

பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் வசிக்க நேர்பவர்களில் பலருக்குத் தங்கள் மூதாதையரின் வேர்களைத் தேடும் தாகம் இருக்கும். ஆனால், அதைச் சாத்தியப்படுத்திக்கொள்ள போதிய அவகாசமும், கடும் உழைப்பும், பிறரது ஒத்துழைப்பும் தேவை என்பதால், பலர் அம்முயற்சியில் இறங்குவதில்லை.
ஆனால், அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஆப்பிரிக்க மண்ணில் தனது முன்னோர்கள் வாழ்ந்த இடத்தைத் தேடிச் சென்று அதை நாவலாக எழுதியதன் மூலம், அடிமைகள் வரலாற்றின் ஆவணத்தையே பதிவுசெய்தவர் அலெக்ஸ் ஹேலி. உலகப் புகழ்பெற்ற ‘ரூட்ஸ்: தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் ஃபேமிலி’ எனும் அந்நாவல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நியூயார்க் அருகில் உள்ள இதாகா நகரில் 1921 ஆகஸ்ட் 11-ல் பிறந்தவர் ஹேலி. அவரது தந்தை சைமன் ஹேலி, அலபாமா ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் வேளாண் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் மத்தியில் தனது தந்தை கல்வி கற்றுப் பேராசிரியரானதில் ஹேலிக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கல்லூரியில் சேர்ந்த ஹேலி, பாதியிலேயே கல்லூரியிலிருந்து வெளியேறினார். பின்னர் கப்பல் படையில் சேர்ந்தார். கப்பல் பயணத்தில் பல மாதங்களைக் கழித்த அவர் தனது அனுபவங்களை எழுதத் தொடங்கினார்.
1959-ல் கப்பல் படையிலிருந்து விலகிய அவர் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பின்னர், ‘ப்ளேபாய்’ இதழில் பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களை நேர்காணல் செய்தார். அப்படித்தான் கருப்பின விடுதலைப் போராளி மால்கம் எக்ஸைப் பேட்டியெடுத்தார் ஹேலி. 1965-ல் மால்கம் எக்ஸ் கொல்லப்பட்ட பின்னர், அவரது நேர்காணல்களின் தொகுப்பை ‘தி ஆட்டோ பயோகிராஃபி ஆஃப் மால்கம் எக்ஸ்’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்தார்.
1973-ல் ‘சூப்பர் ஃப்ளை டி.என்.டி.’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையையும் எழுதினார். அதன்பின்னர், ஒட்டுமொத்த உலகையும் தன் பக்கம் திருப்பிய படைப்பான ‘ரூட்ஸ்’ நாவலை 1976-ல் வெளியிட்டார். தனது மூதாதையர் குறித்து தனது பாட்டி சிந்தியா சொன்ன கதைகள் அவரது நினைவில் இருந்தன. தொடர்ந்து 12 ஆண்டுகள் தனது முன்னோர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினார். 1767-ல் ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்ட குன்ட்டா கின்ட்டே பற்றிய தகவல் கிடைத்தது. ஹேலியின் கொள்ளுத் தாத்தாதான் குன்ட்டா. தனது இடைவிடாத தேடல்களின் மூலம் குன்ட்டாவின் முன்னோர்களைப் பற்றியும் அவரது வழித்தோன்றல்களைப் பற்றியும் தகவல் சேகரித்த ஹேலி, வரலாற்றுத் தகவல்களையும் புனைவையும் கலந்து ‘ரூட்ஸ்’ நாவலை உருவாக்கினார். ‘ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1992-ல் மறைந்த ஹேலிக்கு டென்னிசி மாகாணத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.