

மதுரையில் நேற்று திருமணம் பந்தத்தில் இணைந்த ஜோடி, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து; சிஏஏவுக்கு எதிரான வாசகம் என திருமண விழாவை பிரச்சாரக் களமாக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மதுரையில் ஆ.பெ.நா.பாலசுப்பிரமணியன் - அ.செல்வி ஆகியோரின் மகனான செ.பா.திலீபன் மற்றும் கி.சுப்பிரமணியன் - பொ.சாவித்ரி ஆகியோரின் மகளான சு.சுமித்ரா ஆகியோரின் திருமணம் நேற்று நடந்தது.
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சமூக அரங்கில் நடந்த இந்த சுயமரியதை மற்றும் சாதி மறுப்புத் திருமணத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். விழாவில் திராவிடர் கழகப் பரப்புரை செயலாளர் அ.அருள்மொழி, சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோரும் விழாவுக்கு வந்திருந்தனர்.
திருமண மேடையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கருத்துப்படமும், No CAA, NO NRC, NO NPR என்னும் முழக்கமும் இடம் பெற்றிருந்தது. பெரியார் படத்துடன் "ஆணுக்குப் பெண் அடிமையுமல்ல, பெண்ணுக்கு ஆண் எஜமானுமல்ல" என்ற வாசகத்தையும் வைத்திருந்தார்கள்.
விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரிடமும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. வந்தோர் அனைவருக்கும் 'இட ஒதுக்கீட்டு உரிமை', 'இறை மறுப்புத் தத்துவம் - ஒரு விளக்கம்', 'சுயமரியாதைத் திருமணம் ஏன்?', 'தமிழ் எழுத்து வேறுபாடு - ஒலிப்புப் பயிற்சி' போன்ற குறுநூல்கள் வழங்கப்பட்டன.
பொதுவாக திராவிட இயக்கத்தினரும், திமுகவினருமே அதிக அளவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவிற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் வருகை தந்தார்.
மணமகனின் தந்தை பாலசுப்பிரமணியனும், அமைச்சரும் பியுசி முதல் பிஎஸ்சி வரையில் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் ஒன்றாகப் பயின்றவர்கள். மணமக்களை வாழ்த்திய கையோடு தனது கல்லூரித் தோழர்களுடன் பேசி மகிழ்ந்தார் செல்லூர் ராஜூ. "கருப்புச் சட்டையையும், பெரியாரையும் விடாமப் பிடிச்சிக்கிட்டீங்களேப்பா" என்று அவர் தன் நண்பர்களைப் பாராட்ட, "பெரியார் பற்றிய ரஜினியின் கருத்துக்கு நீங்களும் சரியான பதிலடி கொடுத்தீங்களே" என்று அவர்களும் பதிலுக்குப் பாராட்டினார்கள்.
அதே நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் படிவத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கையெழுத்து பெறவில்லை என்று திருமண வீட்டார் தெரிவித்தனர்.
இதேபோல், மதுரையில் அண்மையில் நடைபெற்ற யாழினி - செயநாதன் சுயமரியாதை இணையேற்பு விழாவில், மணப்பெண் தன் மருதாணிக் கரங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.