

நகர இரைச்சலின் பின்னணி ஓசையிலிருந்து தொடங்கும் 'மைட்டி மகி' குறும்படம் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஏதோ ஒரு அடுக்ககத்தின் ஒரு வீட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
பரபரக்கும் நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள பல பிரச்சினைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. குறைந்தபட்சம் வீட்டுக்குள் இருக்கும் அம்மாவைக்கூட ஒரு இயந்திரமாகத்தான் நாம் நினைத்துள்ளோம் என்னும் மனோபாவத்தை மாற்றுவதற்காகவே 'MCLC1365& MCRT162' நிறுவனம் தயாரித்துள்ள 'மைட்டி மகி' என்ற குறும்படம் குழந்தைகளுக்கு ஓர் அவசியச் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு அம்மாக்களை மிகவும் பிடிக்கும் ஏன்... அவர்கள் நமக்கு எல்லாம் செய்கிறார்கள்... அதனால் மட்டும்தான். இது எவ்வளவு சுயநலம். நமக்கு எல்லாமும் செய்யும் நம் அம்மாவின் தேவைகள் என்ன? அவர்களுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என்பதை எப்போதாவது நமக்குள்ளேயே கூட நாம் கேட்டுப் பார்த்துக்கொண்டதில்லை.
உதாரணத்திற்கு இப்படத்தில் காட்டப்படும் காலை நேரப் பரபரப்பு. இந்தக் காலை நேர பரபரப்பு பெரும்பாலான வீடுகளில் ஒரு மினி போர்க்களமாகவே இருப்பதுண்டு. ஆனால் அந்தப் போர்க்களத்தில் அதிகம் காயம்படுவது அம்மாதான்.
டிபன் பாக்ஸ் எடுத்து வச்சியா, புராஜெக்ட் மெட்டீரியல் கேட்டிருந்தேனே வாங்கி வச்சியா? என்னுடைய சாக்ஸ் எங்க காணோம்... இதுபோல ஒவ்வொருநாளும் கேள்விகள்... கேள்விகள்... எல்லாவற்றுக்கும் அம்மாதான் பதில் சொல்லவேண்டும்....
சின்னச்சின்ன வேலைகளுக்குக்கூட அம்மாதான்.... ஆண்களுக்கு மட்டுமில்லை ஆண் குழந்தைகளுக்கும் சூப்பர் ஹீரோ நினைப்புதான். ஆனால் அப்படி நினைக்க வைப்பதற்கு உறுதுணையாய் தன் உழைப்பைச் செலுத்தும் அம்மா மட்டுமில்லை. வீட்டில் வளரும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக்கூட இயந்திரம் போட்ட இன்னொரு குட்டி இயந்திரமாகத்தான் நாம் பார்க்கப் பழகியுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டி சின்னஞ்சிறு காட்சிகளின் வழியே மென்மையாக எடுத்துச் சொல்லி ஆண் குழந்தைகளின் மனநிலையில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இக்குறும்படம்
என் வாழ்வில் பெண்களை மதித்து நடப்பேன் என்ற உறுதிமொழியோடு முடிவும் இத்திரைப்படம் #Standsforyourgirls என் ஹேஷ்டேகையும் முன்வைக்கிறது.
மஹியாக நடித்துள்ள அக்னித், அவனது தங்கையாக நடித்துள்ள ராக்ஷு, அம்மா ராஜீ கதாபாத்திரம் ஏற்ற வான்மதி உள்ளிட்டு இப்படத்தில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களும் குழந்தை நட்சத்திரங்களும் தந்துள்ள இயல்பான உணர்வு வெளிப்பாடுகள் மூலம் ஏதோ நாம் நமக்குத் தெரிந்த ஒரு வீட்டின் வரவேற்பறையில் சிறிது நேரம் அமர்ந்து அவர்களோடு பழகிவிட்டு வந்த உணர்வைத் தந்துவிட்டனர்.
கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, காதைத் துளைக்காத மெல்லிய இசை, திரைக்கதையை செம்மைப்படுத்தியுள்ள எடிட்டிங், ஆர்ட் டைரக்ஷன், திரைக்கதை வசனத்திற்கான பிரத்யேகக் கழு, உதவியாளர்கள், அனைவரது உழைப்பும் ஒரு அழகிய திரைச்சீலையின் நுண்ணிய இழைகளாக இதில் கலந்துள்ளன.
இது குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது என்றாலும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொருந்தும். வீட்டில் உள்ள குழந்தைகளை வைத்தே ஒரு அழகிய குறும்படத்தை அம்மாவின் அல்லது வீட்டில் உள்ள நமது பெண்களின் தியாகங்களை நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வீட்டு வாசலிலிருந்து ஆயிரம் பாதைகள் உலகை நோக்கி விரியலாம். ஆனால், அந்த வீட்டின் நிழல் அம்மாதான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு நிறுவியுள்ள 'மைட்டி மகி'யின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் நிச்சயம் பெரிய திரைக்கான தரமான படைப்புகளை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டிவிடுகிறது.
குறும்படத்தைக் காண: https://www.youtube.com/watch?v=iRqLBP4lNjM