

சபரிமலையில் 34-வது ஆண்டாக தற்காலிக தபால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், சுவாமி ஐயப்பனுக்கு வரும் வேண்டுதல் கடிதங்களே அதிகமாக உள்ளன.
சபரிமலையில் மண்டல மகரவிளக்குபூஜை சீசன் தற்போது தொடங்கியுள்ளது. பக்தர்கள், நாடு முழுவதும் இருந்து சபரிமலைக்கு சென்று வரத்தொடங்கியுள்ளனர்.
சபரிமலையில் நிரந்தரமாக தபால்நிலையம் இல்லை. சபரிமலை சீசன் தொடங்கும்போதுதான் தற்காலிகமாக ஒவ்வொரு ஆண்டும் 2 மாதம் தற்காலிக தபால்நிலையம் செயல்படுகிறது. மண்டல மகர விளக்குபூஜை தரிசனம் சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது சபரிமலையில் தற்காலிக தபால்நிலையம் தொடங்கியுள்ளது.
இந்த தற்காலிக தபால்நிலையம், கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. கடந்த 34-வது ஆண்டாக வெற்றிகரமாக இந்த தற்காலிக தபால்நிலையம் செயல்படுகிறது.
சபரிமலையில் தேவஸ்தானம் அலுவலகம், வனத்துறை அலுவலகம், மருத்துவமனை, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட 13 அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. சபரிமலை சீசன் நாட்களைத் தவிர தற்காலிக தபால்நிலையம் செயல்படாத மற்ற காலங்களில் அடிவாரத்தில் உள்ள பம்பை தபால் அலுவலகத்தில் இருந்து தபால்களை இந்த அரசு அலுவலகங்களுக்கு தபால்காரர்கள் பட்டுவாடா செய்கின்றனர். அதனால், நிரந்தரமாகவே சபரிமலையில் தபால்நிலையம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கிய தற்காலிக தபால் அலுவலகத்தில் ஜியோ தவிர அனைத்து மொபைல் நெட்வொர்க்குகளுக்கு ரீசார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சபரிமலை தற்காலிக தபால் அலுவலகத்திற்கு வரும் தபால்களில் 18 படிகளுடன் கூடிய சிறப்பு முத்திரை அச்சிடப்படுகிறது.
இந்த தாபல் அலுவலகத்தில் தபால்நிலைய அதிகாரி ஐயப்பன் தலைமையின் கீழ் இரண்டு தபால்காரர்கள், 4 பன்முக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த தாபல் அலுவலகம் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும். ஆனால், தபால் நிலைய அதிகாரி ஐயப்பன், விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமையிலும் தற்போது இந்த தபால் அலுவலகத்தை திறந்து வைத்து பணிபுரிந்து வருகிறார்.
இந்த தற்காலிக தபால் அலுவலகம், வரும் ஜனவரி 20-ம் தேதி வரை செயல்படும்.
இதுகுறித்து சபரிமலை தலைமை தபால் அதிகாரி ஐயப்பன் கூறுகையில், ‘‘சபரிமலை தற்காலிக தபால் அலுவலகத்திற்கு ஐயப்ப சுவாமிக்கு அதிகமான தாபால்கள் வருகின்றன.
சபரிமலைக்கு நேரில் வர முடியாத பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களுக்கு ஐய்யப்பசாமிக்கு கடிதம் எழுதுகின்றனர்.
தபால் அதிகாரி ஐயப்பன்.
இதுதவிர, வீடுகிளல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும் ஐய்யப்பனை வேண்டி கடிதங்கள் வருகின்றன. இந்த கடிதங்கள் அனைத்தையும் தேவஸ்தானம் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம். சிலர் ஐய்யப்பனுக்கு திருமண கடிதங்களை கூட அனுப்பபி வைக்கின்றனர். அவர்கள் ஐய்யப்பன் சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்வார்கள். நாடு முழுவதும் இருந்து அடிவாரத்தில் உள்ள பம்மைக்கு தபால்கள் வரும். தபால் ஊழியர்கள் அங்கிருந்து தபால்களை எடுத்து சுமந்து வந்து சபரிமலை தற்காலிக தபால்நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்’’ என்றார்.