

ராமநாதபுரத்தில் இசைஞானி இளைய ராஜாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது உருவத்தில் ஐந்தரை அடி உயர கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு பேக்கரியில் பிரபலமானவர்களின் உருவம், கிரிக்கெட் வெற்றிக் கோப்பை வடிவத்தில் கேக் செய்து வைத்து பார்வையாளர்களை கவர்வது வழக்கம்.
அந்த வகையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதை முன்னிட்டும், இசையமைப்பாளர் இசைஞானி இளைய ராஜாவை பெருமைப்படுத்தும் வகையிலும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியும் அவரது உருவத்தில் ஐந்தரை அடி உயர கேக் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது. இந்த கேக்கை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
50 கிலோ எடையுள்ள இனிப்புகளாலும், 250 முட்டைகளையும் பயன்படுத்தி ஐந்து பணியாளர்கள் 6 நாள்கள் உழைத்து இந்த கேக்கை உருவாக்கி உள்ளதாக கடையின் உரிமையாளர் ஐஸ்வர்யா சுப்பு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட இடையிலும், சிம்பொனியிலும் சாதித்த இளை யராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் இந்த கேக் முன் நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர் என்றார்.