

விமலாவின் மகன் கோகுலுக்காக தரகர் இரண்டு பெண்களின் ஜாதகம், ஃபோட்டோவைக் கொடுத்திருந்தார். கோகுலுக்கு ரெண்டு பெண்களின் அழகு பற்றி எந்த அபிப்ராயமும் இல்லை. அம்மாவின் விருப்பத்துக்கே விட்டுவிட்டான்.
ஜாதகப் பொருத்தம் பார்த்துவர ஜோசியரைப் பார்க்கப் போனாள் விமலா. ரெண்டு ஜாதகமுமே கோகுலுக்குப் பொருந்தியிருந்தது.
இரவு கோகுல் வீட்டுக்கு வந்ததும், “கோகுல்! உனக்கு வந்திருக்கிற ரெண்டு ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு. செளம்யாங்கிற பெண் வீட்ல 50 சவரன் போட்டு ஒரு லட்சம் ரொக்கம் தருவாங் களாம். ரோகிணி வீட்ல 20 சவரன் செய்வாங்களாம். நீ எந்தப் பொண்ணுன்னு தீர்மானமாச் சொன்னா நாம நேரடியா பொண்ணு வீட்டுல போய்ப் பேசலாம்...” என்றாள் விமலா.
“ஏம்மா.. 50 சவரன் தருகிற செளம்யாதான்னு நீங்களே முடிவு பண்ணியிருப்பீங்களே!” சிரித்தபடி கேட்டான் கோகுல்.
“இல்லடா… ரோகிணி வீட்ல சம்மதம் சொல்லலாம்னு நான் நினைக்கிறேன்” நிதானமாய்ச் சொன்னாள் விமலா.
“என்னம்மா சொல்றீங்க? நம்ம ப்ரியாவுக்கு 40 சவரன் நகைபோட்டு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம். அதுக்காக வாங்குன கடனே இன்னும் தீர்ந்தபாடில்லை…” கேட்டான் கோகுல்.
“உண்மைதாண்டா! உன் தங்கச்சி ப்ரியாவுக்கு நல்ல மாப்பிள்ளை அமையணும்னு தகுதிக்கு மீறி செய்துட்டு இப்போ கடனைக் கட்டிட்டிருக்கோம். அதே மாதிரி நகை, பணத்துக்காக ரோகிணியை நாம நிராகரிச்சோம்னா, ரோகிணியோட வீட்லயும் கடன் வாங்கிக் கல்யாணத்தை நடத்தலாமான்னு யோசிப்பாங்க? பிறகு நாம இப்போ படற கஷ்டம் அவங்களுக்கும் வரும்ல. அவங்க பக்கத்துல இருந்து யோசிச்சுப் பாரு..! உனக்கு நல்ல வேலை இருக்கிறப்போ, அடுத்தவங்க பணத்துலதான் நம்ம கடனை அடைக்கணுமா?” விமலா கேட்டாள்.
அம்மாவின் நல்ல மனதைப் புரிந்து கொண்டவனாய், “ரோகிணி வீட்டுக்கே சம்மதம் சொல்லிடலாம்மா” என்றான் கோகுல்.