Last Updated : 11 Dec, 2019 03:23 PM

 

Published : 11 Dec 2019 03:23 PM
Last Updated : 11 Dec 2019 03:23 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 8-ஆசை நூறு வகை’ 

ஆசை யாருக்குத்தான் இல்லை. ஒவ்வொருவருக்கும் எத்தனையெத்தனை ஆசைகள்? அந்த ஆசைகளின் கனமும் அகல ஆழங்களும்தான். அது ஆசை மட்டுமில்லை... வெறும் ஆசை மட்டுமில்லை... அதுவொரு கனவு என்று சொல்லவைக்கிறது. ஆசையின் மற்றொரு பெயர் விருப்பம். கனவின் இன்னொரு பெயர் லட்சியம்.

ஆக, இங்கே ஆசைப்படாதவர்கள், விருப்பமில்லாதவர்கள், லட்சியமில்லாதவர்கள் என்று எவருமே இல்லை. இவையெல்லாம் அவர்களுக்கு நிறைவேறியதா என்பதுதான் இங்கே கேள்வி. அப்படி நிறைவேறுவதற்காக, சுற்றமும் நட்புமாக இருந்து எவரேனும் கைதூக்கிவிடுகிறார்களா, கால் தடுக்கி விழவைக்கிறார்களா என்பது அதைவிட முக்கியமான கேள்வி.

தன்னுடைய ஆசை, லட்சியமாக மாறவில்லையே... லட்சியத்தை அடையமுடியவில்லையே... என்கிற ஏக்கத்துடனும் துக்கத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் இங்கே பேருக்குச் சிரித்து வாழ்பவர்கள்தான் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்காலத்து நண்பன் அவன். திருச்சி பொன்மலையில் ரயில்வே ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்க்கிறான். அப்போதெல்லாம் அப்பா இறந்துவிட்டால் அந்த வேலையை பையனுக்கோ அல்லது அந்த வீட்டில் வேறு ஒருவருக்கோ தருவது அரசாங்கத்தின் வழக்கம். அவன், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விளையாட்டில் அதீத ஆர்வம் காட்டுவான். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வாலிபால் என அவன் ஆடாத ஆட்டமே இல்லை. சேராத போட்டியே இல்லை.

எங்களுக்கு நெல்சன் வாத்தியார்தான் பி.டி. டீச்சர் (பி.இடி). நெடுநெடுவென இருப்பார். போலீஸ் மாதிரி முடியை ஒட்டவெட்டிக்கொண்டிருப்பார். நிமிர்ந்த நெஞ்சு. கிண்ணென்று முறுக்கிவைத்த கிடார் நரம்பு மாதிரி விறைப்பான உடம்பு. தொப்பை இல்லை. இன் செய்த டிஷர்ட்டும் கேன்வாஸ் ஷூவும் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விசிலுமாக அவர் மைதானத்தில் நின்றாலே, அலறித்தவித்தபடி குலசாமியையெல்லாம் வேண்டிக்கொள்வார்கள்.

சரியாக ஓடவில்லையென்றாலோ, கைகால்களில் நகம் கட் செய்யாமல் இருந்தாலோ அத்தனை பேர் மத்தியிலும் வைத்து, காது திருகுவார். அவ்வளவுதான்... காது தனியே கழன்று கீழே விழப்போகிறது என்று நினைக்கும்படியாகத் திருகுவார். சாலமன் பாப்பையாவின் நிறத்தில் இருக்கும் பையன்களின் காது கூட, இவர் திருகினால் அப்படியே செக்கச்சிவந்த வானமாகிவிடும்.

அன்புடன் சில ஆசிரியர்களுக்கு வணக்கம் சொல்லுவோம். பயத்துடன் சிலருக்கு வணக்கம் சொல்லுவோம். நெல்சன் சாருக்கு வணக்கம் சொல்லக் கூட பயப்படுவோம். ‘வணக்கம் சார்....’ என்று சொல்லும்போது, வலது கையை நெற்றியின் ஓரத்துக்குக் கொண்டு வந்து ஒரு சல்யூட் போடுவோம்தானே. அப்படி சல்யூட் வைக்கும் போது மாட்டிக்கொள்வோம்.

‘ஏய்... என்னலே இது?’ - கையைக் காட்டிக் கேட்பார்.

‘பேனா லீக் ஆகுது சார். அதான் கையெல்லாம் இங்க் ஆயிருச்சு சார்’

‘பேனா ஒழுகுதுன்னா வேற பேனா வாங்கவேண்டியதுதானே. இப்படியா கையை அசிங்கப்படுத்திக்குவே. அறிவுகெட்டபயபுள்ளடா நீ. அந்த ஆயா கடைல வாங்கித்திங்கத் தெரியுது. பேனா வாங்கத் தெரியல’ என்று ணங்கென்று தலையில் குட்டுவார். ‘இதுல ஹிப்பி கிராப்பு வேற’ என்று பின்னந்தலையில் படர்ந்திருக்கும் முடியைக் கொத்தாகப் பிடித்தபடி தடக்கென முடியை இழுப்பார். நமக்குக் கிறுகிறுத்துப் போகும். கண்ணிலிருந்து கரகரவென கண்ணீர் வழியும். அடி வாங்கிய இடத்தில்தான் எட்டாம் வகுப்பும் ஒன்பதாம் வகுப்பும் இருக்கிறது. எட்டாம் வகுப்பில் உள்ள செண்பகவல்லியும் ஒன்பதாம் வகுப்பில் உள்ள சாந்தியும் பார்த்துவிடக்கூடாதே என்று நெஞ்சத்தின் லப்டப் எகிறியடிக்கும்.

எங்கள் ஏரியாவில் பொன்மலை சந்தைக்கு அருகில் அருணா பால் டிப்போ கடை பிரபலம். அங்கே வெண்ணெய் பன் தனி ருசி. கையில் இருக்கிற காசையெல்லாம் போட்டு, வெண்ணெய் பன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ‘நான் படிச்சு, நெல்சன் வாத்தியார் மாதிரி பி.டி. டீச்சராகணும்டா. ஆவேண்டா’ என்றான்.

‘போயும்போயும் அவரை மாதிரி ஆகணுங்கறியேடா’ என்று நாங்கள் கேலி செய்தோம்.

‘எனக்கு அவர்தான் ஹீரோ. அவர் எப்ப நடந்தாலுமே ‘தங்கப்பதக்கம்’ செளத்ரி சிவாஜி மாதிரி கம்பீரமா நடக்குறாருடா. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீட்டா இருக்கணும், அழுக்கு இல்லாம இருக்கணும், நகம் வளர்க்கக்கூடாதுன்னு அவர் சொல்றதெல்லாம் எனக்குப் பிடிக்கும். அதான் அவரைப் போலவே பி.டி.டீச்சராகணும்னு ஆசை’ என்றான்.

ஊருக்கும் எனக்குமான இடைவெளி. வெளியூர்வாசம். 28வது வயதில்தான் சந்தித்துக் கொண்டோம். அதே அருணா பால் டிப்போவில், வெண்ணெய் பன் சாப்பிடும் தருணத்தில்தான் டிவிஎஸ் மொபட்டில் வந்தான். இருவரும் கட்டிக்கொண்டோம். தொப்பை போட்டிருந்தான். அழுக்குப் பேண்ட்டும் சற்றே நைந்துபோன டீசல் ஏறிய சட்டையுமாக இருந்தான். அடிக்கடி பாக்கெட்டில் இருந்து பஞ்சுத்துணி போல் உள்ள ‘வேஸ்ட்’டை எடுத்து துடைத்துக்கொண்டே இருந்தான். நான் அவனையே பார்த்தேன்.

பி.ஏ. முடித்துவிட்டு, பி.டி. படிக்க இருந்த தருணம். அவனுடைய குடிகார அப்பா நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டாராம். ரயில்வேயில் வேலை பார்த்ததால், அப்பாவின் வேலை மகனுக்குக் கிடைத்தது. வீட்டுக்கு இவனே பெரியவன். இவனுக்கு அடுத்து நண்டும்சிண்டுமாக இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அம்மாவையும் சேர்த்துக் காப்பாற்றும் பொறுப்பு இவன் தலையில் விழ, ஆசிரியர் படிப்பு நின்றது. ரயில்வே ஒர்க்‌ஷாப்பில், டீசல் எஞ்சின் செக்‌ஷனில் வேலை.


‘என் ஆசை, லட்சியம் எல்லாமே போச்சுடா. எனக்கு ஒரே பையன். அவனோட ஆசையாவது நிறைவேறுதா பாப்போம்’’ என்றான். மகனின் பெயர் கேட்டேன். ‘நெல்சன் சண்முகம். அப்பா பேரு சண்முகம். நெல்சன் சார்தானேடா என் ரோல்மாடல்’ என்று சொல்லிவிட்டு விரக்தியாகச் சிரித்தான்.
அவனின் ஆசைக்கு அப்பா, அம்மா என உறவுகள் துணையிருந்தும் காலம் துணை நிற்கவில்லை.

இப்படி படிப்பு சம்பந்தமாக ஆசைப்பட்டவர்கள், கேரம்போர்டு மாதிரியான விளையாட்டில் பேரெடுக்க நினைத்தவர்கள், சினிமாவில் நுழைந்து ஜெயிக்கப் புறப்ப்படவர்கள் என எத்தனையெத்தனையோ ஆசைகள்... லட்சியங்கள்.

ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது ஊரிலிருந்து ராமையா மாமா வந்திருந்தார். தாய்மாமா. அம்மா, எக்கச்சக்கமாக மாமாவைத் திட்டிக்கொண்டே இருந்தாள். ‘என்னடா லவ்வு... பெரிய புடலங்கா லவ்வு’ என்று கிழித்துக்கொண்டிருந்தாள். மாமா அப்படியே தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார். காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு, இந்தப் பேச்சு சண்டையாக உருவெடுத்திருந்தது.

மதியம் சமைத்துவிட்டு, எல்லோரையும் சாப்பிடக் கூப்பிடும்போது, ‘நான் கிளம்பறேன்க்கா. பசியில்ல’ என்று மாமா சட்டென்று சட்டையை மாட்டினார். என் தலையைக் கோதினார். ‘வரேண்டா’ என்று சொல்லிவிட்டு செருப்பை அணிந்துகொண்டு, தெருவில் நடந்து சென்ற மாமாவின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகுதான் மாமா யாரோ ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார் என்றும் அதற்கு தாத்தா சம்மதம் தரவில்லை என்றும் அதனால் அக்காவிடம் பேசி சம்மதம் வாங்கி, அதைக் கொண்டு தாத்தாவையும் அதாவது தன் அப்பாவையும் சம்மதிக்கவைத்துவிடலாம் என்றும் ஆசையோடு வந்திருந்தார் மாமா என்றும் தெரிந்தது.

ஆனால் நாங்கள் ஊருக்குப் போகும்போதெல்லாம் எப்போதும் போலவே வரவேற்று, எப்போதும் போலவே பேசினார் மாமா. அம்மாவுக்கு கனகாம்பரம் பிடிக்கும். அம்மா அங்கே செல்லும்போதெல்லாம் பை கொள்ளாத அளவுக்கு கனகாம்பரம் வாங்கித் தருவார் மாமா. அதை சித்தி தொடுத்து மிகப்பெரிய சரமாக அம்மாவுக்குத் தருவாள். ‘கனகாம்பரத்து மேல ருக்குவுக்கு ஆசை. அதை இவ்ளோ கொண்டாந்து கொடுக்கறதுல அவ தம்பி ராமையாவுக்கு ஆசை. அதை அழகாத் தொடுத்துக் கொடுக்கறதுல தங்கச்சி சின்னக்குட்டிக்கு ஆசை’ என்று சொல்லுவார் தாத்தா.

பல வருடங்கள் கழித்து, மாமாவுக்குத் திருமணம் நடந்தது. லேட் மேரேஜ். நடிகர் உசிலைமணியின் சகோதரர் மகள்தான் மனைவி. ஏழெட்டு மாதம் கழித்து, ஊருக்கு வந்துவிட்டு அம்மா ரயிலுக்குக் கிளம்ப, மாமாதான் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டாராம்.

‘பொண்ணு எப்படிடான்னு கேட்டேன். ரொம்ப நல்லமாதிரிக்கா. நம்ம குடும்பத்து நிலவரமெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடக்கறா. அப்பாவை நல்லாப் பாத்துக்கறா. மெஸ்சையும் நல்லாவே கவனிச்சுக்கறா. இத்தனை வருஷம் காத்திருந்ததுக்கு நல்லதா ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்குக்கா’ என்று மாமா சொன்னதாக அம்மா, அப்பாவிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

மாமா தான் ஆசைப்பட்ட பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு அம்மாவும் சம்மதிக்கவில்லை. இதையெல்லாம் தெரிந்துகொண்ட என் அக்கா, தான் ஆசைப்பட்டபடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தாள். சம்மதம் கிடைக்காது என புரிந்து, அவளே திருமணம் செய்துகொண்டாள்.

‘காசு பணம் என்ன பெரிய காசு பணம். இதுவரை, அரிசி இல்ல கொஞ்சம் கொடு, பருப்பு இல்ல கொஞ்சம் கொடுன்னு வந்து நின்னதில்ல. குடிச்சிட்டு அடிக்கிறான், யார் கூடயோ தொடுப்பு வைச்சிருக்கான்னு ஒருநாளும் கண்ணைக் கசக்கிட்டு வந்து நின்னதில்ல. நான் பி.ஏ. அவரு நைன்த்துதான். ஆனாலும் கூடப்படிச்ச திமிரு எங்கிட்ட இல்ல. கம்மியாப் படிச்சதான தாழ்வு மனப்பான்மை அவர்கிட்ட கிடையாது.

அவ்வளவு ஏன்... நாம கறிமீனெல்லாம் சாப்பிடமாட்டோம்தானே. அப்படித்தான் இதுவரைக்கும் இருக்கேன். அதேபோல அவர் கறிமீனெல்லாம் சாப்பிடுறவர்தானே. அதையும் அவர் மாத்திக்கல. என்னை அசைவம் சாப்பிடுன்னு அவர் சொல்லல. எனக்காக சைவத்துக்கு மாறுங்கன்னு நானும் சொல்லல’ என்று சொன்ன அக்காவே ஆசைப்பட்டு பண்ணிக்கொண்ட திருமணமும் வாழ்க்கையும் பெருமிதத்துக்கு உரியது. பூரிப்பானது.

அந்த ஐடிஐயில் படித்தால், அவர்களே துபாயில் உள்ள கம்பெனிக்கு வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள் என யாரோ சொல்ல, அதை என் நண்பன் காஜா அவர்களின் வீட்டில் சொல்ல, அங்கே சேர்த்துவிட்ட அடுத்த மூன்றாம் ஆண்டில், துபாயில் இருந்தான். சிறுகச் சிறுகச் சேர்த்து, ஓட்டுவீட்டை ஒட்டுவீடாக்கினான். மாடிவீடாக்கினான். மேலும் பக்கத்து ஏரியாவில், ஓர் இடம் வாங்கி தனிவீடு கட்டினான். வாடகைக்கு விட்டான். இப்போது பூர்வீக வீட்டை அண்ணனுக்கும் தம்பிக்கும் காசு கொடுத்து தன் வீடாக்கிக்கொண்டு, வாடகைக்கு விட்டிருக்கிறான்.

சென்னையில், உத்தியோகம். மத்திய அரசுப் பணி. அந்த இரண்டு வீட்டு வாடகையும் மாதம் பிறந்தால் வருகிற சம்பளமும் தாண்டி, ராமேஸ்வரத்தில் இருந்து கருவாடு ஆர்டர் செய்து, அதை சின்னச்சின்னப் பாக்கெட்டுகளில் அடைத்து, கடைக்கு பத்து ஐம்பது நூறு என்று சப்ளை செய்து, அதிலும் காசு பார்க்கிறான்.

‘யார்கிட்டயும் கைநீட்டி கடன் வாங்கக்கூடாதுன்னுதான் துபாய் போகணும்னு நினைச்சேன். இறைவன் கருணையால, துபாய் வேலைல காசு சேத்தேன். செண்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை சென்னைல கிடைச்சிச்சு. சும்மா இருக்கற நேரத்துல, விளையாட்டா கருவாடு பிஸ்னஸ் ஆரம்பிச்சேன். அதுலயும் நல்லகாசு. எந்த சமயத்துலயும் ஒரு பத்துரூபா கொடுங்கன்னு யார்கிட்டயும் கடன் கேட்டு நிக்கிற நிலைமை வரவே கூடாதுடா. அப்படி வாழக்கூடாதுங்கறதுதான் என் ஆசை’ என்று பள்ளித்தோழன் காஜா சொன்னது ஆசையா, லட்சியமா? தெரியவில்லை. ஆனாலும் அவனின் எண்ணம் நிறைவேறியிருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

வழக்கமாக டிபன் சாப்பிடும் கடைக்குச் சென்ற போது, அந்த சின்னஞ்சிறிய கடையில் புது மாஸ்டர் வந்திருந்தார். ‘அப்புறம் எந்த ஊரு?’ என்று கேட்டு வரிசையாகப் பேசுவது என் வழக்கம். அப்படித்தான் அவரிடமும் கேட்டேன். லால்குடிக்குப் பக்கத்தில் டால்மியாவுக்கு அருகில் சிறுகிராமமாம். அவருக்கு எப்படியும் 35ல் இருந்து 38 வயதுக்குள்தான் இருக்கும். பளிச்சென்றிருந்தது அவரின் முகம்.


அடுத்த முறை கடைக்குச் சென்றபோதுதான் கவனித்தேன். அவர் கையில் ஏதோ பச்சைகுத்தப்பட்டிருந்தது. வண்டிக்குப் பின்னே எழுதியிருக்கும் வாசகம், பச்சைக்குத்தப்பட்டிருக்கும் பெயர், பக்கத்தில் நண்பனுக்கு வருகிற போன்பேச்சு இதையெல்லாம் என்ன என தெரிந்துகொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். எனக்கும் அப்படித்தான். அந்தப் பச்சைகுத்தப்பட்டிருக்கும் பெயர் படிக்க முயன்றேன். தெரியவில்லை. ஆனால் பெயருக்கு அருகில் பி.ஏ.பி.எல்.என்று ஆங்கிலத்தில் இருந்தது பளிச்செனத் தெரிந்தது.

‘அதென்ன பி.ஏ.பி.எல்.னா எழுதிருக்கீங்க?’ என்றேன். ‘ஆமாம் சார்’ என்றார் கல்லில் மாவை ஊற்றியபடி. ‘வக்கீல் பேரா? யாரு வக்கீலு?’ என்றேன். ‘என் பையன் தான் சார். அவன் பேர் போட்டு, பி.ஏ.பி.எல்.லும் போட்டு பச்சை குத்திருக்கேன்’ என்றார்.

‘என்னங்க இது. உங்களைப் பாத்தாலே சின்னவயசாத் தெரியுது. பையன் வக்கீலுன்னு சொல்றீங்க. பச்சை வேற குத்திருக்கீங்க?’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டேன்.

‘பையன் எதிர்காலத்துல ஒரு வக்கீலா வரணும்னு ஒரு ஆசைங்க. சட்டம்கிட்டம்னு எதுவும் தெரியாம, புரியாம, சொத்துபத்துலாம் இழந்துட்டு நிக்கிறேங்க. அதான் டால்மியாலேருந்து சென்னைக்கு வந்து நெருப்புல வெந்துக்கிட்டிருக்கேன். நம்ம பயலும் என்னை மாதிரியே சட்டம் தெரியாம ஏமாந்துடக் கூடாதுன்னுதான் அவன் வக்கீலாகணும்னு ஆசைப்படுறேன்’ என்று சொல்லிக்கொண்டே, மிக லாகவமாக கல்லிலிருந்து தோசையை எடுத்து, தட்டுக்குக் கொடுத்தார்.

‘உங்க ஆசை நிறைவேறட்டும் மாஸ்டர். வாழ்த்துகள். பையன் என்ன படிக்கிறாரு?’ என்றேன்.

அவர் அடுத்த தோசைக்கு மாவை எடுத்து கல்லில் ஊற்றி அழகான வட்டம் போட்டுக்கொண்டே சொன்னார்...

‘அஞ்சாவது சார்’

ஆசையின் இன்னொரு பெயர்... அன்பு.


- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x