இம்சை அரசன் ஸ்டைல்; ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட்ட 'புஜபல பராக்கிரமசாலி' புகைப்படம்: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

இம்சை அரசன் ஸ்டைல்; ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட்ட 'புஜபல பராக்கிரமசாலி' புகைப்படம்: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Updated on
1 min read

ராக்கி 3 ஹாலிவுட் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோனின் கட்டுமஸ்தான உடலில் தனது தலையைப் பொருத்தி ஃபோட்டோஷாப் செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ட்ரம்ப் அந்த புகைப்படத்திற்கு எந்த ஒரு விளக்கமும் வழங்காததால் உலக அளவில் அதன் நிமித்தமாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்க நேரப்படி நவம்பர் 27 காலை 10.54 மணிக்கு ட்ரம்ப் இப்புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பார்த்த மாத்திரத்திலேயே அது ராக்கி 3 படத்தின் நாயகன் ராக்கி பல்போவாவின் உடல் என்பது எல்லோரும் எளிதில் அறிய முடிந்தது. ஆனால் ட்ரம்ப் ஏன் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தார் என்பதுதான் யாரும் அறிய முடியாததாக உள்ளது.

அண்மையில் ட்ரம்ப் தனது பிறந்தநாளை ஒட்டி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். 73 வயதான அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகின. ஒருவேளை அவர் அதற்கு பதிலடியாக இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் என்ற யூகங்கள் இல்லாமல் இல்லை.

இதனிடையே ரஷ்யாவைத் தொடர்புபடுத்தி ட்விட்டரில் பகடிகளும் குவிகிறது. காரணம் ராக்கி 3 படத்தில் நாயகன் சில்வஸ்டர் ஸ்டாலோன் ரஷ்ய வீரரை எதிர்த்துப் போராடுவார். பலகட்ட முயற்சிகளுக்குப் பின்னர் ராக்கி ரஷ்ய வீரரை வீழ்த்தி வாகை சூடுவார். இதனை ஒப்பிட்டு வரும் அமெரிக்க மக்கள் ராக்கி ரஷ்ய வீரரை எதிர்த்தார் ஆனால் ராக்கி உடலை வாங்கியுள்ள நீங்கள் ரஷ்யாவுக்கு அல்லவா வெற்றிகளை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்காவின் இம்சை அரசன்..

இணையம் உலகில் எல்லைகள் இல்லை. அதனாலேயே அமெரிக்காவில் வெளியான ட்ரம்பின் புகைப்படம் வடிவேலுவின் இம்சை அரசன் 23-ம் புலிகேசியுடன் ஒப்பிடப்பட்டு நகைப்புக்குள்ளாகி வருகிறது.

இம்சை அரசன் படத்தில் வடிவேலு, தனது தலையை வீரர் ஒருவரின் உடலோடு பொருத்தி ஓவியம் தீட்டச் சொல்லி "வரலாறு மிக முக்கியம் அமைச்சரே" என்பார்.

இப்போது ட்ரம்ப் தனது தலையை ராக்கியின் உடலில் பொருத்தி வெளியிட்டிருப்பதால் "வரலாறு மிக முக்கியம் அதிபரே" என ட்விட்டராட்டிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in