Published : 15 Jan 2020 09:57 AM
Last Updated : 15 Jan 2020 09:57 AM

பழந்தமிழர் பொங்கல் கொண்டாடினார்களா?

செந்தீ நடராசன்

தமிழ்நாடு முழுவதற்குமான ஒரு விழாவாகத் தைப்பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. விடுதலைக்குப் பின் தீபாவளி போன்றல்லாத - வைதிகக் கலப்பற்ற ஒரு தமிழர் விழாவாக ‘பொங்கல்‘ முன்மொழியப்பட்டது. தொடக்கத்தில் இந்து சமயம் சார்ந்த விழாவாகக் கருதப்பட்ட இதைக் கொண்டாடத் தயக்கம் காட்டிய பிற சமயத்தாரும், காலையில் பொங்கலிடலுக்குப் பிறகு தொடரும் நிகழ்ச்சிகளில் ஆட்டம் கொண்டாட்டம் விளையாட்டென ஒரு சமூக விழாவாகப் பரிணமிக்கும் தளத்தில் ஒன்றிணைவதைக் காண்கிறோம். அவ்வகையில் தீபாவளிக்கு மாற்றாகத் தமிழருக்கென ஒரு விழாவை இனம் காட்டுவதில் திராவிட இயக்கங்கள் வெற்றி அடைந்துவிட்டன.

பொங்கலையும் தைப்பொங்கலையும் ஒன்றாகக் காண வேண்டியதில்லை. ஊர்ப்புறங்களில் தனிக்குடும்ப நேர்ச்சையாகவும் நாட்டார் கோயில் விழாக்களிலும் பொங்கல் போடப்படுகிறது. அதன் தொடக்க இயல்பு ‘மதுப் பொங்கல்‘. தைப் பொங்கல் காலையில் மட்டும் நிகழ்வது – சூரியனை முன்னிறுத்தி நிகழ்வது. பிற பொங்கல்கள் நாட்டார் தெய்வங்களை முன்நிறுத்துவன. பகல் - இரவு என்ற காலவரையறை அவற்றுக்கு இல்லை.

தைப் பிறப்பும் மகர சங்கராந்தியும்

தைப் பொங்கலோடு மகர சங்கராந்தியும் பேசப்படும். பாமரர்களுக்கு அது அந்நியமான சொல். வைதிகம் சார்ந்ததாகப் பார்ப்பார்கள். ஆனால், மகர சங்கராந்திக்கு வானியல் தொடர்பு உண்டு. தை மாதப் பிறப்புக்கும்கூட.

இவற்றிடையே என்ன தொடர்பு? வானியல் அடிப்படையில் தை மாதப் பிறப்புக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. சூரியனின் சுற்றுப்பாதையை நோக்கி பூமி 22.5 பாகை சாய்ந்திருக்கிறது. அதன் காரணமாக நிலநடுக்கோட்டில் இருந்து வடக்கே 22.5 பாகையில் உள்ள கடக ரேகைக்குச் சித்திரை முதல் ஆனி மாதம் முடிய சூரியன் பயணிக்கிறது. பின்னர் ஆடி மாதத்தில் தெற்கு நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறது. அது தட்சணாயனம் எனப்படும். புரட்டாசி இறுதியில் மீண்டும் நிலநடுக்கோட்டுக்கு நேராக வருகிறது. ஐப்பசி தொடங்கி மார்கழிவரை தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கே 22.5 பாகையில் உள்ள மகரரேகைக்கு நேராகச் சூரியன் வருகிறது.

தை ஒன்றாம் தேதி வடக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது. இது உத்தராயனம் எனப்படும். இப்பயணம் பங்குனி கடைசியில் மீண்டும் நிலநடுக்கோட்டை அடைவதாக முடியும். சித்திரை, ஐப்பசிகளில் முதல் நாள் பகல்-இரவு சமமாக (அதாவது 12 – 12 மணி நேரமாக) இருக்கும். அவற்றை ‘விசு’ என்போம் (அயனம் – இயக்கம், தட்சணம் – தெற்கு , உத்தரம் – மேலே, வடக்கு).

நிலநடுக் கோட்டை ஒட்டியுள்ள நம் தென் நிலப்பரப்பில் பூவும் கனியும் தானியங்களும் செழித்துக் குலுங்கும் வசந்தத்தை நோக்கிய நகர்வு என்ற வகையில், தைப் பிறப்பு முக்கியமான நாள். நம் விளைச்சல் பயன்களுக்கு நன்றி பாராட்டும் விதமாகச் சூரியனுக்குப் பொங்கல் இடுகிறோம். நிலங்களை உழும் மாடுகளுக்கும் சிறப்பு செய்கிறோம். தொடர்ந்து களியாட்டங்களில் ஈடுபடுகிறோம்.

காலக்கணக்கு – சந்திர அடிமானம், சூரிய அடிமானம்

சித்திரை தொடங்கி பங்குனி முடிய உள்ள 12 மாதங்களும் பழந்தமிழர் பின்பற்றிய தமிழ் மாதங்களே. ஆனால், சந்திர அடிமானமாக அமைந்த ஆண்டுக்கணக்கில் திங்கள் என்று மாதங்கள் அழைக்கப்பட்டன (திங்கள் – சந்திரன்). தொல்காப்பியம் தொடங்கி சங்க நூல்கள் பேசும் நாளும் திங்களும், நட்சத்திரத்தையும் மாதத்தையும் குறிக்கும்.

ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் நசந்திரன் அசுவினி தொடங்கி ரேவதி முடிய 27 நட்சத்திரங்களைப் பின்புலமாகக் கொண்டு நகர்கின்றன. அந்நாள், அந்நட்சத்திரத்தால் அறியப்பட்டது. இன்றிருப்பது போல 1, 2, 3… என்று தேதிகள் கிடையாது. பவுர்ணமி கழிந்து 14 தேய்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி எனத் திதிகளாக அறியப்படும். அந்தத் தேய்பிறை 14 நாட்கள் கிருஷ்ண பட்சம்/ பகுள பட்சம் அல்லது அமர பட்சம் என அழைக்கப்படுகிறது. 15-ம் நாள் அம்மாவாசை. அதை அடுத்த 14 வளர்பிறை நாட்கள் பிரதமை, திதியை... சதுர்த்தசி என வரும் 14 நாட்கள் அல்லது திதிகள் சுக்ல பட்சம் என அழைக்கப்படுகின்றன. திதிதான் தேதி ஆயிற்று. இவ்வாறு சந்திர இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திர அடிமான மாதமான திங்கள் அமைகிறது. இதில் சூரியனுக்குக் பங்கில்லை. பழந்தமிழகத்தில் மாதக் கடைசி நாள் பவுர்ணமி – பூர்ணிமாந்த மாதம். இதுபோல அம்மாவசையை இறுதி நாளாகக் கொண்ட காலக் கணக்குகளும் உண்டு.

ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுவரை சந்திர அடிமான காலக்கணக்கே தமிழகத்தில் வழக்கில் இருந்ததுபோலத் தோன்றுகிறது. ஆண்டாளின் திருப்பாவையில்,‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் நீராடப் போதுமினோ நேரிழையீர் ..’ எனத் தொடங்கும் பாடல், அதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது.

பழந்தமிழரின் சந்திரமானக் கணக்கில், மாதக் கடைசி நாள் பவுர்ணமி. எனவே, கார்த்திகை மாதக் கடைசி நாள் பவுர்ணமிதான், மார்கழி முதல்நாள் வைகறையிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும். மார்கழி முதல் நாள் வைகறை மதிநிறை நாளாக – பவுர்ணமியாக இருந்து, அவர்கள் நீராடச் செல்ல வேண்டுமானால் . . . ஆண்டாளின் காலத்தில் காலக்கணக்கு சந்திர அடிமானமே.

சூரியமானக் காலக்கணக்கு

பிறகு தமிழகத்தில் சூரியமானக் காலக்கணக்கு வந்தது. 10-ம் நூற்றாண்டை ஒட்டி அது நிகழ்ந்திருக்கலாம். ராஜேந்திர சோழனின் காளஹஸ்தி கல்வெட்டு ஒன்று, மகர சங்கரமன பெரும்பொங்கல் பற்றிப் பேசுகிறது. ராஜேந்திரனின் காலம் 11-ம் நூற்றாண்டு.

சூரிய அடிமான காலக்கணக்கில், சந்திரனுக்குப் பதில் சூரியனை அடிப்படையாகக்கொண்டு காலக்கணக்கு அமைக்கப்படுகிறது. அதாவது 12 மாதங்களிலும் ஒவ்வொரு ராசியாக, 12 ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் காலக்கணக்கு இது.

பூமியை மையமாகக்கொண்டு சூரிய வட்டப் பாதை அமைவதாகக்கொள்வோம். அவ்வட்டத்தை 12 துண்டுகளைப் பிரிக்கலாம். அவற்றில் அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டங்களைக் கொண்ட மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளைப் பிரிப்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் முதல் நாள், அம்மாத ராசியில் சூரியன் நுழைகிறது. உதாரணமாகத் தை மாதம் முதல்நாள் சூரியன் மகர ராசியில் நுழைகிறது – அது மகர சங்கராந்தி. (தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனிவரையுள்ள மாதங்களை மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளாகக் கொள்க), ஒவ்வொரு மாதமும் சங்கராந்தி உண்டு. சிம்மத்தில் (ஆவணி) நுழைந்தால், அது சிம்ம சங்கராந்தி.

சந்திர அடிமானத்தில் இருந்து சூரிய அடிமானமாகக் காலக் கணக்கு மாறிய பிறகும், மாதப் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை (1). உண்மையில் இம்மாதங்களை ராசிப் பெயர்களால் அழைப்பதே பொருத்தமானது. மலையாள மாதங்கள் அவ்வாறே சிம்மம், கன்னி என அழைக்கப்படுகின்றன (2).

சந்திர அடிமானக் காலக்கணக்கில் தைமாதப் பூச நட்சத்திரத்தில், அம்மாத பவுர்ணமி வருவதாக அக்காலக்கணக்கு அமைக்கப்பட்டிருக்கலாம். மாறாக சூரிய அடிமானத்தில் அம்மாதத்தில் மகர ராசியில் சூரியன் நுழையும் நாளை மாதத் தொடக்க நாளாகக் கொள்ளும்போது, பவுர்ணமியானது மாதத்தின் ஏதோ ஒரு நாளுக்குப் போய்விடுவதைக் காண்கிறோம்.

மொத்தத்தில்...

சூரிய அடிமான காலக் கணக்கு வழக்குக்கு வந்த பின்னரே தை மாதப் பிறப்பு (1-ம் தேதி) பொங்கலாக மாறியிருக்க முடியும். சந்திர அடிமான காலக் கணக்கு இருந்தபோது உருவாகியிருக்க வாய்ப்பில்லை. எனவே, பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பொங்கலைக் கொண்டாடத் தொடங்கியிருக்க முடியும்

இம்மரபு வட தமிழகத்தில் இருந்து தெற்கே பரவி இருக்குமோ? நாயக்கர் ஆட்சி காலத்தில் விழாக்களை விமரிசையாகக் கொண்டாடும் வழக்கம் வந்தது என்பார்கள். ‘கணுப் பொங்கல்’ உட்படப் பொங்கலை ஆந்திரர்கள் இன்றைக்கும் மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பண்பாட்டுக் கலப்பில் பொங்கல் கொண்டாட்டம் செழுமை பெற்றிருக்குமோ?

குறிப்பு – 1. போர்த்துகீசியர்கள் ஆங்கில ஆண்டின் பெயர்களைத் தமிழுக்கு மாற்றினார்கள். அவ்வகையில் ஜனவரியைத் ‘தை’ என அழைத்தனர் (மார்கழி மாதம் 25-ம் தேதி ஏசு கிறிஸ்து பிறந்தார் என எழுதினார்கள்.)

2. கேரளாவில் சூரிய அடிமானக் காலக்கணக்கு ஏற்பட்ட பின்னர் சித்திரை தொடங்கிய 12 மாதப் பெயர்களும் முறையே மேஷம் , ரிஷபம்… என 12 ராசிகளின் பெயர்களில் அழைக்கப்படலாயின. மாதத்தைத் ‘திங்கள்’ என்று அழைக்காமல் ‘ஞாயிறு’ (சூரியன்) என்று அழைத்தனர்.

'ஸ்வஸ்தி ஸ்ரீ விருச்சிகத்தில் வியாழன் நின்ற துலா ஞாயிறு' என்பது கேரளக் கல்வெட்டு வரிகள்.

துலா ஞாயிறு என்ற ‘ராசி மாதம்‘, ‘ஐப்பசித் திங்களுக்கு‘ இணையானது. அந்த வகையில் திங்கள், ஞாயிறு ஆயிற்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x