

சென்னை புத்தகக் காட்சியில் ப்யூர் சினிமா அரங்கில் 3 சினிமா நூல்கள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.
ஃபிலிம் மேக்கிங் A-Z
சினிமா குறித்து பேசாமொழி பதிப்பகம் மூலம் வெளியான மற்றுமொரு நூல் 'ஃபிலிம் மேக்கிங் A-Z'. Highlights of film making process என்ற புத்தகத்தை தீஷா தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான முன் தயாரிப்பு, தயாரிப்பு, பின் தயாரிப்பு குறித்தும், இயக்குநர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்பான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.
திரைப்படத் தயாரிப்பின் ஐந்து படிநிலைகள், எழுத்திலிருந்து திரைக்கதைக்குச் செல்லும் படிநிலைகள், கால்ஷீட், ஷாட் லிஸ்ட், ஸ்கிரிப்ட் பிரேக் டவுன் ஷீட், லொக்கேஷன் செட் பிரேக் டவுன், ஷெட்யூல், பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் ஸ்கிரிப்டுக்கான பட்ஜெட்டைப் பட்டியலிடுதல்,பட்ஜெட்டை உருவாக்குவதான படிநிலைகள், தயாரிப்பு அறிக்கையை உருவாகத் தேவையான அம்சங்கள், பின் தயாரிப்பு எனப்படும் போஸ்ட் புரொடக்ஷனில் உள்ள 13 படிநிலைகள், திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்புவது எப்படி? என்று எல்லா அம்சங்களையும் ஃபிலிம் மேக்கிங் A-Z விரிவாக எடுத்துரைக்கிறது.
நூலின் பெயர்: ஃபிலிம் மேக்கிங் A-Z
நூலாசிரியர்: தீஷா
விலை: ரூ.75
ஸ்டோரி போர்ட் A-Z
திரைப்படப் படப்பிடிப்புக்கு ஸ்டோரிபோர்டு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல் இது.
ஸ்டோரிபோர்ட் வரைவதற்கு முன்னால் குறிப்பிட்ட காட்சி குறித்து தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள், மென்பொருள்/ காகிதம், ஸ்டோரிபோர்ட் வரைவதற்குப் பின்பற்ற வேண்டிய சரியான முறைகள், ஸ்டோரிபோர்டுகளின் வரலாறு, ஸ்டோரிபோர்டின் முக்கியத்துவம், நான்கு எளிமையான வழிகளின் மூலமாக ஸ்டோரிபோர்டினை உருவாக்குதல், ஸ்டோரிபோர்டு உருவாக்குவதற்கான 9 படிநிலைகள், புகழ்பெற்ற திரைப்படங்களில் இருந்து 23 ஸ்டோரி போர்டு உதாரணங்கள், ஸ்டோரிபோர்டு வரைவதற்கான பயிற்சிகள், ஸ்டோரிபோர்டு மூலமாக நாம் எதையெல்லாம் சாதிக்க முடியும் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
நடிகர்கள் நடிப்பதற்கு முன், ஒத்திகை செய்வதுபோல, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன், தான் எடுக்கப்போகிற திரைப்படத்தின் காட்சியமைப்புகள் குறித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இயக்குனர்கள் ஒத்திகை செய்து கொள்ள ஸ்டோரிபோர்டு உதவும் விதத்தையும் நூலாசிரியர் தீஷா தெளிவாக விளக்கியுள்ளார்.
ஸ்டோரிபோர்டு குறித்து தெரிந்துகொள்ள இந்நூல் மிகச் சிறந்த கையேடாகத் திகழும்.
நூலின் பெயர்: ஸ்டோரி போர்ட் A-Z
நூலாசிரியர்: தீஷா
விலை: ரூ.170
ARTICLE 15
இந்தி சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் 'ARTICLE 15'. 2000 ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கட்டமைப்பை, சிறுமிகள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையை மிகவும் அழுத்தமாகப் பேசும் படம் இது.
3 ரூபாய் கூலி உயர்வுக்காக 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட விதத்தை பதைபதைக்கும் எழுத்துகளில் திருவாசகம் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார். போகிற போக்கில் சமகால அரசியலையும், சமீபத்திய நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது நூலின் பலம்.
'ஆர்ட்டிகிள் 15' படத்தின் உச்சமான காட்சிகள், நாயகன் ஆயுஷ்மன் குரானாவின் நடிப்பு, காவலர்களுக்குள் உள்ள சாதிப் பாகுபாடு, நாயகியின் பாத்திர வடிவமைப்பு, நேர்மையான டாக்டர் மாலதிராம் பொய்யான அறிக்கை தர வேண்டிய நிர்பந்தம், ஜாடவின் கையறு நிலை, தேர்தல் அரசியல், புத்திசாலி நாயகி என அனைத்தையும் அலசும் திருவாசகம், இயக்குநரின் சார்புத் தன்மையையும் சந்தேகத்துடன் பதிவு செய்யத் தவறவில்லை.
முக்கியமான உலகத் திரைப்படங்கள் குறித்து சிறு சிறு நூல்கள் வெளிவரும் சூழலில், 'ஆர்ட்டிகிள் 15' போன்ற சமூக அக்கறை படங்களுக்கும் தனியான, விரிவான நூல் வருவது ஆரோக்கியமான அம்சம். அதை நிகழ்த்திக் காட்டிய சா.திருவாசகமும், பேசாமொழி பதிப்பகத்தின் நிறுவனர் அருணும் பாராட்டுக்குரியவர்கள்.
நூலின் பெயர்: ARTICLE 15
நூல் ஆசிரியர்: சா.திருவாசகம்
விலை: ரூ.65
3 நூல்களையும் பெற:
தொடர்புக்கு:
பேசாமொழி பதிப்பகம்,
7, சிவன் கோயில் தெரு, (கமலா திரையரங்கம் அருகில்),
வடபழனி, சென்னை- 600 026,
பேச: 9840644916