Published : 27 Jan 2020 07:26 PM
Last Updated : 27 Jan 2020 07:26 PM

‘பிளாட்பார்ம் எண் 21’,  ‘ஆஸ்விட்ஸ்’- பாசிஸ ஹிட்லரின் ‘ஹோலகாஸ்ட்’ டிலிருந்து தப்பிப் பிழைத்தவரின் அச்சமூட்டும் அனுபவம்

மனித நாகரிகம், இந்த பூமியில் மனிதர்களின் வாழ்க்கை, குறிப்பாக ஐரோப்பா உலகத்திற்கு கற்றுத் தந்த பாடம், குரூரம், தனிமனிதரே எப்படி உலகத்தீமையாக மாற முடியும்? இதற்காக எப்படி மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும்? கடவுள், நரகம், சொர்க்கம், இருப்பு, வாழ்க்கை, அரசியல், அதிகாரம், வக்கிரம் என்று பன்முக முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை பலதரப்பினருக்கும் எழுப்பிய நிகழ்வுதான் ‘ஹோலகாஸ்ட்’.

மனித நாகரீகத்தை கேள்விக்குட்படுத்தும் வரலாற்றின் மிகமிகக் கொடூரமான, அச்சமூட்டும், வேதனை, துயரம் தரும் ஜெர்மனி நாஜிச, பாசிசத் தலைவர் ஹிட்லரின் யூதப்படுகொலைதான் ஹோலகாஸ்ட் என்று வழங்கப்படுகிறது.

இத்தாலியில் பாசிசத் தலைவர் முசோலினி பலவிதமான சட்டங்களை இயற்றினார், அதில் நிறமேட்டிமைச் சட்டமும் ஒன்று. இதன் மூலம் இத்தாலிய யூதர்களை அடையாளம் கண்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இன்று (27-1-20), உலகம் முழுதும் ஹோலகாஸ்ட் வேதனை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹோலகாஸ்ட் பற்றிய எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள், பத்திரிகைச் செய்திகள், கல்விப்புலத்தில் தத்துவார்த்த நூல்கள், டாக்குமென்ட்ரிகள் வெளிவந்துள்ளன, அதன் கொடூரத்தை, பாசிசத்தின் கொடுமைகளைக் காண விரும்புவோர் இந்த வெளியீடுகளைத் தேடிப்பிடித்துப் படித்துப் பார்க்கலாம்.

இந்நிலையில் ஆஸ்விட்ஸ் என்ற வார்த்தை மேற்கத்திய உலகில் இன்று அருவருப்பான ஒரு வார்த்தையாக, நிகழ்வாகப் பார்க்கப்பட்டு ஐரோப்பா இந்த பயங்கரங்களிலிருந்து வெளியே வர முயன்று கொண்டிருக்கிறது. அயர்லாந்து படைப்பாளி ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறியது போல் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் “History is a nightmare from which I am trying to awake" (‘வரலாறு என்பது துர்க்கனவு அதிலிருந்து மீண்டு விழிப்புற முயல்கிறேன்’) என்று விழிப்படைய முயற்சி செய்து வருகிறது, இன்று அஞ்செலா மெர்கெல் தலைமை ஜெர்மனி இந்த வரலாறு எனும் துர்க்கனவிலிருந்து மீண்ட தேசமாக அகதிகளை வரவேற்கும் ஒரு மிகச்சிறந்த மனிதநேய நாடாக வளர்ந்துள்ளது.

ஜேம்ஸ் ஜாய்சின் புகழ்பெற்ற, வாசிக்க மிகமிகக் கடினமான யுலீசஸ் என்ற நாவலின் கதைநாயகன் ஸ்டீபன் டீடலஸ், ஒரு வாக்குவாதத்தில் டியஸி என்பவருடன் உரையாடல் நிகழ்த்தும் போது, ‘வரலாறு என்பது துர்க்கனவு அதிலிருந்து மீண்டு விழிப்புற முயல்கிறேன்’ என்ற மிகப்பிரசித்தமான கூற்றை ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதினார். டியஸியின் வரலாறு பற்றிய பார்வை, “வரலாறு ஒரே லட்சியத்தை நோக்கி முன்னேறுகிறது, அது கடவுளின் வெளிப்பாடு என்பதே” என்று வரலாற்றை லட்சியமயமாக்கும் போது அதை ஸ்டீபன் டீடலஸ் வரலாறு என்பது ஒரு துர்க்கனவு என்று உடைக்கிறார். பிரைமோ லெவி என்ற படைப்பாளியும் இந்த ஹோலகாஸ்ட், யூதக் கொலைமுகாமிலிருந்து உயிருடன் மீண்டவர் இவரது எழுத்துக்களும் இன்று நாஜிச, பாசிசத்திற்கு எதிரான அத்தாட்சியாக விளங்குகிறது.

இந்நிலையில் நாஜி கொலைமுகாமில் தன் 8 வயதில் சிக்கி, எப்படியோ தப்பி உயிர்பிழைத்த லிலியானா செக்ரி என்ற 89 வயது இத்தாலி முதாட்டி தன் பயங்கர அனுபவங்களை அல் ஜசீரா தொலைக்காட்சிக்காக விவரித்துள்ளார்.

8 வயதில் ஆஸ்விட்ஸ் கொலைமுகாமுக்குச் சென்று இன்ரு 89 வயதில் உயிருடன் இருக்கும் இவருக்கு இப்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவருக்கு இன்றும் கொலை மிரட்டல் இருந்து வருகிறது.

தற்போது இவர் மிலனில் வசித்து வருகிறார்.

லிலியானாவின் குழந்தைப் பருவம்:

லிலியானா இத்தாலியில் உள்ள மிலனில் 1930ம் ஆண்டு பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவரது தாயார் கேன்சருக்கு இரையாகி இறந்தார். தனது கண்டிப்பான ஆன பாசமிகு தந்தையின் வளர்ப்பில் அவர் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தார். தந்தை தாயுமானவரும் ஆனார்.

லிலியானாவுக்கு 8 வயது இருக்கும் போது வாழ்க்கையில் பூகம்பம் வெடித்தது. 1938-ல் பாசிசத் தலைவர் பெனிட்டோ முசோலினி நிற மேட்டிமை சட்டங்களை இயற்றினார். இதன் மூலம் யூதர்கள் அழித்தொழிப்பு நடந்தேறியது. இந்த ஆண்டில்தான் லிலியானா யூதர் என்பதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதுதான் பாவம் சிறு இலியானாவுக்கு தான் யூதர் என்பதே தெரியவந்தது. இவரது குடும்பம் மதச்சார்பற்றது. தன் வகுப்பறைத் தோழர்களிடமிருந்து தன்னைப் பிரித்த போதுதான் ‘வித்தியாசம்’, ‘யூத வித்தியாசம் அல்லது வேறு பாடு’ இவருக்கு அறியத் தெரிந்தது.

கொலைமுகாமுக்கு அனுப்பப்படுதல்:

இந்த யூத வித்தியாசம்தான் மரண தண்டனையாக மாறுகிறது 1943-ல். இந்த ஆண்டின் 1943-ல் முசோலினி தன் தேசிய பாசிஸ்ட் கட்சியினர் மூலமே ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். ஆஹா, முசோலினி வீழ்த்தப்பட்டார் என்ற யூதர்களின் மகிழ்ச்சி ஒரு துர்கனவுதான் என்பது பிற்பாடு தெரியவந்தது.

செப்டம்பர் மாதம் இத்தாலி கூட்டணி நாடுகளுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. நாட்டின் தெற்குப் பகுதி, சிசிலி, சர்டானியா போன்ற தீவுகள் கூட்டணி படைகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. நாஜி ஜெர்மனி படைகள் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் ஆக்ரமித்தன. இங்கு மீண்டும் முசோலினி தலைவராக நியமிக்கப்பட்டார். மிலன் நாஜி ஆதிக்கத்தின் கீழ் சிக்குண்டது.

இந்நிலையில் டிசம்பர் 8, 1943-ல் லிலியானாவும் அவரது தந்தையும் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் கேட்டனர், ஆனால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களது தப்பித்தல் முயற்சி தாமதமானதால் கைதாகினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யூதர்கள் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாஜி வதை-கொலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஹோலகாஸ்ட் படுகொலையில் சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதில் இத்தாலி யூதர்கள் சுமார் 8,000 பேர் இருந்திருப்பார்கள்.

பிளாட்பார்ம் எண் 21:

மிலனில் சான் விட்டோரி என்ற சிறையில் 40 நாட்கள் கடும் சித்ரவதை வேலையில் ஈடுபட்டு உடலும் மனமும் தளர லிலியானா இருந்தார். தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டார், தந்தை வேறு ஒரு முகாமில் அடைக்கப்பட்டார். 40 நாட்கள் சிறைக்குப் பிறகு வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு செல்ல இவர் உள்ளிட்ட யூதர்கள் ஒரு சுரங்க ரயில் நிலைய நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டனர், இந்த பாதாள நடைமேடை பொதுவாக கால்நடைகளுக்கும், சரக்குகளுக்குமானது.

இந்த பிளாட்பார்ம் தான் பிளாட்பார்ம் 21 ஆகும். ஜனவரி 30, 1944 அன்று பிளாட்பார்ம் 21லிருந்து புறப்பட்ட சரக்கு ரயிலில் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கடும் வசை, அடி உதைகளுக்கு மத்தியில் பிராணிகளைப் பொருட்களை அடைக்கும் ஒரு ரயிலில் லிலியானா உள்ளிட்ட யூதர்கள் அடைக்கப்படுகின்றனர், 14 வயது லிலியானாவுக்கு என்ன புரியும்? வெறும் பீதி, மன உளைச்சல், சொல்லொணா அச்சம் என அவர் தத்தளித்தார். இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுவார்கள்? கொலை-வதை முகாமான ஆஸ்விட்ஸுக்குத்தான்.

எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் அழைத்துச் செல்லப்படுவதை லிலியானா, “துயரத்தினுள் ஒரு துயரம்” என்று வர்ணிக்கிறார். ”இது ஒரு மிகப்பெரிய ஷாக், எங்களைச் சுற்றி நடக்கும் வன்முறைகள் காட்டுமிராண்டித்தனத்தையும் தாண்டியது. மக்கள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர், ஆனால் அடி உதை, தள்ளுகளுடன் அனைவரும் கொட்டடியில் அடைக்கப்படுவது போல் குட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டனர். ஒரே இருட்டு, ஆங்காங்கே டார்ச் லைட்களின் வெளிச்சம். எங்களைக் கடும் வசைகளுடன் கண்ணுக்குத் தெரியாத கைகள் அடித்தன, தள்ளின, குத்து விட்டன.

ஆனால் இதை விடவும் பயங்கரம் தங்களுக்குக் காத்திருக்கிறது என்று தெரியாமல் அவர்கள் இந்தப் பயத்துடன் பயணித்தனர்.

ஆஸ்விட்ஸ்:

தன் பாசமிகு தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்ட லிலியானா அதன் பிறகு தன் தந்தையை மீண்டும் பார்க்க முடியாமலே போனது. தந்தை ஆல்பர்ட்டோ செக்ரி ஏப்ரல் 27, 1944-ல் ஆஸ்விட்ஸில் கேஸ் சாம்பரில் கொலைசெய்யப்பட்டார். இதற்கு முன்னதாக தன் தாத்தா, பாட்டியையும் கொலைமுகாமில் இழந்திருந்தார் லிலியானா.

முகாமில் இருக்கும் போது, யூதர்களுக்கு கடும் வேலை அளிக்கப்படும், ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்து விட்டு அதையே ஒருவாரம் வைத்துக் கொள்ள வேண்டும், வேலை செய்வதற்குக் கிடைக்கும் சொற்ப காசில் லஞ்சம் கொடுத்து சில வேளைகளில் ரொட்டி வாங்க வேண்டியிருக்கும். லிலியானா ஆயுதங்கள் தயாரிக்கும் இடத்தில் முகாமுக்குள் வேலைக்கு அனுப்பப்பட்டார். வெட்ட வெளியில் பணி செய்திருந்தால் உறைபனி உயிரைக் குடித்திருக்கும். ஆனால் ஆயுதத் தொழிற்சாலையில் பணியினால் இவர் உயிர் இருந்தது.

ஜனவரி 20, 1945-ல் சோவியத் ராணுவம் முகாமை முற்றுகையிட நெருங்கிக் கொண்டிருந்தது, இதனையடுத்து லிலியானா உட்பட சுமார் 60,000 யூதர்கள் அங்கிருந்து ஜெர்மனியிலிருந்த பல்வேறு வதை-கொலை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தங்கள் குற்றங்களுக்கு எந்த வித சாட்சியும் இருக்கக் கூடாது என்பதில் நாஜிக்கள் தெளிவாக இருந்தனர்.

நூற்றுக்கணக்கான மைல்கள் இவர்கள் நடத்தியே அழைத்து வரப்பட்டனர். ரேவன்ஸ்பர்க் என்ற வதைமுகாமுக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டனர், இது ஆஸ்விட்ஸ் கொலை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும் முன் தங்க வைக்கப்படும் இடமாக இருந்து வந்தது. இங்கு 2 வாரங்கள் இவர்கள் இருந்தனர். இங்கிருந்து லிலியானா 2 முகாம்களுக்கு மாற்றப்பட்டார் இதில் கடைசி முகாம்தான் மால்ச்சோ முகாம்.

ஜெர்மனி போரில் தோற்றுக் கொண்டிருந்தது. மால்ச்சோ முகாமிலிருந்து வெளியேறிய பிறகு 2 நாட்கள் லிலியானா நடந்து சென்றார், எங்கு இருக்கிறோம் என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் மே, 1, 1945 அன்று அமெரிக்கப்படையினரை அவர் கண்டார். அவர்கள் புன்னகையுடன் இவர்களை வரவேற்றனர், உணவாக ஆப்ரிகாட் பழம் (வாதுமைப் பழம்) அளித்தனர். “இன்றும் கூட ஆப்ரிகாட் பழங்கள் எனக்கு சுதந்திரம் போன்று ருசிக்கிறது” என்கிறார் லிலியானா.

நாட்டின் மனசாட்சி:

இன்றைய தினம் இத்தாலியின் குறியீடாகி விட்டார் லிலியானா. எதேச்சதிகார, சர்வாதிகார, பாசிச, நாஜிச ஆட்சிகள் ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு என்ன செய்து விட முடியும் என்பதற்கான உயிர் வாழும் சாட்சியாக, மனசாட்சியாகல் லிலியானா திகழ்கிறார்.

தனது 60வது வயது முதல்தான் நாஜி கொடுமைகள் குறித்து அவர் வெளியே பேசத்தொடங்கினார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இத்தாலி வரலாறு எனும் பயங்கரத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தது.

1990களில்தான் லிலியானா பள்ளிகளுக்கெல்லாம் சென்று தன் ஹோலகாஸ்ட் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். அவரது குரலுக்கு கிடைத்த வரவேற்பாக 2018 ஜனவரியில் இவர் இத்தாலி நாடாளுமன்றத்தில் வாழ்நாள் செனேட்டராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2019-ம் ஆண்டே இவர் அனைத்துவகையான நிறவெறி, யூத எதிர்ப்பு, மதத் துவேஷம் ஆகியவற்றுக்கு எதிராக கமிட்டி அமைக்க வேண்டும் என்று இத்தாலி நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்தத் தீர்மானம் இத்தாலியின் வலதுசாரிகளின் எதிர்ப்புகளுடன் நிறைவேறியது. ஆனால் லிலியானாவுக்கு எதிராக இது பல துவேஷங்களையும், கொலை மிரட்டல்களையும் உருவாக்கியது.

இன்று காட்டுமிராண்டித் தனம் குறைந்திருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டாலும் இன்றும் சில அரசியல்வாதிகளின் பேச்சுக்களில் நாஜி கால தொனி இருப்பதை உணர்வதாக அல் ஜசீராவுக்கு அவர் தெரிவித்தார். “பலிகடாவாக்குவதற்கான இந்த புதிய காட்டுமிராண்டிகளின் மொழி .... பலிகடாவாக்கப்படுவதை ஒழிப்பது எப்போது?” என்று கேட்கிறார் லிலியானா. நாஜி வதைமுகாமில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன், தாயிடமிருந்து 3 வயது குழந்தைகள் கேஸ் சேம்பருக்கு அனுப்பப்பட்டனர், காரணம் யூதனாகப் பிறந்ததே” என்கிறார்.

மேலும் குடும்பத்தில் பாசிசம் என்ற தலைப்பில் படம் ஒன்றில் லிலியானா பணியாற்றி வருகிறார். ‘என் தாத்தா ஒரு பாசிஸ்ட், சர்டீனியாவில் பாசிஸ ரெஜிமில் இருந்தார். என் மாமாவும் பாசிஸ்ட்தான்’ என்று கூறும் லிலியானாவுக்கு இன்றும் கொலை மிரட்டல்கள் இருந்து வருவது பாசிஸத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முற்றிலும் அழியவில்லை என்பதை உணர்த்துவதோடு லிலியானா போன்றவர்கள் மூலம் அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்ற புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளதை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x