

குழந்தை மனம் இருந்தால் கவலைகள் அண்டாது. போட்டி உணர்வு வராது. பொறாமை பாடாய்ப்படுத்தாது. பகைமை தொற்றாது. சோர்வு ஏற்படாது. மொத்ததில் வாழ்க்கை கடைசி நிமிடம் வரை வரமாக மட்டுமே இருக்கும். அதற்கான மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது. நம் பார்வையில்தான் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோ வாழ்வியல் பாடம்.
நீங்களும் அதைப் பாருங்களேன்..
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது சின்னஞ்சிறு மகளுக்கு ஒரு சாதாரணப் பரிசைக் கொடுத்த தாய் அதனைக் கண்டு அந்தக் குழந்தை காட்டிய ஆரவாரத்தைக் கொண்டாடி அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வாழைப்பழத்தை தான் அந்தத் தாய் குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அது அக்குழந்தையை அவ்வளவு மகிழ்விக்கிறது. வாழைப்பழம்... என்று தன் பரிசைப் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக் கூறி அதை ருசித்துப் புசிக்கிறது அக்குழந்தை.
வாழ்க்கை நமக்கு எதைப் பரிசாகக் கொடுத்தாலும் அதை அக மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் குழந்தையின் மனோபாவம் இருந்தால் வாழ்தல் இனிதே. ஆதலால் குழந்தை மனம் கொள்வோம்.
குறு வீடியோவில் பெரும் தத்துவத்தைக் கடத்தியுள்ள இந்த செய்தியைப் பதிவு செய்த நிமிடத்தில் இந்த வீடியோவுக்கான லின்க் 23 மில்லியன் என்ற அளவைக் கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.