Published : 27 Nov 2019 12:36 pm

Updated : 28 Nov 2019 10:29 am

 

Published : 27 Nov 2019 12:36 PM
Last Updated : 28 Nov 2019 10:29 AM

அன்புக்குப் பஞ்சமில்லை: 6- ’மன்னிச்சிருங்க...’, ‘மன்னிச்சிட்டேன்...!’ 

anbukku-panjamillai-6

வி.ராம்ஜி

ஒருநாளில் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். அங்கே அவர்களுடன் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நிகழ்கின்றன. அந்தச் சம்பவங்களின் போது, தெரிந்தோ தெரியாமலோ, அவர்களைக் காயப்படுத்திவிடுகிறோம். அதாவது மனதளவில் காயப்படுத்திவிடுகிறோம். அப்படியே மனதளவில் இல்லையெனினும் உடலளவில் லேசாகக் கூட மிதித்துவிடுகிறோம். அந்தத் தருணங்களில்... அப்படி அவர்களின் காலில் நம் கால் பட்டதும் உடனே நாம் தொடுவது போல் செய்து, காலைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, ‘ஸாரிங்க’ என்று கேட்கிறோம்.


ஒருவிஷயம்... இதற்கே ‘ஸாரி’ கேட்கிறோம் என்றால், நிஜமாகவே மனசைக் காயப்படுத்தி, தெரு முழுக்க அவமானப்படும்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, இன்னும் உச்சகட்டமாய் சாபம் போலான வார்த்தைகளை உதிர்த்து... என எவரையேனும் செய்திருப்போம்தானே. அப்படியெனில், அந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்பதுதானே நியதி. இப்படியொரு சம்பவம் நமக்கு நிகழ்ந்திருந்தால், ‘ஒரு ஸாரி கூட கேக்கமாட்டேங்கிறான்’ என்று பொருமிக்கொண்டுதானே இருப்போம்.

அடுத்தது... முதலில் சொன்ன, தெரியாமல் கால் மிதித்துவிட்ட சம்பவத்துக்குக் கூட இப்போது யாரும் ஸாரியெல்லாம் கேட்பதில்லை.
‘மன்னிப்பு... தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’ என்று விஜயகாந்த் வசனம் பேசியபோது கை தட்டியவர்கள்தான் நாம். அவரிடம் யாரெல்லாம் மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதும் யாரிடம் அது பிடிக்காத வார்த்தை என்று விஜயகாந்த் சொல்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

ஆனால் எல்லார் மனமும் அன்புக்கு ஏங்குவது போலவே, பாசத்துக்குத் தவிப்பது மாதிரியே, நேசத்துக்கு அல்லாடுவது போலவே மன்னிப்புக்காகவும் தவித்து மருகிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்ன... யாரேனும் நம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் யாரிடமும் மன்னிப்பு கேட்கக் கூடாது என்பதாகத்தான் இருக்கிறோம்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த நண்பன் தசரதன். பள்ளியிலும் தோழன். எட்டாவது படிக்கும்போது, ‘சி’ செக்‌ஷனில் உள்ள அன்னகருணா மீது இருவருக்குமே ஈர்ப்பு. இருவரும் முட்டிக்கொள்ள, ‘நீயா நானா’ போட்டி. ‘அந்தப் பொண்ணுக்கு யாரைப் புடிக்குதுன்னு பாப்போம்’ என்று முடிவானது. ஒருகட்டத்தில் அன்னகருணா, என்னை ‘டிக்’ செய்தாள். அந்தத் தருணத்தில் தசரதன் என்னுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டான். பள்ளி முடிந்து அவனுடன்தான் விளையாடுவேன். பள்ளிக்கு நானும் அவனும்தான் சேர்ந்து செல்வோம்.

தடக்கென்று வெறுமை. ஆனால் இந்த வெறுமையையெல்லாம் தாண்டி, அவன் வன்மத்துடன் இருந்தான். ப்ளஸ் ஒன் படிக்கும் அவளின் அண்ணனிடம் போட்டுக்கொடுத்துவிட்டான். மறுநாள் முதல், அண்ணனும் தங்கையுமாகப் பள்ளிக்கு வந்து போனார்கள். சமயம் பார்த்து ஒருநாள், ஏதோ காரணம் சொல்லி, என்னை அவன் அடிக்கப் பாய்ந்தான். என் சட்டை கிழிந்தது. அவன் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையெல்லாம் தெரிந்த அன்னகருணா, என்னைப் பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டாள். ‘போ... அதனாலென்ன’ என்று தோள் குலுக்கி, அடுத்த காதல் நோக்கி நகர்ந்தேன். தசரதனுக்கு இதெல்லாம் தெரிந்தது. அவன்தானே இதற்கு டைரக்டர்.

ஆனால், நானும் அவனும் பேசிக்கொள்ள மூன்று வருடங்களாயின. அவன் அம்மாவுக்கு கால் உடைந்து படுக்கையான சூழலில், நானும் அம்மாவும் அடிக்கடி அவன் வீட்டுக்குச் சென்று பார்த்த வேளையில், இருட்டில், ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற சேகர் அண்ணாச்சிக் கடைக்கு இருவரும் போகிற வேளையில், சட்டென்று நின்று தசரதனைப் பார்த்தேன். ‘மன்னிச்சிருடா மச்சான். அவளால உங்கூட பேசாம இருந்துட்டேன் பாரு’ என்றேன். உடனே அவன் ‘அவங்க அண்ணன்கிட்ட போட்டுக்கொடுத்ததாலதான் அன்னிக்கி சண்டையே வந்துச்சு. அவளும் நீயும் பேசிக்காத சூழல் உருவாச்சு. எல்லாத்துக்கும் நான்தான் காரணம். மன்னிச்சிருடா மாப்ளே’ என்றான். ’பரவாயில்லடா’ என்றேன். பழையபடி சேர்ந்து சுற்றத் தொடங்கினோம்.

இங்கே... மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பு வழங்குபவர் பெரும்பாலும் சொல்லும் வார்த்தை ‘பரவாயில்லை’.
ஒருவரின் காலை நாம் மிதித்துவிட... உடனே அவர் காலைத் தொட்டு, ‘ஸாரிங்க’ என்கிறோம். உடனே அவர், ‘பரவாயில்லைங்க’ என்பார். அதேசமயம், இப்படி யோசித்துப் பாருங்கள். அதாவது, ஒருவரின் காலை நாம் மிதித்துவிடுகிறோம். ஆனால் அவரிடம் ‘ஸாரி’ கேட்கவில்லை. உடனே அவர் ‘பரவாயில்லை’ என்பதாக நினைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவாரா?
நாம் ‘மன்னிப்பு’ கேட்க வேண்டும். அவர் ‘பரவாயில்லை’ என்று மன்னிப்பு வழங்கவேண்டும். இதுதான் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இருக்கிற இயல்பு.

இருபத்தியொன்பது வயதிருக்கும் அப்போது. என் காதலை வீட்டில் சொல்லி சம்மதம் கேட்டேன். வீடு ரணகளமானது. அப்பா தலையில் கை வைத்து விக்கித்து உட்கார்ந்தார். அம்மா நெஞ்சிலும் வயிற்றிலுமாக அடித்துக்கொண்டு அழுது கத்தினாள். அப்போது வந்திருந்த அக்கா, அம்மாவுக்கு ஆறுதல் சொன்னாள். எனக்குப் புத்திமதி சொன்னாள். அக்காவுக்கும் காதல் திருமணம்தான். ஆனால் அவள் இப்படியெல்லாம் சம்மதம் கேட்காமல் அவளாகவே திருமணம் செய்துகொண்டாள். ஆனால் ரகசியக் கல்யாணத்தில் எனக்கு உடன்பாடில்லை.

பக்கத்து வீட்டு ராணி அக்காவும் எதிர் வீட்டு மேரியும் வீட்டுக்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். என் அம்மாவின் உயிர்த்தோழி வாசுகி அம்மாவும் வந்துவிட்டார். ‘என்ன சத்தம், ஏன் கூட்டம்’ என்று இன்னும் நான்கைந்து வீடு தள்ளியிருந்த அக்காக்களும் அத்தைகளும் கூட வந்துவிட்டார்கள்.

கூட்டம் ஏற ஏற சூடுபிடித்தது விவாதம். ஒருகட்டத்தில், அம்மா... மயங்கிச் சரிய, கடுப்பான அக்கா செருப்பை எடுத்து வந்து பொளேர் பொளேரென என்னை அடித்தாள். முகம், தலை, முதுகு, நெஞ்சு, கன்னம் என மாறி மாறி அடித்தாள். ‘வளர்ற புள்ள... வாழவேண்டிய புள்ள... இப்படி செருப்புல அடிக்கக் கூடாதும்மா’ என்று சொன்னார்கள் எல்லோரும். அக்காவின் கையில் இருந்து செருப்பைப் பிடுங்குவதற்குள் போதும்போதும் என்றானது.

புயலடித்து நான்கு மணிநேரம் கழித்து ஓய்ந்திருந்த வேளை. அக்கா ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். அப்படி வீட்டுக்கு வந்துவிட்டுக் கிளம்பினால், அவளை சைக்கிளில் கொண்டுவிடுவேன் நான். ஆனால், என்னைக் கூப்பிடவில்லை. அவள் கிளம்பும் போது, ‘இரு. மூஞ்சிய அலம்பிட்டு வரேன். சைக்கிள்ல கொண்டுவிடுறேன்’ என்று சொன்னதுதான் தாமதம்... ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாள். அப்படியே சரிந்து காலில் விழுந்தாள். மீண்டும் அக்கம்பக்கம் வந்துவிட்டது. என்னாச்சோ... ஏதாச்சோ... என்று பதட்டம்.

‘என்னை மன்னிச்சிருடா அண்ணாப் பயலே. உன்னை செருப்பால அடிச்சதுக்கு என்னை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டிருக்கலாம். லவ் பண்ணிதானே நீ கல்யாணம் பண்ணிக்கிட்டே. என்னை அப்படி கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு வாயே இல்ல. வெளியே போ’ன்னு சொல்ல எவ்ளோ நேரமாகும். ஆனா செருப்பால அடிச்சேன். எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லலியேடா’ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

‘என்னைக் கண்டிக்கிற உரிமை உனக்கு இருக்கு. நீ என்னை அடிச்சதுல எனக்கு எந்தக் கோபமோ வருத்தமோ இல்ல. வீட்டை விட்டு வெளியே போ அப்படின்னு உன்னை நான் எப்படி சொல்லுவேன். என் கூடப்பிறந்தவ நீ ஒருத்திதானே’ என்று சொல்லிவிட்டு, முடிக்க முடியாமல் நானும் அழுதேவிட்டேன்.

இதை இப்போது கூட சொல்லிக்கொண்டே இருப்பாள் அக்கா.

ஒரு மிகப்பெரிய இடைவெளியைக் கூட மன்னிப்பு எனும் ஒற்றை வார்த்தை, கரைத்துக் காணடித்துவிடும். காற்றே நுழையாத அளவுக்குப் பிணைத்துவிடும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்றிருந்த போது, நண்பனைச் சந்தித்தேன். அவன் வேறொரு பகுதியில் குடியிருந்தான். அப்பாவுக்கும் இவனுக்கும் கடும் சண்டையாம். காரணம்... மனைவியும் இவனுடைய அம்மாவும் என்றான். இந்தச் சண்டையில் வார்த்தைகள் தடித்துக் கொண்டே இருக்கும் மோசமான நேரத்தில், ‘உன் பொண்டாட்டி தாலி அறுத்தாத்தான் நாங்க நிம்மதியா இருப்போம்’ என்று தன் அப்பாவிடம் சொல்லிவிட... அவன் அப்பா அப்படியே உட்கார்ந்துவிட்டார். அம்மா சுவரில் முட்டிக்கொண்டு கதறினாள். மனைவி வீட்டு வாசலுக்கு வந்து மண்ணை வாரி இறைத்தாள். கட்டின துணியுடன் மனைவியின் வீட்டுக்குச் சென்றான்.

நாலாம் நாள், அவனுடைய மாமனார் வந்து சாமான்களையும் பீரோ கட்டிலையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு வேனில் ஏற்றிச் சென்றார். மாமனார் வீட்டுக்குப் பக்கத்தில் வாடகைக்கு வீடு பார்த்துக் குடிபோனார்கள். ஐந்தாவது மாதத்தில், ரேஷன் கார்டு அப்ளை செய்தார்கள். அதற்கு அப்பாவின் ரேஷன் கார்டில் உள்ள தன் பெயரையும் மனைவி பெயரையும் நீக்குவதற்கு இன்னொரு நண்பனை அனுப்பிவைத்தான்.

அந்த வீடு, காற்றிழந்த ஓட்டை பலூனாக அழகைத் தொலைத்துவிட்டிருந்தது. அந்தத் தெருவில் தெரிந்தவர் அறிந்தவர் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பமாக வந்தாலும் அப்பா வீட்டுப் பக்கம் திரும்பக்கூட இல்லை. அம்மாவின் தாலி, அப்பாவின் மரணம் என பையனே பேசிப் பிரிந்த பிறகு, அந்த 63 வயது அப்பா, நடைபிணமானார். ரத்தக்கொதிப்பு எகிறியது. சரியாகச் சாப்பிடாததால் சர்க்கரை அளவு தாறுமாறானது. ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். ‘மாஸீவ் அட்டாக்’ என்றார்கள். பத்தாம் நாள் இறந்துவிட்டார்.

எல்லோரும் சொல்லி, தயங்கித் தயங்கிப் போனான் அவன். ஊரே கரித்துக் கொட்டியது அவனை. கூனிக்குறுகி நின்றான்.

‘அம்மா சொல்றதைக் கேட்டு நடந்துக்கோனு பொண்டாட்டிக்கிட்ட சொல்லத் துப்பில்ல எனக்கு. அப்பா இருக்கற வரைக்கும் நம்ம வீட்டுக்கு அவர்தான் ராஜா. அம்மாதான் ராணி. அடங்கி ஒடுங்கி இரு, மரியாதை கொடுன்னு சொல்ல புத்தி இல்ல எனக்கு. நானும் சின்ன வயசிலேருந்து அப்பாவையும் அம்மாவையும் மதிக்காமத்தான் இருந்தேன். அவங்களை நான் மதிச்சிருந்தேன்னா, என் பொண்டாட்டியும் மதிச்சிருப்பா.

அன்னிக்கி சண்டையும் ரகளையுமா தெருவே நாறிப் போனப்ப, நான் கொஞ்சம் அமைதியா இருந்திருக்கணும். அங்கே, அம்மா பக்கம் நின்னிருக்கணும். நான் அம்மா பக்கம் இருந்தா, அப்பா, மருமகளுக்கு சாதகமா பேசியிருப்பாருடா. என்னபேசுறோம் ஏது பேசுறோம்னு தெரியாம இன்னிக்கி அப்பாவை இழந்துட்டு நிக்கிறேன். அப்பா சிகரெட் அடிக்கமாட்டாரு. தண்ணி கிடையாது. வெத்தலப் பாக்கு கூட போடமாட்டாரு. உனக்குத்தான் தெரியுமே. ‘உன் பொண்டாட்டி தாலி அறுத்தாத்தான் நிம்மதி’ன்னு சொன்னேன். இப்போ எங்க ஒட்டுமொத்த குடும்பத்துல நிம்மதியே இல்லடா.

‘அத்தை என்னை மன்னிச்சிருங்க’ன்னு அப்பா செத்த அன்னிக்கி புரண்டு புரண்டு அழுதா என் மனைவி. என்ன புண்ணியம். மன்னிச்சிரும்மான்னு அம்மா கிட்ட என்னால கேக்கவே முடியல. அப்பாவோட பாடிக்குப் பக்கத்துல யாரோ ஒருத்தன் மாதிரி நின்னேன். வாழ்க்கைலயே கொடுமையான, கேவலமான டைம் அது. இப்போ, வர்ற அழுகையை நான் என்ன செய்றதுன்னு யோசனை. அழலாமா. அழுதா ‘அப்பனைச் சாகடிச்சிட்டு நடிக்கிறான் பாரு’ன்னு சொல்லிடுவாங்களோன்னு தவிக்கிறேன்.

அதுவரைக்கும் செவுத்துல சாஞ்சு உக்கார்ந்திட்டு அழுதுக்கிட்டே இருந்த அம்மா, தடக்குன்னு எந்திரிச்சு அப்படியே எம் மேல பாய்ஞ்சு வந்து என்னைக் கட்டிக்கிட்டா. ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்குற நம்ம புள்ள வந்துருக்குது பாருங்க... எந்திரிங்க’ன்னு என் கன்னத்தைத் தடவி, கையைக் கோத்துக்கிட்டு அப்படியே என் தோள்ல சாஞ்சிகிட்டு அழுதா. இதாண்டா மன்னிப்பு. ‘மன்னிச்சிரும்மா’ன்னு நான் கேக்காமலேயே எனக்கு மன்னிப்பு கொடுத்தா அம்மா.

அம்மா சொந்தவீட்ல தனியாத்தான் இருக்குது. நாங்க வாடகை வீட்லதான் இருக்கோம். ‘இங்கேயே வந்துருங்க’ன்னு அம்மா கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்குது. எனக்குத்தான் மனசு வரல.

அந்த மன்னிப்பை என்னால ஏத்துக்க முடியல. அம்மாவோட தாலி போகணும்னு சொன்ன எந்தக் கேடுகெட்ட பயலுக்கும் மன்னிப்பே கொடுக்கக்கூடாதுடா. என்னை மாதிரி கேவலமானவய்ங்களுக்கு மன்னிப்பே கிடையாதுடா... எனக்கு மன்னிப்பே கிடையாதுடா’ என்று முகத்தில் அடித்துக்கொண்டு, அவன் வீட்டு நடுஹாலில் அழுதபடியே என் தோளில் சாய்ந்தான்.

‘அண்ணே... நான்தான் பாவிண்ணே. சாகற வரைக்கும் இந்த வலி போகவே போகாதுண்ணே’ என்று அவன் மனைவியும் அழுதாள்.
இங்கே... பரந்த மனதுடன் மன்னிப்புகள் தரப்பட்டாலும் அந்த மன்னிப்பை ஏற்பதற்கான தகுதியை இழந்து நிற்கும் நிலை... மிகப்பெரிய சோகம். வரமென்றிருக்கும் வாழ்க்கையை நாமே சாபமாக்கிக்கொள்கிற துயரம்!

நாம் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாம் யாரையெல்லாம் மன்னிக்க வேண்டும் என்றும் பட்டியல் போட்டு, இந்த வாழ்வைப் பகுத்துப் பார்த்தால்... நாம் கேட்கிற பட்டியலும் நீளம். கொடுக்க நினைக்கிற மன்னிப்புக்கு உரியவர்களும் அதிகம்.

முதலில்... வரிசையாக போன் போட்டு மன்னிப்பு கேட்டுவிடுவோம். மனசு தக்கையாவதை உணரலாம்.

‘இதுவரைக்கும் அம்பத்தியேழு பேர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். ஆனா ஒரு பய நம்மகிட்ட மன்னிப்பு கேக்கவே இல்லீங்களே...’ என்கிறீர்களா?

பரவாயில்லை... அவர்களையும் மன்னித்துவிடுங்களேன்.

மன்னித்தலின் மற்றொரு பெயர்... அன்பு!


- வளரும்


அன்புக்குப் பஞ்சமில்லை - 6 :  ’மன்னிச்சிருங்க...’‘மன்னிச்சிட்டேன்...!’அன்புக்குப் பஞ்சமில்லைவாழ்வியல் தொடர்வாழ்க்கையைச் சொல்லும் தொடர்அன்பைச் சொல்லும் தொடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author