Published : 20 Nov 2019 05:28 PM
Last Updated : 20 Nov 2019 05:28 PM

’’சபரிமலைக்கு போயிட்டு வாடா மாப்ளே...எல்லாம் சரியாயிரும்’’  - போதைக்கு அடிமையான நண்பனுக்கு இஸ்லாமிய நண்பனின் அறிவுரை

- சீன தேசத்தில் இருந்து ராஜா முகமது

ஐயப்ப சீசன் தொடங்கி விட்டது.


இந்த ஐயப்ப சீசன் வரும் போதெல்லாம் என் பால்ய நினைவுகளின் பக்கங்கள் சடசடவென புரள்கின்றன. ’என்னடா, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்’ என்று குழம்புகிறீர்கள்தானே.


பிறந்ததிலிருந்து, நம் தாய் மண்ணின் நம்பிக்கைகளிலும், கலாச்சாரங்களிலும் கலந்து, லயித்து வளர்ந்தவன் நான். இல்லை, நாங்கள்.
என் ஊரிலிருக்கும் பெருமாள் கோயில்,பாலசுப்ரமணியர் கோயில், அனுமார் கோயில், கருப்பண்ணசாமி கோயில், பகவதி அம்மன் கோயில், தைலாரம்மன் கோயில், அரசமர கற்பக விநாயகர் கோயில் என்று அனைத்து கோயில்களின் கற்பூர வாசனைகள் இன்னும் மூச்சுக் காற்றில் நிறைந்திருக்கிறது.


இதில் வராக நதிக் கரையோரம் வீற்றிருக்கும் கௌமாரியம்மன் கோயில் என் மனதிற்கு மிக நெருக்கம். அந்த கௌமாரியம்மன் கோயிலுக்கு எதிர்வீட்டில்தான் என் ஜனனம். சிறு பிள்ளை இளைப்பாற தாய்மடி தேடுவது போல், நான் விளையாட தேடிச் செல்லுமிடம் இந்த அம்மன் கோயில்தான்.


அங்கிருக்கும் ஒவ்வொரு செங்கல்லும், திருநீற்று வாசமும், தீர்த்தத்தின் குளுமையும், சுடர் விட்டெரியும் தீபத்தின் வெம்மையும், காற்றில் அசைந்தாடும் வேப்பமர இலைகளும், தல விருட்ச அரச மரமும், கையில் சூலத்துடன் சுயம்பாக வீற்றிருக்கும் அந்த அம்மனும் இன்னும் மனதிற்குள் அப்படியே..!


இந்த கௌமாரியம்மனின் திருவிழா என்பது என் பால்யத்தின் மிகப்பெரியக் கொண்டாட்டம், உற்சாகம், பேரதிசயம். ஆடி மாதங்களில் எல்.ஆர்.ஈஸ்வரி, காது வழியாக நுழைந்து மனதிற்குள் பதித்து விட்டுப் போன அம்மன் பாடல்கள், மரணிக்கும் வரை மறந்து விடுமா என்ன?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எந்தக் கோயில் படிகளும் இந்த முகமதுவை உள்ளே வரக் கூடாது என்று தடுத்ததே கிடையாது. இப்படியாக இரண்டறக் கலந்து வாழ்ந்த ஏகாந்த வாழ்க்கைக்கு முதல் சம்மட்டி அடி பாபர் மசூதியின் மத அரசியல் என்று சொன்னால் மிகையாகாது. இந்த பாபர் மசூதி பிரச்சினைக்கு பின்பு தான், இந்த சமூகத்திலிருந்து தனியாக பிரித்து எடுக்கப் பட்டேன். இந்த வலி, வேதனை, அழுகை, மனக் குமுறல் என்பவற்றையெல்லாம் எழுத்தில் சொல்லி மாளாது.


அது ஒரு பக்கமிருக்கட்டும், ஐயப்பனுக்கு வருகிறேன்.


என் உயிர் நண்பன் கணேஷின் அப்பா வருடம் தவறாமல் சபரிமலை சென்று வருபவர். அவர் குருசாமியும் கூட. கணேஷ், எங்கள் வீட்டில் செல்லப் பிள்ளையாகவும், நான் அவர்கள் வீட்டில் செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்தோம். அவன் அப்பா சபரிமலைக்கு மாலை போட்டு விட்டாலே, வீட்டில் களை கட்டத் தொடங்கி விடும். குருசாமி வீட்டில் மற்ற சாமிகளெல்லாம் குவிந்து விடுவார்கள். தீபங்கள் ஜொலிக்க, ’சாமியேய் சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் விண்ணை முட்டும்.


ஐயப்பன் என்பது உண்மையா? அல்லது அல்லாஹ் என்பது உண்மையா? என்ற கேள்விகளெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆன்மிகம் என்பது என்ன? இறை உணர்வை முழு மனதுடன் உணர்வதுதானே? அந்த இறையை அடைவதுதானே? விடுபடுதல் தானே? நண்பர்களுடன் கோயிலுக்குச் செல்லும் போது, அவர்கள் கண்களை மூடி சாமி கும்பிடும் பொழுது, நான் ஏன் கையை கட்டிக் கொண்டு நிற்க வேண்டும்? நானும் அவர்களுடன் கண்களை மூடி, என் மனம் முழுவதும் என் இறைவனை நிரப்பி, கைகூப்பி தொழுதிருக்கிறேன்.


நம் மனதை இறைவனிடம் ஒப்படைக்கும் இடம், மசூதியாக இருந்தாலென்ன? கோயிலாக இருந்தாலென்ன? இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று என் வேதங்கள் சொல்லும் பொழுது, இந்தக் கோயிலை மட்டும் புறக்கணித்து விடவா போகிறான்? பள்ளிவாசலில் கைகட்டிக் கொண்டு, மனதிற்குள் கல்லாப் பெட்டியில் காசை எண்ணிக்கொண்டிருப்பதை விட, எந்த இடமாக இருந்தாலும், மனதை முழுமையாக இறையிடம் ஒப்படைத்து விடுவதே சிறந்த ஆன்மிகம் என்பது என் நம்பிக்கை.


இதைப் போல மனதில் இறைவனை நிறைத்து நிந்திக்கும்போது, உடல் முழுவதும் சிலிர்த்து அடங்குவதை சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். 41 நாட்கள் விரதமிருந்து, தீயவைகளிடமிருந்து விலகி, சுத்தமாகப் புழங்கி, வேண்டுதல்களை, ஏக்கங்களை, கவலைகளை, வலிகளை, நம்பிக்கைகளை இருமுடிக்குள் கட்டி, தலையில் சுமந்து காடு மலை, நதியெனக் கடந்து, கூட்டத்தில் பிதுங்கி 18 படிகளைக் கடந்து ஐயனை தரிசிக்கும் அந்த ஒரு நொடியில், ஒவ்வொரு பக்தனுக்கும் இதே போலத்தானே உடலெல்லாம் சிலிர்த்து அடங்கும்? இதுதானே ஆத்மார்த்தமான ஆன்மிகம்!


அப்பா, பஜனை நேரங்களில், சபரிமலையின் சிறப்புகளை கன்னி சாமிகளுக்கு ஒவ்வொரு வருடமும் விளக்கி சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பேன். பம்பையின் கிளை நதியான அழுதை நதியில் குளித்து முடித்து, குறிப்பிட்ட ஒரு இடத்தில் கற்களை எறிய வேண்டுமென்று கன்னிச் சாமிகளுக்கு வகுப்பெடுப்பார். காரணம் என்னவென்று தெரியுமா?


எருமைத்தலை கொண்ட மகிஷி என்ற அசுரப் பெண்ணை ஆசீர்வதித்து அழகான யுவதியாக மாற்றும் மணிகண்டனையே அவள் மணக்க விரும்புகிறாள். தான் பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்து வரும் காரணத்தால், என்னால் உன்னை மணக்க முடியாது என்று அவர் கூற, இவள் வற்புறுத்த, இறுதியில், இந்த இடத்தில் மகா உற்ஸவத்தன்று, கற்கள் விழுவது எப்போது நின்று போகிறதோ, அன்று என் பிரம்மச்சர்யத்தைத் துறந்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று எஸ்கேப்பாகி இருக்கிறார். அவர் சந்தோஷமாக சிங்கிளாகவே கற்புடன் இருப்பதற்கு, கன்னிச்சாமிகள் எறியும் கற்கள் தான் காரணம் என்று கேட்கும் பொழுது அவ்வளவு வியப்பு ரேகைகள் படர்ந்தன என் முகத்தில்.
18 படிகளின் சிறப்புகளை விளக்கிச் சொல்வார். அதில் 16ம் படியின் நிலை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 16ம் படியை கடக்கும் ஒருவன், இறைவனின் படைப்பில் அனைவரும் சமமே என்று உணர்ந்து பிறரிடம் அகங்காரமில்லாமல் நடந்து கொள்ளும் நிலையை அடைகிறான் என்பது தான். இதுதானே உலக பொதுமறைகள் அனைத்தும் சொல்லும் மையக் கருத்து. இதுதானே மனிதனின் உயரிய ஞான தீட்சை.
சரி, இதை சமயம் சார்ந்த பயணமாக பார்க்காமல், பொதுவாகப் பார்ப்போம்.


மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனத்திற்குள் நுழைந்து, ஈரச்சாலைகளில் பாதம் பதித்து, காட்டுக் குயில்களின் கானங்களில் இழைந்து, 5000 அடி உயரத்திலிருந்து உருவாகும் ஒரு பெரு நதியில் குளித்து, சக மனிதர்களுடன் பகிர்ந்துண்டு, இயற்கையோடு ஒன்றிப் போவதென்பது எவ்வளவு பெரிய பேரனுபவம்! இயந்திர உலகில் இருந்து தொலைந்து இயற்கையுடன் கலந்து விடுதல் என்பதே ஒரு ஆன்மிக உற்ஸவம். பரம முக்தி. ஆன்ம நிறைவு.


விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் இணைந்து, அருகிலிருக்கும் ஏதாவது மலைக் கோயிலுக்கு சுற்றுலா சென்று வருவது வழக்கம். அதில், நாகேந்திரன் என்ற நண்பனும் அடக்கம். பாபர்மசூதி பிரச்சினை பூதாகரம் எடுத்திருந்த சமயம், இவன் கைகளில் புதிதாக சிவப்பு நிறக் கயிறு ஏறியிருந்தது.


வழக்கம் போல ஒரு விடுமுறையில், மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று வர, நண்பர்கள் அனைவரும் திட்டமிட்டோம். இந்த ட்ரிப்பில் நான் கலந்து கொள்வதற்கு நாகேந்திரன் புதிதாக எதிர்ப்பு தெரிவிக்க, குழப்பமானது. ’இவனை (இஸ்லாமியர்) எதுக்குடா நம்ம கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்’ என்று இவன் பிரச்சினையைக் கிளப்ப, மற்ற நண்பர்கள் அவனிடம் சண்டையிட்டு, மொத்தமாக ட்ரிப் நின்று போனது. அதற்குப் பிறகு எப்பொழுதுமே போகவில்லை. அவனையும் சந்திக்கவில்லை.


சில வருடங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றிருக்கையில், நாகேந்திரனைப் பற்றி எதேச்சையாக விசாரித்தேன். ’அவன் பெரிய கஞ்சா குடிக்கி ஆயிட்டான்டா மச்சான். 24 மணி நேரமும் போதைலதான் கெடக்கான்’ என்று நொந்துபோய்ச் சொன்னான் நண்பன்.


ஒரு மாலை வேளையில், நியூ கிரவுண்டுக்குச் செல்லும் பொழுது, வழியிலிருக்கும் கருப்பண்ணசாமி கோயிலின் எதிரேயிருந்த மரத்தடியில் முழு போதையில் அமர்ந்திருந்தான் நாகேந்திரன். "டேய், மாப்ள, எப்டிறா இருக்க? என்று அருகில் சென்றமர்ந்தேன். ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தான் வெகு நேரம்.


ஒரு கட்டத்தில், கைகளைப் பற்றிக் கொண்டு, உடைந்து அழத் தொடங்கினான். "மாப்ள, என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுடா. எல்லாத்துலயுமே தோத்துட்டேன். நான் ஏன் உசுரோட இருக்கேன் இன்னும்னு எனக்கே தெரியலடா. மனசுல நிம்மதியே இல்லடா. நிம்மதிக்காக குடிக்க ஆரம்பிச்சி, இப்ப போதைல முழுசா முங்கிட்டு வெளிய வரத் தெரியாம என் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறேன்டா மாப்ள" என்று வாய் விட்டு அழுதான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.


’எல்லாம் சரியாகிடும்டா மாப்ள, முடிஞ்சா கணேஷ் அப்பாவோட சேர்ந்து மாலை போட்டு சபரிமலைக்கு போய்ட்டு வா ஒரு தடவை, மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.


நான்கு மாதம் கழித்து, "மாப்ள, மலைக்கு போய்ட்டு நேத்துதான்டா வந்தேன். குடியெல்லாம் விட்டுட்டேன்டா. அங்க போய்ட்டு வந்த பொறவுதான் மனசுல தெம்பும் தைரியமும் வந்திருக்கு. இது எனக்கு மறுபிறவி மாதிரி இருக்குடா. இப்ப இந்த உலகமே எனக்கு புதுசா தெரியுதுடா மாப்ள. வாவர் மசூதிக்கு போயிருந்தேன். அங்க, உன் ஞாபகந்தான் மாப்ள வந்துச்சு. வந்ததும் உங்கிட்ட பேசணும்னு தோணுச்சுடா மாப்ள. ரொம்ப தேங்க்ஸ்டா" என்ற வாய்ஸ் நோட்... நாகேந்திரன் நம்பரிலிருந்து என் வாட்ஸப்பிற்கு வந்து விழுந்திருந்தது. .


ஒரு வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்பு, அவனுக்காக கையேந்தி நான் செய்த பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்த இறைவனுக்கு நன்றி.
மதங்களைக் கடந்து மனிதம் எய்துவதற்கு அன்பு என்ற ஆயுதத்தைத் தவிர, வேறு ஏதேனும் ஆயுதத்திற்கும் சக்தி இருக்கிறதா என்ன?


சாமியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா!

- ராஜா முகமது, புதுக்கோட்டை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x