Published : 14 Dec 2019 10:31 AM
Last Updated : 14 Dec 2019 10:31 AM

உள்ளங்கையில் ஒரு ஹைக்கூ நூல்: 'லிம்கா' சாதனைக்குப் பரிந்துரை

மூன்று வரி ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள், இன்றைக்கு தமிழில் பலராலும் எழுதப்படும் பிரபலமான கவிதை வடிவமாக இருக்கிறது. மகாகவி பாரதியார் எழுதிய சிறு கட்டுரை ஒன்றின் வழியே (சுதேசமித்திரன் - 16.10.1916) தமிழில் முதன்முதலாக அறிமுகமான ஹைக்கூ கவிதைகள், தமிழின் மூத்த - இளைய கவிஞர்களைத் தன்பால் ஈர்த்து எழுதத் தூண்டியது.

தமிழில் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாகி, ஒரு நூற்றாண்டினைக் கடந்திருக்கும் நிலையில், இதுவரை 500-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் ஹைக்கூ கவிதைகளைத் தொடர்ந்து எழுதிவரும் மு.முருகேஷ், இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ளார். 1993-ல் உள்ளங்கை அளவிலான இவரது ‘விரல் நுனியில் வானம்’ஹைக்கூ கவிதை நூல் வெளியாகி, மூன்றே மாதத்தில் அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன.

தனது ஒவ்வொரு ஹைக்கூ நூலையும் புதுமையான வடிவ அமைப்பில் வெளியிட்டுவரும் மு.முருகேஷ், 1999-இல் நீள வடிவிலான ‘தோழமையுடன்’எனும் ஹைக்கூ நூலினையும், 2000-இல் ‘ஹைக்கூ டைரி’ எனும் ஹைக்கூ+ டைரியுடன் இணைந்த நூலையும் கொண்டுவந்தார். 2010-இல் ‘உயிர்க்கவிதைகள்’ எனும் வண்ணப் புகைப்படங்களுடன் கூடிய ஹைக்கூ வெளியிட்டார்.

இவரது ஹைக்கூ கவிதைகள் இந்ஹி, மலையாளம்,தெலுங்கு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 110 ஹைக்கூ கவிதைகள் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, ‘நிலா முத்தம்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.

பெங்களூருவில் 2008-ம் ஆண்டு (பிப்.23-25) நடைபெற்ற உலக ஹைக்கூ கிளப் 9-வது மாநாட்டில் நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதைப் போட்டியில் பங்கேற்று மு.முருகேஷ் எழுதிய ஹைக்கூ ஒன்று வெற்றி பெற்று, உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2019 டிசம்பரில் ‘குக்கூவென...’ எனும் மிகச் சிறிய ஹைக்கூ கவிதை நூலினைக் வெளியிட்டுள்ளார். 4.8 செ.மீ உயரமும், 4.5 செ.மீ அகலமும் கொண்ட இந்தக் குறுநூல், தமிழில் இதுவரை வெளியான கவிதை நூல்களிலேயே மிகச் சிறிய நூலாக இருக்கிறது.

லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்நூலின் ஆசிரியர், கவிஞர் மு.முருகேஷ் கூறும்போது, “எனது ஹைக்கூ நூல்கள் ஒவ்வொன்றும் ஏதாவதொரு புதுமையான வடிவத்தில் இருக்கும். மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில், 2010-ம் ஆண்டில் கொல்கத்தா சென்றிருந்தபோது, அங்கே சிறிய நூல் ஒன்றை வாங்கி வந்தேன்.

அதைவிடச் சிறியதாக ஒரு நூலை வெளியிட வேண்டுமென்கிற ஆவலில், பல அச்சகங்களையும் பைண்டிங் சென்டர்களையும் தொடர்புகொண்டு விசாரித்தேன். பலரும் இது முடியாது, செலவு அதிகமாகும் என கை விரித்துவிட்ட நிலையில், புக் மேக்கர் நிறுவனத்தைச் சேர்ந்த ஆதித்யா, “முயற்சிக்கலாம்...” என்று சொல்லி, கடந்த ஆறு மாதங்களாக முயன்று, இந்தத் தமிழின் மிகச் சிறிய கவிதை நூலை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். ‘மூன்று வரி ஹைக்கூ கவிதைக்கு ஏற்ற சரியான வடிவமிது’ என்று பலரும் பாராட்டுவது, இந்த நூலுக்காகென பட்ட சிரமங்களைமறக்கச் செய்வதாக உள்ளது.

இந்தச் சிறிய நூலைப் பார்க்கும் பலரும் வியந்து பாராட்டுகின்றார்கள். மூத்த எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் நூலைக் கையில் வாங்கும்போதே, “அட... குட்டியூண்டு பொஸ்தவம்..!” என்றார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையரும் எழுத்தாளருமான மு.ராஜேந்திரன் ஐஏஎஸ், “அழகான - கவித்துமான நூல்” என்று பாராட்டினர். “இந்த நூலே ஒரு ஹைக்கூதான்..!” என்று நெகிழ்ந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். “அட்டகாசமா இருக்கே... கவிஞரே..!” என்று சொல்லி மகிழ்ந்தார் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி.

ஜனவரி 2020-ல் 47-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் விற்பனைக்குக் கிடைக்கும்” என்று சொல்லி, ஹைக்கூவாகப் புன்னகைக்கிறார் கவிஞர் மு.முருகேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x