

குழந்தைகளுக்கான நூல்களை ஏராளமாக எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் (Enid Blyton) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l லண்டனில் (1897) பிறந்தவர். தந்தை பிரபல வர்த்தகர். பள்ளியில் டென்னிஸ் சாம்பியனாகத் திகழ்ந்தார். அப்பாவிடம் பியானோ வாசிக்கக் கற்ற இவர், மேற்கொண்டு இசைப் பயிற்சியை தொடர நினைத்தார்.
l எழுத்து மீதான ஆர்வத்தால் முடிவை மாற்றிக்கொண்டார். அம்மாவுக்கு விருப்பமில்லை என்றபோதிலும், மகள் எழுதுவதற்கு அப்பா உற்சாகம் தந்தார். இவருக்கு 13 வயது ஆகும்போது, அப்பா குடும்பத்தைவிட்டு பிரிந்தார். பிறகு, ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர், பள்ளி ஆசிரியராக ஓராண்டும், குழந்தைகள் பராமரிப்பவராக 4 ஆண்டுகளும் பணிபுரிந்தார்.
l அப்போதும்கூட எழுதிக்கொண்டே இருந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பினார். ‘நாஷ்’ என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.
l இவரது கவிதைகள், கதைகள் 1921 முதல் அதிக அளவில் பிரசுரமாகின. ‘சைல்ட் விஸ்பர்ஸ்’ என்ற இவரது முதல் கவிதை நூல் 1922-ல் வெளிவந்தது. அதுமுதல், தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கத் தொடங்கினார்.
l பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். ஓராண்டில் சுமார் 50 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். 800 சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இவை உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் விற்பனையாகின. இவரது படைப்புகள் 90-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்கள் தொடர்ந்து இடம்பெற்றன.
l ‘மாடர்ன் டீச்சிங்’, ‘பிராக்டிகல் சஜஷன்ஸ் ஃபார் ஜூனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்’ நூல்கள் பிரபலமானவை. குழந்தைகளுக்கான ‘ஸன்னி ஸ்டோரிஸ்’ இதழில் ‘விஷ்ஷிங் சேர்’ என்ற தொடரை எழுதினார்.
l இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் 1950-களில் சில காரணங்களால் தங்கள் நூலகங்களுக்கு இவரது படைப்புகளை வாங்க மறுத்தன. அதுவரை இவரது கதைகளை ஆர்வத்துடன் படித்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தன. பாக்கெட் மணியை சேமித்து சொந்தமாக புத்தகம் வாங்கிப் படித்தார்களாம். ‘தி ஃபேமஸ் ஃபைவ்’, ‘சீக்ரட் செவன்’, ‘லிட்டில் நூடி சீரிஸ்’ ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழையும் வருமானத்தையும் ஈட்டித் தந்தன.
l ‘தி ஃபேமஸ் ஃபைவ்’ நூல் கோடிக்கணக்கில் விற்பனையானது. உலகம் முழுவதும் 40 பதிப்பகங்கள் இதை அச்சிட்டு விற்றன. இவரது நூல்கள் பல தடவை மறுபிரசுரமாகின.
l மர்மக் கதை, வீரதீரக் கதைகளே அதிகம் எழுதினார். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட எளிதாக படிக்கும் அளவுக்கு எளிய நடையில் எழுதுவார். இவரது கதைகள் குழந்தைகளுக்கு நன்னெறிகளை கற்றுக்கொடுப்பதாக அமைந்தன.
l விலங்குகள் மீது நேசம் கொண்டவர். காகம், புறா, ஆமை, சேவல், வாத்து, முள்ளம்பன்றி போன்றவற்றை தன் மாளிகையில் வளர்த்தார். குழந்தைகளுக்கான படைப்புகளில் முத்திரை பதித்த எனிட் பிளைட்டன் 71 வயதில் (1968) மறைந்தார்.