

இந்தி கவிஞர், திரைப்பட பாடல் ஆசிரியர், சினிமா இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன்கொண்ட குல்சார் (Gulzar) பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டினா என்ற இடத்தில் (1934) பிறந்தார். இயற்பெயர் சம்பூரண் சிங் கல்ரா. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், கவிதைகள், இந்துஸ்தானி இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
l இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இவரது குடும்பம் அமிர்தசரஸ் வந்தது. இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கிக்கொள்ள கனவு நகரான மும்பைக்கு வந்தார். கார் மெக்கானிக்காக வேலை செய்தார். ஓய்வு நேரங்களில் புத்தகங் களைப் படித்தார்.
l சில எழுத்தாளர்கள் மூலம் பிரபல பாலிவுட் இயக்குநர் விமல் ராயின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்குநர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, ஹேமந்த் குமாரிடமும் உதவியாளராக இருந்தார்.
l விமல் ராயின் ‘பந்தினி’ திரைப்படத்தில் (1963) முதன்முதலாக பாடல் எழுதினார். பிறகு திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என வெற்றிப் பயணம் தொடங்கியது. ‘ஆனந்த்’, ‘குட்டி’ (Guddi), ‘பாவர்ச்சி’, ‘காமோஷி’ போன்ற படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ‘குட்டி’ படத்தில் இவர் எழுதிய ‘ஹம் கோ மன் கீ சக்தி தேனா’ பாடல் வட மாநில பள்ளிகளில் இப்போதும் பிரார்த்தனைப் பாடலாக பாடப்படுகிறது.
l ‘மேரே அப்னே’ திரைப்படம் மூலம் 1971-ல் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய ‘கோஷிஷ்’, ‘ஆந்தி’, ‘கினாரா’, ‘மீரா’ உட்பட பல திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றன.
l உருது, இந்தி, பஞ்சாபி மட்டுமின்றி, வட்டார மொழிகளிலும் கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். ‘சவுரஸ் ராத்’ சிறுகதைத் தொகுப்பு, ‘ஜானம்’, ‘ஏக் பூந்த் சாந்த்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான 20-க்கும் மேற்பட்ட நூல்கள் என பல படைப்புகள் வெளிவந்துள்ளன.
l சச்சின் தேவ் பர்மன், சலீல் சவுத்ரி, சங்கர்-ஜெய்கிஷன் தொடங்கி, 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
l ‘மிர்ஸா காலிப்’, ‘தரீர் முன்ஷி பிரேம்சந்த் கீ’ ஆகிய சின்னத்திரை தொடர்கள், ‘ஹலோ ஜிந்தகி’, ‘பொட்லி பாபா கீ’, ‘ஜங்கிள் புக்’ உள்ளிட்ட தூர்தர்ஷன் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான கதைகளை எழுதி, அவரது குரலில் பதிவு செய்யப்பட்ட ‘கர்தி கதா’ ஒலிநாடா தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
l சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண், தாதாசாஹேப் பால்கே விருது, ஏராளமான தேசிய திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக ஆஸ்கர், கிராமி விருதுகளைப் பெற்றார். குழந்தைகளுக்கான ‘ஏக்தா’ என்ற கதை நூலுக்காக என்சிஇஆர்டி அமைப்பின் விருது பெற்றார். அசாம் பல்கலைக்கழக வேந்தராக 2013-ல் நியமிக்கப்பட்டார்.
l அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைப்பட, இலக்கியத் துறையின் பல களங்களிலும் தனி முத்திரை பதித்துள்ள குல்சார் தற்போது 80 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்