

வரலாற்று மற்றும் புராதன சிறப்புமிக்க கிருதுமால் நதியை தூர்வாரி வைகை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வைகை ஆற்றில் சில வாரங்களாக நீர் நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. வைகையின் கிளை நதியான கிருதுமால் நதியிலும் இந்த தண்ணீரை திறந்துவிட்டால் அழியும் நிலையில் உள்ள கிருதுமால் நதியை மீட்க முடியும். மேலும் மதுரை நகரின் நிலத்தடி நீராதாரம் மற்றும் கிருதுமால் பூர்வீக பாசன நிலங்களும் பயன்பெறும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து “இந்து தமிழ்” உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட மதுரையைச் சேர்ந்த 74 வயதான அழகுமுத்து வேலாயுதம் கூறியதாவது, சோழவந்தான் அருகிலுள்ள முள்ளிப்பள்ளம் என்ற இடத்தில் துவங்கும் கிருதுமால் நதி அச்சம்பத்து வழியாக மதுரை நகருக்குள் பயணித்து சிந்தாமணி, சாமநத்தம் வழியாக சென்று குண்டாறுடன் இணைந்து பின்பு கடலில் கலந்தது.
இந்நதியால் மதுரை மட்டும் அல்லாது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது இந்நதியின் ஒரு பிரிவு நிலையூர் பகுதி பாசன வாய்க்காலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நகருக்குள் ஓடிய நதி வெறும் கழிவுநீர் வாய்க்காலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலக்கால் அருகே ஓடும் கிருதுமால் நதி
தற்போது வைகையில் ஓடும் தண்ணீரை கிருதுமாலில் விட்டால் இந்நதியை அழிவிலிருந்து காக்கலாம். வைகை தண்ணீரை கிருதுமாலில் திறக்க வசதியாக கோச்சடை, ஆரப்பாளையம் ஆகிய இடங்களிலிருந்து இணைப்பு கால்வாய்களும் இருந்தன. இவையும் தற்போது கழிவுநீர் செல்லத்தான் பயன்படுகிறது. கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டால் மதுரையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு இதன் மூலம் பாசன வசதி பெற்று வந்த நிலங்களும் மீண்டும் விளைநிலங்களாக மாறும்.
ஆட்சியர் கவனிப்பாரா?
இந்நதியை மீட்பதற்காக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தேன், பொதுப்பணித்துறை, மதுரை மாநகராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியிருக்கிறேன். கிருதுமாலில் மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணைந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அதில் சில அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மதுரை எல்லீஸ்நகரில் முழுக்க கழிவுநீராக ஓடும் கிருதுமால்
ஆனால் ஓராண்டைக் கடந்தும் கிருதுமாலில் தண்ணீர் திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள டி.ஜி.வினய், தான் பதவியேற்றபோது நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்போவதாக தெரிவித்திருந்தார். நகருக்குள் ஓடும் கிருதுமால் நதியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து இந்நதியை மீட்க அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.