Published : 05 Dec 2019 08:00 PM
Last Updated : 05 Dec 2019 08:00 PM

அனுபவப் பகிர்வு: உலகின் பெரிய கடற்கரை மெரினா; சுத்தத்தில்? 

ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணிக்கு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தூரத்தில் இருந்து பார்க்கையில் பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்கள் போல வெறும் தலைகளாகத் தெரிந்தன. சட்டென்று ஒரு மழை! கூட்டம் வேகமாகக் கலைந்து சென்றது. ஒரு சிலர் இதுபோதுமென வீட்டிற்குக் கிளம்பினர். மீதிப் பேர் ஆங்காங்கே இருக்கும் பானிபூரி, வடை கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நானும் அந்த மழையில் நனைந்தபடி வேகமாய் ஓடி ஒரு கடையில் ஒதுங்கிக் கொண்டேன். மழையில் ஒளிய இடம் கிடைக்காத ஒரு நாய்க்குட்டி என்னருகில் வந்து நின்று உடம்பைக் குலுக்கியது. அதன் மீதுள்ள நீரைச் சிதறவிட்டு பிறகு படுத்துக்கொண்டது.

மழை சற்று ஒய்வெடுத்துக் கொண்டது. ஆங்காங்கே ஒதுங்கி இருந்த கூட்டமும் வீட்டிற்குப் புறப்பட ஆரம்பித்தது. நானும் பொடிநடையாக நடந்து கடற்கரையின் அருகே அமர்ந்து அலைகளின் ஓசையையும், வங்காள விரிகுடாவின் பிரம்மாண்டத்தையும் ரசித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் பட்டும்படாத ஓர் சாரல் மழை. ஆனால் அது யாரையும் பாதிக்கவில்லை.

வழக்கம் போல் அந்த மழைச் சாரலிலும் நிலவின் ஒளியிலும் காதலர்கள் இதழ்களின் பரிமாற்றத்தில் இருந்தனர். வட இந்திய இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொண்டே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். என்றோ,யாருக்கோ திதி கொடுத்த தேங்காய், பானை போன்றவை கரை ஒதுங்கிக் கொண்டிருந்தன. ஆளே இல்லாத கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்கும் சிறுவன் மட்டும் மணியை ஒலித்துக் கொண்டே கடமையில் இருந்து சிறிதும் தவறாமல் சென்று கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் கடலின் மீது இருந்த எனது பார்வைகள் இப்போது சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டே இருக்கும் கரையின் மீது பட்டது. அதிக அளவு வாட்டர் பாட்டில்களும், பிளாஸ்டிக் பைகளும் அந்தக் கடற்கரையில் நீண்டு கொண்டே சென்றன.

குப்பையை குப்பைத் தொட்டியில் போடவும். பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீர்கள். கடற்கரையை அசுத்தம் செய்யாதீர்கள் என எத்தனை முறை அறிவுரை கூறினாலும் அதை இங்கு பலரும் செயலில் கொண்டு வருவதில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்ற முன்னாள் முதல்வர்களின் சமாதியைப் பார்த்துவிட்டு மெரினாவிற்கு வரும் வெளியூர்/சுற்றுலாப் பயணிகளும் சரி, உள்ளூர் வாசிகளும் சரி தாங்கள் கொண்டு வரும் உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு குப்பைகளை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் பைகளையும், வாட்டர் பாட்டில்களையும் அலட்சியமாக வீசிச் சென்று விடுகின்றனர்.

நம் மக்களுக்கு எப்பொழுது விழிப்புணர்வு ஏற்படும் என யோசித்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள கடைகளின் விளக்குகள் அணைக்கப்பட்டு மூடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கடையில் இருந்த ஒருவர் பெரிய வாளி ஒன்றைத் தூக்கியபடி கடலை நோக்கி வந்தார். பட்டென்று அதை கடற்கரையில் கொட்டினார். சாப்பிட்ட கழிவுகள், பிளாஸ்டிக் ஸ்பூன், தெர்மாக்கோல் கழிவுகள் என அவர் கொட்டிய அனைத்தும் அப்படியே அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டன.

அந்த ஒரு கடை மட்டுமல்ல பலரும் கழிவுகளை கடலில் தான் கொட்டுவார்களாம். இவை அனைத்தையும் விட கொடுமை அந்தக் கடற்கரையில் 'வீட்டில் தண்ணீர் தெளித்து விட்டது' போல் திரியும் சில மாடுகள் .புல்லை மாடு மேய்ந்த காலம் போய் இன்று கண்ணில் படுகிற எல்லாவற்றையும் அவை ருசிக்கப் பார்க்கின்றன.

பிளாஸ்டிக் பைக்குள் இருக்கும் சோளத்தைச் சாப்பிட நினைத்த அந்த மாடு எவ்வளவோ தடுத்தும் அதை பிளாஸ்டிக் பையோடு சேர்த்து சாப்பிட்டுவிட்டது. கடந்த மாதம் மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட செய்திதான் நினைவில் வந்து போனது. முன்பெல்லாம் மாட்டின் சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் தெளிப்போம். ஆனால் இப்பொழுது மாட்டின் சாணம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மாறி வருகிறது.

உலகின் மிக நீண்ட கடற்கரையாம் மெரினா. ஆனால் சுத்தத்திலோ? இதனால்தான் என்னவோ வசதி படைத்தவர்கள் கடற்கரை என்றவுடன் பெசன்ட் நகர், திருவான்மியூர், ஈசிஆர் என சென்று விடுகின்றனர் போல.

எப்போதும் போல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்க்காமல் தனிமனித ஒழுக்கத்தை அனைவரையும் கடைபிடிப்போம். சாக்லேட் பேப்பரிலிருந்து வாட்டர் பாட்டில் வரை அனைத்துக் குப்பைகளையும் குப்பைத் தொட்டியில் போட நம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவோம். நாமும் கடைபிடிப்போம். சுத்தமான மெரினாவையும் சுற்றுப்புறத்தையும் உருவாக்குவோம். நலமாக வாழ்வோம்.

- பா.ரஞ்சித் கண்ணன்.

தொடர்புக்கு: ranjithkannan.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x