Published : 01 Jan 2020 15:58 pm

Updated : 01 Jan 2020 15:58 pm

 

Published : 01 Jan 2020 03:58 PM
Last Updated : 01 Jan 2020 03:58 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 10 -சபதங்களுக்குப் பின்னே..!  

anbukku-panjamillai-10

நம்மை மலர்ச்சிப்படுத்துவதற்கு ஏதோவொரு தருணம் போதுமானதாக இருக்கிறது. நம் மனதை உற்சாகப்படுத்தி பரபரவென ஓடச் செய்வதற்கு, ஏதோவொரு வார்த்தையோ, சின்னதான கைகுலுக்கலோ, ‘சூப்பர்’ என்பதான பாராட்டோ கூட போதுமானதாக இருக்கிறது.

ஆனால் ’உன் வாழ்க்கைல எவ்ளோ கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து வந்திருக்கே. உன்னோட மன உறுதிதான் உன்னை இந்த அளவுக்கு கை பிடிச்சு கூட்டிக்கிட்டு வந்திருக்கு’ என்று யாரோ நம்மிடம் சொல்லும்போது, நாம் இன்னும் உறுதியாவோம்; உத்வேகமாகிவிடுவோம்; சுறுசுறுப்புடன் வேகம் கூட்டுவோம்; கியர் மாற்றி கியர் மாற்றி அடுத்தடுத்த இலக்கின் கிலோ மீட்டர்களை அநாயசமாகக் கடந்து கொண்டிருப்போம்.

பூட்டு - சாவி மாதிரிதான் இந்த வாழ்க்கையும். ஒரு பூட்டுக்குள் அந்த துவாரத்தில் சாவியை வைத்திருந்தால் மட்டும் போதுமானதா என்ன? அதைத் திருப்பிவிடவேண்டும். சாவியைத் திருகினால்தான் பூட்டு, பூட்டிக்கொள்ளும் அல்லது திறந்துகொள்ளும். இப்படித்தான், இந்த வேலையை காலமோ கடவுளோ, உறவினர்களோ நண்பர்களோ, தெரிந்தவர்களோ அறியாதவர்களோ... நமக்கு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் பெரிய பணக்காரர்களெல்லாம் இல்லை. ஆனால் என் அம்மா மனதளவில் கோடீஸ்வரி. யார் வந்து கேட்டாலும் இல்லையெனச் சொல்லமாட்டாள். ‘கொஞ்சம் அரிசி கொடுங்க மாமி. சம்பளம் வந்ததும் வாங்கிக் குடுத்துடுறேன்’ என்று அக்கம்பக்கத்தில் வந்து கேட்பார்கள். அம்மாவும் கொடுப்பாள். மாதம் பிறந்ததும் அவர்கள் வாங்கிய அரிசியைக் கொண்டுவந்து கொடுக்கும்போது, சுள்ளென்று முறைப்பாள் அம்மா.

‘ஆமாண்டி. உனக்கு பத்து மூட்டை அரிசி கொடுத்தேன். அதை மெனக்கெட்டு தூக்கிட்டு வந்து கொடுக்கறே. அடப்போடீ. இதை நீயே வைச்சுக்கோ’ என்பாள். ‘யாராவது பசிக்குதுன்னு உன் வீட்டு வாசல்ல குரல் கொடுத்து கை நீட்டுவாங்க பாரு... அவங்களுக்கு ஒரு பிடி சாதம் கொடு. உனக்குத்தான் புண்ணியம்’ என்பாள். இந்த வார்த்தையே, அவர்களுக்குள் ஓர் தன்னம்பிக்கையை ஏற்படுத்திவிடும். ‘நாமளும் சோத்துக்குக் கஷ்டப்படாம இருப்போம். நாலு பேருக்கு வயிறாரச் சாப்பாடு போடுவோம்’ எனும் நினைப்புடனே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஓர் அடி எடுத்துவைக்க பேருதவியாக, பெரும்பலமாக இருக்கும்.

பொன்மலை ரயில்வே காலனியில், சி டைப் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் ஆறுமுகம் எனும் நண்பர் இருந்தார். அவரை நாங்கள் ’தலைவரே...’ என்றுதான் கூப்பிடுவோம். அப்போது தேசிய இளைஞர் நற்பணி மன்றம் வைத்திருந்தோம். அதற்கு ஆறுமுகம்தான் தலைவர். அருமையான மனிதர். அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாரைப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை, கடந்த காலத்தை, குடும்பச்சூழலை ஒரு ‘லீட்’ போலச் சொல்லிப் பாராட்டுவார்.

எங்கள் நண்பனின் அப்பா, பெரும் குடிகாரர். ஒருவாரத்தில் நான்கு நாட்கள் அவர் வீட்டுச் சண்டையை தெருவே கூடிப்பார்க்கும். சண்டை, கூச்சல், அடி உதை, அழுகை, பேரமைதி என்றே மாறி மாறியிருக்கும். ‘இந்த ஆளுக்கிட்ட மாட்டிக்கிட்டு அந்தப் பொம்பளை படாதபாடு படுதுய்யா. இதுல மூணு பசங்களை வைச்சுக்கிட்டு, பாவம்யா அந்த அம்மா’ என்று மொத்தத் தெருவும் உச்சுக்கொட்டும்.

அந்த நண்பனின் தம்பி, பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தான். ஓட்டப்பந்தயத்திலும் கபடியிலும் அவனே சாம்பியன். அவனுடையை கையெழுத்து ஓர் ஓவியம் போல் இருக்கும். அவனைப் பார்க்கும்போதெல்லாம், ‘அப்பா குடிகாரன் அதனால என்னால படிக்கமுடியலைன்னு காரணமெல்லாம் சொல்லாம, நல்லாப் படிக்கிறேடா. இன்னும் படிச்சு பெரிய ஆளா வருவே பாரு’ என்பார் தலைவர் ஆறுமுகம்.

‘டவுனுக்குப் போயிருந்தேன். உனக்கு சட்டைத்துணி வாங்கியாந்தேன். இந்தா... நம்ம யேசுகிட்ட தைக்கக்கொடு. நான் தையக்கூலி கொடுத்துடுறேன். ‘வீட்டுக்கு அப்பா காசே தர்றதில்ல. அம்மாவை அடிச்சிட்டாரு. வீட்ல எப்பப் பாத்தாலும் சண்டை, ஒப்பாரின்னு சாக்குபோக்கு சொல்லாம, கபடிலயும் கவனம் செலுத்தி விளையாண்டு, படிப்புலயும் கெட்டியா இருந்தே பாரு. அதுக்கு என்னால முடிஞ்ச சின்னப்பரிசு’ என்பார்.

‘அப்பாவால அம்மா பட்ட கஷ்டத்தை நாம கொடுக்கக் கூடாது’ என்று அந்தப் பையன் நினைத்திருப்பான் தானே. ‘அம்மாவை உள்ளங்கைல வைச்சு தாங்குதாங்குன்னு தாங்கணும்’ என்று உறுதி எடுத்திருப்பான் அல்லவா. ‘படிப்புலயும் விளையாட்டுலயும் ஜெயிக்கமுடிஞ்ச நம்மால, வாழ்க்கைலயும் ஜெயிக்க முடியும்’ என்கிற நம்பிக்கை வெளிச்சம், அவன் மனதில் ஒளியேற்றியிருக்கும் என்பது உறுதிதானே!

காரைக்குடியில், ‘வெல்டிங்’ பிரிவு எடுத்துப் படித்தேன். வெல்டிங் செய்ய ராடுகள் வாங்க கூடுதலாக காசு கொடுத்தால், இன்னும் கொஞ்சநேரம், வெல்டிங் பழகலாம். என்னுடன் படித்த சண்முகசுந்தரம், கூடுதல் காசு கொடுக்க முடியாமல், தவித்தான். எங்கள் ஆசிரியரிடம், ‘சார், நாங்க ஒரு ஆறேழு பேர் சேர்ந்து அவனுக்கு ராடு வாங்கக் காசு கொடுக்கறோம் சார். ஒரு ரெண்டு நாள்ல காசு கலெக்ட் பண்ணித் தரேன் சார். என் பொறுப்பு சார். அவனுக்கு ராடு கொடுங்க சார்’ என்றேன். அவர் என் தலையைத் தடவிக் கொடுத்தார். தோள் தட்டினார். புன்னகைத்தார். ‘அதெல்லாம் வேணாம், பாத்துக்கலாம்’ என்றார்.

மறு நாள். சண்முகசுந்தரத்தின் கையில் ஏழெட்டு ராடுகள். அவனிடம் கேட்டேன். ‘யார்கிட்டயும் சொல்லாதேன்னு சார் சொன்னாருடா. உங்கிட்ட சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாதேடா. எனக்காக அவரே காசு போட்டுட்டார். ஆனா அது எனக்கு ஒருமாதிரியா, கெளரவக் குறைச்சலா இருக்கும்ங்கறதால, ’சண்முகசுந்தரம் காசு கட்டிட்டான்’ன்னு சொல்லிட்டேன்னு சொன்னாருடா. ச்சே... ரொம்ப நல்லவர்டா அவரு. ஆனா அவருக்கு பட்டப்பேருல்லாம் வைச்சிட்டோம்டா’ என்று சொல்லிவிட்டு, யாருக்கும் தெரியாமல் பொலபொலவென அழுத அந்த சண்முகசுந்தரம், அகண்டு பரந்து விரிந்திருக்கும் இந்த உலகில், எங்கோ நல்லவனாகவும், அடுத்தவர் நிலையை உணர்ந்தவனாகவும் பிறருக்கு ஏதோ ஒருவகையில் உதவிக்கொண்டிருப்பான் என்பதாக நம்புகிறேன்.

அந்த ஆசிரியர், வெல்டிங் படிப்பைக் கடந்து, அவனுக்குள் ஏதோவொன்றை பற்ற வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதுதானே.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, மச்சினனின் கிரகப் பிரவேச விழாவுக்கு, டிராவல்ஸ் காரில் பயணித்தேன். அப்படிப் பயணிக்கிற போது, டிரைவரிடம் பேசுவது என் வழக்கம். அந்த டிரைவர் அக்பர் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில், ஒரு கேள்விக்குள் இருக்கிற அடுத்தடுத்த அவரின் பதில்களை கேட்டுக்கொண்டே இருந்தேன்.

‘’பட்டுக்கோட்டை பேராவூரணிப் பக்கம், ஒரு சின்ன கிராமம் சார். அப்பா டீக்கடை வைச்சிருந்தார். அவருக்கு எங்க ஊர்ல இருக்கற நாலு தெரு மட்டும்தான் உலகம். பெருசா படிக்கல. அதனால பெருசு பெருசான விஷயம் எதுவும் தெரியல. எங்க மாமாதான் எனக்கு எல்லாமே. மாமான்னா தாய் மாமா. எங்க அம்மாவோட தம்பி. முப்பது வருஷத்துக்கு முன்னாடி, சென்னைக்கு வந்துட்டாரு. படிப்பு ஏறாம, ஏதோ கூப்பிடுற வேலைக்கு, கிடைக்குற வேலைக்குன்னு போயிட்டிருந்தேன்.

மாமாதான் சென்னைக்குக் கூட்டிட்டு வந்துச்சு. கார் ஓட்ட சேர்த்துவிட்டுச்சு. டிரைவிங்குக்கு பணம் கட்டுச்சு. லைசென்ஸும் வாங்கித் தந்துச்சு. எனக்காகவே ஒரு கார் வாங்குச்சு. இதோ... இந்தக் கார். ரெண்டு வருஷம் கழிச்சு, மாமாவே பொண்ணு பாத்து, கல்யாணம் கட்டி வைச்சிச்சு.

‘என் புருஷன் அப்பாவி. அந்த ஆளு நம்ம பசங்களை எப்படிக் கரையேத்தப் போறான்னு பரிதவிச்சிக்கிட்டே இருந்தேன். ஆனா என் தம்பி என்னையும் பசங்களையும் கைவிடல’ன்னு அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும்.

கல்யாணம், மனைவி, குழந்தைங்கன்னு இப்போ சென்னைலயே செட்டிலாயிட்டேன் சார். நான் மட்டுமில்ல சார். என் தம்பியும்தான். எங்களுக்கு ரெண்டு மாமா சார். பெரிய மாமா என்னை வளர்த்து ஆளாக்கினாரு. சின்ன மாமா, என் தம்பியை ஆளாக்கினார். திருவான்மியூர்ல தள்ளுவண்டில டிபன் கடை போட்டு பொழப்பு ஓட்டிட்டிருக்கான் சார். நல்ல டேஸ்ட். நல்லா ஓடுது. சின்ன மாமா, அவனுக்குப் பொண்ணைப் பாத்து, கல்யாணமும் பண்ணி வைச்சாரு சார்.

கல்யாணமாகி, ஒரு வீடு பாத்து குடிவந்த அன்னிக்கி, அப்படி அழுதிருப்பேன் சார். அப்பா ஸ்தானத்துல இருந்து மாமா நமக்கு என்னலாம் பண்ணிருக்காருன்னு எல்லாத்தையும் நினைச்சுப் பாத்தேன். அன்னிக்கி முடிவு பண்ணினேன்... ‘மாப்ளே... ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணுடா’ன்னு ஊர்லேருந்து யாராவது போன் பண்ணினா, நம்மால முடிஞ்சதை அவங்களுக்குச் செய்யணும். அவங்க படிப்புக்குத் தக்கபடி ஒரு வேலையை வாங்கிக் கொடுக்கணும்னு உறுதி எடுத்துக்கிட்டேன் சார். அதானே சார் என் மாமாவுக்கு செய்ற நன்றி’ என்று சாலையைப் பார்த்துக் கொண்டே, ஸ்டியரிங் பிடித்துக்கொண்டே சொன்ன அக்பர், அலுங்காமல் குலுங்காமல் அடுத்த கியர் மாற்றினான். இப்படித்தான் எந்த செய்கூலி சேதாரமும் இல்லாமல், வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறான்.

வாழ்வில், இப்படியான தருணங்களை, லட்சியமாகவும் ஆசையாகவும் கொள்கையாகவும் கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். சந்திப்பவர்களை ஆசிரியர்களாகவும் உள்ளே புகுந்துகொள்கிற விஷயங்களை போதனைகளாகவும் ஏற்று செம்மையுற வாழ்க்கையாக்கிக் கொள்பவர்கள் ரொம்பவே அதிகம். இதை ஓர் சந்நதம் போல், சத்தியம் போல், வேதவாக்கு மாதிரி, சபதம் போல் கைக்கொள்கிறவர்களை நாம் நிறையவே பார்க்கலாம்.

பாக்யராஜ் சாரின் ‘முந்தானை முடிச்சு’ பார்க்கும் போதெல்லாம் எனக்கு அம்மும்மாதான் ஞாபகத்துக்கு வருவார். அம்முவின் அம்மா. எங்கள் வீடும் அவர்கள் வீடும் எதிரெதிர் வீடுகள். அம்முவின் அப்பா கம்பீரமாக இருப்பார். அவரின் முதல் மனைவிக்கு கற்பகம், முரளி என இரண்டு குழந்தைகள். நண்டும்சிண்டுமாக இருக்கும்போதே முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அவரை நான் பார்த்ததே இல்லை. பிறகு, உறவுக்காரர்கள் சொல்ல, இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்கும் அம்மு, லதா, இன்னொரு மகன் என மூன்று குழந்தைகள். ஆக, அவர்கள் வீட்டில் ஐந்து குழந்தைகள்.

’ஐந்து விரலும் ஒண்ணாவா இருக்கு’ என்போம். ஆனால் ஐந்து குழந்தைகளையும் ஒரேமாதிரியாகத்தான் வளர்த்தார் இரண்டாவது அம்மா. நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஓர் மழைக்கால மாலைப் பொழுதில், என் அம்மாவிடம் அம்மும்மா மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.

‘நான் எம் புருஷனைக் கொடுமைப்படுத்தலாம். எதிர் வீட்ல இருக்கிற உங்களை காயப்படுத்தலாம். பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட கரிச்சுக்கொட்டிப் பேசலாம். ஆனா குழந்தைகளை எப்படிப் பிரிச்சுப் பாப்பீங்க. அப்படிப் பிரிச்சுப் பாக்கறதுக்கு எப்படி மனசு வரும். ரோட்ல ஓடியாடி விளையாடுற பசங்க, விழுந்து சிராய்ச்சிக்கிட்டாலே மனசு நமக்கு வலிக்குது. நம்ம தெருவுலயோ, ஏரியாலயோ... யாரோ ஒரு குழந்தை, அம்மாவைப் பறிகொடுத்துட்டு நிக்கிறதைப் பாக்கும்போது, களுக்குன்னு கண்ணுல தண்ணி வந்துருது. ‘கடவுளே... பொண்டாட்டி இல்லாம புருஷன் இருந்துடலாம். அம்மா இல்லாம இந்தக் குழந்தை என்னெல்லாம் படப்போவுதோ’னு ஒரு வேண்டுதல் உள்ளே ஓடுது.

அப்படியிருக்கும்போது, என் பசங்களை மூத்ததுக்குப் பொறந்தது எனக்குப் பொறந்ததுன்னு எப்படிப் பிரிக்கமுடியும்? பிரிச்சுப் பாக்கமுடியும்? எங்க வீட்டுக்காரர் ரொம்ப நல்லமாதிரின்னு சொன்னாங்க. மனசால கூட யாருக்கும் கெடுதல் பண்ண நினைக்காதவர்னு சொன்னாங்க. அவருக்கு ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக் கொடுக்க, வீடு மொத்தமும் சம்மதிச்சுச்சு.

ஒருத்தருக்கு ரெண்டாந்தாரமாக்கறதுக்கு என் வீடு தயாரா இருக்குன்னா, அவர் எப்பேர்பட்டவரா இருக்கணும்? இது 88 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற எங்களுக்கே தெரியுதுன்னா, இறந்துபோன மனைவிகிட்ட அவர் எப்படிலாம் நடந்திருப்பாரு? அப்படியொரு அன்பை அவர்கிட்ட வாங்கிக்கிட்டு பெத்த குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்த்திருப்பாங்க? அந்தக் குழந்தைக்கு எவ்ளோ செல்லமா, ஆனந்தமா வளர்ந்திருப்பாங்க?

இதெல்லாம் நினைச்சேன். கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி எம் புருஷனைப் பாக்கணும்னு நினைக்கல. ஆனா அந்த ரெண்டு குழந்தைகளையும் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். பாத்தேன். ரெண்டாந்தாரம், சித்தி கொடுமைன்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாது, இது நம்ம அம்மா இல்ல, சித்தின்னு ஒரு நெனப்பு இந்தப் பசங்களுக்கும் வந்துடக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். அப்படித்தான் வளர்த்தேன்.

கல்யாணமாகி, ஒம்பது வருஷம் குழந்தையே பெத்துக்கல. இந்த ஒம்பது வருஷம் இல்லாம, இனிமேலா குழந்தை பொறக்கப்போவுதுன்னு அசால்ட்டா இருந்துட்டேன். அம்மு பொறந்தா. அப்புறம், ரெண்டு குழந்தைங்க. நாம ராட்சஷி இல்ல. நம்மகிட்ட கெட்ட குணம் எதுவுமில்லைன்னு நானே என்னைப் புரிஞ்சுக்கிட்டு அப்போ நினைச்சுப் பூரிச்சுப் போனேன்.

குழந்தை குழந்தைதானே மாமி. இதுல மூத்தகுடி என்ன, இளைய குடி என்ன?’என்று சொல்லிவிட்டு, கண்கள் மூடி பெருமூச்சுவிட்ட அம்மும்மாவின் தொடையைத் தட்டிப் பாராட்டினாள் அம்மா. ‘நாகு... நீ நல்லவடி. கோடி ரூபா கொடுத்தாலும் இப்படி பசங்களைப் பிரிச்சுப் பாக்கற புத்தி உனக்கு வராதுடி’ என்று அம்மா சொல்ல, அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்துகொண்டாள் அம்மும்மா. ‘சித்தின்னா கொடுமைக்காரின்றதை நான் மாத்திட்டேன் தானே மாமி’ என்று அழுதுகொண்டே சிரித்தபடி சொன்ன அந்த அம்மும்மாவின் முகம் எனக்குள் அப்படியே பதிந்துவிட்டது.

அன்பால் விளைந்த சபதங்கள்... இன்னும் இன்னுமாக அன்பை விதைத்துக்கொண்டே இருக்கும்; பெருக்கிக் கொண்டே இருக்கும்!


-வளரும்


அன்புக்குப் பஞ்சமில்லை 10 : சபதங்களுக்குப் பின்னே..!வாழ்வியல் தொடர்அன்பைச் சொல்லும் தொடர்வாழ்க்கையைச் சொல்லும் தொடர்உளவியல் தொடர்உறவின் மேன்மை சொல்லும் தொடர்அன்புக்குப் பஞ்சமில்லை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author