Last Updated : 04 Dec, 2019 03:06 PM

 

Published : 04 Dec 2019 03:06 PM
Last Updated : 04 Dec 2019 03:06 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 7 - 'ஒருநிமிஷம்... நான் சொல்றதைக் கேளுங்களேன்!’ 

வி.ராம்ஜி

இந்த உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உணவுகளில் கூட, துரித உணவுகள் வந்து, நம்மூரையும் நம் வயிறையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஓர் அபார்ட்மென்ட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு, சாலையைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால், பேருந்தில், காரில், டூவீலரில், நடந்தபடி என எங்கும் எதிலுமாக மக்கள் பயணித்தபடியே, பரபரத்தபடியே இருக்கிறார்கள். ஓர் சின்ன இடைவெளியில், பைக் உள்நுழைந்து சர்சர்ரென்று புகுந்து புறப்பட்டுச் செல்வதைப் பார்க்கலாம். ‘அவர் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறார்? என்னவாக இருக்கும்?’, ‘இவர் ஏன் இத்தனை பதற்றத்துடனும் படபடப்புடனும் நடக்கிறார்?, ‘இவர்கள் ஏன் இடமே இல்லாத பஸ்ஸில், ஃபுட்போர்டில் தொங்குவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்?’, ‘இவர் ஏன் டூவீலரை ஓட்டிக்கொண்டே கழுத்தைச் சாய்த்துக்கொண்டு, செல்போன் பேசியபடி செல்கிறார்? அப்படி அவர் போனில் எதுகுறித்துப் பேசியிருப்பார்?’ என்பதற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்பாகவே, அடுத்தடுத்த கேள்விகளும் சிந்தனைகளும் குழப்பங்களும் தவிப்புகளும் தடதடவென வந்துவிடுகின்றன.

இங்கே இந்த உலகம் வேகமாக இயங்கவில்லை. அதுபாட்டுக்கு எப்போதும் போல்தான் இருக்கிறது. இந்த பூமியொன்றும் வழக்கத்தை விட,வேகமாகச் சுற்றிச் சுழலவில்லை. எப்போதும் போல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலமும், முக்கால் மணிநேரத்தில் இரண்டு மணிநேரத்தைத் தாண்டுவதில்லை. இன்னமும் அறுபது விநாடிகள் கொண்டதுதான் ஒருநிமிடமாக இருக்கிறது.

அப்படியெனில்...?

மனிதர்கள்தான் முன்பு போல் இல்லை. காலுக்குச் சக்கரமும் தோளுக்கு றெக்கையும் கட்டிக்கொண்டு, பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி வேகத்துடன் சென்றதால், நேற்றைய வாழ்வை விட இன்றைக்கு என்ன செய்திருக்கிறோம், சாதித்திருக்கிறோம் என்பதெல்லாம் விடையே இல்லாத கேள்விகளாகவே தொக்கி நிற்கின்றன.

கல்யாண வீடுகளில், மேள இரைச்சலும் பேச்சுச் சத்தமுமாக நிறைந்திருக்கிற சூழலில், அங்கங்கே நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருக்கிற உறவுக்காரர்களைத் தேடித்தேடிப் பேசுவது பரம சுகம். நம்மையும் யாரேனும் பார்க்க வேண்டுமே என்று கண்களால் மண்டபத்தையே ஸ்கேன் செய்துகொண்டிருப்பார்கள்.

வீட்டிலிருந்து வெளியே வராமல், முடங்கிக் கிடந்த எழுபது ப்ளஸ் பெரியவர்களைக் கூட, விசேஷங்களில் பார்க்கலாம். அவர்கள் அருகில் சென்று நலம் விசாரிக்கும்போது, ‘யாரு ருக்கு புள்ளையா? என்னடா பண்றே?’ என்று நம் கன்னம் தடவி, தலை தொட்டு ஆசீர்வதிப்பார்கள். ‘எப்படி இருக்கே? எவ்ளோ சம்பாத்தியம்?’ என்று இரண்டாவது, மூன்றாவது கேள்வி கேட்கப்படுவதற்குள், பாக்கெட்டில் இருந்து போன் எடுத்து, ‘இதோ... வந்துட்டேன்’ என்று பெரியவரிடம் சொல்லி, நகர்ந்துவிடுகிறோம்.

மண்டப வாசலில், போனில் கால் மணிநேரம் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னொருவர் வந்து கூப்பிட்டால் கூட நிறுத்துவதில்லை. ஆனால் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, செகண்ட் கால் வந்துகொண்டிருந்தால், ‘சரி... ஏதோ போன் வருது. அப்புறம் விரிவாப் பேசுவோம்’ என்று சொல்லி ‘கட் ‘ செய்கிறோம்.

அந்தப் பெரியவர் நம்மிடம் எந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தாரோ? அந்தக் கேள்வி, அவர் மனதுக்குள் எவ்வளவு வருடங்களாக இருந்து கொண்டிருக்கிறதோ? அந்தக் கேள்விக்குக் காரணம்... நம் அப்பாவின் மீது கொண்ட பிரியமா, அம்மாவிடம் உள்ள மரியாதையா, நம் பரம்பரை மீதுள்ள அன்பா... எதுவும் நாம் அறிவதில்லை. அந்தப் பெரியவருக்கு ஒருநிமிடத்தைக் கொடுத்திருக்கலாம்.

சந்திரா என்ற பெண்மணி, எனக்கு நல்ல ஸ்நேகிதம். அப்போது அவளுக்கு 33 வயது. எனக்கு 19 வயது. பிரமாதமாகக் கவிதை எழுதுவாள். ஒருநாள், அவள் பீரோவைத் திறந்து காட்டினாள். நான்கு அடுக்கு கொண்ட பீரோவின் ஒரு வரிசை முழுக்க, ஒருகுயர், இரண்டு குயர் நோட்டுப் புத்தகங்கள். பிரித்துப் பார்த்தால்... அத்தனையும் அவளின் கவிதைகள். அத்தனையும் எடுத்து, என் மடியில் வைத்துப் படிக்க ஆரம்பித்தேன். சொல்லும் தாளமும் அர்த்தமும் என கவிதையில் ஜாலம் காட்டியிருந்தாள்.

‘’நைன்த் படிக்கும்போது கவிதை எழுத ஆரம்பிச்சேன். என் அக்கா நோட்டு வாங்கிப் பார்த்தாள். ‘ஏதோ கோலம் போட்டு வைச்சிருக்கே. மார்கழில வாசல்ல கோலம் போட்டு அசத்திடலாம்னு நினைச்சேன். ஏன் நேரா எழுதாம, உடைச்சு உடைச்சு எழுதியிருக்கே. ஓ... கவிதைன்னா இப்படித்தான் எழுதணுமா?’ என்று சொன்னாள். மனசே உடைஞ்சிருச்சு.

‘நேத்திக்கி ஒரு கவிதை எழுதினேன். ஒரேயொரு நிமிஷம்... வாசிச்சுக் காட்டட்டுமா?’ன்னு என்னோட படிச்ச வசந்திகிட்டயும் செந்தாமரைச் செல்விகிட்டயும் கேப்பேன். அவங்க கோரஸா ‘வேணாம்டி. கவிதை எங்களுக்குப் புரியாது’ன்னு எஸ்கேப் ஆயிருவாங்க. அப்பா, அம்மா, அண்ணா, பக்கத்து எதிர் வீடுகள்ல இருக்கற தோழிங்க எல்லாமே இப்படித்தான் அவாய்ட் பண்ணாங்க.

கல்யாணமாச்சு. பொறந்த வீட்லேருந்து என்னோட நோட்டுகளையெல்லாம் எடுத்துட்டு வந்திருந்தேன் என் கணவர்கிட்ட காட்டினேன். ‘அடேங்கப்பா. நோட்டு முழுக்கவே கவிதைகளா? பதினாறு நோட்டுங்க இருக்கும் போல. நம்ம தெருவுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது கடலைவண்டிக்காரன் வந்துருவான். அவன்கிட்ட போட்டா, சுடச்சுட கடலையை வறுத்துக் கொடுப்பான்’னு சொன்னார்.

அன்னிக்கி ராத்திரி முழுக்க அழுதேன். அழுததையே கவிதையாக்கினேன். கவிதையைப் படிக்கும்போதெல்லாம் பொசுக்குன்னு அழுதுருவேன். ‘ஒருநிமிஷம்... ஒரேயொரு நிமிஷம்... என் கவிதைகளைக் கேட்டுட்டு, படிச்சிட்டு, ‘ச்சீச்சீ... கேவலமா இருக்கு கவிதை. இதெல்லாம் ஒரு கவிதையா?’ன்னு சொல்லி, நோட்டை வீசியெறிஞ்சிருக்கலாம். ஆனா நோட்டு வாங்காம, பக்கம் புரட்டாம, கவிதையை வாசிக்காம...’ என்று சொல்லிவிட்டு, பேச முடியாமல், தழுதழுத்தவளுக்கு, அவற்றையெல்லாம் படித்து விமர்சித்ததில் அப்படியொரு அன்பும் மரியாதையும் என் மீது! எண்பதுகளில் முப்பதைத் தாண்டிய சந்திராவுக்கு, ஒருநிமிடம் ஒதுக்கி, அவளின் கவிதையை வாசித்திருந்தால், இன்னும் பத்து நோட்டுகள் முழுக்க கவிதையாக எழுதியிருப்பாளோ என்னவோ!

அந்த சந்திராவுக்கு, எவருமே ஒருநிமிடம் தரவில்லை. அதனால்தானோ என்னவோ... எதை எடுத்தாலும் எது குறித்துப் பேசுவதாக இருந்தாலும் ‘ஒருநிமிஷம்... கேளுங்களேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் பேச ஆரம்பிப்பாள். ‘ஒருநிமிஷம்... கேளுங்களேன். இன்னிக்கி கத்தரிக்காய் வறுவலும் வத்தக்குழம்பும் பண்ணிருக்கேன்’ என்பாள். ‘ஒருநிமிஷம்... கேளுங்களேன். கடைக்குப் போறியா ராம்ஜி. அப்படியே இஸ்திரிக்கடை திறந்திருக்கானு பாத்துட்டு வந்து சொல்லேன்’ என்பாள். ‘ஒருநிமிஷம்... கேளுங்களேன். நாலு வீடு தள்ளி இருக்காரே சீனு மாமா. பாவம் அவருக்கு திடீர்னு வயித்துவலியாம். ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க’ என்பாள். இப்படியாக எது சொன்னாலும், ‘ஒருநிமிஷம்... கேளுங்களேன்’ என்பது அவள் பேச்சு முழுக்க ஒட்டிக்கொண்டே இருக்கும். பாவம்... அவளுக்கான ‘ஒருநிமிடம்’ அவளுக்குக் கொடுக்கப்படவே இல்லை.

அம்மாவின் இனிய தோழி வாசுகி அம்மா. நான் திருச்சிக்குச் செல்லும் தருணங்களில் எப்படியாவது அவரைப் பார்த்துவிடுவேன். குடும்பமாக நமஸ்கரித்துவிட்டு வருவேன். அவர் பெயர் வனசாட்சி. அவரின் மூத்த மகள் வாசுகி அக்கா. அதனால் வாசுகி அம்மா என்ற பெயர் வந்தது. வாசுகியின் அம்மாவுக்கு ஒரு தம்பி. பெயர் அஞ்சப்பன். அவரை அஞ்சப்ப மாமா என்றுதான் நாங்கள் அழைப்போம். வாசுகி அம்மா போலவே இவர் நெடுநெடுவென வளர்ந்திருப்பார். கம்பீரமாக, நிமிர்ந்து நடப்பார். ஏழரை கட்டை ஸ்ருதி குரல் அவருக்கு. பார்ப்பது தோரணையாக இருக்கும். தவிர, அந்த வீட்டை நிமிர்த்தி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார். ஆகவே, அஞ்சப்ப மாமா மீது அவர் வீட்டாருக்கு ஒரு மரியாதை. அவர் எதிரில் ரெண்டு வார்த்தை பேசக் கூட எல்லோரும் அஞ்சுவார்கள். வாசுகி அக்காவைத்தான் கல்யாணம் செய்துகொண்டார்.

வீட்டில் அவர் இருந்தால், எல்லோரும் பெட்டிப் பாம்பு. ‘ரேடியோவை சத்தமா வைக்காதே. மாமா தூங்கிட்டிருக்கான்’ என்பார்கள். ‘எதுவா இருந்தாலும் அவன் வேலைக்குப் போனதும் பேசிக்கலாம்’ என்பார்கள். கை தவறுதலாகக் கூட பாத்திரம் கீழே விழாது. எடுக்கும் போதும் வைக்கும்போதும் சின்ன டெசிபல் சத்தம் கூட வராமல்தான் புழங்குவார்கள்.

எப்போதேனும் எதற்கேனும் சில கேள்விகள், சந்தேகங்கள் என்றால், ‘ஒருநிமிஷம் அஞ்சப்பா...’ என்று வாசுகி அம்மா மெல்லச் சொல்லுவார். ‘என்னத்த ஒருநிமிஷம்... எல்லாம் எனக்குத் தெரியும் தெரியும்’ என்று சம்பாஷணையை சட்டென்று முடித்துவிடுவார். அது அவர் இயல்பு. ஆனால், ‘என்னத்த ஒருநிமிஷம்...’ என்பதாகத்தான் இங்கே பலரும் கொடுக்காமல் மறுத்துக்கொண்டே இருக்கிறோம்.

எங்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது சாந்தியின் வீடு. அவரின் கணவருக்கு எப்போதும் கோபம் பொத்துக்கொண்டு வருவதற்குத் தயாராக இருக்கும்.

ஏதேனும் தருணங்களில், ‘ஒருநிமிஷம்... நான் என்ன சொல்ல வர்றேன்னா’ என்று சாந்தி கேட்டதும், அவருக்குப் பொசுக்கென கோபம் வந்துவிடும். கோபத்தில் கத்த ஆரம்பித்துவிடுவார். ‘என்னத்தடி ஒருநிமிஷம். என்ன சொல்லப் போறே?’ என்று சொல்லிவிட்டு, மளமளவென விசு பட வசனம் போல் அடுக்கிக்கொண்டே போவார். ‘இதைத்தானே சொல்லப் போறே’ என்பார். ‘என்ன சொல்லுவேனு எங்களுக்குத் தெரியாதா?’ என்பார். ‘போபோ... அடுப்படி வேலையைப் பாரு’ என்று அதட்டி, அடக்கிவிடுவார். ஒருபோதும் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போகிறதே... மனுஷன் கேட்க மாட்டேன் என்கிறானே...என்று முகம் சுருங்கிப் போயிருக்கும் சாந்தியை அவர் கடைசி வரை உணரவே இல்லை. புரிந்து கொள்ளவே இல்லை. ‘சரி சொல்லேன்... ஒருநிமிஷத்துல என்னதான் சொல்றேனு பாக்கறேன்’ என்று சாந்தி கேட்ட ஒருநிமிடத்தைக் கொடுக்காமலேயே சிலவருடங்களுக்கு முன்பு இறந்துபோனார் அவர்.

‘ஒருநிமிஷம்... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்களேன்’ என்று யாரேனும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். எவ்வளவோ கால விரயம் செய்கிறோம். ஒருநிமிடத்தைக் கொடுத்துத் தொலைத்தால்தான் என்ன?

ஒருநிமிடத்தைக் கொடுக்காத கோபத்துக்கு, காமராஜின் மனைவி காரணம்.

காமராஜ் இனிய நண்பன். பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில், அப்ரண்டீஸாக வேலை செய்தபோது பழக்கமானவன். சுருட்டை முடியும் களையான சிரிப்புமாக இருப்பான். ஒல்லியான உடைசலான தேகம்தான். ஆனால் தைரியமானவன். நானும் அவனும் இன்னுமான நண்பர்களுமாகச் சேர்ந்து, பல தகராறுகளுக்குச் சென்றிருக்கிறோம். எதிரணியில் எவ்வளவு பேர் இருந்தாலும் ஓடமாட்டான். பின்வாங்கமாட்டான். குரல் தாழ்த்தி பணியமாட்டான். அப்படி ஒருமுறை நிகழ்ந்த தகராறில், அவனுக்கு தலையில் விழவேண்டிய வெட்டு தடுத்ததால் கையில், விரலில் விழுந்தது. அதேபோல், காலிலும்!


மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குப் பிறகு, தேறினான். ஒற்றை விரலை மட்டும் மடக்க முடியவில்லை. அதேபோல், கால் சுண்டிச் சுண்டி நடக்கும்படியாயிற்று. ஆனால் அதே தைரியம். அதே சிரிப்பு. அதே சுள்ளாப்பு.

நான் சென்னைக்கு வந்துவிட... அவன் யாரோ ஒருபெண்ணைக் காதலிப்பதாகக் கடிதம் எழுதினான். பிறகு அவளைத் திருமணம் செய்துகொள்வதாக எழுதினான். சமயபுரம் கோயிலில் திருமணமாகிவிட்டது என எழுதினான். கர்ப்பமாக இருக்கிறாள் என எழுதினான். ஆண் குழந்தை பிறந்ததைத் தெரிவித்தான்.

‘எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது’ என்று எழுதினான். என்னை ஆசிரியரே என்றுதான் அழைப்பான். ‘ஒருமுறை நேரில் வந்தால் நிறைய பேசணும். எல்லாம் சரியாகும்’ என்று எழுதினான். பின்னர் கடிதம் இல்லை.

நண்பன் நாகராஜ்தான் கடிதம் எழுதினான். ‘காமராஜ் செத்துட்டான்’ என்று. சிவா வேலை பார்க்கும் ஒயின்ஷாப்புக்கு போன் செய்து, ‘என்னடா சிவா’ என்றேன். ‘ஆமாம்டா. செத்துட்டான்டா’ என்றான்.

‘முதல்ல அவனை யாரோ கொன்னுட்டாங்கன்னுதான் நெனச்சோம். ஆனா அப்படிலாம் எதுவும் ஆகலடா. அவன் கூட கோச்சுக்கிட்டு, குழந்தையைத் தூக்கிக்கிட்டு அவன் பொண்டாட்டி, அவங்க அப்பா வீட்டுக்குப் போயிருச்சு. இவன் தனியாத்தான் இருந்தான். எவ்வளவோ கெஞ்சிப் பாத்தான். அந்தப் பொண்ணுக்கு கோபம் குறையவே இல்ல.

குழந்தை பொறந்ததால ஆஸ்பத்திரில ஒரு நோட்டு போட்டுக் குடுத்திருப்பாங்க தெரியும்தானே. அந்த நோட்டை எடுக்கறதுக்காக, அவன் பொண்டாட்டி வீட்டுக்கு வந்திருக்கா. வந்து நோட்டை எடுத்துட்டுப் போகும் போது, ‘ஒருநிமிஷம்... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்’னு கெஞ்சியிருக்கான். ஒருகட்டத்துல அவ கால்லயே விழுந்துருக்கான். இதையெல்லாம் அக்கம் பக்கத்துல இருக்கறவங்க, அப்புறமாச் சொன்னாங்க.

ஆனா, அந்தப் பொண்ணு, கிளம்பிருச்சு. ‘ஒருநிமிஷம் நான் சொல்றதைக் கேளு’ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தான். அவ திரும்பிக் கூடப் பாக்கல. போயிட்டா. அன்னிக்கி சாயந்திரம் வரைக்கும் வாசல்லயே உக்கார்ந்து இருந்திருக்கான். அவ மனசு மாறி வருவானு நம்பிக்கையோட காத்துக்கிட்டிருந்தான். ஆனா அவ நாலாம் நாள்தான் வந்தா. விஷயம் தெரிஞ்சுதான் வந்தா. சாயந்திரம் வரை காத்திருந்து, வரலைன்னதும் கடைவீதிக்குப் போனான். என்ன எழவோ... விஷத்தை வாங்கியிருக்கான். ஒரு குவார்ட்டர் வாங்கியிருக்கான். ரெண்டையும் கலந்து குடிச்சிருக்கான். அதுக்குப் பிறகு அவன் செத்துப்போயிட்டான் போலன்னு கதவை உடைச்சு, ஓட்டைப் பிரிச்சு பாத்தப்பதான் தெரிஞ்சுச்சு. அப்பதான் அந்தப் பொண்ணு குழந்தையைத் தூக்கிட்டு, ஓடிவந்து கதறினா’ என்று சிவா முழுவதையும் உடைந்த குரலுடன் விளக்கினான்.

அன்றைக்கு எனக்குத் தூக்கமே இல்லை. அவனும் நானும் பேசிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தன. ‘ஆசிரியரே...’ என்று வீட்டு வாசலில் நின்றபடி, காமராஜ் கூப்பிடுவது போலவே ஓர் பிரமை.

அடுத்த சில மாதங்களில், திருச்சிக்குச் செல்லும்போது, நண்பர்களைச் சந்திக்கும் போது, காமராஜ் பற்றியே பேசிப் புலம்பினோம்.
’’போலீஸுக்கு ஒரு லெட்டர் எழுதியிருந்தான். அதுல என் மனசுக்கு அமைதி தரும் ஆசிரியரின் பேச்சு கேட்காமல் போகிறேன். மனைவியே புரிந்து கொள்ளாத போது, இனி நான் எதைப் புரிந்து உணர்ந்து தெளிந்து வாழ்வது என எழுதியிருந்தான். நான் அந்தப் பேப்பரைப் பாத்தேன்’ என்று முருகேசன் சொன்னான்.

’காமராஜின் மனைவியை யாராலயும் சமாதானப்படுத்தவே முடியல. ‘அய்யோ... அன்னிக்கி ஒருநிமிஷம் சொல்றதைக் கேளுன்னு கால்ல விழுந்து கெஞ்சினாரே. ஒருநிமிஷம் அவர் சொல்றதைக் கேட்டிருந்தா, கேட்டு நின்னிருந்தா, அவர் சாகணும்னு முடிவு எடுத்திருக்கமாட்டாரே. அய்யோ... நான் கொலைகாரியாயிட்டானே. இந்தப் புள்ள இன்னும் அப்பான்னு கூட கூப்புடல. அதுக்குள்ளே இவனோட அப்பாவை நான் கொன்னுட்டேன். என் நெஞ்சுல அந்த ஆளை நான் மதிக்கவே இல்ல’ன்னு சொல்லிச் சொல்லி, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுச்சு அந்தப் பொண்ணு’ என்று நாகராஜ் தெரிவித்தான்.

‘ஒருநிமிஷம்... நான் சொல்றதைக் கேளுங்களேன்’ என்று யாராவது உங்களிடம் கேட்டிருப்பார்கள்தானே. தயவுசெய்து, அவர்களுக்கு அந்த ஒருநிமிடத்தைக் கொடுங்கள். அவர்களைப் பேசவிடுங்கள். அவர்கள் பேசக் கேளுங்கள். அவர்கள் நியாயம் கேட்டு உணருங்கள்.

‘செவி இருப்பவர்கள் கேட்கக்கடவது’ என்றொரு வாசகம் பைபிளில் உண்டு.

ஒருநிமிடம்... ஒரேயொரு நிமிடம்... அவர்கள் பேசுவதற்குக் கொடுத்துவிட்டு, அப்படியே நம் காதையும் மனதையும் தருவோம். அதன் பெயர் விட்டுக்கொடுத்தல். அதன் பெயர் மதித்தல். அதன் பெயர்தான் அன்பு.


-வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x