

வாழ்க்கை என்று சொல்லும்போதே மரணம் என்ற சொல்லும் உடன் வந்துவிடுகிறது. இளம்பெண் மரணம் அல்லது மாணவன் மரணம் என்ற செய்திகளைக் காணும்போது வாழவேண்டிய வயதில் மரணமா என்ற கவலை எழுகிறது. இளம் மரணச் செய்திகள் வரும் போதெல்லாம் இந்த பூமி தனது சுழற்சியை நிறுத்திக் கொண்டதைப்போன்ற அதிர்ச்சியில் உணர்வுகள் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன.
ஒரு மரணம் காரணமாக சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு என்னவிதமான வலி என்பதையே உணராமல் விமர்சனங்களும் அறிவுரைகளும் வசைகளும் அடிபட்ட பழத்தின்மீது படியும் பாக்டீரியாக்களைப் போல மேலேமேலே படிந்துகொண்டே இருக்கின்றன.
ஒரு கொலைக்குப் பின்னுள்ள குடும்பத்தின் வலியைப் பேசுவதற்கு சில காட்சிகள் போதும். ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாக்கப்படுவதற்கு ஓர் அடிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய உணர்வு மட்டுமே போதுமானதாக இருக்கலாம். உண்மைச் சம்பவத்தை அப்படியே சித்தரிக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. ஓர் ஓவியத்தின் சில கோடுகளிலேயே காட்சியைக் கொண்டுவரும் லாவகம் அது.
1974-75ல் கேரளாவையே உலுக்கியெடுத்த ராஜன் கொலை வழக்கை இப்படித்தான் பிறவி படம் சித்தரித்தது.
கல்லூரி விழாவில் மாநில முதல்வர் கலந்துகொள்கிறார். அது இந்தியாவில் நெருக்கடி நிலை தொடங்கும் நேரம். ஒரு மாணவன் மேடையில் தோன்றி முதல்வருக்கு எதிராக ஒரு பாடலைப் பாடுகிறான். அடுத்தசில நாட்களில் அந்த மாணவன் போலீஸாரால் அழைத்துச் செல்லப்படுகிறான். காவல் நிலையத்தில் போலீஸாரால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட அவன் இறக்கிறான். இது ராஜன் என்கிற மாணவனுக்கு கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம்.
கேரள கல்லூரி மாணவன் ராஜன்
மாணவனின் தந்தை ஒரு பேராசிரியர். தனது மகனைக் காணவில்லை என்றுதான் முதலில் புகார் கொடுக்கிறார். கல்லூரியில் படிக்கப் போன மகன் காணாமல் போனது குறித்து கடைசிவரை நீதிக்காகப் போராடுவேன் என்று அவர் சூளுரைத்தார்.
கேரளா முழுவதும் ''ராஜன் எங்கே ராஜன் எங்கே'' என்ற கேள்விகள் மாநிலமெங்கும் பரவலாக சிதறத் தொடங்கின. அன்றைக்கு நினைவில் இருந்த ஒரு சம்பவத்தை நேற்று திருவல்லிக்கேணி பெரிய தெருவில் தேநீர் கடை வைத்திருக்கும் கேரள நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். உண்மையில் படத்தின் உள்ளடக்கத்தை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், இது ''ராஜன் கொலைவழக்கு போல இருக்கிறதே'' என்றார். பின்னர் அவரே தொடர்ந்தார். அவரிடம் பேசியது நல்லதாகிவிட்டது. எனக்குத் தெரியாத வழக்கின் இன்னும் பல பரிமாணங்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
''பல்வேறு மாணவர் இயக்கங்களும் இடதுசாரிகளும் திடீர் திடீரென பள்ளிகளை மூடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஜெயராம் ரோடு வேஸ் என்ற பஸ்ஸை பார்த்தாலே மாணவர்களும் மக்களும் அடித்து நொறுக்கிவிடுவார்கள். ஜெயராம் பேருந்துகள் அது யாருடையதென்றாலும் அவர்களுக்குக் கவலையில்லை... கேரளாவில் ஏராளமான ஜெயராம் ரோடுவேஸ் பஸ்கள் கொளுத்தப்பட்டன. ஜெயராம் வேறு யாருமல்ல. ராஜனை காவல் நிலையத்தில் சித்ரவதை செய்த எஸ்.ஐ. அவருக்குச் சொந்தமாக அவர் பெயரில் சில பேருந்துகளும் ஓடின என்பது உண்மைதான். ஆனால் அதே பெயரில் இருந்த பல பேருந்துகள் நாசமாக்கப்பட்டன.
ராஜன் மட்டுமில்லை. அவருடன் லக்ஷ்மண், விஜயன் ஆகிய மாணவர்களையும் கேரள போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் சென்றது. 'கஸ்டடி டெத்'தில் இறந்தது லக்ஷ்மண், விஜயன், ராஜன் ஆகிய மூவரும்தான். அவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட சமயம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. சில நாட்களிலேயே 'கஸ்டடி டெத்'தில் மூவரும் உயிரிழந்தனர். ராஜனின் உடலை ஒரு அணையிலிருந்து கீழே போட்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனால் கிடைக்கவே இல்லை.
ராஜனின் தந்தை நீதிமன்றத்திற்குச் சென்றார். அவர் கல்லூரிப் பேராசிரியர். பெயர் ஈஸ்வர வாரியார் என்று ஞாபகம். பல்வேறு சான்றுகள் அவருக்குச் சாதகமாகவே இருந்தன. கடைசியில் இவ்வழக்கில் காவல்துறையின் தவறு அம்பலமானது. இறுதியில் முக்கிய எஸ்.பி. உள்பட காவல்துறை பணியாளர்கள் தண்டிக்கப்பட்டனர். கல்லூரி மாணவனின் ஒரு கஸ்டடி டெத்துக்காக நீதிமன்றம் சென்று வெற்றிபெற்ற வழக்கு என்பதால் கேரளா முழுவதும் இது அன்றைய முக்கியப் பேச்சாக இருந்தது.''
அதைத் தொடர்ந்து அந்த நண்பர் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஒரு சம்பவம் கல்லூரி, அதைத் தொடர்ந்து இன்னொரு சம்பவம், சிறையில் மரணம், அதைத் தொடர்ந்து மக்கள் போராட்டம், அதைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கு, அதன் பின்னர் வழக்கின் தீர்ப்பு என இவ்வளவு இடங்கள் உள்ள பிரச்சினையில் பிறவி திரைப்படம் எங்கே செயல்படுகிறது என்பதுதான். ஒரு 15 ஆண்டுகாலம் கடந்த பிறகுதான் இது திரைப்படமாக உருவாகிறது.
இயக்குநர் ஷாஜி என்.காரூன் இதை உலகம் மறக்கமுடியாத ஒரு வடிவத்தில் தந்துவிட்டார். அவர் இந்தப் பிரச்சினையின் எந்த பாகத்தை எடுத்துக்கொண்டார்? இந்தக் கேள்வி ஏனென்றால் ஒரு நல்ல படைப்பாளிக்கு எது அவசியமாகப் படுகிறது என்பதுதான். இந்தப் பிரச்சினைகளை நம்மிடம் யாராவது சொல்லியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம். ஒரு ஹீரோ வழக்கை நடத்தி அதிலும் சிக்கல் என்றால் வில்லன்களை அடித்து நொறுக்கி நீதியை நிலைநாட்டும் அரதப் பழசான இன்றைக்கும் அப்பாவி மக்களிடம் செல்லுபடியாகும் ஒரு தேய்ந்த ரிக்கார்டு போன்ற ஒரு கதையையே யோசித்திருப்போம். இன்றைக்கு நமது ஹீரோக்களுக்கு இதுதான் வேலை.
ஆனால் பிறவி திரைப்படம் செயல்பட்ட இடம் வேறு. பாதிக்கப்பட்ட குடும்பம். நீதிகேட்டு நெடிய பயணம் மேற்கொண்ட தந்தையை அல்ல அவர் சித்தரித்தது, பாதிக்கப்பட்ட உடைந்த தந்தையின் மனதை.
எப்போதும் ஈரமாக இருக்கும் என் கேரளமே என்று ஸ்ரீதர மேனன் பாடிய கவிதை ரசித்த தருணங்களில்தான் 92களில் 'பிறவி' படம் பார்க்க வாய்ந்தது. கேரள படங்களில் மழை உண்மையின் சாட்சியாகவே இடம்பெறுகிறது. அதனால்தான் அவர்கள் செலவு செய்து செயற்கை மழையை வரவழைப்பதில்லை. பருவமழையின் வான்பொழியும் தாரைக்காக கேரள இயக்குநர்கள் எப்போதும் காத்திருக்கிறார்கள்.
கேரள கல்லூரி மாணவன் ராஜன் கொலை வழக்கு தொடர்பான 'பிறவி' திரைப்படம் மழைக்காலப் பின்னணியோடு படம் முழுவதும் மவுனத்தையே கேள்வியாக முன்வைக்கிறது. கொலைக்குப் பின்னுள்ள உள்ள அரசியலை கேள்விப்படுத்துவதுடன் ஒரு குடும்பம் வலியில் தத்தளிக்கும் மவுனமான ரணங்களை நமக்கு கடத்துகிறது.
வேலைக்குச் சென்ற பெண் பொழுதுசாய வீட்டுக்கு வரவில்லையே என இரவு முழுவதும் கவலையைத் தேக்கி வைத்திருக்கும் மிருணாள் சென் படம் ஒன்றில் சொல்லப்படுமே அதுபோன்ற ஒரு கவலை அது. பிரச்சினையின் கனம் காரணமாக 'பிறவி' திரைப்படம் மிகமிக மெதுவாக செல்லக்கூடியதாகவே இருக்கிறது..
ராஜனுடன் கல்லூரியில் படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரியிடம் கோயில் அருகே விசாரிக்கிறாள் அவனது சகோதரி மாலதி.
அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்ற பெயரில் எந்தவித அசட்டுத்தன முடிவுகளும் இன்றி பார்வையாளன் மனம்கொள்ளும்படியாக மிகச் சாதாரணமான கதை அமைப்பு அது. ஒரு பிரச்சினையை அதன் சகல பரிமாணங்களுடனும் முன்வைத்தாலே போதும். அந்த அழுத்தமே சமூகத்தைச் சிந்திக்கவைக்கும் என்பதுதான் இப்படம் நமக்குச் சொல்லும் செய்தி. பிரச்சினைக்குத் தீர்வுகாண அதைப் பொழுதுபோக்கு பண்டமாக மாற்றாமல் உணர்வின் படிமமாக மாற்றுவதற்கு மிகப்பெரிய பொறுமையும் கலை மீதான ஆழ்ந்த ஈடுபாடும் தேவை. இவற்றை யதார்த்த பாணி என்று அழைத்துக்கொள்வது விமர்சகர்களின் வேலை.
நாட்டில் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸி காலத்தின் ஒரு கதையைச் சொல்ல முனைந்த 'பிறவி' திரைப்படம் காட்சிக்குக் காட்சி அன்றைய கேரள சூழ்நிலைகளை விவரிக்க முனையவில்லை.
நாம் முற்றிலும் எதிர்பாராத வகையில் திரைப்படம் எங்கோ ஒரு குக்கிராமத்தின் வயல்காட்டுக்கு அருகே உள்ள ஒரு பாரம்பரிய வீட்டு முற்றத்தை நமக்குக் காட்டுகிறது. வீட்டுப் பின்வாசலில் கால்வாய் படித்துறை. படம் முழுவதும் மெல்லமைதி, நெருக்கடி சூழலுக்குப் பலியான மகன் வருவான் வருவான் என ஒவ்வொருநாளும் அவன் இறந்தது தெரியாமல் கடைசிவரை ஆற்றைக் கடந்து படகில் சென்று அக்கரையில் காத்திருக்கும் பெரியவர்.
பெரியவரின் சுருங்கிய நெற்றியின் புருவங்கள் கிராமத்தின் கடைசிப் பேருந்து வரும் ஓசையைக் கேட்ட மாத்திரத்திலேயே உயர்ந்து விரியும் தருணங்கள். பேருந்து அருகில் வருவதைக் கண்டதும் அவரது பொக்கை வாயில் சிறு புன்னகை. ராகவ சாக்கியராக இப்படத்தில் பிரேம்ஜி வாழ்ந்திருப்பது தனது 80 வயதுக்கும் மேலான காலத்தில்.
உணர்வின் காட்சிப் படிமங்களாக தீட்டப்பட்ட இப்படத்தின் யதார்த்த பாணிக்கு நாம் கொஞ்சம் பழக வேண்டியிருக்கிறது. வயதான ராகவன் சாக்கியார் படம் முழுவதும் அவனைத் தேடிச் சென்றுகொண்டேயிருக்கிறார். அவனைக் காண பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடக்கிறார். படத்தின் முதல் காட்சியில் அவர் படகில் கரையைக் கடந்து பேருந்து நிறுத்தம் வருகிறார். இடைவிடாமல் அவரது பயணம் ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. படத்தின் கடைசிக் காட்சியில்கூட அவர் கடைசிப் பேருந்தைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் இறந்தது குறித்து அவருக்குத் தெரியாது. அதனாலேயே அவன் வருவான் என்பது அவரது நம்பிக்கை.
இப்படி அழுத்தமான ஷாட்களை முன்வைத்த இயக்குநர் ஷாஷி என்.காரூன் தனது அடுத்தடுத்த வானப்பிரஸ்தம், ஸ்வப்னம், ஸ்வாஹம், ஊலு என வெவ்வேறு படைப்புகளில் வேறுவேறான சொல்முறைகளில் ஷாட்களை முன்வைத்துள்ளார். ஆனாலும் அவரது அழுத்தம் திருத்தமான காட்சி முறைகளிலிருந்து அவர் மாறவில்லை. அப்படியெனில் பார்வையாளனுக்கு ஒன்றை உணர்த்தும் பாங்கு மிகமிக முக்கியமானது என்பதுதான் அவரது எண்ணம்.
யதார்த்தப் பாணி படங்களை ஏற்றுக்கொள்ளுவதும் புறந்தள்ளுவதும் பார்வையாளனின் விருப்பத்தைப் பொறுத்தது. அல்லது அவனது வாழ்க்கை முறை, ரசனைத் தேர்வு, ஈடுபாட்டின் தன்மையைப் பொறுத்தது. ஆனால் இத்தகைய திரைப்படங்களைப் புறந்தள்ளும் மக்கள், நாயகனின் சண்டைக் காட்சிகளின் வழியே வில்லனின் புடைக்கும் மூக்குக்கு எதிரே முத்திரை வசனங்களைப் பேசி அவனை அடித்து துவைப்பதன் மூலம் தீர்வை கண்டு விட்டதைப்போல மகிழ்ச்சியடைகின்றனர். ஹீரோயிசமே மேலோங்கியுள்ள அடிதடி தீர்வில் மயங்கிக் கிடப்பது சமூகத்தின் ஒருவித பலவீனமான நிலை என்பதை அவர்கள் அறிவதில்லை. அல்லது நமது சினிமா காவலர்கள் அவர்களை அறியவிடுவதில்லை....
ஒரே நேரத்தில் சண்டைப் படமாகவும் சமூகப் பிரச்சைனையை பேசிய படமாகவும் இருக்கவேண்டிய லாபநோக்கு வகைமாதிரிகளால் உருவாகும் குழப்பம் இது. இந்த வகைமாதிரிக்குள் பாடல்கள் சண்டைகள், காமெடி என கலகலப்பாக பொழுதுபோகும். இதனால் உணர்வுநிலையில்கூட நாம் அதை அன்றைக்கே மறந்துவிடுவோம். முழுவதும் நகைச்சுவையாகவோ, முழுவதும் பாடலுக்கான ஒரு படமாகவோ, முழுவதும் ஆக்ஷன் படமாகவோ அல்லது முழுவதும் த்ரில்லர் வகையறா படமாகவே இருந்துவிட்டால் தவறில்லை. படத்தில் சமூக அக்கறை பேசும் பாவனைப் படங்கள் இல்லாத ஹீரோ பிம்பங்களை ஊதி பெரிதுபடுத்துவதால் நிஜத்தில் சமூகத்திற்கு முற்றிலும் அந்நியமான கற்பனை பிம்பங்களின் தலைவர்களே நமக்குக் கிடைக்கின்றனர்.
இதனால் 'பிறவி' போன்ற படங்களின் யதார்த்த பாணி வேகமாக கடந்து தப்பித்துச்செல்லும் அல்லது புறந்தள்ளும் மனநிலைக்கு ஆளாகின்றனர். இதனால் அத்தகைய படைப்புகளே இங்கு உருவாகாமல் ஒரு கேலிக்குரிய பொருளாகாவும் பார்க்கப்படும் நிலை உருவாகிறது.
உண்மையில் யதார்த்த பாணியின் அவசியம் குறித்த ஒரு அழுத்தமான பார்வை நமக்கு வேண்டியிருக்கிறது. சாமானியனுக்கு நேர்ந்த ஒரு அவலத்தை ஒட்டிய அவனுடன் சேர்ந்த சாமானியர்களின் உணர்வுகளுடன் நம்மை ஒன்றவைக்க பிரச்சினையை காத்திரமான புள்ளியிலிருந்து அதிகார வாசல்களை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. அதிகாரத் தாக்குதல்களினால் நேரும் அவலத்தில் துடிக்கும் மவுனத்தின் வலியைப் பார்வையாளனின் ஆழ்மனதோடு பேசிச் செல்கிறது.
கேரளாவில் கொலையுண்ட கல்லூரி மாணவன் ராஜனின் தந்தை ஒரு பேராசிரியர். கிட்டத்தட்ட அவர் வயதானால் எப்படியிருப்பாரோ அதேபோன்ற தோற்றம்,பொறுமை. ஆனால் மகன் மீது தீராத நேசம் என பிரேம்ஜி வயதான பேராசிரியராகவே, ராகவன் சாக்கியார் என்ற கதாபாத்திரத்தில் நம்முன் தோன்றுகிறார். ராகவன் சாக்கியார் தம்பதிக்கு ஒரு மகள் (நடிகை அர்ச்சனா) மற்றும் ஒரு மகன். மற்றும் வீடே உலகமென இருக்கும் மனைவி.
நடுத்தர வயது தம்பதியராக ராகவனும் அவரது மனைவியும் இருந்தபோது மகன் நீண்ட ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன். அதனால்தான் தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வரவேண்டியவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லை. அவனைப் பற்றிய எந்த செய்தியும்கூட கிடைக்கவில்லை என்றவுடன் உலகில் வேறெதுவும் அவருக்கு முக்கியமாகப் படவில்லை, மகன் வருகை ஒன்றைத் தவிர.
பேருந்திலிருந்து இறங்கிச் சென்றவர்களில் மகன் ரகுவின் கல்லூரித் தோழன் ஹரியும் ஒருவன். அவனிடம் விசாரிக்க, அவன் சரியாக பதில் சொல்லாமல் தெரியவில்லை என்று மழுப்பிச் சென்றுவிடுகிறான். ஒவ்வொரு நாளும் படகில் வந்து பேருந்து நிறுத்தம் வந்து காத்திருக்கிறார். கடைசிப் பேருந்து அவருக்கு நல்ல செய்தியை ஒருநாளும் கொண்டுவரவில்லை. எனினும் அவர் வாழ்வதே இதற்காகத்தான் என்பதுபோல வருகிறார்.
உள்ளூர் பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்களின் அதிகாலை அவசரங்களுக்கிடையே அவர் பொறுமையின் வடிவாகக் காத்திருக்கிறார். அவர் கிராமத்தில் படகுத் துறைக்கு வரும் பேருந்துக்குள் நுழைந்து பார்க்கிறார். ஒருநாள் வண்டி வந்து நின்ற பிறகும் எல்லோரும் சென்றுவிட்ட பிறகு பேருந்துக்குள் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்ட நிலையிலும்கூட அவர் உள்ளே சென்று இருக்கைகளில் ''ரகு ரகு'' என்று தேடுவது நம் மனதை சஞ்சலப்படுத்துகிறது.
போலீஸ்காரர்கள் ரகுவை கல்லூரி விடுதியிலிருந்து அழைத்துச் சென்றனர் என்ற செய்தியை நாளிதழில் காண நேர்கிறது. மறுநாளே திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். திருவனந்தபுரம் செல்ல அதிகாலையிலேயே வந்து பேருந்தில் அமர்ந்து கொள்கிறார் ராகவன் சாக்கியார். அப்படி நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறார். பேருந்து ஊழியர்கள் ஆற்றில் குளித்துவிட்டு வந்து சாமி படத்திற்கு தீபாராரனை காட்டிவிட்டு வண்டியை எடுக்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயில் கோபுரம் தெரியும் லாட்ஜ் வராந்தாவில் அவர் அமர்ந்திருக்கிறார். அப்போது சாலையில் செல்லும் காட்சிகள் யாவும் அவரது மனதின் கதவுகளைத் திறந்து திறந்து மூடுகின்றன. சாருலதா படத்தில் சத்யஜித்ரே காட்டும் தெருவின் காட்சிகளைப் போன்ற அழகுமிக்கவை.
முதலில் ஒரு காட்சி: தெருவில் ஒரு இழுவண்டியில் மகனை அமரவைத்து இழுத்துக்கொண்டு வேகமாக ஓடுகிறான் ஒரு தொழிலாளி. அது அவருக்கு புன்னகையை வரவழைத்து பின்னர் மனம் தனது மகனை நினைவுபடுத்திவிடுகிறது. சிறிது நேரத்திலேயே...
காட்சி இரண்டு: ஒரு தாய் தனது மகனை பள்ளிக்கூடத்திற்கு இழுத்துச் செல்கிறாள். பையனோ பின்னுக்கு இழுக்கிறான். அடித்து உதைத்து அவனை இழுத்துச் செல்கிறாள். அதைப் பார்த்து அவரது மனம் குறுகத் தொடங்குகிறது. சில நிமிடங்களில்...
காட்சி மூன்று: ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று ''உய்ங்உய்ங்'' சத்தத்தோடு அதே சாலையில் வேகமாக அவரது லாட்ஜைக் கடந்து செல்கிறது. அவரது மனம் மட்டுமல்ல நமது மனமும் சகுனம் தப்பாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. இதெல்லாம் யதார்த்த பாணியின் மிகச்சிறந்த படிமங்கள்.
ராகவன் தலைமைச் செயலகம் செல்கிறார். உள்துறை அமைச்சரைக் காண்கிறார். அவர் காவல்துறைத் தலைவருக்கு கைகாட்ட ஐஜி அலுவலகம் வருகிறார். அவரையும் சென்று பார்க்கிறார். ஆனால் அவர்கள் தங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதைக் கேட்டு ஊர் திரும்புகிறார். அமைச்சர், அதிகாரிகளைப் பார்க்கும் காட்சிகளில் ஆர்ப்பாட்டமில்லாத பழங்கால அரசாங்க அகன்ற மரப்படிகளின் காட்சிகள். திரும்பும்போதுகூட மகனின் நினைவுகள்.
மகனின் நினைவுகளால் அலைக்கழிக்கப்படும் இன்னொரு ஜீவன் ரகுவின் சகோதரி, மாலதி. மெல்லிய சோகம் இழையோட அதிராத கதாபாத்திரத்தில் தேசிய விருதுபெற்ற நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவரிடம் கதையில் உங்கள் இடம் இதுதான் என்று சொல்லிவிட்டால் போதும் போலிருக்கிறது. யதார்த்த பாணிக் கதைக்கான வாழ்வின் அசல் தன்மையைக் கொண்டுவருவதில் பெரிய மெனக்கெடுதல் இன்றி அர்ச்சனா சர்வசாதாரணமாக செய்கிறார்.
பள்ளி ஆசிரியையாக வயல், வாய்க்கால் வரப்பு, கடலோரம் என நடந்தபடி ரயில் ஓசையைக் கேட்டவாறு பள்ளிக்கு நடந்து வரும்போது வாய்க்கால் நீரில் தம்பியோடு விளையாடிய தருணங்கள் நினைவுகளாய் அலைக்கழிக்கின்றன. வீட்டின் தாழ்வாரங்களில் நடந்துசெல்லும்போதுகூட அவனுடைய இருப்பின் கடந்த காலங்கள் ஓசையாக ஒலிக்கற்றைகள் காதில் ரீங்காரமிடுகின்றன.
காட்டுக்கோயிலுக்கு மாலதி செல்லும்போது அங்கே ரகுவின் சக மாணவத் தோழன் ஹரியைக் காண நேரிடுகிறது. மடக்கி விசாரிக்கும்போது அவன் அவளைப் பார்க்காமலேயே திரும்பிக்கொண்டு பேசுகிறான்.
''அம்மா என்னைக் கோயிலுக்கு போய்ட்டு வரச் சொன்னாங்க.. அதுக்காகத்தான் இங்கே வந்தேன். ரகுவை போலீஸ் பிடிச்சிட்டுப் போனாங்க... அப்புறம் என்னன்னு எனக்குத் தெரியாது. அம்மா என்னைக் கோயிலுக்கு போய்ட்டு வரச் சொன்னாங்க.. அதுக்காகத்தான் இங்கே வந்தேன்'' என்று கூறிவிட்டுப் போய்விடுகிறான். ஆனால் அவனுக்குத் தெரியும் ரகு கொலையுண்டது. அதனை அவன் சொல்ல மறுக்கிறான் என்பதை மாலதி புரிந்துகொண்டுவிடுகிறாள்.
மாலதிக்கும் ஹரிக்குமான உரையாடல் சொற்ப விநாடிகள்தான். ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக காட்டுக்கோயிலில் வழிபாட்டுமுறை, சம்பிரதாயங்கள், காத்திருக்கும் பக்தர்கள் ஆகியவற்றை அடுத்தடுத்த ஷாட்களாக இடம்பெறுவது யதார்த்த பாணிக்கே உண்டான அரிதான கலையம்சம். இவ்வகை ஷாட்கள் படம் முழுவதும் ஏராளமாக உள்ளன. எந்தவித வசனங்களும் பிரத்யோக இசைக்கோர்வையும்கூட இல்லாமல் இந்த ஷாட்கள் மவுனத்தின் பிரதிநிதிகளாக இடம் பெற்றுள்ளன.
மாலதி திருவனந்தபுரம் செல்கிறாள். தன் சகோதரனின் கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவர்களிடம் விசாரிக்கிறாள். அங்குதான் அவர்கள் சொல்கிறார்கள். கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த மாநில முதல்வரை எதிர்த்து அவன் பாடிய பாடலைப் பற்றி. கேரளாவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதில் அன்றைய கேரள முதல்வர் கருணாகரனுக்கு முதலிடம் உண்டு. அவனது விடுதி அறைக்குச் சென்று அங்கே அவனது உடமைகளில் எதை எதையோ தேடுகிறாள்.
அங்கேயும் இந்த மவுனம் உண்மையைத் தேடும் சாட்சியாகப் பின்தொடர்கிறது. அங்கிருந்த ஒரு டைரிக்குறிப்பில் தனது அற்புதமான அழகுமிக்க வீட்டைப் பற்றியும் வீட்டு முற்றத்தைப் பற்றியும் அங்கே தன் சகோதரியுடன் விளையாடியதைப் பற்றியும் எழுதி வைத்திருக்கிற குறிப்புகளைப் படித்து உள்ளுக்குள் அழுது குமுறுகிறாள். அவளையும் மீறி வெளிப்படும் குமுறல் சுற்றிலும் சூழ்ந்திருந்த சில மாணவர்களிடம் தெறிக்கிறது. எதையும் பேசமுடியாதவர்களின் மவுனம் ஒரு இறுதி முடிவுக்கானது. ரகு இறந்துவிட்டான் என்பதை அவள் உறுதி செய்துகொள்வதை நாம் புரிந்துகொள்கிறோம்.
இப்படியொரு படத்தை தனது வாழ்நாளில் இதன்பிறகு ஷாஜி என்.கரூன் எப்போதுமே தந்ததில்லை. இந்தியாவும் கண்டதில்லை. இப்படம் வெளியானபோது கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இப்படத்தின் மீதான விமர்சனபூர்வமான கிடைத்த பலத்த வரவேற்பு வேறெந்த இந்தியப் படங்களுக்கும் கிடைக்காதது. 89களில் இதைப் பற்றிக் கேள்விப்படும்போதும் 92களில் இப்படத்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் மாநில மொழித் திரைப்பட வரிசையில் காண நேர்ந்ததும், பின்னாளில் 'லைட்ஸ் ஆன்' வாயிலாக சத்யம் திரையரங்கின் அகன்ற திரையில் 2007களில் காண நேர்ந்ததும் மேலும் மேலும் புரிதலை விரிவாக்கிக்கொள்ள உதவியது.
புகழ்பெற்ற இயக்குநர் ஜி.அரவிந்தன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மழைக்கால சிற்றுயிரிகளின் குரல்களுக்கு இடையூறில்லாத இசையை ஈரமான நிலப்பரப்புகளுக்கே உண்டான மெல்லிய இசையாமல் மெருகேற்றியிருக்கிறார்.
இயக்குநர் ஷாஜி என்.காரூன் புனேவில் படிக்கும்போதே ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம் வாங்கியவர். என்றாலும் இப்படத்தில் அவர் ஏற்றிருப்பது இயக்குநர் பொறுப்பு. தான் விரும்பும் வகையான ஒளிப்பதிவுக்கு சன்னி ஜோசப்பை நம்பியது வீண்போகவில்லை. விலைமதிப்பில்லா ஒரு பரிசாக பிரான்ஸில் ஆண்டுதோறும் நடக்கும் கேன்ஸ் திரைவிழால் ஒளிப்பதிவுக்கான கேமரா டி ஓர் சிறப்பு விருதைப் பெற்றது. வேறெந்த இந்தியத் திரைப்படமும் இதற்கான விருதைப் பெற்றதில்லை. மேலும் பாம்டி ஓர் விருதுக்கும் இப்படம் பரிசீலிக்கப்பட்டது. மற்ற இந்தியப் படங்களுக்குக் கிடைக்காத பெருமை இது.
ஷாஜி என்.காரூனின் இயக்கத்தில் அமைந்த அழுத்தமான காட்சிகளுக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருது, மற்றும் சிறந்த நடிகர், சிறந்த ஒலிக்கலவைக்கான வெள்ளித்தாமரை விருதுகள் உள்ளிட்ட கேன்ஸ், எடின்பர்க், சிகாகோ, ஹவாளி நாடுகளில் பல விருதுகளைக் குவித்தது.
இளவயது மரணம் கொடுமையானது. ஆனால் அதிர்ஷ்டவசமானது என்கின்றனர் சில அறிஞர்கள். படம் முழுவதும் ரகு கதாபாத்திரம் நமக்குக் காட்டப்படவில்லை. ஆனால் படம் முழுவதும் வீட்டின் வாசலில், மழை சொட்டும் நினைவுகளில் வாய்க்காலில் வரப்புகளில் படகு செல்லும் ஆற்றுப்பரப்பில் கல்லூரி ஹாஸ்டல் சாயம் கரைந்த வண்ணத்திலான அரசுக் கட்டிட வராந்தாவில், அறைகளில், தந்தை, சகோதரியின், மனம் பேதலித்து மருண்டு படுத்திருக்கும் தாயின் நினைவுகளில் ரகு நிறைந்திருக்கிறான்.
ரகு, நேர்மைமிக்க துணிச்சலின் குறியீடு. அதிகாரத்தின் தாக்குதலுக்கு ஆளான சாமானியர்களுக்கு ஏற்பட்ட அவலத்தின் குறியீடும்கூட. 'பிறவி' திரைப்படத்தின் வாயிலாக ரகு அரசாங்கத்தின் பலவந்த பிரயோகங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அரூபக் குறியீடாகவும் நம் நினைவில் தங்குகிறான்.
பால்நிலவன், தொடர்புக்கு: sridharan.m@hindutamil.co.in