Published : 09 Jan 2020 10:53 am

Updated : 09 Jan 2020 10:54 am

 

Published : 09 Jan 2020 10:53 AM
Last Updated : 09 Jan 2020 10:54 AM

அன்புக்குப் பஞ்சமில்லை 11: ‘காலத்தே உதவி; கேட்காமலேயே உதவி!’ 

anbukku-panjamillai-11

வி.ராம்ஜி


யாருமற்ற தனிமையில் அல்லது எல்லோரும் இருக்கும்போதே தனித்திருக்கும் மனநிலையில், ‘என்னடா ஒருமாதிரி இருக்கே?’ என்று யாரேனும் கேட்டிருக்கிறார்களா? அந்தத் தருணம், வாழ்வில் மிக மிக முக்கியமானதாகிவிடும். அதை மறக்கவே மாட்டீர்கள். யாருடைய கையோ நம் தோள்தொட்ட ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? வாழ்வில், முக்கியமான ஸ்பரிசத்தில் அதுவும் ஒன்று என தனியே மனது குறித்துவைத்துக்கொள்ளும். கேட்பதற்கோ தொடுவதற்கோ ஆளே இல்லாது போனாலும், உங்கள் செல்போனில் இருந்து நீங்கள் ஒலிக்கவிட்ட அல்லது எங்கிருந்தோ கேட்கிற ஓர் இளையராஜா பாடல், காற்றில் கலந்து, உங்கள் காதுகளில் நுழைந்து, மனதை மயிலிறகால் வருடிக் கொடுப்பதை அனுபவித்திருக்கிறீர்களா? அது ‘கனவுகாணும் வாழ்க்கை யாவும்’ பாடலாகவோ ‘ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா’ பாடலாகவோ கூட இருக்கலாம்.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், வாழ்வில் பல தருணங்களில், யாரோ ஒருவர் ஏதோ ஒரு வகையில், நம்மிடம் ஆதுரமாகப் பேசியிருப்பார். நம் தோளையோ முதுகையோ தொட்டுத் தடவி, ஆசுவாசப்படுத்தியிருப்பார். ஏதோ ஒரு பாடல், எங்கிருந்தோ வந்து, நம் மனதை தக்கையாக்கிவிட்டுப் போயிருக்கும். அதை அப்போது, அந்தப் பொன்னான தருணத்தில், நாம் அறிந்துகொள்வதில்லை; உணர்ந்துகொள்வதும் இல்லை. பின்னாளில், ஏதோவொரு விஷயத்தை, யாரிடமோ பார்க்கும்போதோ, யாரோ யாருக்கோ கொடுக்கும்போதோ... நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தி, அதை அசைபோடுகிறோம்.


காரைக்குடி கோட்டையூரில் இருக்கிற என் ராமையா மாமா, பம்பரமாய்ச் சுற்றிக்கொண்டிருப்பார். அந்தவேலை, இந்த வேலை, அவர்கள் வேலை இவர்கள் வேலை என முகம் சுளிக்காமல் செய்வார். மாமா என்றால் தாய்மாமா. அம்மாவின் தம்பி. தாத்தாவின் குடும்பம், வாழ்ந்து கெட்ட குடும்பம். வீட்டின் கொல்லைப்பக்கம் ஒருதெருவிலும் முன் வாசல் இன்னொரு தெருவிலும் இருக்கிற அளவுக்கு பிரமாண்டமான வீடு. கிராமத்தில் நிலமெல்லாம் உண்டு. எல்லாமே கைவிட்டுப் போனது. சகலத்தையும் இழந்து, மின்விளக்கு இல்லாத அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்த குடும்பம்.


‘பியுசி படிக்கப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன். போட்டுக்க நல்ல சட்டையோ பேண்ட்டோ இல்ல. எப்படிப் போறது?’ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சிட்டேன். அப்போ என் கூட படிச்ச கேவிஎஸ் வீட்டுப் பையன், என்னோட நல்ல நண்பன், அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டான். உள்ரூமுக்குக் கூட்டிட்டுப் போய், பீரோவைத் திறந்தான். ‘ராமையா, இதுல உனக்கு எந்தச் சட்டையெல்லாம் சரியாவும் பிடிச்சும் இருக்கோ... அதை எடுத்துக்கோடா’ன்னு சொன்னான். மூணு சட்டை கொடுத்தான்’ என்பதை என் மாமா, என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். மூன்று சட்டை சம்பவம் ஒருமுறைதான் நிகழ்ந்தது என்றபோதும் ஓர் நன்றியுணர்வுடனே மாமா இருக்கிறார் எனப் புரிந்துகொண்டேன்.


இன்றைக்கு மாமா விரும்பினால் சட்டைகள் எடுக்கலாம். விரும்பியபடி சட்டை எடுக்கலாம். ஆனால், சரியான தருணத்தில் கொடுக்கப்பட்ட சட்டைகளை மாமா மறக்கவே இல்லை. மறக்கவும் முடியாது.


’புதியவீணை’ என்று கையெழுத்துப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தேன். பின்னர், அது அச்சுப்புத்தகமாக வந்தது. திருச்சிக்கு வந்த வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் பேட்டிகொடுத்தார். வாழ்வில் முதன்முதலாக எடுத்த பேட்டி அவரைத்தான்! ‘இருபது நிமிஷத்துல பேட்டியை எடுத்துக்கங்க தம்பி. நான் மதுரைக்குக் கிளம்பணும்’ என்றார். ஆனால் ஒண்ணேகால் மணி நேரம் பேட்டி கொடுத்தார். என் முதுதுக்குப் பின்னே இருந்துகொண்டு, அவரின் உதவியாளர் ‘டைம் ஆகிவிட்டது’ என்பதை ஜாடையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். இவரும் ‘தெரியும் தெரியும்’ என்பது போல் ஜாடையாகச் சொன்னார். ‘சார்... முக்கால் மணி நேரத்துக்கும் மேல ஆயிருச்சே. முடிச்சிக்கலாம் சார்’ என்றேன். ‘பரவாயில்ல கேளுங்க தம்பி’ என்றார். ஒண்ணேகால் மணி நேரம்.


பேட்டி முடிந்ததும், மீண்டும் என் பெயர் கேட்டார். ‘நல்லாக் கேக்கறீங்க தம்பீ. பெரியாளா வருவீங்க’ என்றார். பின்னாளில் முழுநேரப் பத்திரிகையாளனாக வேலைக்குச் சேர்ந்ததற்கும் இன்றுவரை உற்சாகத்துடன் பணியாற்றி வருவதற்கும் முப்பது வருடங்களுக்கு முன்பு, வலம்புரி ஜான் கொடுத்த உற்சாகமும் முக்கியக் காரணம். சொன்ன இருபது நிமிடம் கடந்ததும், ‘சரிப்பா, டைம் முடிஞ்சிருச்சு’ என்று சொல்லியிருந்தாலோ, ‘போதும்பா, இதுவே ரொம்ப நேரமாயிருச்சு’ என்று அவரே முடித்திருந்தாலோ, ‘என்னய்யா கேள்வி கேக்கறே. ஒரு சின்னப் பத்திரிகைக்கு, சிற்றிதழுக்கு இதுவே அதிகம்’ என்று விருட்டென்று எழுந்திருந்தாலோ... என் ஆர்வம், அங்கே கோளாறாகியிருக்கும். முகம் சுருங்கி, மனசு கூனிக்குறுகியிருக்கலாம். அவருடைய நேரத்தைக் கொடுத்து, ‘நல்லா கேக்கறீங்க தம்பி’ என்று பாராட்டியதை, எப்போதுமே மறக்க முடியாது.


என்னுடைய நண்பன் ஒருவன், வேலை பார்த்ததை விட்டுவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கினான். ஆரம்பத்தில் நன்றாக லாபம் தந்துகொண்டிருந்தாலும் ஒருகட்டத்தில் அவனுடைய பணமெல்லாம் முடங்கியது. நாலரை லட்சம் ரூபாய் கடன், அவன் தலையில் விழுந்தது. வட்டி, தவணை என்று மீளமுடியாமல், ‘செத்துப்போயிடலாமா?’ என்று புழுங்கிக் கதறிக்கொண்டிருந்தான்.
பலமாதங்கள் கழித்து, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போனபோது அவனைப் பார்த்தேன். இரண்டு கட்டைப்பை கொள்ளாத புதுத்துணிகளுடன் பஸ்சுக்காக நின்றுகொண்டிருந்தான். ‘வாடா. எப்படா வந்தே?’ என்றான். சொன்னேன். ’நானும் காலைலதான் வந்தேன்’ என்றான்.


‘கேக்காமலே உதவி செய்றதுக்கு இந்த ஒலகத்துலயும் சிலபேர் இருக்காங்கடா. நான் முன்னாடி வேலை பாத்த இடத்துலேருந்து மேனேஜர் போன் பண்ணினார். ‘ஏம்பா, ஏதோ நீ கஷ்டத்துல இருக்கியாமே. சரி சரி, நாளைலேருந்து மதுரைல நம்ம கம்பெனிக்கு வேலைக்குச் சேந்துரு’ன்னாரு. தங்கறதுக்கு இடம், சாப்பாட்டுக்கு அலவன்ஸ், சம்பளத்துல வழக்கத்தைவிட ரெண்டாயிரம் கூடுதலான்னு கொடுத்தாரு. ‘செத்துப்போறேன் செத்துப்போறேன்’னு புலம்பிக்கிட்டிருந்தியே. செத்துப்போறதுக்கு ஒருநிமிஷமாவுமா. ஆனா, ஒருநல்ல மனுஷனை நாம எப்போ தெரிஞ்சிக்கிறது? எம்புள்ள ஒரு நல்ல வேலைக்காரன்னு எங்களுக்கு எப்ப தெரியறது?’ன்னு அம்மா சொல்லிட்டு அப்படியே அழுதாங்க.
அதுமட்டுமில்லடா. எனக்கு வட்டி, தவணைன்னு கொடுத்தவங்களும் ‘வட்டிலாம் வேணாம்பா. நீ ஐநூறு, ஆயிரம்னு கொஞ்சம்கொஞ்சமா கொடு. முடியும்போது கொடு. ‘செத்துப்போயிடலாம் போல இருக்கு’ன்னு அம்மாகிட்ட சொல்லி அழுதியாமே! ‘கேவலம், பணத்துக்காக சாகக்கூடாதுப்பா. பணம் மட்டுமா இந்த ஒலகத்துல பெருசு. அடப்போ கண்ணு’ன்னு நம்ம பூமா என் கன்னத்தைத் தடவி சொன்னாங்கடா. நான் அன்னிக்கி புதுசாப் பொறந்தமாதிரி இருந்துச்சு’ என்று நான் ஸ்டாப்பாகச் சொல்லிக்கொண்டே இருந்தவனின் முகத்தில் அப்படியொரு சந்தோஷத்தை ரொம்பகாலம் கழித்துப் பார்த்தேன்.


மதுரையில் சிலகாலம் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, கணபதி சார் என்பவர் உடன் வேலை பார்த்தார். நல்லவர். ரொம்பவே அப்பாவி. படபடப்புடன் எப்போதும் இருப்பார். நாகமலை புதுக்கோட்டையில் வீடு. தேவாரம் மலைப்பகுதியில் ஏலக்காய் எஸ்டேட். பணக்காரர்தான். ஆனாலும், ‘ஒரு நூறு ரூபா கொடு. அடுத்தவாரம் தரேன்’ என்பார். சொன்னது போலவே, நாம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, யாருக்கும் தெரியாமல், நம் முதுகை நோண்டுவார். திரும்பிப்பார்த்தால், கண்ணடித்து, கூப்பிடுவார். யாருக்கும் தெரியாமல் கடைக்கு அழைத்துச் செல்வார். பரோட்டா, டீயெல்லாம் வாங்கிக் கொடுப்பார். ‘இந்தா நைட்டு பழம் சாப்பிடு’ என்று தாரிலிருந்து நான்கைந்து பழங்களைப் பிய்த்துக் கொடுப்பார்.


இரவுப் பணி முடிந்து, தன் ஓட்டை டிவிஎஸ் மொபட்டில், நள்ளிரவு இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது, விராட்டிபத்து, அச்சம்பத்து தாண்டி, ஓர் வளைவில், ரோட்டுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக குறுக்கே கயிறு வைத்து, அவரின் வண்டியைக் கவிழ்த்தார்கள். வண்டி ஒருபக்கமும் அவர் ஒருபக்கமுமாக விழுந்ததும், கட்டியிருந்த வாட்ச், மோதிரம்,சட்டைப்பையில் இருந்து 195 ரூபாய் என எடுத்துக்கொண்டு, அந்த ஓட்டை வண்டியையும் எடுத்துக்கொண்டு பறந்தது திருட்டுக்கூட்டம்.


விஷயம் தெரிந்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு இரண்டு மகள்கள். எனவே, அவருடன் மூன்று நாளும் இருந்து பார்த்துக்கொண்டேன். எல்லாம் முடிந்து, இரண்டுமாதம் கழித்து, என்னையும் எங்களுடன் பணிபுரியும் இன்னொரு நண்பனையும் வீட்டுக்கு வரச்சொன்னார். அன்றைக்கு அவரும் அவர் மனைவியும் எங்களுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, உணவைப் பரிமாறிக்கொண்டே இருந்தார்கள். அதை இப்போது நினைத்தாலும் நான்குநாட்களுக்குப் பசிக்காது. அப்படிச் சாப்பிடவைத்தார்கள்.


கிளம்பும்போது, ஒரு பையில் சட்டைத்துணி, பழங்கள், ஐநூறு ரூபாய் என கொடுத்தார்கள். ‘அண்ணே, என்னண்ணே இது’ என்று மறுத்தேன். ‘ஆம்பளப் புள்ளை இல்லியேனு வருத்தப்பட்டதே இல்லப்பா. ஆனா, அவர் அடிபட்டு அந்த ராத்திரில நடுரோட்ல கிடக்கார்னு தெரிஞ்சப்ப, நமக்கு பையன் இல்லாமப் போயிட்டானேன்னு நினைச்சு அழுதேன். அவரை உங்க அப்பா மாதிரி, மூணு நாளும் ஆஸ்பத்திரில அப்படிப் பாத்துக்கிட்டீங்க. உங்களைப்பத்தி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. காசில்லன்னு பொறந்தநாளைக்கு சட்டைத்துணி எடுக்காம இருக்கீங்களாமே. இந்த சட்டையையும் பேண்ட்டையும் தைச்சுப் போட்டுக்கிடுங்க. அதுக்கு தையக்கூலிதான் இந்தக் காசு. தப்பா எடுத்துக்கிடாதீங்க தம்பி’ என்று சொல்லி, என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கணபதி சாரின் மனைவி அழுதார். நமக்கு ஏதோவொரு வகையில் ஏதோவொன்று செய்ததற்கு, நாமும் அவருக்கு ஏதோவொரு வகையில், ஏதோவொன்று செய்யவேண்டும் என்று கணபதி சாரும் அவரின் மனைவியும் சொல்லாமல் சொல்லிக் கொடுத்தார்கள்.


அந்தப் பையனின் பெயர் எனக்கு நினைவில்லை. எழுத்தாளர் பாலகுமாரன் சாரிடம் உதவியாளராக வேலைபார்த்த போது, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது 22 வயது மதிக்கத்தக்க பையன் நடந்து போய்க்கொண்டிருந்தான். ’அட... திருச்சில நம்ம ஏரியாக்கார பையன் மாதிரி இருக்கானே’ என்று சைக்கிள் திருப்பி அவனை நெருங்கினேன். ‘அண்ணே...’ என்று சொல்லிவிட்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான். விசாரித்தேன்.


அவனுக்கு வயது 22. காதல். இரண்டுவீட்டுக்கும் தெரிந்துவிட்டது. கடும் எதிர்ப்பாம். ஊரைவிட்டு ஓடி, கல்யாணம் செய்துகொண்டார்களாம். இப்போது பெண்ணின் தூரத்து உறவுக்காரர் வீட்டுக்கு அருகில், கும்பகோணத்தில் இருக்கிறார்களாம். எட்டுமாதக் குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை. கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாம். ஆனால் யாருக்கும் தெரியாதாம். வேலை இல்லாமல் ரொம்பக் கஷ்டம். மனைவி, ‘மெட்ராஸ் போய் வேலை தேடு’ன்னு மூக்குத்தியை விற்று காசுகொடுத்திருக்கிறாள். அம்பத்தூர், ஆவடி என சுற்றிவிட்டேன். நல்லவேலை கிடைக்கவேஇல்லை என்றான். அறுநூறு ரூபாய் சம்பளம் என்கிறார்கள். இதில் தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, வீட்டுக்கு என எதை அனுப்புவேன் என்றான்.


நேற்று காலையில் சாப்பிட்டது. டவுன் பஸ்சுக்கே காசில்லை. அதான் நடந்து போயிக்கிட்டிருக்கேன் என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழ ஆரம்பித்தான். அவனுக்கு கையேந்திபவனில் டிபன் வாங்கிக் கொடுத்தேன். ‘இந்த அறுநூறு ரூபாய் சம்பளம், கும்பகோணத்துலயே கிடைக்கும். இதைவிட நல்ல சம்பளம் கிடைக்கிற மாதிரி, யார்கிட்டயாவது சொல்லி ஏற்பாடு பண்றேன்’ என்றேன்.


அப்போது கும்பகோணத்துக்கு 55 முதல் 60 ரூபாய்தான் டிக்கெட். என் பாக்கெட்டில் 97 ரூபாய் இருந்தது. அதில் 90 ரூபாயை அந்தப் பையனிடம் கொடுத்தேன். ’உங்க அட்ரஸ் கொடுங்கண்ணே. வேலைக்குச் சேர்ந்ததும் மணியார்டர் பண்றேன்’ என்று அவன் சொன்னான்.


‘இதை எனக்குத் தரவேணாம். இதேபோல எப்பயாவது யாராவது ஊரை விட்டு வந்து, காசும் இல்லாம நிப்பாங்க பாரு. அவங்களுக்குக் கொடு. கொடுத்து உதவி பண்ணு. இருந்தாலும் என் அட்ரஸ் தரேன். ஏதாவது உதவின்னா கேளு. என்னால முடிஞ்சதைப் பண்றேன்’ என்று அனுப்பிவைத்தேன்.


நான்கு நாள் கழித்து, எனக்கொரு கடிதம், அவனிடமிருந்து. கையில் காசில்லாமல், வேலையும் இல்லாமல் ஊருக்குச் செல்ல, மனைவி முகத்தைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது. எனவே, ஊருக்குச் செல்லவில்லை. மனைவியின் உறவுக்காரர் ஒருவர், தாம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளையராக இருக்கிறார். அங்கே எனக்கும் சப்ளையர் வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார். மூன்று வேளை உணவுக்குப் பிரச்சினை இல்லை. மொட்டைமாடியில் 16 பேர் தங்கியிருக்கிறோம். டிப்ஸ் காசும் கிடைக்கும். உங்கள் சொல்படி, ஊருக்குச் செல்லாததற்கு மன்னிக்கவும் அண்ணே.. என்று எழுதியிருந்தான்.


அன்றிலிருந்து, எப்போது எந்த ஹோட்டலுக்குப் போனாலும் சப்ளையருக்கு டிப்ஸ் தருகிற அதேதருணத்தில், டேபிள் க்ளீன் செய்பவர்களிடமும் இரண்டொரு வார்த்தை பேசுவேன். ஏதேனும் டிப்ஸ் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.


காரியமாவதற்குத் தருகிற பணத்தையே, அன்பளிப்பு என்று சொல்லிக்கொள்கிற உலகில், இவர்களைப் போன்ற சாமான்யார்களுக்கும் உழைப்பாளிக்கும் அளிப்பது... ஆத்மார்த்தமான அன்பளிப்புகள். அன்பு அளிப்புகள்!


அந்த கும்பகோணக்காரப் பையன் போல், நாம் பார்க்கிற எத்தனையோ சர்வர்களும் டேபிள் க்ளீன் செய்யும் நண்பர்களும் மனம் முழுக்க கவலைகளையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் ஏக்கங்களையும் சுமந்துகொண்டிருக்கலாம்தானே.


உணவு பரிமாறும் அவர்களுக்கு அன்பைப் பரிமாறுவோம்!


- வளரும்


அன்புக்குப் பஞ்சமில்லை 11: ‘காலத்தே உதவி; கேட்காமலேயே உதவி!’வாழ்வியல் தொடர்வாழ்க்கைத் தொடர்அன்பைச் சொல்லும் தொடர்வி.ராம்ஜிஅன்புக்குப் பஞ்சமில்லை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author