உங்களுக்கும் சகாக்களின் நெருக்கடி இருக்கிறதா?

உங்களுக்கும் சகாக்களின் நெருக்கடி இருக்கிறதா?
Updated on
2 min read

நல்லதோ, கெட்டதோ எல்லாருமே ஒரு குறிப்பிட்ட தோழமை வட்டத்துக்குள்தான் இருந்தாக வேண்டும். அதில் எப்படிச் சிறந்த நண்பர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பது?

சில வருடங்களுக்கு முன்னர், சக பணியாளர் ஒருவர், பள்ளியொன்றில் டீனேஜ் இளைஞர்களுக்கு, "சகாக்களின் நெருக்கடி" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில், சின்னச் சின்ன நிகழ்வுகள் டீனேஜ் இளைஞர்களை எந்தளவுக்குப் பாதிக்கின்றன, அவர்கள் எவ்வாறு அதை எடுத்துக்கொள்கின்றனர் என்பது குறித்த விவாதம் நடைபெற்றது. கேள்வி - பதில் சமயத்தில், மாணவரொருவர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினார்.

அப்பள்ளியின் பெரும்பாலான ஆசிரியர்கள், புகழ்பெற்ற பிராண்ட் ஒன்றின் குறிப்பிட்ட சில மாடல் கடிகாரங்களையே அணிகிறார்கள் என்பதுதான் அது. இவ்விவாதம், முக்கியமான ஒரு சமூக நடப்பின் அடியாழத்தை உற்றுநோக்க அடிகோலியது. சகாக்களின் நெருக்கடி மாணவர்களுக்கு மட்டும் இல்லை; ஆசிரியர்களுக்கும் உண்டு என்பதை அது வெளிப்படுத்தியது.

இதைக்கவனித்த என் சக பணியாளர், அவ்விவாதம் அவரின் மனதையும், இதயத்தையும் எதிர்பார்த்திராத வழிகளில் திறப்பை ஏற்படுத்தியதை உணர்ந்தார். சகாக்களின் நெருக்கடி என்பது ஆசிரியர்- மாணவர் சார்ந்தது மட்டுமே இல்லை. சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடிப் போயிருக்கும் உளவியல் பிரச்சனை.

இதன் ஆரம்பம், ஒரு குழுவின் நடத்தைகளுக்கு ஏற்ப, நம்மையும் நமது பார்வையையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயமாக இருக்கும். உதாரணமாக உங்களின் சகாக்களின் வட்டத்துக்குப் பிடித்த இசை வகை, மெல்ல மெல்ல உங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும். சமூகங்கள், நாடுகள் போன்றவை மொழி, மதம், அரசியல் பார்வைகள் சார்ந்து தங்களை ஓர் அழுத்தத்துக்கு உட்படுத்திக் கொள்வதும் இதில் அடங்கும்.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்த உங்களில் பலர் இதை உணர்ந்திருக்கலாம். புதிய இடத்தின் மொழியைக் கற்றுக்கொண்டோ, அங்கிருக்கும் மக்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றத்தொடங்கியோ, அவ்விடத்துக்கு ஏற்றாற்போல வாழத் தொடங்குபவர்கள் பலர். சிலரோ, புதிய சூழ்நிலையை அனுசரித்துப் போகமுடியாமல், தனது பழைய அடையாளத்தையும் இழக்க விரும்பாமல் தவிக்கின்றனர்.

ஊசலாட்டத்தின் இந்த இரண்டு முனைகளையும் அனுபவித்த ஒருவர், தனது சொந்த விருப்பத்தை ஒத்து, சமநிலையின் சாயலைக் கண்டுபிடிக்கக் கூடும். இதுவே ஒருவரின் வெவ்வேறு முனைகளைக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தின் இயற்கையான வழிமுறையாக இருக்கும்.

நேர்மறைகளும் எதிர்மறைகளும்

எல்லாச் செயல்களையும் போல, சகாக்களின் நெருக்கடியிலும் நல்லவைகளும் உண்டு; கெட்டவைகளும் உண்டு. படிப்பதில் இன்பம் கண்டிராத மாணவன், எப்பொழுதும் புத்தகங்களைப் பற்றியே பேசிக்கொள்ளும் குழுவில் இருந்தானால், அவனுக்கும் புத்தகச்சுவை புரிபடக்கூடும். மெல்ல மெல்ல புத்தக வாசிப்புக்குள் மூழ்கி, அவனால் புது உலகத்தையே கண்டறிய இயலும். புதிய நண்பர்கள் குழுவில் புத்தகங்கள் பற்றிப் பேச முடியும். குழு விவாதங்களில் பங்குபெற முடியும். பட்டப்படிப்பு தவிர விருப்பமான துறையாக புத்தக வாசிப்பைக் கூற இயலும். தனது புதிய நண்பர்கள் குழாமைக் கவர முடியும்.

அதே நேரத்தில், சிலருக்கு ஒரு குழுவின் நடவடிக்கைகளோடு ஒத்திசைவதற்கு, பல்வேறு துன்பப்படுத்துகிற செயல்களைக் கடந்துவர வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஒரு ஆடம்பரப் பொருளை வாங்குவதற்காகத் திருடிய சிறுவன் ஒருவன் பிடிபட்டான். தீவிர மனநல ஆலோசனைக்குப் பிறகு, தனது நண்பர்கள் வட்டத்தின் அழுத்தம் காரணமாகவே, இத்தகைய செயலால் வரப்போகும் விளைவுகளைப் பற்றி யோசிக்காமலேயே ஈடுபட்டதாகக் கூறினான்.

இளைஞர்கள், வாழ்க்கை முழுவதும் பயணித்துக்கொண்டே இருப்பதால், அவர்களுக்கான தெளிவான பாதையைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதுவும் இயல்பான நடைமுறைதான். இதைச் சரிசெய்வதற்கெனத் தனியாகக் கையேடு எதுவும் இல்லாத நிலையில் ஒருவர் பின்வரும் சில கேள்விகளைத் தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளலாம்.

1. சகாக்களின் நெருக்கடி காரணமாக நான் செய்யும் செயல், எனக்குள்ளிருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணருமா?

2. அவை வெளிப்புறக் காரணிகளுக்கு என்னை அடிமையாக்குகிறதா?

3. எனக்குள்ளிருக்கும் மோசமான பக்கத்தை வெளிப்படுத்தி, என்னைத் தாழ்த்துகிறதா?

முன்னெல்லாம் குடும்பங்கள் நமது உடல் ஆரோக்கியத்தோடு, மன வலிமையையும் சேர்ந்து வளர்த்தெடுத்தன. கூட்டுக் குடும்பங்களில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் மனம் சார்ந்து இயங்கவும் கற்றுக்கொடுத்தனர். ஆனால் இப்போதோ குடும்ப அமைப்பு, கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. மாணவர்களும், குழந்தைகளும் மனத்தெளிவு இல்லாமலேயே தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் போன்றவற்றின் ஆதிக்கத்தோடு வெளியுலகை அணுகுகின்றனர்.

வலுவான அடித்தளமில்லாத இந்நிலை நிலையற்றதாகவே அமையும். வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வது என்பது கடுமையாகவோ இல்லை வெறித்தனமாகவோ ஒன்றை அணுகுவதில்லை. அதே சமயம் முறையான, நிலையான தொடக்கத்தோடு, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு, இத்தகைய குணநலன்களைக் கொண்டுள்ளவரை சந்தித்துப் பேசலாம். எங்கள் பள்ளியில் கடவுள் நம்பிக்கை சார்ந்து இயங்கும் ஆசிரியை ஒருவர் இருந்தார். ஆனால் அவரின் வகுப்புகளோ, அவரின் நம்பிக்கைகளையும், பார்வைகளையும் விமர்சிக்கும் விதத்தில் இருந்தன. எதிர்க்கருத்துகளை எப்போதுமே வரவேற்கும் குணம் கொண்டவராக இருந்தார். அவரின் சொந்த சமூகம், மத நம்பிக்கை குறித்த பரந்த, தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். ஆனாலும், மற்றவர்களின் கருத்துகளை ஏற்பவராயும் இருந்தார். எங்களில் பலருக்கு ஒரு ஆசானாகவே அவர் திகழ்ந்தார். தேர்வுத் தோல்வியினால் உடைந்திருக்கும் எங்கள் இதயத்தின் வலியை ஆற்றுபவராகவும் இருந்தார்.

என்ன செய்யலாம்?

சகாக்கள் நெருக்கடியின் விளைவுகளை எதிர்க்கும் திறன் யாருக்கும் இல்லை. அப்போதெல்லாம் நீங்கள் தனியானவர் இல்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். சிறந்தவற்றை வெளிக்கொணர வாழ்க்கை ஒரு சிறந்த வாய்ப்பைத் தந்திருக்கிறது. இந்த பாதையில் நீங்கள் சறுக்கி விழலாம், தவறான பாதையையும் தெரிவு செய்துவிடலாம். உண்மையான மகிழ்ச்சியே, அதிலிருந்து வெளிவந்து முன்னேறிச் செல்வதுதான்.

சகாக்களின் நெருக்கடி, எப்போதும் நம்முடன் இருந்துகொண்டேதான் இருக்கும். புத்திசாலித்தனமாக அதைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

வாழ்வுப் பயணத்தைக் கொண்டாடி மகிழுங்கள்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in