Published : 15 Jan 2020 09:58 AM
Last Updated : 15 Jan 2020 09:58 AM

பொங்கயாணம் கேள்விப்பட்டதுண்டா?

அரவிந்த்குமார்

ராமாயணம் கேள்விப்பட்டிருப்பீர்கள், பொங்கயாணம் கேள்விப்பட்டதுண்டா? இந்தக் கட்டுரையின் முடிவில் தெரிந்துகொள்ளலாம். பொங்கல் என்றாலே அது கிராமங்களுக்கான திருவிழா, உழவுத் தொழில் செய்பவர்கள் மிகுதியாக இருக்கும் பகுதிகளில் நடைபெறும் கிராமியப் பண்பாட்டு நிகழ்வு என்ற கருத்து உண்டு. ஆனால், கிராமத்துப் பொங்கலில் இல்லாத சில மகத்துவங்கள், நகரத்துப் பொங்கலில் உண்டு. அதுவும் வடசென்னைப் பொங்கலின் ருசியே தனி.

திடீரென முளைக்கும் கோலங்கள்

கோலம் போடுவதற்கான வாய்ப்பும் இடமும் வடசென்னையில் குறைவு. ஆனால், அதைஈடுகட்டும் விதமாகப் பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னதாகவே குவார்ட்டர்ஸ்களில் குடியிருக்கும் பெண்களாகட்டும், சிக்கல் விழுந்த மாஞ்சா கயிற்றின் முடிச்சுகளைப் போல்நெருக்கியடிக்கும் தெருக்களில் வசிக்கும் பெண்களாகட்டும் நோட்டும் கையுமாகச் சுற்றுவார்கள். தங்களுக்குத் தெரிந்த கோலங்கள், கடையில் விற்கும் கோலப் புத்தகங்கள், அதற்கான வண்ணப் பொடிகள் போன்றவற்றைத் தயார்படுத்திக்கொண்டு போகி முடிந்த அன்றிரவே களமிறங்குவார்கள்.

குறைந்தது 10 பெண்கள் ஒருகுழுவாகச் சேர்ந்துகொண்டு கோலம்போடுவார்கள். கிராமங்களில் உள்ளது போன்று புள்ளிவைத்து வரையும் கோலங்கள் குறைவு. உளவியல்ரீதியாகவே வாழ்க்கையின் அபத்தத்தைக் கொண்டாடும் மனோபாவம் கொண்டவர்கள் என்பதால், புள்ளிகளுக்குப் பதிலாகக் கோடுகள் நிறைந்த கோலங்கள்தாம் வடசென்னைப் பெண்களின் முதல் தேர்வு. வண்ணங்களில் தங்கள் வித்தைகளைக் காட்டுவார்கள். அதிகம் வரையப்படுவது தோகை விரித்த மயில், கூடவே ‘பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்றவாசகமும் இடம்பெறும்.

கரும்பும் இனிப்பும்

ஒப்பீட்டளவில் கரும்பு வாங்குவது வடசென்னையில் குறைவுதான். பொங்கலுக்குக் கரும்பு வைக்க வேண்டும் என்ற ஐதீகம்தான், கரும்பு விற்பனைக்குக் காரணமாக இருக்கும். மற்றபடி கரும்பைக் கடித்து மென்று சாறு விழுங்கி, சக்கையைத் துப்பும் அளவுக்கான பொறுமை வடசென்னைவாசிகளுக்குச் சற்றுக் குறைவே. அடிப்படையில் எல்லாவற்றையும் வேகமாகச் செய்யும் குணாதிசயம் கொண்டவர்கள். அதற்கு நேர்மாறான முறையைக் கொண்டது கரும்பு. வடசென்னையில் கரும்பு அதிகமாக விற்பனை ஆகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், பொங்கல் நாளில் மாட்டுக்கு ரெண்டு கொம்பு முளைத்ததுபோல், வீட்டுக்கு இரண்டு கரும்புகள் வாசலில் வளைந்து நிற்கும்.

அசைவம் தவறாமல் இடம்பிடிக்கும் வீடுகளில்கூடப் பொங்கல் தினத்தன்று கட்டாயம் சைவம்தான். மிளகிட்ட வெண்பொங்கல், வெல்லம் தூவிய சர்க்கரைப் பொங்கல், அவரைக்காய் - பூசணி சேர்த்த தொக்கு ஆகியமூன்றும் பொங்கல் நாளின் முதன்மை உணவு. இத்துடன் மேலும் இரண்டு விஷயங்கள் வடசென்னைச் சிறப்புப் பொங்கலில் உண்டு. மாங்காயும் வெல்லமும் சேர்த்த பதார்த்தம்தான், பொங்கல் வந்துவிட்டதற்கான அடையாம். சுவரில் கரும்பைச் சாய்த்து நிற்கவைத்து, பொங்கல் பாத்திரத்தை நடுவில் வைத்துச் சிறிய தையஇலையில் வெல்லம் - வாழைப்பழம் கலந்து படையல் வைத்தால்தான் பொங்கலின் நிறைவு மனசுக்கு உண்டாகும். இந்த இரண்டையும் கிராமப்புறங்களில் பார்க்க முடியாது. வடகறியைப் போல் இந்த வெல்லம் சேர்த்த இரண்டு உணவு வகையும் சென்னையின் கண்டுபிடிப்புகளில் அடங்கும்.

பெண் நட்சத்திரம்

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல்இருக்கும் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ்களில் குடியிருப்பவர்கள் வீடுகளின் சிறிய ஜன்னல் வழியேஎட்டிப் பார்க்கும் சூரியனுக்குக் கற்பூரம் எரியும் தாம்பாளத் தட்டை மூன்றுமுறை சுற்றிக் காட்டுவார்கள். இன்னும் சில பெண்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து, அது மாடியாக இருந்தாலும் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து ஆகாயத்தை நோக்கி தாம்பாளத் தட்டை ஏந்திநிற்பார்கள். மற்ற வீட்டு ஜன்னல்களுக்குள் இருந்து ஆச்சர்யத்தோடு கண்கள் விரிந்து பார்க்கும்.

“அட, இவ மொதல்ல தீவார்த்தனை (தீபாராதனை) காட்டிட்டாளே” என்று முணுமுணுப்புகள் எழும். கூடவே கரும்பு தின்றுகொண்டிருக்கும் புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் ‘செம டோஸ்’ விழும். “கூடமாட ஒத்தாசைக்கு வேலைய இழுத்துப் போட்டு செஞ்சா, வேளாவேளைக்கு நாமளும் தீவார்த்தனை பண்ணலாம்ல, அத்த வுட்டுட்டு கரும்ப கட்ச்சி துப்பிக்கிட்டே இருந்தா” என்று ஏகவசனத்தில் வார்த்தைகளும் வந்து விழும்.

நண்பகல் 12 மணிக்குள் எல்லாவீடுகளிலும் தீவார்த்தனை முடிந்து, பெண்கள் சோர்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு, மாலையில் ஒன்றுகூடுவார்கள். அதற்குள்ளாகவே அந்த ஏரியாவில் எந்தக் கோலம்நன்றாக இருந்தது, யார் வரைந்தது, என்ன கலர் போட்டு இருந்தார்கள் என்ற பட்டியல் தயாராகிவிட்டிருக்கும். அன்றுயாருடைய கோலம் 'டாப்'பாகஇருக்கிறதோ, அவர்தான் அந்தப் பொங்கலின் கதாநாயகி. காசிமேட்டில் போட்ட கோலம்பற்றி திருவொற்றியூரில்கூடப் பேசப்படும். வருடம் முழுவதும் கோலம் போட்டால்கூட, அது பற்றிய பேச்சு பொதுவாகக் கிராமங்களில் எழுவதில்லை. ஆனால், வருடத்தின் ஒருசில நாட்களில் போடப்படுவதாலேயே வடசென்னையின் கோலமும் அதைப் போடும் பெண்ணும் ஒரேநாளில் நட்சத்திரம் ஆகிவிடுகிறார்.

மூத்தோர் படையல்

ஒருபுறம் பெண்கள் கோலம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, ஆண்கள் கையில் வயர் கூடையுடன் ஆட்டுத்தொட்டிக்குப் புறப்பட்டு விடுவார்கள். ஏற்கெனவே என்ன கறிவாங்க வேண்டும், எப்படிப்பட்ட கறிவாங்க வேண்டும் என்று வீட்டுப் பெண்கள் தெளிவாகச் சொல்லி இருப்பார்கள். அதைச் செய்து முடித்தாக வேண்டிய பொறுப்பு ஆண்களுடையது. கறி,

சதைப்பற்றாக இல்லாமல் எலும்புகள் நிரம்பியதாக இருக்க வேண்டும். இதுதான் முதல் அடையாளம். ஆட்டின் காலை வாங்கும்போது, அது நன்றாகத் தீய்க்கப்பட்டிருக்கிறதா, முடி பொசுங்கி இருந்த தடம் தெரியாமல் கருத்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நள்ளிரவு தொடங்கி விடியவிடிய கறிக்கடையில் வியாபாரம் நடக்கும்.

இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் என்பது கிராமங்களில் மாடுகளுக்கான விழாவாகக் கொண்டாடப்படும். வடசென்னையில் மூத்தோர் நினைவைப் போற்றும் நாள் அது. ஆம், குடும்பத்தில் உயிரிழந்த முன்னோர்களுக்குப் படையல் இடும் தினமாக அது மாறிவிடும். கண்டிப்பாக அசைவம் உண்டு. அதற்குத் தான் விடிய விடிய கறிக்கடையில் வரிசையில் நிற்பார்கள். ஆடு, மாடு, கோழி, மீன் என்று எத்தனை உண்டோ, அது அத்தனையும் ருசிமிக்க பண்டமாக அன்று மாறிவிடும். பக்திமுத்திய சிலர், பட்டைச் சாராயத்தையும் படையலாக்கித் தங்கள் பங்குக்கு ஏற்றிக்கொள்வார்கள். “தாத்தாவுக்குச் சுருட்டு பிடிக்கும் என்று ஒரு கட்டுச் சுருட்டும், செத்துப்போன அப்பாவுக்கு என்றுஒரு லோட்டா சரக்கும்”, மாட்டுப் பொங்கல் தினத்தில் நிறையவே காணப்படும்.

பெண்களின் அன்பு

மூன்றாம் நாள்தான் பொங்கலின் ஒட்டுமொத்த சிறப்பே. கிராமங்களில் வழக்கொழிந்து போனசில அம்சங்கள்கூட இன்றளவும் வடசென்னையில் பொங்கல் தினத்தன்று உயிர்பெற்று உலாவரும். அதுதான் கும்மி. வீட்டில் உள்ள இளம்பெண்கள் அன்றைய நாளில் தாவணி அணிவார்கள் (இப்போது அணிவது குறைந்திருக்கிறது). வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம், பார்த்துப் பார்த்து வாங்கிய புதியஆடையை அணிந்துகொள்ளும் இளம்பெண்கள், முதலில் அத்தை வீட்டுக்குப் போவார்கள். அங்கே தாய்மாமாவோ அத்தையின் மகனோஇருந்தால் அவர்களைச் சுற்றி நாலைந்து பேராகக் கும்மி கொட்டி பாடுவார்கள்.

பொங்கலு., பொங்கலு, பொங்கலு, பொங்கலு|
எங்க பொங்கலடி…
பூண்டித் தங்கம்மாள் தெருவில் வந்த
தங்க பொங்கலடி...

என்று ஒரேகுரலில் பாடியபடி கலாட்டா செய்வார்கள். அந்தந்தப் பகுதிக்கு ஏற்பகும்மியின் பாடல்வரிகள் கூடும், குறையும். ஆனால், கும்மி கட்டாயம் உண்டு. இத்தனை நாள் பொத்திப் பொத்தி வைத்த அன்பை வெளிப்படுத்தும் அரியதருணம் அது. சிலுசிலுவெனக் கண்களில் கேலியும் கிண்டலும் வழிந்தோட பெரியவர்கள் எதிரிலேயே தங்கள் காதலை, அன்பைக் கொட்டித் தீர்ப்பார்கள் பெண்கள்.

முத்தாய்ப்பு

பொங்கல் நாளன்று குழந்தைகளுக்குப் பெரியவர்கள் கொஞ்சம் காசோ பணமோ தருவார்கள். அதற்குப் பெயர் 'பொங்கயாணம்' என்றும் 'பொங்கத் துட்டு' என்றும் சொல்வார்கள். கும்மி கொட்டிய பிறகு, வீட்டுப் பெரியவர்களிடம் அது யாராக இருந்தாலும் “மாமா பொங்கயாணம் எடு, பொங்கதுட்டக் கொடு” என்று உரிமையாக வாங்கிக்கொண்டு செல்வார்கள். அன்றைய நாள் பொங்கயாணம் கொடுப்பதற்காகவே நோட்டுக்களைச் சில்லறையாக மாற்றி வைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருப்பார்கள். சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருக்கும் குடும்பங்கள்கூட, இந்தப் பொங்கயாணம் வழங்கும் சாக்கில் சண்டைகளை மறந்து கும்மிக் கொண்டாட்டத்தில் இறங்கிவிடுவார்கள்.

வடசென்னையைப் பொறுத்தவரை எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் அதற்கு முத்தாய்ப்பு என்பது தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதுதான். பொங்கலின் உச்சமும் அதுவே. வடசென்னையில் கால் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு தியேட்டர் முன்பு இருந்தது. (இன்று பெரும்பாலானவை வணிகவளாகங்களாகி விட்டன). தங்கம், அகஸ்தியா, ராகவேந்திரா, ஓடியன்மணி, பாரத், எம்.எம்., எம்.எஸ்.எம். என்றுஎந்த தியேட்டராக இருந்தாலும் எந்தப் படமாக இருந்தாலும் குடும்பம் - குடும்பமாக, கும்பல் - கும்பலாக சென்று அரட்டை அடித்துத் திரும்புவதோடு பொங்கல் முடிவுக்கு வரும். இப்படி வண்ணங்களில் தொடங்கும் எங்கள் வடசென்னைப் பொங்கல் கொண்டாட்டங்களோடு நிறைவுபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x