Last Updated : 07 Dec, 2019 07:26 PM

Published : 07 Dec 2019 07:26 PM
Last Updated : 07 Dec 2019 07:26 PM

துணைக்கண்டத்தின் சினிமா: 6- இந்தியாவின் முதல் சினிமா உருவான கதையும் பால்கே எனும் ஆளுமையும் 

ஹரிச்சந்திராச்சி பேக்டரி திரைப்படத்தில் 'பால்கே' கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் நந்து மகாதேவ் டைரக்‌ஷனில் ஈடுபடும் காட்சி

உலகின் முதல் சினிமா எது? இந்தியாவின் முதல் சினிமா எது? தமிழின் முதல் சினிமா எது? போன்ற கேள்விகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற உந்துதலில் நமக்குள் எழுமானால் அதற்கு எளிதான பதில்கள் நிறைய உள்ளன. ஆனால் இவற்றை விரிவுபடுத்தி தெரிந்துகொள்ள முற்படுவதில்தான் சினிமா வரலாறு எனும் அகன்ற பாதை நம்எதிரே விரிகிறது.

முதல் சினிமா உருவான கதை இருக்கட்டும். ஒவ்வொருவருக்கும் முதல் சினிமா பார்த்த கதை எப்படிப்பட்டது? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு ஞாபகக் கதையை மிக அழகாக சொல்லக்கூடும். ஆனால் 'தியேட்டரில் அல்லது கொட்டகையில் பார்வையாளர்களுக்கு எதிரே கட்டப்பட்டிருக்கும் அந்த வெண்திரைக்குப் பின்னே இருந்துகொண்டுதான் எல்லாம் நடக்கிறது' என்று புரிந்துகொண்டிருந்த முதல் நினைவு பொதுவானதாக எல்லோருக்கும் மங்கலாக இருக்கக்கூடும்.

மக்கள் வெள்ளத்திற்கு நடுவே காளையோடு மனிதன் சண்டையிடும் காட்சியைத்தான் முதன்முதலாக 'பால்கே' பார்க்கிறார். அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர இந்தியாவுக்கான முதல் சினிமா கனவு விதைக்கப்பட்டது. மும்பையில் ஒரு நெரிசலான பகுதியில் வெள்ளைக்காரர்களும் ஜமீன்தார்களும் வசதிமிக்கவர்களும் பார்க்கும் சிறு திரை அரங்க கொட்டகைக்கு அவர் அடிக்கடி செல்ல ஆரம்பித்தார். கண்பார்வை இழந்த நிலையிலும் தனது தாகத்தை அவர் இழக்கவில்லை. கையில் பெரிய தொகை ஏதுமில்லையென்றாலும் சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவு, சிறகுகளை மெல்ல அசைத்துக்கொண்டு 'துந்திராஜ் கோவிந்த் பால்கே' வை எங்கோ அழைத்துச் செல்கிறது.

ஒரு சின்னஞ்சிறு செடியாக முளைவிடத் தொடங்கிய 'நகரும் படம்' எனும் அவரது சினிமா ஆசை. கண் சிகிச்சைக்குப் பின்னர், எப்படி படம் ஓட்டுகிறார்கள் என்பதில் தொடங்கி எப்படி படம் எடுக்கிறார்கள், அதற்கு என்ன தொழில்நுட்பம், அதனை எப்படி செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட சினிமா சார்ந்த அனைத்து விதமான ஆர்வமும் அவருக்கு ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியது.

இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். தந்தை என்றால் ஒரு கண்டிப்புமிக்க ஒரு தந்தையின் தோற்றத்தை நினைத்துவிட வேண்டாம். சினிமாவின் தந்தை உண்மையிலேயே சினிமாவின் தந்தைக்கான அவ்வளவு அற்புதமான அலாதியான குணங்களையும் கொண்டவர். எல்லோரிடத்திலும் அன்பு, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ஆளுமை, எவரும் ரசிக்கத்தகுந்த திறமை வெளிப்பாடு. இதெல்லாம் சர்வசாதாரணமாக அவரிடம் குடிகொண்டிருந்ததால் அவர் சாதனைப் பயணம் சரியான இலக்கை அடைந்ததில் அங்கங்கே சின்னச்சின்ன இடையூறுகள் தவிர பெரிய இடர்ப்பாடுகள் எதையும் அவர் சந்திக்கவில்லை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவர்தான் இந்திய சினிமாவுக்கு தந்தையா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். ராஜா ஹரிச்சந்திராவை முதல் இந்திய சினிமா என்று சொல்லாதீர்கள், முதல் மராத்தி சினிமா என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள் என்று அவர்கள் விவாதம் ஒன்றை உருவாக்குகிறார்கள். திரைப்பட விமர்சகர் வி.எம்.எஸ்.சுபகுணராஜன் எழுப்பும் இந்த வாதம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்யும் பெருமிதமும் தன்னம்பிக்கையும் கொண்டது. இதனை பிராந்திய வாதமாக நாம் பிரித்தறிய வேண்டியதில்லை.

மும்பையிலிருந்து பால்கே, இந்தியாவின் முதல் மவுனக் (கதைப்) படமாக ராஜ ஹரிச்சந்திராவை 1913 ஏப்ரலில் வெளியிடுகிறார். அதேபோல தமிழின் முதல் மவுன (கதைப்) படமாக ஆர்.நடராஜ முதலியார் 'கீசக வதம்' படத்தைத் திரையிடுகிறார். இரண்டு, மூன்று ஆண்டுகள் வித்தியாசங்களே உள்ள நிலையில் இந்தியாவின் முதல் சினிமா என்று எப்படி ராஜா ஹரிச்சந்திராவைக் குறிப்பிட முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ராஜா ஹரிச்சந்திராவை முதல் மராத்தி படம் என்று சொல்லலாம் தவறில்லை என்கிற ரீதியில் அவர்களது கேள்விக்கான பதிலை அவர்களே முன்வைக்கிறார்கள்.

ஒருவகையில் இவர்கள் சொல்வதை நாம் புரிந்துகொள்ள முடிகிற அதேவேளையில் இந்தியாவிலேயே ஒரு முழுநீளத் திரைப்படத்தை உருவாக்கி இந்தியாவில் முதன்முதலாக திரையிட முடிந்தது என்பது இந்தியராக ஒருவரின் சாதனைதான். இதற்கு அடுத்த நிலையில்தானே தமிழகத்தில் 'கீசக வதம்' 1916-ல் திரையிடப்பட்டது. வரிசை முறையில் என்றால்கூட உருவாக்கம் சார்ந்த முயற்சிகள் என்றால்கூட முதல் இந்திய சினிமா என்ற பெருமையை 'ராஜா ஹரிச்சந்திரா' பெருவதில் பெரிய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.

உலகின் முதல் மவுன (கதைத்) திரைப்படமாக 'தி கிரேட் ட்ரெயின் ராப்ரி' 1903-ல் நியூ ஜெர்ஸியில் எட்வின் எஸ் போர்ட்டர் என்பவர் வெளியிட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த கட்டமாகத்தான் இந்தியாவில் இந்த முயற்சிகளும் நிகழ்கின்றன.

உலகின் முதல் படம் என்ற ஒரு கேள்விக்கு பதில் என்ன? என்பதையும் ஒருவர் ஆராயப் புகுவாரெனில் உலகின் முதல்படம் 'தி கிரேட் ட்ரெயின் ராஃப்பரியா? அல்லது 'அரைவல் ஆஃப் ட்ரெயினா?' என்ற குழப்பம் மெல்ல முகிழத் தொடங்கும்.

உண்மையில், ஆரம்பத்தில் மவுனக் கதைப் படங்களுக்கு முன்னதாகவே சின்ன சின்ன காட்சிகளாகத்தான் சில துண்டுப் படங்கள் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. அவற்றில் பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் மக்கள் இறங்கி வெளியேறிச் செல்வது, ஒருவன் குதிரையில் அமர்ந்து செல்வது, ஒரு வீட்டெதிரே தோட்டத்தில் சிலரைச் சுற்றி கோட் போட்ட ஒருவர் நடனம் ஆடுவது இப்படங்கள்தான் உலகில் முதன்முதலாக எடுத்து மக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன.

உலகின் முதல் திரையிடலாக பொதுமக்கள் மத்தியில் உலகின் முதல் படமான 'அரைவல் ஆப் தி ட்ரெயின்' 50 விநாடிகளே ஓடக்கூடிய இப்படம் பாரீஸில் உள்ள கிராண்ட் கஃபே ஓட்டலில் உலகத்தில் முதன்முதலாகத் 1895-ல் திரையிடப்பட்டது. இதை அடுத்து உலகின் முதல் கதைப்படமாக 'தி கிரெட் ட்ரெயின் ராப்ஃரி'யைக் குறிப்பிடுகிறார்கள். இப்படம் 12 நிமிடங்களே ஓடக்கூடியது. அதன் பிறகுதான் உலகின் முதல் முழுநீளக் கதைப் படமாக 'தி ஸ்டோரி ஆப் கெல்லி கேங்' என்ற படம் குறிப்பிடப்படுகிறது. இப்படம் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.

ஆக இவை எல்லாம் சினிமா வந்த பாதையைப் புரிந்துகொள்ளக்கூடிய தரவுகள்.

இவை மட்டுமில்ல உலகின் முதல் பேசும்படம் 'ஜாஸ் சிங்கர்' (1927), இந்தியாவின் முதல் பேசும் 'ஆலம் ஆரா' (1931) தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ்' (1931) போன்ற செய்திகள் அனைத்தும் இன்று வெறும் தரவுகளாகவே அவை எஞ்சி நிற்கின்றன என்பது காலத்தின் வேகம் மட்டுமல்ல, கலையின் தேவைகளும் மாறிக்கொண்டேயிருப்பதால் அதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காமல் வேகமாக நகர்ந்துபோய்க்கொண்டே இருக்கின்றனர்.

மராத்தி திரைப்பட இயக்குநர் பரேஷ் முகாஷி ஒரு புதிய கோணத்தில் ஒன்றை யோசிக்கிறார். ஏன் நமது இந்தியாவில் முதன்முதலாக சினிமா எடுத்த கதையை ஒரு படமாக எடுக்கக்கூடாது? இந்த யோசனை பால்கேவின் முயற்சிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

தமிழின் முதல் படத்தை இயக்கி தனது எலக்ட்ரிக் தியேட்டரிலேயே போட்டுக்காட்டிய நடராஜ முதலியாருக்கு நாம் என்ன செய்துவிட்டோம். ஒரு இரண்டங்குல அஞ்சல் தலையை வெளியிட்டதைவிட. இதில் ஒரு கொடுமை தமிழின் முதல் மவுனக் கதைப் படமான 'கீசக வதம்' படத்தின் பிரதி நம்மிடத்தில் இல்லை.

2005-ல் '110 years of world cinema' வாரந்தோறும் சென்னை சத்யம் திரையரங்கில் உலக சினிமா வரலாற்றைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல இந்தியா சினிமாவின் பாதையைப் புரிந்துகொள்ளவும் திரையிடல்கள் நிகழ்ந்தன. அந்த வரிசையில் ராஜா ஹரிச்சந்திராவும் திரையிடப்பட்டது. இந்தியாவின் முதல் திரைப்படம் என்பதாலோ என்னவோ உண்மையில் அன்று அரங்கு நிறைந்திருந்தது. முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்த இலவச அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் ஒருவரும் வீணாக்காமல் உரிய இருக்கைகளில் முன்னதாகவே வந்து அமர்ந்து திரைப்படத்தை ஆவலோடு காணத் தொடங்கினர். சினிமா ஆர்வலர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் திரைப்படம், தொலைக்காட்சி, தொழில்நுட்ப மாணவர்களும் அன்று வந்திருந்தனர். சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்ட 'ராஜா ஹரிச்சந்திரா' திரைப்படம் பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக்காப்பகச் சேமிப்பிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று வரவழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அந்த வரிசையில் திரையிடப்பட்ட பல படங்களும் பூனா திரைப்படக் கல்லூரி ஆவணச் சேகரிப்பிலிருந்துதான் வந்தன.

தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கையின் பாதைகளில் ஏற்பட்ட திருப்பங்களைப் பார்க்கும்போது ஆர்வம்மிக்க ஒரு குழந்தை ஒரு பெரிய கிராமத் திருவிழாவின் அத்தனைக் கடைகளையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஆடல் பாடல்களையும் சளைக்காமல் கண்டு ரசித்த ஒரு குழந்தையின் உள்ளத்தையே நம்மால் காண முடிகிறது.

பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவான கலா பவனில் ஓவியம் பயின்றவர் அதோடு நிற்காமல் கட்டிடக் கலை, மாடலிங் துறைகளிலும் தேர்ச்சி பெற்றார் பால்கே.

புகைப்பட நுட்பங்கள் சார்ந்த கல்வி, லித்தோ பிரஸ் பணி போன்றவற்றிலும் கற்று அச்சகங்களிலும் பணியாற்றினார். தனியே அச்சகத்தையும் தொடங்கினார். பள்ளிகளில் மாணவர்களிடையே மேஜிக் சாகசங்களும் நிகழ்த்தும் வல்லமை அவருக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தைகளிடத்தில் அன்பு, உறவினர்களுடன் அரவணைப்பு, ஊரோடு இணைந்து வாழும் நேர்மறையான மனோபாவம் என சகல ஆற்றலும் அவரிடத்தில் இருந்தது. ஆனால் ஒன்றும் தெரியாத மனிதரைப் போல எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டேயிருக்க வேண்டுமென்ற அவரது விருப்பம் அவரை மேலே மேலே உயர்த்திக்கொண்டே சென்றது.

'ஹரிச்சந்திசாக்ஷி பேக்டரி' இந்தியாவில் சினிமா தோன்றிய நூற்றாண்டுக்குச் செய்த ஒரு உன்னதப் படையல். மராத்தி இயக்குநர் பரேஷ் மொகாஷி அதற்காக 2 கோடி ரூபாய் பட்ஜெட்டிலேயே ஒரு அழகிய கலைப் பொக்கிஷத்தை நமக்குத் தந்துவிட்டார். இந்திய சினிமாவின் தந்தையாக இப்படத்தில் தோன்றியிருப்பவர் மராட்டிய நடிகர் நந்து மகாதேவ். 'யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்துவிடலாம், நாம் விரும்பும் கதாபாத்திரத்திற்கு' என்று நினைக்கும் கதைக்களன் அல்ல இது. மேடைநாடகங்களில் ஊறிய நந்து மகாதேவ் போன்ற ஒரு தேர்ந்த அனுபவமிக்க நடிகரால் மட்டுமே இதில் பொருந்தி மிளிர முடியும். இவர் மராத்திய தியேட்டர் ஆர்டிஸ்ட். பால்கேவின் அலாதியான பாத்திர வார்ப்புக்கு வலிமையான நடிப்புத் திறன் வேண்டியிருந்தது என்பதால் தேடிப்பிடித்து இப்படத்தில் நந்து மகாதேவைப் பொருத்தியிருக்கிறார்கள்.

சந்திரஹரி தமிழ் சினிமா

பால்கே வாழ்ந்தபோது கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வாழ்ந்தவர் தமிழகத்தின் பம்மல் கே சம்பந்த முதலியார். ராஜா ஹரிச்சந்திராவை திரையில் கொண்டுவருவதற்கு நிறைய நாடகங்களைப் பார்த்துப் பார்த்து திரைக்கதையை உருவாக்கிக்கொண்டார் பால்கே. முற்றிலும் பயபக்தியோடு ஒரு காவியத்தன்மையோடு திரைப்படத்தை உருவாக்கினார்.

ஆனால், நகைச்சுவை கொப்பளிக்கும் அற்புதமான நாடகங்களை இயற்றிய பம்மல் கே சம்பந்த முதலியார் ராஜா ஹரிச்சந்திராவை முற்றிலும் தலைகீழாக்கி ஒரு நாடகத்தை எழுதினார். அதன்பெயர் சந்திரஹரி. இதே பெயரில் 1941-ல் தமிழில் அவரது நாடகத்தையே என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம் எல்.நாராயணராவ், ராதாகிருஷ்ணன், டி.பி.கிட்டான் நடிக்க ஹிட்டடித்த வெற்றிப் படமாக தமிழகத்தை வலம்வந்தது 'சந்திரஹரி'.

அடிப்படையில் அரிச்சந்திரன் கதை மிகவும் சோகமானது. ஆனால் மறவநாட்டு அரசன் சந்திரஹரி கதையோ படு காமெடி. அரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசமாட்டான். அதற்காக எந்த சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயங்க மாட்டான். ஆனால் சந்திரஹரி என்ற அரசனோ பொய்யைத் தவிர அவன் வாயிலிருந்து வேறெதுவும் வராது. அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டான்.

அரிச்சந்திரனைப் பற்றி கேள்விப்படும் வானத்து தேவர்கள் வைக்கும் சோதனையை நிறைவேற்றவே விசுவாமித்ர முனிவர் பூமிக்கு வருகிறார். தனது கனவில் அரிச்சந்திரன் வந்து பேசியதாக ஒரு பொய்யைச் சொல்லி அவனை நம்பவைத்து அவன் தனது நாட்டை நன்கொடையாகத் தருவதாக வாக்குக் கொடுத்ததாகவும் அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அவனிடம் முறையிடுவார். கனவில் கொடுத்த வாக்கைக் கூட காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மிக்க அரிச்சந்திரன் அப்படியே ஆகட்டும் என்றுகூறி நாட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தனது மனைவியும் சின்னஞ்சிறு மகனையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார். அவர்களுக்கு வரும் சோதனைகள் இந்த பூமியில் யாருக்கும் வராத, வரக்கூடாத சோதனைகள். ஒரு கட்டத்தில் மனைவியையே விற்றுவிட வேண்டிய நிலைமை.

காலம் கடந்துசெல்ல இவன் சுடுகாட்டுக் காவல்காரனாகப் பணியாற்றும்போது பாம்பு கடித்த மகனைத் தூக்கி வரும் மனைவியிடத்திலேயே பிணம் எரிக்க வரி கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுவான். அவள் தன்னிடத்தில் ஏதுமில்லை என்று கைவிரிக்க வந்திருப்பது மனைவி, மகன் என்று தெரிந்திருந்தும் பிணம் எரிக்க அவளது புடவையையே வரியாகக் கேட்பான். கடைசியில் எந்த நிலையிலும் சத்தியம் தவறாத உத்தமனான அரிச்சந்திரனையும் அவனது குடும்பத்தாரையும் இறைவன் ஆட்கொள்ள விசுவாமித்திர முனிவர் உள்ளிட்ட தேவாதி தேவர்கள் கூடி அவர்களைப் பூமாரி பொழிவார்கள்.

ஆனால், பம்மல் சம்பந்த முதலியார் உருவாக்கிய 'சந்தரஹரி'தான் உண்மையான இம்சை அரசன். அடுத்தவர்களுக்கு கெடுதலைத் தவிர வேறு எதுவும் நினைக்க மாட்டாதவன். மந்திரி பாண்டிய நாட்டிற்கு நாம் அனுப்பிய நமது பிரஜைகள் பாண்டியனுடைய பொக்கிஷங்களைக் கொள்ளையடித்து நல்லபடியாகத் திரும்பிவிட்டனரா? இதுதான் அவன் அறிமுகமாகும்போதே கேட்கும் கேள்வி.

அதற்கு அமைச்சர், ''எல்லாப் பொருள்களும் சரியாக வந்து சேர்ந்தன. பாண்டியனுடைய கைக்குழந்தையின் வளையல் ஒன்று மாத்திரம் வந்தது. இரண்டையும் கவர்ந்து வரும்படியாக அனுப்பப்பட்டவன் மற்றொன்றைக் கழற்றும் பொழுது அக்குழந்தை நகைத்தது. அதைக் கண்டு பரிதாபப்பட்டு ஒன்றுடன் வந்துவிட்டேன்; என்று கூறுகிறான்'' என்று பதிலளிக்கிறார்.

அதற்கு சந்திரஹரி, படுகாளிக் கழுதை! அவன் நமது பிரஜையாக இருக்கத்தக்கவனல்லன். இன்னொரு முறை அப்படிச் செய்வானாயின் சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று சொல். முதல் முறையான படியினால் ஆறுமாதம் சிறைக் காவலுடன் விட்டேனென்று தெரிவி என்று கூறுகிறான். இப்படித்தான் பம்மல் சம்பந்த முதலியாரின் கதை வளரும்.

பம்மல் முதலியாரின் நாடகக் கதைகள் பலவும் மூலக்கதை என்ற அளவில் பயன்படுத்தப்பட்டும், கதை வசனம் என்று பயன்படுத்தப்பட்டும் வெற்றிகரமாக திரைப்படமாக தமிழில் வலம் வந்தன. அவற்றில் மிக முக்கியமானது நடிகர் திலம் சிவாஜி கணேசன் தனது சிம்மக்குரலால் தமிழ் திரையை அதிரவைத்த 'மனோகரா' (1958), ஆகும். மேலும், வேதாள உலகம் (1948), சபாபதி (1941), சாரங்கதாரா (1958) அவற்றில் சில. 1891-லேயே சுகுணவிலாச சபா என்ற குழுவை உருவாக்கி நாடகங்களை அரங்கேற்றியவர் இவர். பம்மலாரின் வாழ்க்கையில் ஓர் அற்புத உண்மையும் மறைந்து இருக்கிறது. 1916-ல் வெளியான தமிழின் முதல் மவுனக் கதைப்படமான கீசக வதத்திற்கான கதை, திரைக்கதையை பம்மல் சம்பந்த முதலியாரிடம்தான் கேட்டு எழுதி வாங்கினார் கீசக வதத்தை இயக்கிய நடராஜ முதலியார் என்பதுதான் அது.

ஹரிச்சந்திரனை சந்திரஹரியாக்கி சிரிக்க சிந்திக்க வைத்தவர் பம்மல் கே. சம்பந்தனார். ஆனால் ஹரிச்சந்திரனை மட்டுமல்ல எண்ணற்ற புராண கதைகளை அதன் தூய்மை கெடாமல் காவிய அழகோடு சினிமாவில் கொண்டுவர வேண்டுமென நினைத்தவர் பால்கே. ராஜா ஹரிச்சந்திரா (1913), மோகினி பாஸ்மசூர் (1913), சத்யவன் சாவித்ரி (1914), லங்கா தஹான் (1917), ஸ்ரீ கிருஷ்ணா ஜான்மா (1918), கலியா மர்தான் (1919) புத்ததேவ் (1923), சேது பந்தன் (1932), கங்காவதாரன் (1937) போன்ற புராண சரித்திரப் படங்களைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருந்தார்.

ஹரிச்சந்திராச்சி பேக்டரி

இந்தியாவின் முதல் திரைப்படமான 'ராஜா அரிச்சந்திரா' உருவான கதை தான் 'ஹரிச்சந்திராச்சி பேக்டரி' (2010) திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதல் படமான 'ராஜா அரிச்சந்திரா' வை உருவாக்கியவரின் வாழ்க்கைக் கதை என்றும் இதனைச் சொல்லலாம்.

சரித்திரக் கதைகளின் மொத்தச் சுமையும் மையக் கதாபாத்திரன் தலை மீது விழும் என்பதற்கு மகாநடி தெலுங்குப்படமே சாட்சி. இந்தப் படத்தில் நடிகையர் திலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அதில் நடித்த கீர்த்தி சுரேஷ். ஆனால்அவரே பின்னர் ஒரு நேர்காணலின்போது சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது, இனிமேல் நான் சரித்திரப் படங்களில் நடிக்க மாட்டேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பாக மூன்று மணிநேரம் ஒப்பனை செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஒருவித மனநிலையிலும் வாழவேண்டியிருந்தது என்பதுதான் அவர் சொன்னதில் முக்கியமானது.

கற்பனைக் கதைகளில் கூட நடித்துவிடலாம். எப்படி வேண்டுமானாலும். அது ஒரு புது கதாபாத்திரமாக நமக்கு அறிமுகமாகும். ஆனால், ஏற்கெனவே வாழ்ந்து மறைந்தவர்களின் கதை கொண்ட 'பயோபிக்' திரைப்படங்களில் ஒரு பிரச்சினை என்னவென்றால் வாழ்ந்தவரின் நடை உடை பாவனை, அவரது மனநிலை, முகத்தோற்றம், லட்சியம் போன்றவை தவறாமல் காட்ட வேண்டும். அதனால்தானோ என்னவோ சிறந்த நடிப்புக் கலைஞரான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்கு பிறகு பயோபிக் கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்று அறிவித்துவிட்டார்.

உண்மையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக அவர் தோன்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய அந்தத் தருணங்களில்தான் அவரது இந்த பேட்டி வந்திருந்தது. அடடா இவர் ஜெயலலிதாவாக நடிக்கமாட்டோர் போலிருக்கிறதே என்று எனக்கு நானே வளர்த்துக்கொண்டு சிறு ஆவலும் துண்டிக்கப்பட ஏமாற்றமாக இருந்தது. என்றாலும் வரலாற்றுப் படங்களில் நடிப்பதில் உள்ள சிரமங்கள் சாதாரண ஒன்றல்ல.

க்வெண்டின் டாரண்டினோ இயக்கி லியானார்டோ டிகாப்பிரியோ நடித்த 'ஒன்ஸ் அப்பான் ய டைம் இன் ஹாலிவுட்' படம் பார்த்தபோதும் கீர்த்தி சுரேஷ் சொன்னதை என்னால் யோசிக்க முடிந்தது. அதேபோன்று இல்லையென்றாலும், 'அட ஒரு ஹாலிவுட் நடிகர் ஏற்கெனவே அறுபதுகளில் வாழ்ந்த ஹாலிவுட் நடிகரை எப்படி நம் கண்முன்கொண்டுவந்துவிட்டார். இதற்காக அவர் தன்னுடைய சொந்த உடல்மொழியை எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருப்பார் அல்லது புதிய உடல் மொழிக்கு தன்னை உட்படுத்தியிருப்பார்' என்றெல்லாம் தோன்றியது. இப்படத்தில் டிகாப்ரியோ ஏற்று நடித்த கதாபாத்திரம் பவுண்டி லா டிவி தொடர் புகழ் நடிகர் ரிக் டால்டன் என்பவரின் தோற்றம். டால்டன் மட்டுமின்றி மேலும் நடிகை ஷரோன் டேட், புகழ்மிக்க இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியும்கூட இப்படத்தில் ரிக் டால்டன் வாழ்வில் நெருக்கமாக வந்து செல்பவர்களாக காட்டப்பட்டிருப்பார்கள்.

தமிழில் 'பாரதி' திரைப்படத்தில் நடித்த சாயாஜி ஷிண்டே, 'காமராஜ்' படத்தில் தோன்றிய மரியம் தாமஸ் ஆகியோர் திரைப்படங்கள் முடிந்த பின்னரும் அதே நினைவுகளில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்த நேர்காணல்களை நாம் மறந்துவிடமுடியாது. அதுஒரு ஜென் நிலை. அது இன்னொரு முறை வாய்க்காது.

மேலும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய வேலையில் இறங்குவதில் பால்கே பட்ட சிரமங்கள் எத்தகையவை என்பதை நந்து மகாதேவின் ஒவ்வொரு அசைவும் நமக்கு தெரிவிக்கிறது. பால்கே எவ்வளவு சிரமப்பட்டார் என்பதைவிட பால்கேவாக நடிக்க நந்து மகாதேவ் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதையும் உணரும்போதுதான் இப்படம் உருவாக்கப்பட்ட வலிகளை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்படம் வலிகளை அல்ல, மகிழ்ச்சியை நகைச்சுவையை அள்ளி வழங்குகிறது நமக்கு.

1911-ல் தனது பழைய அச்சக முதலாளிகளிடமிருந்து தப்பித்து மும்பை வீதிகளில் ஓடும்போதுதான் ஒரு இடத்தில் திரையரங்கத்தை பால்கே காண்கிறார். அது என்னது அது என்ற ஆர்வத்தோடுதான் தன் மூத்த மகனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். 2 அணா கொடுத்து தனது மூத்த மகனுடன் திரையரங்கிற்குள் நுழையும் பால்கே தாங்கள் படம் பார்த்த அனுபவத்தை வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் சொல்கிறார். மறுநாள் தனது குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்கிறார். இன்னொரு நாள் எல்லோரும் திரையைப் பார்க்க அவரோ திரையை நோக்கி பாயும் ஒளி வரும் திசையான ஆபரேட்டர் அறையையே பார்க்கிறார். புதியதைக் கண்ட பரவசத்தில் திளைக்கும் பால்கேவாக நாமும் மாறுகிறோம்.

திரைப்படம் தினமும் பார்க்கச்செல்லும் அவர் ஒரு நாள் அங்கேயே கொட்டகையில் உள்ள திரை எதிரே உறங்கிவிட நள்ளிரவில் மூத்தமகன் நகர வீதிகளில் தனியே நடந்து வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

ஒருநாள் வீட்டில் உள்ள பீரோவை அடகுவைத்து லண்டனிலிருந்து வரும் பயாஸ்கோப் சினிமா பத்திரிகைக்கு சந்தா கட்டுகிறார். பீரோவுடன் வீட்டைவிட்டு போன மனிதர் பயாஸ்கோப் பத்திரிகையோடு வீடு திரும்பும்போது வீட்டில் ஊரே கூடியிருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று அடித்துப் பிடித்து உள்ளே வந்து பார்த்தால் பெண்கள் தனது மனைவியை துக்கம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னவென்று கேட்கும்போதுதான் தெரிகிறது. பீரோ கொண்டு சென்றதைப் பார்த்து மனைவி ஊரைக் கூட்டிவிட்டாள் என்று. எல்லாரையும் கிளம்புங்க ஏதோ நடந்துடிச்சின்னு பயந்துட்டேன். பீரோ தூக்கிட்டுப் போனதுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் போங்க போங்க என்று விரட்டி அனுப்புகிறார்.

திரைப்படக் கருவிகள் வாங்க அடுத்தடுத்து கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காணாமல் போகின்றன. வீட்டில் உள்ள எல்லா செப்புப் பாத்திரங்களும் காணாமல் போக, பால்கேவை அவரது உறவினர்கள் 'தானே நகராட்சி' மனநல மருத்துவமனைக்கு கடத்திச் செல்கிறார்கள். வாயிலுக்குள் நுழைந்த மறுகணம் அவர் அவங்கிருந்து தப்பி ஓடிவருகிறார்.

உறவினர்கள் அனைவரிடமும் சம்மதத்தோடும் அவர் கப்பலில் லண்டன் செல்கிறார். லண்டனில் பயாஸ்கோப் பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்கிறார். தன் திரைப்பட ஆர்வத்தை அவரிடம் சொல்லி உதவி கேட்கிறார். அவர் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்பட இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார். அங்கே படம் எடுப்பது, பிலிம் ரசாயனப்டுத்துவது, எடிட்டிங் செய்து ரீல்களாக்குவது, திரையிடுவது உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தெரிந்துகொள்கிறார்.

ஹரிச்சந்திரன் மனைவியான சந்திரமதி கதாபாத்திரத்திற்கு அன்றைய பாம்பே நகர வீதிகளில் அலைந்து அவமானப்படும் இடம் முக்கியமானது. பிறகு, ஒரு இளைஞனை சந்திரமதி கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்து அவரை மீசையை மழித்து வா என்பார். ஐயா எங்க அப்பா இன்னும் உயிரோடதான் இருக்கார் என்னால் மீசையை மழிக்க முடியாது என்பார் அந்த இளைஞர். அவரோடு மல்லுக்கட்டி கடைசியில் அவருடைய தந்தையிடம் அரிச்சந்திரன் நாடகத்தை ஓடும் போட்டோகிராபி படங்களாக எடுக்கப்போகிறோம் என்று விளக்கி சம்மதம் வாங்குவதற்குள் பால்கேவுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

புதியதாக குடியேறிய பங்களாவிலேயே அரண்மனைக் காட்சிகள் எடுத்து முடித்த பிறகு அரிச்சந்திரனின் மகனை பாம்பு கடிக்கும் காட்சி, சுடுகாட்டில் அவனைத் தகனம் செய்ய வேண்டிய காட்சிகளுக்காக நட்ட நடு காட்டில் ஷூட்டிங் வைக்கப்போய் நாடோடிக் கொள்ளையர்கள் எனக் கருதி போலீஸ் அனைவரையும் சிறையில் அடைப்பது மிகப்பெரிய வேடிக்கை. கடைசியில் காவல் அதிகாரிகளிடம் இது சினிமா என்று விளக்கி சிவபெருமானையும் விஸ்வாமித்திரரையும் காவல் நிலையத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற காவல் அதிகாரிகள் ''கடவுளே, கடவுளே'' என கன்னத்தில் போட்டுக்கொண்டு தயவுசெஞ்சு மன்னிச்சுக்கோங்க எங்களுக்கு தெரியாதில்ல என்பார்கள். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு காட்டில் படப்பிடிப்பு நடப்பது எல்லாம் அழுத்தமான வரலாற்றுப் பதிவை போகிறபோக்கில் சொல்லிச் செல்லும் அளப்பரிய காட்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இக்கதை நிகழ்கிறது என்பதற்கு சான்றாக பால கங்காதர திலகரை விடுதலை செய் படத்தின் ஒரு காட்சியில் இடம் பெறுகிறது. மும்பையின் சாலைகளில் பால்கே தனது படத்திற்கான கலைஞர்களைத் தேடி அலையும்போது வீதி ஒன்றில் ஒருவர் முழக்கமிட்டுச் செல்வார். அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.

முதலில் புரிந்துகொள்ளாமல் பின்னர் புரிந்துகொள்ளும் மனைவி, பால்கே உருவாக்கிய முதல் இந்திய சினிமாவின் முதல் முயற்சிகளின் முக்கியப் பங்காகவும் அவர் இருக்கிறார் என்பதற்கு இயக்குநர் எடுத்துக்காட்டியுள்ள இடங்கள் இன்றியமையாதவை. ஒரு இடத்தில் பால்கேவின் மனைவி பிலிம்களை இருட்டறையில் கழுவிக்கொண்டிருக்க பால்கேவோ குழந்தைகளுக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருப்பார். பங்களா வீட்டில் படப்பிடிப்பு ஒத்திகை காலங்களில் ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு கல்யாண சாப்பாடு போல அவர் சமையலில் ஈடுபடும் காட்சிகள் யதார்த்தத்தின் தவிர்க்க முடியாத பரிமாணங்கள்.

பால்கேவின் திரையிடலில் திளைக்கும் மும்பை வாசிகள் அவருக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள். அப்போது ஒரு கனவான் தனது தொப்பியை பால்கேவுக்கு அணிவிக்க, பால்கே அந்தத் தொப்பியை தனது மனைவிக்கே அணிவித்து மகிழ்விக்கும் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. பால்கேவின் சிந்தனையில் பெண்களுக்கான இடம் என்னவென்று. அதை இயக்குநர் பரேஷ் முகாஷி பெண்களின் மீது வைத்துள்ள மரியாதையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய மரியாதைக்குரிய பெண்ணாக பால்கேவின் மனைவியாக வந்து படத்திற்கு பக்க பலமாக மன்னிக்கவும், பக்கா பலமாகவும் திகழ்பவர் விபாவரி தேஷ்பாண்டே.

அக்கால பம்பாயை நம் கண்ணெதிரே நிறுத்துகிறது அமலேந்து சவுத்திரியின் ஒளிப்பதிவு. அக்கால வாழ்வியல் பின்னணிகளையும் கதாபாத்திரங்களின் ஊடாட்டங்களையும் நம் இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது அவரது ஒளிப்பதிவு. படம் முழுவதும் ஒரு முக்கியமான அம்சத்தில், அதாவது ஆரம்பகால சினிமா முயற்சிகளுக்கான பின்னணியை விளங்கிக்கொள்ள ஒரு தெளிவான கவனத்தைக் கொண்டுவந்துள்ளனர். அது பழங்கால இசை. படத்தின் தொடக்கத்தில் மும்பையின் நூற்றாண்டுக்கு முந்தை புகைப்படங்களை அடுத்தடுத்து காட்டியபடியே டைட்டில் கார்டு போடப்பட அதன் பின்னணியாக புராண காலத்து இசை நம்மை வேறு ஒரு காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. படம் முழுவதும் பல்வேறு காட்சிகளுக்கும் இந்தப் புராண கால பின்னணி இசை ராஜா ஹரிச்சந்திரா திரைப்பட உருவாக்கங்களோடு நாமும் எண்ணத்தால் ஒன்றிணைய வழிவகுக்கிறது.

பால்கே எனும் மலையைக் குடைந்து அதிலிருந்து அனைவரும் கண்டு ரசிக்கக்கூடிய ஒரு சிறு சிற்பமாக செதுக்கித் தரப்பட்டுள்ள ஹரிச்சந்திராச்சி பேக்டரி அதன் அத்தனை சிறப்பம்சங்களுக்காகவும் 2009-ம் ஆண்டுக்கான வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x