

வீணாகும் நாட்டு மாட்டுச் சாணங்களிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கழுத்து மாலை, தோரணம், பேனா, செல்போன் ஸ்டாண்ட் உள்பட 100 வகையான கலைப்பொருட்களை தயாரித்து உசிலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பி.கணேசன் அசத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பி.கணேசன் (49). வெளிநாட்டில் வேலை பார்த்தவர் கடந்த 8 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு உசிலம்பட்டியில் 10 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார்.
இயற்கை விவசாயத்திற்கு ஆதாரமான புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கினார். அதன் மூலம் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மூலிகை பூச்சிவிரட்டி, இடுபொருட்களை அதிலிருந்தே தயாரித்து கொய்யா, தென்னை, முருங்கை மற்றும் தோட்டப்பயிர் விவசாயம் செய்து வருகிறார்.
இதில் வீணாகும் நாட்டு மாட்டுச் சாணம், சிறுநீரை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றும் வகையில் அதிலிருந்து 100 வகையான கலைப்பொருட்களை உற்பத்தி, விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து உசிலம்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பி.கணேசன், "இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தால் வெளிநாட்டு வேலையை துறந்து சொந்த ஊருக்கு வந்து 10 ஏக்கர் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினேன்.
அதில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நாம் விலை வைப்பதற்குப் பதிலாக வியாபாரிகள் விலை வைக்கின்றனர். இதனால் கட்டுபடியாகவில்லை.
இதனால் மாற்றி யோசிக்கத் தொடங்கினேன். வீணாகும் நாட்டு மாட்டுச்சாணம், சிறுநீரிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்கும் பயிற்சியை ஜார்க்கண்ட் மாநில அமைப்பிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
அங்கு 200 வகையான பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்தனர். ஆனால் கடந்த ஓர் ஆண்டாக கழுத்து மாலை, சாண இலை தோரணம், பறக்கும் பறவை தோரணம், பேனா ஸ்டாண்ட், செல்போன் ஸ்டாண்ட் மற்றும் பூஜைப் பொருட்கள், விபூதி, குங்குமச்சிமிழ், போட்டோ பிரேம் இயற்கை காட்சிகள், இறை உருவங்கள், ஆன்மிகச் சின்னங்கள், விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
ரூ.5 லிருந்து பொருட்கள் ரூ.10 ஆயிரம் வரைக்கும் பொருட்கள் உள்ளது. சின்ன கோயில் மாதிரியான அமைப்பை உருவாக்க ஆறு மாதமாகும். இதற்கு ரூ.10 ஆயிரம் செலவாகும். அனைத்து கலைப்பொருட்களையும் கைகளிலேயே தயாரிக்கிறேன்.
எனக்கு உதவியாக எனது மனைவியும் உதவி வருகிறார்" என்றார்.