Last Updated : 06 Jan, 2020 04:27 PM

 

Published : 06 Jan 2020 04:27 PM
Last Updated : 06 Jan 2020 04:27 PM

மூன்றாம் உலகப் போர்: சுலைமான் கொலை; அமெரிக்கா - ஈரானின் அறைகூவல்

''ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டது மிகத் தீவிரமான விஷயம் என்றும் உலக அளவில் ஏற்படப் போகிற ஆபத்தின் விரிவாக்கம்'' என்றும் பிரிட்டன் எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கார்பின் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்காக ஜெரமி வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்கிறார் என்று எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கத்தில் தற்காப்பு நடவடிக்கை என்று கூறி மத்திய கிழக்குப் பகுதிகளில் தங்களது ஆதிக்கத்துக்குப் பெரும் தடையாக இருந்த சுலைமானை, அமெரிக்கா திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாக எதிர்ப்பு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இவற்றில் ஜெரமி கார்பின் கூறியதை சற்று உற்றுநோக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமீபத்திய மாதங்களாகவே ஈரான் மற்றும் அமெரிக்காவின் செயல்பாடுகள் அவரது வார்த்தைகளைப் பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன.

சுலைமான் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் எச்சரித்தது. ''அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் 52 முக்கியமான இடங்களைக் குறிவைத்திருக்கிறோம் அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

மிரட்டலுடன் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் கூடுதலான படைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக அங்கு போர்ப் பதற்றம் நிலவுகிறது.

மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறியாகவே அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் மோதலைப் பலரும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் போர்ப் பதற்றச் சூழல் உருவாகக் காரணமான ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான் அமெரிக்கப் படையால் ஏன் குறிவைக்கப்பட்டார், சுலைமான் மரணம் அமெரிக்காவுக்கு ஏன் தேவைப்பட்டது என்பதை இந்தச் சிறு அலசலில் பார்ப்போம்.

சுலைமானின் மரணம் ட்ரம்புக்கான துருப்புச் சீட்டு

1980 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை ஈரான் - இராக் இடையே நடந்த 8 வருடப் போரை தலைமை ஏற்று நடத்தியவர் காசிம் சுலைமான். போரில் ஈரானைச் சிறப்பாக வழி நடத்தியதன் காரணமாக கமாண்டராக உயர்ந்தவர்.

ஈரானின் மூத்த தலைவரான அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்து, நாட்டின் சக்திவாய்ந்த நபராக அறியப்பட்ட நபர் சுலைமான்.

அதுமட்டுமல்லாது ஈரான் ராணுவத்தின் போர்த் தந்திரங்களுக்கு முதுகெலும்பாக இருந்தவர். குறிப்பாக இராக் மற்றும் சிரியாவில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர்.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். இவை எல்லாவற்றையும் தாண்டி மத்திய கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக சிரியா மற்றும் இராக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே விரிசல் அதிகமாகிக் கொண்டே சென்றது.

இதன் காரணமாகவே அமெரிக்காவின் குவியப் பார்வை சுலைமானின் மீது விழுந்தது. ஈரானைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சுலைமான் எழுதிய கடிதம் ஒன்று மிகப் பிரபலமானது. உங்களுடன் என் நாட்டு அதிபர் எல்லாம் பேச மாட்டார். ராணுவ வீரரான நானே போதும் என்ற தொனியில் சுலைமான் எழுதிய கடிதம் அவர் மீது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தத் தவறவில்லை.

இதனைத் தொடர்ந்து சுலைமானின் நகர்வைக் கூர்மையாகக் கண்காணித்து வந்த அமெரிக்கா, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி அவர் மீது படுகொலையை நடத்தியுள்ளது.

இந்தப் படுகொலை நடத்தப்பட்டதற்கு இரு மறைமுகக் காரணங்கள் பரவலாகக் கூறப்படுகின்றன. அமெரிக்காவின் தேசிய இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்று சமீபத்தில் ட்ரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவிப் பறிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய நிலையில், செனட் சபையில் இந்தத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு கூடிய விரைவில் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் பதவிப் பறிப்புத் தீர்மானத்தில் தனக்குக் கூடுதல் பலம் கிடைப்பதற்காக சுலைமான் மீது இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.

பதவிப் பறிப்புத் தீர்மானம் நிலுவையில் உள்ளபோது அமெரிக்க அதிபர் ஒருவர் இம்மாதிரியான தாக்குதலை நடத்துவது இது முதல் முறை அல்ல... அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனும் பதவிப் பறிப்புத் தீர்மானத்தை எதிர் கொண்டிருந்தபோது 1998 ஆம் ஆண்டில் இராக்கில் தாக்குதல் நடத்தினார் என்பது நினைவில் இருக்கலாம்.

ஈரான் மீதான போர் முழக்கமும் - அமெரிக்கத் தேர்தலும்

2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை அமெரிக்கா எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் பொருளாதாரம், வேலைவாய்ப்பைச் சீரமைக்கத் தவறிய அதிபர் டர்ம்ப்புக்கு எதிராக அதிர்வலைகள் அங்கு பரவலாக இருப்பதால் ஈரான் மீதான போர் முழக்கத்தை முந்தைய அதிபர்கள் போல் ட்ரம்ப்பும் கையில் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியும் வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது இராக்கில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், ட்ரம்ப் ஏன் தளபதி சுலைமானைக் கொல்ல உத்தரவிட்டார் எனவும் எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஈரானில் தாக்குதல் நடத்த ஒபாமா உத்தரவிட்டார் என்று ட்ரம்ப் அப்போது விமர்சித்தார். தற்போது அந்த விமர்சனம் ட்ரம்ப்பின் முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு பதில் கூறாத ட்ரம்ப், அடக்குமுறையை எளிமையாகக் கையாளவும், நாட்டு மக்களைத் திசை திருப்பவும் பிற உலகத் தலைவர்கள் கையில் எடுக்கும் ஆயுதமான தேசப்பற்றைக் கையில் எடுத்திருக்கிறார். இதில் ட்ரம்ப்புக்குக் கணிசமான வெற்றியும் கிடைத்துள்ளது.

ஷியா - சன்னி மோதலைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா

அரபு நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர்களுக்கு மூல காரணமாக இருப்பது சன்னி முஸ்லிம் - ஷியா முஸ்லிம் பிரிவினை.
இப்பிரிவுகளின் அடையாளமாக தங்களை உலக நாடுகளிடம் அடையாளப்படுத்திக் கொண்டு வளைகுடா பகுதிகளில் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்பும் ஈரானும் - சவுதியும் இஸ்லாமிய நாடுகளை ஷியா ஆதரவு, சன்னி ஆதரவு இரு பிரிவுகளாகப் பிரிந்து வைத்து தங்களுடைய அரசியல் நகர்வை நகர்த்துகின்றன.

ஆனால் ஷியா - சன்னி பிரிவினையில் உண்மையில் பலன் அடைந்திருப்பது அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள்தான். தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிற பதற்றத்தை சற்று ஆழமாக அலசினோம் என்றால் இதன் பின்னணியில் உள்ள எண்ணெய் அரசியலை தெரிந்து கொள்ளலாம்.

கொல்லப்பட்ட ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமானின் இறுதி நிகழ்வில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் இந்தப் படுகொலைக்காக அமெரிக்கா நிச்சயம் பழிவாங்கப்படும் என்ற ஒற்றைக் குரலை உயர்த்தியுள்ளனர்.

அமெரிக்காவும் தனது பங்கிற்கு எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்தத் தவறமாட்டோம் என்று பதில் அளித்துள்ளது.

ஆனால், இதற்கு எதிர்முனையில், ''ஈரான் மீது போர் வேண்டாம்.. போர் வேண்டாம்’’ என்றும் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அமெரிக்க மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

போர் என்ற பெயரில் எளிய மக்கள் மீது நடத்தப்படும் குற்றச் செயல்களுக்கு எதிராக உலக மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த மிரட்டல் வெறும் அறைகூவலாகவே கடக்கும் என்று நம்புவோம். போர் ஒரு குற்றம் என்பதை வல்லரசுகள் நினைவில் கொள்ளட்டும் ..!


தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x