இன்று அன்று| 1813 ஆகஸ்ட் 7: பாலினா எனும் பெண் புயல்!

இன்று அன்று| 1813 ஆகஸ்ட் 7: பாலினா எனும் பெண் புயல்!
Updated on
1 min read

பெண் உருவில் ஆள் உயரப் பொம்மை ஒன்றை வாங்கிக் கொண்டு, கிழக்கு அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்தார் ஒரு பெண்மணி. சந்தித்த அத்தனை இளம் பெண்களுக்கும் அந்தப் பொம்மையைக் காட்டி, பெண் உடற்கூற்றை விளக்கினார். “நீங்களும் மருத்துவராக வேண்டும்” என அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் நிர்வாண பொம்மையைக் கண்ட பல பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமான அமெரிக்கப் பெண்கள் படித்து மருத்துவரானார்கள். இப்படிப் பெண்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், கல்வியாளராகவும், பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தவர் பாலினா கெளாக் ரைட் டேவிஸ்.

7 ஆகஸ்ட் 1813-ல் நியூயார்க் நகரில் மரபார்ந்த கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார் பாலினா. யுவதியானபோது மதபோத கராக விரும்பினார். ஆனால், முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக இருந்ததால், தேவாலயம் அவரை நிராகரித்தது. 1833-ல் சீர்திருத்தச் சிந்தனை கொண்ட ஃபிரான்சிஸ் ரைட்டை மணந்தார். இருவரும் ஒன்றிணைந்து அடிமைத்தனத்துக்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் செயல்படத் தொடங்கினர். ஆனால், 1845-ல் ஃபிரான்சிஸ் காலமானார். அன்பான கணவரை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மேற்படிப்பு படித்துக் கல்வியாளராக முடிவெடுத்தார் பாலினா. அதுவரை பெண் மருத்துவர்கள் சொற்பமாக இருந்ததால் மருத்துவம் படித்துப் பெண் உடற்கூறியலை ஆராயத் தொடங்கினார். இந்த முயற்சியில்தான் 1946-ல் பெண் உருவப் பொம்மையை வாங்கி ஊர் ஊராகச் சென்று, பெண்கள் மருத்துவத் துறைக்கு வர வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1830-களில் சூசன் ஆண்டனி, ஏர்னெஸ்டைன் ரோஸ் போன்ற பெண்ணிய ஆர்வலர்களைச் சந்தித்தபோது, பாலினாவின் சிந்தனை இன்னும் கூர்மையடைந்தது. அவர்களுடன் இணைந்து ஆற்றிய களப்பணியின் விளைவாக 1848-ல் திருமண மான பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது. 1850-ல் முதல் தேசியப் பெண் உரிமை மாநாட்டைப் பாலினா ஒருங்கிணைத்தார். மாநாட்டின் தலைமை உரையில் “இந்தக் கூட்டம் ஒரு வர்க்கத்தின் எழுச்சி, பாதி உலகத்துக்கு விமோசனம், சமூக, அரசியல், தொழில் மற்றும் நிறுவனங்கள் ஒன்றுதிரளப்போவதை உறுதி செய்யும் முயற்சி” என உரக்க அறிவித்தார். இரண்டு நாட்களில்11 மாநிலங்களிலிருந்து 1,000-த்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒன்றுதிரண்டனர். வெளி உலகில் பெண்கள் சுதந்திரமாகப் பிரவேசிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்ட அக்காலகட்டத்தில், ஏராளமான பெண்கள் மாநாட்டின் மேடை ஏறி வெளிப்படையாகப் பேசினார்கள். ஓட்டுரிமை, சொத்துரிமை, உயர்கல்வி பெறும் உரிமை, மருத்துவம் மற்றும் தொழில்முறைக் கல்வி படிக்க மற்றும் வேலை பெறும் உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை வேண்டும் எனப் பெண்கள் குரல் எழுப்பினர்.

1853-ல் முதல் பெண் உரிமைப் பத்திரிகையான ‘தி உனா’வை நிறுவினார். புதிய இங்கிலாந்து பெண்கள் ஓட்டுரிமைச் சங்கத்தை 1868-ல் தோற்றுவித்தார். பெண் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் முனைப்புடன் செயல்பட்ட அவர், ஆகஸ்ட் 24, 1876-ல் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in