Last Updated : 16 Jan, 2020 06:14 PM

Published : 16 Jan 2020 06:14 PM
Last Updated : 16 Jan 2020 06:14 PM

'எல்லோரும் எழுத ஆரம்பிச்சிட்டா, வாசிக்க ஆள் வேணாமா?'- ஸ்ரீவில்லிபுத்தூரின் மூத்த வாசகர் எஸ்.எஸ்.ஆர்.லிங்கத்தின் மறைவும் எனது நினைவலைகளும்

ஸ்ரீவில்லிபுத்தூரின் மூத்த வாசகர் எஸ்.எஸ்.ஆர்.லிங்கம் இன்று மறைந்தார். அவருக்கு வயது 94.

அவரது மறைவுச் செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. சோகத்தின் ஊடே அவரை நேரில் சந்தித்து காமதேனு இதழுக்காக எடுத்த பேட்டியை நினைவு கூர்ந்தேன். லிங்கம் சாரின் வாழ்க்கை என்னை வியக்க வைக்கிறது. 10 வரிகள் படிக்கப் பொறுமையில்லாத பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு வாசிப்பு வாழ்க்கையை வாழ்ந்த லிங்கம் சார் ஓர் முன்னுதாரண மனிதர்.

நினைவலைகள்..

“புத்தகம் தான் வாழ்க்கைன்னு பல பேரு சொல்லிக் கேட்டிருப்போம். உண்மையிலேயே அப்படி வாழ்ந்தது எஸ்.எஸ்.ஆர்.லிங்கம்தான் சார். 94 வயசுலேயும் புத்தகங்களை வாசிச்சுக்கிட்டே இருந்தார், அதுவும் கண்ணாடி போடாம! 9 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள் இருந்தாலும் நான் புத்தகங்களோடுதான் இருப்பேன் என்று அடம்பிடித்து தனி வீட்டில் வசித்தார்.

அலமாரிகள், பீரோ, பரண், கட்டில், அட்டைப்பெட்டிகள் என்று எங்கும், எதிலும் புத்தகங்கள். அடுப்படியில் பூனை தூங்கும் வீட்டைப் பார்த்திருப்பீர்கள், புத்தகம் உட்கார்ந்திருக்கும் வீடு அவருடையது” என்று இலக்கிய ஆர்வலரும், வழக்கறிஞருமான அன்னக்கொடி சொன்னபோது கொஞ்சம் மிகைப்படுத்துவதாகவே நினைத்தேன்.

ஓராண்டுக்கு முன்பு 'காமதேனு' வார இதழுக்காக திருவில்லிபுத்தூர் செட்டியகுடி தெருவில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.லிங்கத்தின் வீட்டுக்கு நேரில் சென்றபோது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று புரிந்தது.

வரவேற்பறையை புதுமைப்பித்தன், ஜெயகாந்தனின் புகைப்படங்கள் அலங்கரித்தன. அடுத்த அறையில் திரும்பிய திசையெல்லாம் புத்தகங்கள். நடுவில் உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்தார் அவர். அய்யாவின் நலம் விசாரித்தபடியே, அலமாரியில் இருந்த புத்தகங்களைப் புரட்டினேன். பள்ளிக்குழந்தைகள் பாடப்புத்தகத்திற்கு மேலுறை இடுவார்களே, அதேபோல அத்தனை புத்தகங்களுக்கும் அட்டை போட்டு, அதன் மேல் புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வாங்கிய இடம் அல்லது அன்பளித்தவரின் பெயரை எழுதியிருந்தார்.

குறிப்புகளுக்காக புத்தகத்தின் கடைசி சில பக்கங்களை ஒதுக்கியிருப்பார்களே? அதில் அந்தப் புத்தகம் பற்றிய தனது கருத்தை, விமர்சனத்தை அழுத்தமாக எழுதியிருந்தார். பத்திரிகைகளுக்காக புத்தக விமர்சனம் எழுதுகிறபோது, பொதுவெளி என்பதால் குறைகூறுவதை குறைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் அல்லவா? இவரோ மனதில் பட்டத்தை அப்படியே எழுதிவைத்திருந்தார். ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு, நண்பனிடம் பேசினால் எப்படி பூசி மெழுகாமல் கருத்துச் சொல்வோமே அப்படி நறுக்கென்றிருக்கிறது விமர்சனம்!

கடைசி வரை வாசகர்...

மனிதர் ஏதோ ஒரு கால கட்டத்தில் உறைந்துபோனவர் அல்ல. தினந்தோறும் இந்து தமிழ் உள்பட 3 நாளிதழ்கள் வாசிக்கிறார், சிற்றிதழ்களைக்கூட விட்டுவைப்பதில்லை என்பதை நேரிலேயே கண்டேன். திரு.வி.க., லா.ச.ரா., ராஜம் கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், ந.பிச்சமூர்த்தி, தனுஷ்கோடி ராமசாமி, சு.சமுத்திரம், அசோகமித்திரன், தினமணி சிவராமன், டி.எஸ்.சொக்கலிங்கம், கல்கி, செ.யோகநாதன், திலகவதி, நா.பார்த்தசாரதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எழுத்தாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த போதும், கடைசி வரையில் அவர் ஒரு வாசகராக மட்டுமே இருந்தார்.

எல்லோரும் எழுத ஆரம்பிச்சிட்டா, வாசிக்கிறதுக்கு ஆள் வேணாமா? என்று வேடிக்கையாகக் கேட்கும் அவர் இன்று (வியாழக்கிழமை) மறைந்தார்.

இலக்கியவாதிகள் அஞ்சலி..

"அப்பாவுக்கு 94 வயது. 2 மாதமாகவே சற்று உடல்நிலை குன்றியிருந்தார். சளித்தொல்லையும் இருந்தது. ஆனாலும், புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை. கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி அடித்ததால், அப்பாவின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு இயற்கை எய்தினார்" என்கிறார் அவரது மகனும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியருமான சண்முகம். அவரது உடல் தகனம் இன்று மாலையில் நடைபெற்றது.

முன்னதாக அவரது உடலுக்கு தி.மு.க இலக்கிய அணியைச் சேர்ந்த அன்னக்கொடி, கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் கோதையூர் மணியம், எழுத்தாளர்கள் சா.தேவதாஸ், ரமேஷ், கவிஞர்கள் சுரா, துள்ளுக்குட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் நித்தியானந்தம், பாடகர் மரிய டேவிட், வத்திராயிருப்பு கிளை சுந்தரமகாலிங்கம், மருத்துவர் பால்ச்சாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x