி ஒரு பாடல் வரும். இவற்றையெல்லாம் தனிப்பாடல்களாகக் கொண்டுவர நினைக்கிறேன்.

ஆல்பத்துக்காக தேர்ந்தெடுத்த ஏழு சங்கப் பாடல்களையும் முழுமையாக எப்படி உள்வாங்கிக் கொண்டீர்கள், அவற்றின் பாடப்பட்ட பொருளின் தனித்துவங்களை இசையில் வெளிப்படுத்த, அவற்றில் நீங்கள் கூர்ந்து கவனித்த அம்சங்களைத் தனித்தனியே கூறமுடியுமா?

வேரல் வேலி:

வேரல் வேலி பாடலை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன். மேலதிகமாக, அந்தப்பாடலில் நுட்பமான ஒரு பகடி இருப்பதைப் புரிந்துகொண்டேன். முதல் வரியில் ஏன் அவள் வேரிலேயே பழுத்துக் கிடைக்கும் பலா நிறைந்த நாட்டைச் சேர்ந்தவனே என்கிறாள்? தானாக வளர்ந்த சிறு மூங்கில் வேலிதான் காவல் என்று சொல்கிறாள். இது உனக்குத் தெரியவில்லையா? வேரில் பழுத்துப் பெரிதாக காவல் எதுவும் இல்லாமல் கிடக்கும் பலாவுக்கு என்னவாகும் என்று தினமும் அதைப் பார்க்கும் உனக்குத் தெரியாதா என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்கிறாள்! அந்த நுட்பமான பகடியையும் இசையில் கொண்டுவர முயன்றேன். காதல், நட்பு இவற்றுடன் ஒரு மெல்லிய பகடி இந்த மூன்று உணர்ச்சிகளின் கலவையாக பாடலைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்தேன். பதிவு தொடங்குவதற்கு முன் பாம்பே ஜெயஸ்ரீ பேசும் ஒரு காட்சி காணொலியில் இருக்கும். அதில் அவர் முகபாவத்தைப் பார்த்தாலே அந்த உணர்ச்சிகளுக்குள் சென்று விட்டது தெரியும். நைலான் கிதார், குழல் இரண்டிலும் காதலுடன் சேர்ந்து ஒரு சிறிய விளையாட்டுத்தனத்தை, பகடியைக் கேட்கலாம்.

ப்ரியங்கா

முல்லை ஊர்ந்த:
முல்லை ஊர்ந்த பாடல், தலைவனின் வருகைக்காக காத்திருக்கும் பெண்ணின் எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சி, ஏக்கம், சிணுங்கல், காத்திருப்பின் நிலைகொள்ளாமை போன்ற உணர்ச்சிகளுடன் ஒரு திரைக்கதையையும் வைக்கலாம் என்று நினைத்தேன். போருக்குச் சென்ற தலைவனைப் பற்றி செய்தி ஏதும் இல்லாத போது அந்தப் பெண் எப்படி இருந்திருப்பாள்? அந்த உணர்ச்சியோடு தொடங்கும் பாடல். அவன் வென்ற செய்தி வருகிறது. அப்போதே அவள் அவன் தேரின் மணியோசையைக் கேட்கத் தொடங்கிவிட்டாள்.

உலகமே அழகாகத் தெரிகிறது. எல்லாமே துணையுடன் தெரிகிறது! காத்திருக்க இயலாமல், அவள் மனம் அவன் வந்துகொண்டிருக்கும் இடத்துக்கே சென்றுவிடுகிறது. அவன் தன் நண்பர்களுடன் ஆர்ப்பாட்டத்துடன் வருவதை மனக்கண்ணில் பார்க்கிறாள். தலைவன் ஊர் சேர்ந்து அவளைப் பார்த்து ஒன்றிணைவதில் பாடல் பிரம்மாண்ட இசையுடன் முடிகிறது. காதல், வாழ்வின் ஒளிமிக்க கணங்களை நமக்குத் தருகிறது. காதலன் வருகையால் உலகமே அழகாகத் தெரியும் அந்தப் பதின்வயதின் களங்கமின்மை வேண்டுமென்பதற்காக பிரியங்காவின் குரலைத் தேர்வு செய்தேன்.

ஞாயிறு காயாது:
திருமணமாகி பிரிந்து செல்லும் மகளைப் பார்த்து மகிழ்ச்சியும், வாழ்த்தும், சற்றே சோகமும், மங்கலமும் கலந்த ஞாயிறு காயாது பாடல். மகளின் திருமணத்தின் போது ஒரு தாயின் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளின் கலவையைக் காட்டும் அழகான பாடல் . ராஜலட்சுமி சஞ்சய் தாய்மை உணர்ச்சியும், மென்சோகமும் கலந்து அழகாகப் பாடியிருப்பார்.

கலம்செய் கோவே :


கலம்செய் கோவே கவிதை மிக நுட்பமானது, பூடகமானது. தாழியை ஏன் பெரிதாக செய்யச்சொல்லி கேட்கிறாள் என்பது கூட நேரடியாக இல்லை. ஆனால் சக்கரத்தில் ஒட்டி, அச்சையே ஆதாரமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பல்லியின் உருவகத்தில் இருந்து அவள் 'என்னையும் சேர்த்துப் புதை' என்று சொல்லும் துயரத்தின் உச்சத்தை தொடும் கவிதை.

சுருதியிழந்த தந்தியில் தொடங்கும் பாடல், அந்த தந்தி அறுந்து விழும் ஓசையில் நிறைவடையும். 'அகலிதாக வனைமோ' என்று சொல்லுமிடத்தை ஒரு மரண ஓலமாக காட்ட சைந்தவியும் நானும் முடிவுசெய்தோம். பதிவின் போதே அனைவரையும் கண்கலங்க வைத்தது இந்தப் பாடல்.

யாயும் ஞாயும்:
செம்புலப் பெயனீர்போல எனப்பாடும் போது, கார்த்திக், பிரகதியின் குரல்கள் வேறு வேறு சுதிகளில் பாடி முயங்கும்.
யாதும் ஊரே - சிம்பொனி:

இதைப் பாடகர் கார்த்திக்கின் வாழ்நாளில் சிறந்த பாடல் என்று சொல்லலாம். இனிமையையும், கம்பீரத்தையும் சேர்த்துப் பாடியிருக்கிறார். சிம்பொனியுடன் கார்த்திக்கின் குரலை மட்டும் சேர்த்து வெளியிடுவது, டர்ஹாம் சிம்பொனியின் மேஸ்ட்ரோ வில்லியம் கர்ரியுடையது. தென்னிந்திய மரபிசையும், மேற்கத்திய மரபிசையும் அற்புதமாகக் கலக்கும் இசை இந்தப் பாடல் என்பது அவரது எண்ணம். 14 இசை வகைகளை ஒன்றாய் சேர்த்ததைக் கேட்கலாம்.

எல்லா ஊரும் நம் ஊரே என்ற பாடலுக்கு, இதைவிட சிறந்த இசைவடிவம் வேறெப்படி இருக்கமுடியும் என்று உலகம் முழுவதும் இருந்து தமிழர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசும்போது மனம் நிறைகிறது.
வேரல் வேலி பாடலைக் காண: https://bit.ly/2GS0nbG
யாதும் ஊரே பாடலைக் காண: https://bit.ly/37VLiSj

‘சந்தம்’ ஆல்பத்தின் முதல் பாடலான ‘யாதும் ஊரே’ வெளியானபோது இந்து தமிழில் வெளியான கட்டுரையை வாசிக்க: https://bit.ly/2UjDVQQ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x