Published : 15 Jan 2020 09:58 AM
Last Updated : 15 Jan 2020 09:58 AM

மகராசன் பொங்கல்

கண்மணி குணசேகரன்

“தீஞ்சி போன தீபாவளியும் போச்சி. காஞ்சி போன காத்திய வௌக்கும் போச்சி. மகராசன் பொங்க எப்ப வருஞ் சாமீ…” சின்ன வயதில் பொங்கல் பண்டிகை கிட்டக்க இருக்கும் நாட்களில், நாங்கள் சொல்லிச் சொல்லி விளையாடிய பாடல் இது. மெய்தான். மற்ற பண்டிகைகளைவிடவும் பொங்கலுக்குத்தான் கிராமங்களில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தீபாவளியைப் போன்று அடிச்சான்புடிச்சான் என்ற மாதிரியான ஒருநாளில் முடிந்து விடுகிற கூத்து இல்லை பொங்கல் திருநாள். தொடர்ந்து நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படும் மண்ணுக்கும் மக்களுக்குமான திருவிழா என்பதால் வீடுவாசல், ஆடுமாடு, கொல்லைக்குடி, நிலத்தை ஒட்டி இருக்கிற காவல் தெய்வங்களான அய்யனார், வீரனார் என எங்கெங்கும் கோலாகலம், கொண்டாட்டம்தான்.

ஆனால், நாகரிகக் கோலத்தில் மற்ற பண்டிகைகளுக்கு நேர்ந்த சிக்கலைப் போன்று ஒரு சடங்காக மாறி விடும் அவலம் பொங்கலுக்கும் மெல்ல நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, சிறப்பு நிகழ்ச்சிகள் எனும் பெயரில் நடிகர், நடிகைகளின் பேட்டிகள், நாலாந்தரப் பட்டிமன்றங்கள், ‘உலக வரலாற்றிலேயே முதல்முறையாக’ படங்கள் என மக்களைப் பண்பாட்டுக்கு எதிராகத் தொலைக்காட்சிகள் திசைதிருப்ப வைத்துக்கொண்டிருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல் காய்ந்தும் பேய்ந்தும் கெடுக்கிற மழை, நூறு நாள் வேலையில் லெக்குக் கற்றுக்கொண்டு விவசாய வேலைகளில் குனிந்து நிமிர யோசிக்கும் மனிதர்கள், ஆடுமாடுகளை முற்றுமாய்த் தொலைத்துவிட்ட வெற்றுச் சூழல் எனக் கண்ணில் உயிரை வைத்துக்கொண்டு கடகந்தாயத்தில் நிற்கிறது விவசாய வாழ்வு. ஆனபோதும், இந்தக் கெடுபிடிகள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் மீறி இன்றளவும் பொங்கல் பண்டிகை, தனது ஆளுமையை மக்கள் மனங்களில் நிலைநாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

பொங்க வந்துட்டு போல்ருக்கு

பொங்கல் நெருங்குகிறது என்றாலே வீடு ஒட்டடை அடிக்கிற வேலைதான், பெரிய மாக்கானமான வேலை. கரி படிந்த கூரை, சுவர் என மூங்கில் கழியில் கட்டிய கட்டைவிளக்கமாற்றால் அடித்து அடித்து கண், காதெல்லாம் ஒரே அடுப்புக்கரி. காறித் துப்பினால் கன்னங்கரேலெனச் சளி விழுந்து முறைக்கும். சில நேரத்தில் ஒத்துக்கொள்ளாமல் படுக்கையில் கிடத்திவிடுவதும் நடக்கும். மாட்டுச் சாணியையும் உத்திமாக்குளத்தில் வெட்டி வந்த பொட்டை மண்ணையும் கலந்து இரும்பு வாளியில் கரைத்து, நெத்திமட்ட சுவர்களுக்குப் பூசும்போது அது முழங்கை வழியாக இறங்கி அக்குளில் சில்லிடும். வளையல் போட்டுக்கொள்வதுமாதிரி மணிக்கட்டில் துணியைச் சுற்றி ஒழுகுதலைத் தடுத்து மெழுகுவார்கள். ஈரம் கலந்த மண்வாசம் வீடெங்குமாய்க் குடிகொள்ளும். கல்வீடு கட்டியிருப்பவர்கள் வெள்ளையடிப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள்.

போலவே சாமியா வீட்டில் இருக்கும் வடக்கு மலையான், புள்ளையார், முருகன், லட்சுமி எனக் கண்ணாடிச் சட்டகங்களுக்குள் மங்கலாய் அருள்பாலிக்கும் சாமிகள் எல்லாமும் தேய்த்துக் கழுவி விபூதி போட்டுத் துடைக்கப்பட்ட புதுப்பொலிவில் மிளிர்வார்கள். கூடவே ஆணிகளில் புகைப்படங்களில் புன்னகைக்கும் போனவர்களும் வந்தவர்களும் புத்தொளியில் பளீர் சிரிப்பிடுவார்கள். வழக்கம்போலவே பரணிலேயே முடங்கிக் கிடக்கும் புதுமெருகு மாறாத, அம்மாவின் கல்யாணச் சீர்செட்டுச் சாமான்கள் அண்டா, குவளை உட்பட்டவற்றை எச்சரிக்கையாய் மெல்லக் கீழிறக்கிக் கழுவிக் காயவைத்து, மறுபடியும் அசகுலையாமல் உயரே பரண் ஏற்றுகிற வேலையும் தவறாது நடக்கும்.

எப்போதும்போல் தேவையில்லாத பொருட்கள் எல்லாவற்றையும் இந்த வருடம் வெளியே தூக்கிப் போட்டுவிட வேண்டும் என்ற கறாரோடு காலையில் ஒட்டடை அடிக்கிற வேலையை ஆரம்பித்தாலும், அந்தியின் கடைசியில் எதையுமே தூக்கிப்போட மனமில்லாமல் திரும்பவும் வீடு புகுந்துகொள்ளும் அவை. இந்த ஒட்டடை அடிக்கிற வேலையைக்கூடச் செவ்வாய், வெள்ளி போன்ற நிறைந்த கிழமைகளில் செய்ய மாட்டார்கள். தெய்வீகம் மிகுந்த இந்நாட்களில் செய்தால் வீட்டில் இருக்கிற லட்சுமி வெளியே போய்விடும் என்பது ஒட்டடையில் ஒட்டியிருக்கும் மக்களின் நம்பிக்கை. ஒட்டடை அடிக்கிற வேலை முடிந்தாலே, தெருவில் போவோர் திரும்பிப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொல்வார்கள், “என்னாடா பெரியவனே. ஒங்க வூட்டுக்குலாம் பொங்க வந்துட்டுது போல்ருக்கு.”

பொங்கல் வரிசை பண்பாடு

பொங்கல் குறுகலில் எல்லாக் குடும்பங்களுக்குமே இருக்கிற மற்றுமொரு பாரம்பரியமான, முக்கியமான வேலை என்றுகூடச் சொல்ல முடியாது, மக்களின் பண்பாடு அது. வாக்கப்பட்டுப் போன பிறந்து பெண்களுக்கு வருடாவருடம் தாய்வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பொங்கல் வரிசை கொடுக்கும் சடங்கு. கல்யாணம் கட்டிக்கொடுத்த தலைப்பொங்கலுக்குத் தாம்பாளத் தட்டு நிறைய வாழைப்பழச் சீப்புகள், தேங்காய், பூ, சக்கரை, பொங்கல் வைக்கப் புதுப் பித்தளைத் தவலை என மூன்று பேராய்க் கொண்டு போய்த் தடபுடலாய்க் கொடுப்பது சற்று விமர்சையாக இருக்கும். “இந்தா வளைய போட்டுக்க…” என்று கையில் காசுபணமும் கொடுப்பார்கள். அடுத்தடுத்த பொங்கல்களில் இந்தப் பழம், சக்கரைகளின் அளவு குறையுமே தவிர, பொங்கல் வரிசை கொண்டுபோகிற பழக்கம் ஒரு போதும் நிற்கவே நிற்காது.

இப்படித் தாய்வீட்டிலிருந்து பொங்கல் வரிசை பெறுவது பெண்களின் பிறந்த வீட்டில் இருந்து தமக்குச் சேர வேண்டிய சொத்துக்களின் மீதான உரிமைக்குச் சமானமாகும். இந்தப் பொங்கல் வரிசை கொடுப்பது ஒரு குடும்பத்தில் தடைபட்டுப் போயிருக்கிறது என்றால், பிறந்த பெண்ணுக்கும் தாய்வீட்டுக்குமான உறவு என்பது முற்றுமாக அறுந்து போய்விட்டது என்பதான வெளிப்பாடு. “பொங்க தீவாளிக்குக்கூட ஒரு வரிச வம்புன்னு செய்யதாவங்கிட்ட, ஏத்தா எப்பன் சம்பாரிச்ச சொத்த எதுக்கு வுட்டுட்டு வர்றதுன்னுதான், மேல்கொண்டு போனன்…”

பொங்கச் செலவுக்குப் புது நெல்லு

அப்போதெல்லாம் எல்லோருமே நடவோ, வெரகால நெல்லோ மகசூல் செய்திருப்பார்கள். அதுபோலவே பெரும்பாலானவர்கள் பொங்கலுக்கு முன்பாகவே அறுவடையாகிற மாதிரியும் முன்பட்டத்தில் நட்டுவிடுவார்கள். எனினும், ஒருசிலருக்குப் பின்தங்கி பொங்கலுக்கு முன் அறுப்பு விழாது. அதுமாதிரி சமயங்களில் இருக்கவே இருக்கிறார்கள், முன்பட்ட அறுவடைக்காரர்கள். பொங்கலுக்குப் புதுநெல் அரிசியில்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலில் கையில் சாக்கோடு போய் கடனுக்கு வாசலில் நிற்பார்கள். “அறுத்ததும் நெல்லுக்கு நெல்லு வாங்கிக்கலாம். பொங்கச் செலவுக்கு ஒருமூட்டக் குடு மூத்தவரே…”. வீட்டுச் செலவு போக அனைத்து நெல்லுமே கடனுக்குப் போனாலும் மூஞ்சைக் காட்டாமல் அளந்து கொடுப்பார்கள்.

அறுத்த நெல் அனைத்தும் பொங்கல் செலவுக்குப் போகிறது என்பது விளைவித்தவனுக்குப் பெருமைதானே. இப்போதெல்லாம் நெல் நடவு என்பதே அரிதாய்ப் போய்விட்டது. மீறி நடுபவர்கள் வூட்டு நெல்லைப் புறந்தள்ளிவிட்டு, தொண்டையில் வழுக்கிக்கொண்டு போகிறமாதிரியான மெல்லீசு அரிசியைக் கடையில் வாங்கிவந்து, நேரே பொங்கல் உலையில் கொட்டிக்கொள்கிறார்கள். இல்லாதவர்கள் கெவுருமெண்டு பெரிய கடையில் கொடுக்கும் பொங்கல் இலவசத்தின் மங்கிய அரிசியில் பொங்கிக்கொள்கிறார்கள்.

பொங்கலோ பொங்கலோ

போகிப் பண்டிகையை ‘போவிய…’ என்பார்கள். (நாளத் தெறிச்ச போவிய சந்தைக்கிப் போயி, பொங்க சாமன்லாம் வாங்கிக்கலாம்னு வுட்டுட்டன்...) போகியின் சிறப்பு என்பது பொங்கலை வரவேற்கும் முதல் நிகழ்வு. வாழ்வின் அச்சாணியாக இருக்கும் நில மகளை அலங்கரிக்கும் திருநாள். “கோழிகூவ ஏந்திரிச்சி போவிய கொத்துபோட போவுணும்…” - தீர்மானத்தோடு படுத்தாலும் குளிரில் குறுக்கிக்கொண்டு கிடப்பதில், அதிகாலையில் எழுந்திரிக்க மனம் வராது. “ஒரு நெல்ல நாளு, பெரிய நாள்லகூட எனுமா தூங்குதுவோ பாரு. ஏந்திரிச்சி போயி போவிய கொத்து போட்டுட்டு வாங்கட…” அம்மாக்களின் அதட்டல்களில், வீட்டுக்கு வீடு தூக்கம் கலைந்து வேட்டியை, புடவையை வாரிப் போர்த்தியபடி ஒழுங்கியில் கொல்லைக்கு ஓட வேண்டியதுதான்.

‘போவிய கொத்து’ என்பது மா, வேம்பு போன்ற தழைச் சிம்புகள், ஆவாரம் பூ, பூலாப் பூ, துவரைப் பூ போன்ற பூக்களின் இணுக்குகளைச் சேர்த்துப் பொங்கல் பண்டிகையை ஒரு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது மாதிரி, அவரவர் நிலங்களின் சனி மூலையில் போடுவதாகும். போகிக் கொத்தை போடுகிற மாதிரி, பொங்கல் பண்டிகையை வரவேற்று மகிழ்வில் சத்தமிடுவார்கள். “பொங்கலோ பொங்கலோ… போவியோ பொங்கலோ….”

இந்தப் போகிக் கொத்துக்கு மா, வேம்பு என இரண்டும் எளிதில் கிடைத்துவிடும், என்றாலும் கிளைகளை வளைத்து ஒடிக்கையில்தான் சிக்கல். மரமெல்லாம் குளிரும் மார்கழி மாசம், தரையெல்லாம் குளிரும் தைமாசம் என்ற மாதிரி ஊசியாய்க் குத்துகிற குளிர் ஒரு பக்கம் என்றால், இந்தக் கொத்துகளை ஒடிக்கத் தாவிப் பிடிக்கையில் சொடசொடவென மழை மாதிரி கொட்டுகிற பனித் தண்ணீர் இறங்கி, மேலும் வெடவெடக்கச் செய்துவிடும். பூக்களில் ஆவராம்பூ மட்டும் ஏரி, ஓடை, மறிச்சி எனச் சங்கமாய்க் கிடக்கும். எளிதில் கைக்குக் கிடைக்கிற மூன்றையும் சேர்த்துத்தான் போடுவார்கள். பூலாப் பூ ஒரு இழைசேர்த்துப் போட்டால்தான் மனம் ஆறும். ஆனால், கிடைப்பதுதான் பெரிய பாடு. துவரை, கேழ்வரகு, நெல் எனப் பூங்கதிர்கள் விளைந்த காலத்தில்கூட சேர்த்து போட்டதுதான். இப்போதெல்லாம் கண்ணால் பார்ப்பதே அரிதாகிப் போய்விடுகிறது.

எல்லாமே புதிதாய்

எவ்வளவு தூரத்தில் இருக்கிற கொல்லையாக இருந்தாலும் மெனக்கிட்டு போய் குறைந்தபட்சம் ஒரு வேப்பங்கொத்தையாவது போட்டு மனசுக்குள்ளேயாகவாவது “போவியோ பொங்கலோ…” சொல்லிவிட்டு வருவார்கள். இந்தப் போகிக் காலையில் தோட்டத்தில் நின்று கொல்லைவெளிப் பக்கம் காதைத் திருப்பினால், எங்கும் இப்பொங்கல் வரவேற்புக் குரல்களாகத்தான் கேட்கும். வீடு வந்து சேரும்போது வழக்கத்துக்கு மாறாய், வாசலில் பெரிய கோலம் வரவேற்கும்.

கொல்லையிலிருந்து கையோடு கொண்டு வந்திருக்கும் போகிப் பூங்கொத்து ஒன்றை நெற்றியில் பொட்டு வைத்தமாதிரி கூரையில் செருகி விடுவார்கள் (கல்வீடாக இருந்தால் தொங்கலில் கட்டிவிடுவார்கள்). கையைக் காலை கழுவிவிட்டு வந்து, சுடச்சுட சுட்டு வைத்திருக்கும் இட்லிகளைப் புட்டுப் போட்டால், போகிப் பண்டிகையைக் கொண்டாடிய மகிழ்வு மனத்தில் நின்றுகொண்டே இருக்கும்.

இரண்டாம் நாளான பொங்கல் பண்டிகையைப் ‘பெரும் பொங்கல்’ என்பார்கள். தமிழக அரசு அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவித்திருந்தாலும், கிராமங்களில் ஒருசிலர்தான் சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலுமாய் வாசல்பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். இதைச் சூரியப் பொங்கல் என்றும் சொல்வதுண்டு. சில ஊர்களில் குடும்பங்கள் எல்லாமும் சேர்ந்து போய் குலதெய்வ சன்னதிகளிலும் பொங்கல் வைத்துப் படைப்பார்கள்.

பொங்கலும் போச்சு பொண்ணு குட்றா

பொங்கல் திருநாளின் உச்சமாகக் கொண்டாடப்படுவது, மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கல்தான். அன்றைய பொழுதுக்கு மாடுகள் எல்லாமும் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள்தாம். அவிழ்க்கும் போதோ ஓட்டும் போதோ எவ்வளவு இடக்கு மடக்கு பண்ணினாலும், மாடுகளை அடிக்கவே மாட்டார்கள். என்றைக்குமில்லாதபடிக்கு வயிற்றுக்கு மேய வைத்து, ஏரித் தண்ணீரில் குளிப்பாட்டி அந்திக்கு முன்னதாகவே கட்டுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். காலையிலேயே போய் காடுமேடெல்லாம் அலைந்து ஒடித்து வந்திருக்கும் ஆவாரம்பூ, பூலாப்பூ, நெல்லுப்பூ, கேழ்வரகுப் பூ எனக் கொத்துக்களோடு வேம்பு, மா தழைகளைக் கோத்துக் கட்டப்பட்டு மாலைகள் தயாராகக் காத்திருக்கும். கூடவே மாட்டு வண்டிகளும் கழுவி பூசை, பொட்டு எல்லாமும் வைத்து பூங்கொத்துகள், அலங்காரங்களுடன் அரசியம்மன் கோயில் பல்லக்காய் காத்திருக்கும்.

வாசலில் பொங்கவைத்து கருப்பங்கழிகளைக் கூரைகளில் சாத்திப் பலா இலைகளில் பள்ளையங்களை எடுத்து வைத்தபடி மேளக்காரர்களை எதிர்பார்த்தபடி தெருவைப் பார்த்தவண்ணமாய் இருப்பார்கள். நாலைந்து பேராய் டப்பட்ட மேளங்களைக் கொட்டிக்கொண்டு வருவார்கள். இந்த மேளக்கொட்டு ஒருவகையான எச்சரிக்கை அறிவிப்பு. அதாவது இதற்கு மேல் தெருவில் வண்டிகள் எல்லாமும் பொங்கல் சவாரி போகும். ஆகையால் குழந்தை குட்டிகள் தெருவுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்வதாகும்.

பித்தளைத் தாம்பாளங்களைத் தட்டி சிறுவர்கள் ஓசையெழுப்பியபடி மாடுகளுக்குத் தீபாராதனை காட்டவும் மாடுகளுக்கு விபூதி போடவும் பொங்கலை ஊட்டவுமாய்க் கட்டுத்தறியே கோயில் சாலையாய்க் காட்சிகொள்ளும். பொங்கலை ருசித்த கையோடு, மாடுகள் கழுத்தில் போட்ட மாலைகளை வளைத்து வளைத்துக் கடிக்கத் தொடங்கும். படைத்து முடித்து பள்ளையத்தை எடுத்து வாயில் போடுவதற்குள் வண்டிகள் சவாரிக்குத் தயாராகிவிடும்.

சிறுவர்கள் எல்லாமும் வண்டியில் ஏறிக்கொண்டு பறக்கையில் அதம் கிளம்பும். “போவியும் போச்சு பொங்கலும் போச்சு. பொண்ணு குட்றா…” உற்சாகக் குரலில் மாடுகள் வாலைத் தூக்கிக்கொண்டு பாயும். ஊரைச் சுற்றிப் புள்ளையார் கோயிலுக்குக் கற்பூரம் கொளுத்தி கும்பிட்டுவிட்டு வண்டியின் ஓட்டம் வாசலில் வந்து நிற்கும். இப்போதெல்லாம் மாட்டுவண்டிகளுக்குப் பதில் பெட்டி மாட்டிய உழவுந்துகள் பறக்கின்றன. “பொண்ணு குட்றா…” குரல்களும் கூச்சத்தில் தொண்டைக் குழியிலேயே சிக்கிக்கொள்கின்றன.

காவல் தெய்வங்களுக்கு நன்றி

மாட்டுப் பொங்கலை ‘மாட்டுக்கடை’ என்பார்கள். இந்த மாட்டுப் பொங்கல் நாளில்தான் நாற்றாங்கால் ஓட்டிய மாடுகளுக்குச் சாமிகள் மோட்சம் கொடுக்கும் என்பது நம்பிக்கை. சேடை ஓட்டுவதில் மற்ற வயல்களைவிடவும் நாற்றாங்காலை ஓட்டி சேறாக்குவதுதான், மிகக் கடினமான வேலை. மண்ணின் எல்லா இணுக்குகளிலும் நாற்றுகளின் வேர்கள் இறங்கித் தரை மிகவும் கெட்டித் தட்டிப் போயிருக்கும். கலப்பையை எளிதில் இறங்கிப் போகவிடாது. மூச்சைக் கட்டி மேழியை அழுத்திப் பிடிக்கையில் மாடுகள் திணறிக்கொண்டு போகும். நடவுப் பட்டம் முழுதும் மாடுகள் சேறடித்ததைவிடவும் கூடுதலாய், நாற்றாங்கால் ஓட்டிய அன்று பெரும் சிரமமடையும். அப்படியான நாற்றாங்காலை ஓட்டி கடின வேலை செய்த மாடுகளைத் தேடித் தேடி சாமி மோட்சம் கொடுக்குமாம்.

விடிந்தால் கரிநாள். அதிகாலையிலேயே அய்யனார், மலையாத்தாள் எனக் கொல்லைகளுக்கு அருகிலேயே இருக்கும் காவல் தெய்வங்களுக்குப் போய்த் தேங்காய், வாழைப்பழம் வைத்துப் படைத்து, அந்த வருட மகசூல் காலத்தில் பயிர்களுக்கும் தங்களுக்கும் காவலாய் இருந்ததற்காய் நன்றி செலுத்திவிட்டு வருவார்கள். அதற்குள் இங்கே தெருக்களில் மூலைக்கு மூலை ஆடு, கோழிகள் அறுப்பதும், கோயில் புளிய மரத்தில் பன்றி போடுவதுமாய்த் திரும்புகிற பக்கமெல்லாம் கவுச்சி வாடை சுழன்று சுழன்று அடிக்கும்.

கெட்டழியும் கரிநாட்கள்

ஊருக்கு ஊரு இந்த ஒயின் கடைகள் வருவதற்கு முன்பு வறுத்ததும் குழம்பும் மணக்க மணக்கத் தின்றுவிட்டு பந்து விளையாட்டும் கபடியுமாய்ச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை வயது வித்தியாசமில்லாமல் கோயில் முன்பாக புழுதி பறக்க விட்டவர்கள்தான். கைக்கெட்டும் தூரத்துக்குக் கடைகள் வந்த பிறகு, அதிகாலையிலேயே ஊற்றிக்கொள்கிறார்கள். புதுக் குடிகாரர்களும் அன்றுதான் 'அரிஓம்' என்று ஆரம்பித்துப் பழகுகிறார்கள். போனகதை வந்தகதை என ஆரம்பித்து மதியத்துக்குள்ளாகவே எவனையாவது அடிக்கவும் புடிக்கவுமாய்ச் சண்டைச் சச்சரவிலேயே கழிகிறமாதிரி அமைந்துவிடுகிறது கரிநாள்.

கும்மி அடிப்பதைக் ‘கொண்டான் என்பார்கள். மாலையில் சடைப்பூ வைத்து பின்னிக்கொண்டு வட்டமாய்க் குனிந்து ‘பொம்பளைப் பிள்ளைகளும் பொம்பளை சனங்களும் கொண்டான் அடிப்பார்கள்.

“ஒரு சொம்பு ஏலேலோ தண்ணி மொண்டு

ஊத்துங்கடி ஏலேலோ பூஞ்செடிக்கு,

கிள்ளுங்கடி ஏலேலோ முள்ளறும்ப

கட்டுங்கடி ஏலேலோ தண்டாமாலை.

சாத்துங்டி எலேலோ சரஸ்வதிக்கு…

ரா சக்கர சக்கர…

ராசா மக தோழர…”

மறைந்து போய் மனத்தில் கிடக்கும் பாடல்களைப் பாடியபடி கும்மி வட்டமும் குரலும் விரிந்து உச்சத்தைத் தொடுகிற நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் குடிகார மகராசன் எவனாவது சடாரென்று வட்டத்துக்குள் நுழைவான். “நானும் கொண்டான் அடிக்கிறன்…” என்று குடிக்கும்மி அடிப்பான். அவ்வளவுதான் வட்டம் சிதைந்து “இதுக்குதான் இங்கல்லாம் வரக் கூடாதுங்கறது…” கும்மி கொட்டுகிற குயில்கள் எல்லாமும் பதற்றத்தில் பறக்கத் தொடங்கி விடும். இப்படிக் குடியால் கெட்டழிந்து போய்விடுகிற நாளாக அமைந்துவிடுகின்றன தற்காலக் கரிநாட்கள்.

கரிநாள் கழித்த மறுநாளை வெறுநாள் என்பார்கள். நான்கு நாட்கள் ஓய்வாய் இருந்துவிட்டு, மறுநாள் திடுமென ஒரு வேலை செய்ய மலைப்பாக இருக்கும், வேலை ஓடாது. அன்றைய பொழுதில் வேலைகள் எதையும் செய்யாமல் வெறும் பொழுதாகவே கடந்து வெறுநாளாகி முற்றுப் பெற்றுவிடுகிறது பொங்கல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x