Published : 20 Nov 2019 02:24 PM
Last Updated : 20 Nov 2019 02:24 PM

அன்புக்குப் பஞ்சமில்லை - 5 : ’எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

வி.ராம்ஜி

நாம் எல்லோரும் தனித்தனியானவர்கள்தான். முன்பெல்லாம் இதுவொரு வீடு, அதுவொரு வீடு என்றிருந்தது. இப்போது வீட்டில் இருப்பவர்களே தனித்தனி உலகமாகிவிட்டார்கள். அந்தக் காலத்தில்... அதாவது இருபது வருடங்களுக்கு முன்பு, கணவன், மனைவி, குழந்தைகள் என்று வாழ்ந்தால், அது தனிக்குடித்தனம் என்றிருந்தது. இப்போது கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தாலும் அது தனிக்குடித்தனம் போலத்தான் உள்ளது என்று மறைந்த நகைச்சுவை எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் சொன்னதை, நகைச்சுவையாக மட்டுமே பார்க்க முடியாது.

இப்படி தனித்தனியாக வாழும் உலகில், பொதுவான வார்த்தைகளை மட்டும் எல்லோரும் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ‘இதை அவர் சொன்னாரே...’ என்றோ ‘அதை அவர் சொன்னாரே...’ என்றோ அந்த வாசகத்தைப் புறந்தள்ளுவதே இல்லை. அந்த பிரசித்தி பெற்ற வாசகம்... ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’

இதிலொரு ஆச்சரிய முரண்... ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற வாசகத்தைச் சொல்லாதவர்களே இல்லை. பிறகு எப்படி ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்றாகும்?

மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கிற புருஷனும் கணவனின் பேச்சைக் கேட்டு நடக்கிற மனைவியும் வரம். ஆனால் என்ன... மனைவி என்ன சொல்கிறாள்... எதைச் செய்யச் சொல்கிறாள்... எதைக் கூடாது என்கிறாள் என்பதில்தான் இருக்கிறது அது வரமா, சாபமா என்பது?

என் நண்பரை ரொம்ப நாள் கழித்து சந்தித்தேன். இருவரும் டீக்கடையில் நின்று டீ குடித்தபடி, இருபது நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவருக்கு அவர் மனைவியிடம் இருந்து போன். எடுத்துப் பேச ஆரம்பித்தவரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கியது. ‘அது இல்லம்மா’ என்றார். ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கூடாதா?’ என்றார். ‘ஒரு அஞ்சாறு நாள்தானே’ என்று கெஞ்சினார். ‘எனக்காக விட்டுக்கொடுக்கக் கூடாதா?’ என்று சொல்லும் போது அவர் குரல் உடைந்து, கம்மத் தொடங்கிற்று. ஆனால் எதிர்முனையில் இருந்து எந்தவொரு சாதகமான பதிலும் வராமல், இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு, தீக்குச்சியை ஆவேசத்துடன் வீசினார். அவரின் தோள் தொட்டேன். ’என்னடா?’ என்று கேட்டதும் பொசுக்கென்று கண்ணிலிருந்து வெளியே வந்து வழிந்தது கண்ணீர்.

‘’ஆலங்குளத்துலேருந்து அம்மா அவளுக்கு போன் பண்ணிருக்காங்க. பசங்களைப் பாக்கணும்போல இருக்காம். எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க இறந்துட்டாங்க. அதனால கேதம் விசாரிக்கணுமாம். அடுத்த மாசம் அறுப்பு சமயம்ங்கறதால, ரெண்டு மூணு மாசத்துக்கு வேலை இருக்குமாம். அதனால இப்ப வரேன்னு சொல்லிருக்காங்க. அவங்ககிட்ட சரிசரின்னு தலையாட்டிட்டு, ‘அவங்களை அடுத்த வருஷம் வரச்சொல்லுங்க. இப்போ வரவேணாம்னு சொல்லிருங்க’ன்னு எரிஞ்சு விழறா.

உனக்குத்தான் தெரியுமேடா. எங்க அம்மாவும் அப்பாவும் விவசாயம் பண்ணி என்னைப் படிக்க வைச்சாங்க. ஏழாவது படிக்கும்போது எங்க அப்பா பாம்பு கடிச்சு செத்துட்டாரு. அன்னிலேருந்து ஒத்தையாளா அம்புட்டு நிலத்தையும் பாத்துக்கிட்டு, எங்களையும் வளர்த்து ஆளாக்கினாங்க. அவங்க ஒருநிமிஷம் அக்கடான்னு உக்காந்து நான் பாத்ததே இல்லடா. அவங்களை ‘என் வீட்டுக்கு வராதே’ன்னு நான் எப்படிச் சொல்லுவேன்.

வந்து ஒரு நாலுநாளோ ஆறுநாளோ இருக்கப்போறாங்க. போகப்போறாங்க. ஆனா அந்த ஆறுநாளுக்கு முன்னாடியும் பின்னாடியும் அந்த ஆறுநாளும்னு ரெண்டு மாசத்துக்கு இவ போடுற சண்டையும் கூச்சலும் வார்த்தைகளும் வீட்டையே நரகமாக்கிரும்டா.

ஆலங்குளத்துல இருக்கற வீடு, நிலம் நீச்செல்லாம் இவளுக்கு வேணும். அவங்க மட்டும் வேணாம்னா எப்படிடா? சரி... ஒரு மாமியார் ஸ்தானத்துல இருந்து இவங்க கொடுமை பண்ணிருந்தாலாவது இப்போ வரக்கூடாது, போகக்கூடாதுன்னு சொல்றதுல ஒரு கோப நியாயம் இருக்கு. இந்தப் பன்னெண்டு வருஷத்துல, ஒரு தடவை கூட என் பொண்டாட்டியை எங்க அம்மா திட்டினதே இல்லடா. அவ்வளவு ஏன்... என் மாமனாருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்துச்சு. அப்போ எங்கிட்டயும் காசு இல்ல. அம்மா போன் பண்ணி, அவங்களோட பதிமூணு பவுன் நகையை அடகுவைச்சு பணம் போட்டு வுட்டாங்க. அந்த நகைக்கு வட்டி கட்டு, திருப்பி மீட்டுக்கொடுன்னு இதுவரை கேக்கலடா. அவங்களைப் போய் இவ இப்படி நடத்துறா. வெடுக்குவெடுக்குன்னு பேசுறா. வேதனையா இருக்குடா.

என் அம்மான்னு இல்லடா. என் சித்தப்பா பொண்ணு, அத்தை பையன், எங்க தாய்மாமா, என் நண்பர்கள்னு யாரைப்பாத்தாலும் இப்படித்தான் தள்ளிவைச்சிருவா. வரவேணாம்னு சொல்லிருவா. அவளுக்கு அவ சொல்றது நடக்கணும். அவ்ளோதான். அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அம்மாவை தாங்குதாங்குன்னு தாங்கற பொண்டாட்டி எனக்குக் கிடைக்கணும்டா மாப்ளே’ என்று சொல்லிவிட்டு குலுங்கி அழுதான்.

இன்னொரு நண்பன். இது மாமியார் - மருமகள் விஷயமில்லை. கணவன் - மனைவி விஷயம். அவன் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது. நண்பனின் அண்ணனுக்குத் திருமணமாகி மூன்று வருடம்தான் ஆகிறது. இதற்குள் முப்பது முறை சண்டைபோட்டிருப்பாள் அண்ணி. ஒரு குழந்தையும் பிறந்த நிலையில், வாய்வார்த்தைகள் தடித்த சண்டையில் அண்ணி, அப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டாளாம்.

இப்போது எல்லோரும் பேசி சமாதானம் செய்ய... அண்ணி போட்ட கண்டிஷன்... ‘வரேன்... ஆனா அவங்க அம்மா பேர்ல இருக்கிற வீட்டை எம்பேர்ல எழுதிவைக்கணும். நாளைக்கி எனக்குன்னு எதுனா இருந்தாத்தானே எம் பொழப்பு ஓடும்!’

சண்டைக்குக் காரணம் வீடில்லை. ஆனால் சமாதானத்தின் விளைவாக ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறது மனம். ’என்ன இப்படி வெடுக்குவெடுக்குன்னு பேசுறா?’ ‘ஏன் எதுக்கு எடுத்தாலும் தூக்கியெறிஞ்சு பேசுறா?,’ ‘புருஷன்னு ஒரு மட்டுமரியாதை இல்ல. வீட்ல பெரியவங்க இருக்கோமே, அவங்ககிட்ட சொல்லுவோம்னு இல்ல’ என்று அவள் போட்ட சண்டையை விவாதித்தவர்கள் கூட, ‘வந்தா போதும், சேர்ந்து வாழ்ந்தா போதும்’ என்ற முடிவில் இறங்கிவந்துவிடுகிறார்கள். ‘கட்டிக்கிட்டவளுக்கு கோணல் புத்தின்னு தெரிஞ்சுபோச்சு. வந்தவளை, இனியாவது அனுசரிச்சி அவ மனசு கோணாம வாழப் பாரு’ என்று அண்ணனுக்கு தம்பி உட்பட ஊரே கூடி அட்வைஸ் செய்தபடி இருந்தது.


‘வீட்டுக்கு வரக்கூடாது’ என்று ஒருத்தி சொல்கிறாள். ‘வீட்டை என் பேர்ல எழுதிவை’ என்று இன்னொருத்தி சொல்கிறாள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்கிற விதமாகத்தான் இரண்டு கணவர்களும் புலம்பினார்கள். அவர்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள உறவுக்காரர்களும் வருந்துகிறார்கள்.

அறுபது பவுன் நகையுடன் வந்த என் அம்மாவை, பாட்டி அப்படிக் கொடுமைப்படுத்தியிருக்கிறாள். அந்த வீட்டில் உள்ள இருபத்தி நான்கு பேருக்கும் அம்மா வேலைக்காரி போல் இருந்தாளாம். ஜுரம், உடம்புக்கு முடியலை என்றாலும் வேலை மொத்தமும் இவள் தலையில்தானாம். ஒரு வெந்நீர் வைத்துக் குளிக்கக் கூட அனுமதியில்லையாம். அப்படி வெந்நீரில் குளிக்கிறாளா இல்லையா என்பதை, பாத்ரூமில் இருந்து சின்னக் கால்வாய் போல் ஓடும் பாதையில் கால் வைத்துப் பார்ப்பாளாம். வெந்நீரில் குளித்தால் சாப்பாடு கிடையாதாம்.

அம்மா எப்போதாவது அந்தக் கதையைச் சொல்லுவாள். அதைக் கதையாகக் கடந்துவிடமுடியாது. எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகள், நம்மைத் தூங்கவிடாமல் செய்துவிடும்தானே. எழுத்தாளர்களும் என்ன... கற்பனைக்குள் யாரோ ஒருவரின் கதையை, வேதனையை, வலியை வைத்துதானே நமக்குத் தருகின்றனர்.

அத்தனைக் கொடுமைகள் செய்த மாமியாரை, அம்மா ‘இனி என் முறை’ என்று வறுத்தெடுத்ததே இல்லை. பாட்டியை வருந்தச் செய்ததே இல்லை. பாட்டி படுத்த படுக்கையாகி, இறக்கும் தருணத்தில், ‘நீ பண்ணிக்கொடுப்பியே கேசரி. அதைக் கொஞ்சம் பண்ணிக்கொடேன்’ என்று திக்கித் திணறிக் கேட்டதும், அடுத்த பத்தே நிமிடத்தில் அம்மா, கேசரி பண்ணியதும், ஆறவைத்து ரெண்டே ரெண்டு ஸ்பூன் கேசரி கொடுத்ததும், அதை சாப்பிட்டபடியே அம்மாவை கண்ணீர் மல்க பாட்டிப் பார்த்துக்கொண்டே உயிர்விட்டதும்... ஆயிரம் மன்னிப்புகளுக்குச் சமம்.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று அம்மா, மாமியார் கொடுமையைச் சொல்லிகொண்டே தான் இருந்தாள். அதை ஒருபோதும் மறக்கவே இல்லைதான். ஆனாலும் அதற்காக, மாமியாரைப் புறக்கணிப்பதையோ காயப்படுத்துவதையோ மாமியாருக்குப் பதிலாக அவளின் மகனான கணவனை வறுத்தெடுப்பதையோ ஒருபோதும் செய்யவில்லை.

‘என் பொண்டாட்டி செய்ற அராஜகம் தாங்கமுடியலீங்க’ என்று என் உறவுக்காரப் பையன் சொன்னான். கலகலவெனச் சிரித்தேன். அதையும் சொல்லத்தான் வேண்டும்.

’’திருச்சிலேருந்து அம்மாகிட்டேருந்து போன் வரும். ‘என்னடா நேத்து தண்ணியடிச்சியாம். ஏண்டா இப்படி உடம்பைக் கெடுத்துக்கறே. ரொம்ப வருத்தப்பட்டாடா. சொல்லிச் சொல்லி அழறா. பாவம்டா அவ. நம்மளே கதின்னு நம்ம வீட்டுக்கு வந்தவ, கண்ணு கசங்கக்கூடாதுடா.அப்படி அவ அழுதா, நாம மட்டுமில்ல, நம்ம வம்சமே நல்லாருக்காது’ன்னு அட்வைஸ். ‘அடச்சே... உடம்பு ரொம்ப டயர்டா இருந்துச்சு. மனசும் பாரமா இருந்துச்சு. க்ளைமேட் வேற மாறி மாறி வந்துச்சா... சரி... ஒரு குவார்ட்டரைப் போடுவோம்னு போட்டாக்க, அதை இவ, எங்க அம்மாகிட்ட சொல்லிட்டா. ஒரு குவார்ட்டருக்கு, ஏழு வம்சத்தையும் இழுத்து விட்டு மிரட்டுறா அம்மா.

இப்படித்தான் வீட்டுக்கு ஏ.சி. வாங்குவோம்னு சொன்னேன். ‘அய்யோ... கரண்ட் எகிறிடுங்க’ன்னு அவ சொன்னா. ‘இல்லப்பா... ஆபீஸ்ல சென்ட்ரலைஸ்டு ஏசியா இருக்கறதால, ஒரு நாளைக்கு எட்டு பத்து மணி நேரம் ஏஸிலயே இருக்கறதால, வெயில் காலத்துல நைட்டு கசகசன்னு இருக்கு. ஏசி போட்டாக்க, நிம்மதியாத் தூங்கிடலாம். மறுநாள் வேலை பாக்கவும் ஃப்ரஷ்ஷா இருக்கும்’னு எவ்ளவோ வாதாடினேன். ஆனா, இவ கேக்கவே இல்ல. அவ எவ்வளவோ சொன்னா. நான் கேக்கவே இல்ல.

ஒருநாள்... மத்தியானம் அம்மாகிட்டேருந்து போன். ‘நேத்திக்கி நாம எந்தத் தப்பும் பண்ணலியே’ன்னு யோசிச்சிக்கிட்டே போனை எடுத்தேன். ‘என்ன துரை... நல்லா இருக்கீங்களா. துரைக்கு ஏ.சி. இல்லாம தூக்கம் வராதோ? ஏ.சி.ல போடுற காசை, தங்கத்துல போடலாம். தவிர கரண்ட் செலவும் கன்னாபின்னானு எகிறும். அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். அவகிட்டயும் இப்பதான் சொன்னேன். ஏ.சி. வாங்கிக்கோ. ஒருவாரமா, குட்டி போட்ட பூனை மாதிரி, ரூமுக்கு ஹாலுக்குமா தூக்கம் வராம, புழுக்கத்துல அலைஞ்சியாமே. வாங்கிக்கோ வாங்கிக்கோ’ன்னு சொன்னாங்க. அன்னிக்கி சாயந்திரமே நானும் அவளும் போய், ஏ.சி. வாங்கினோம்.

என் அம்மாவை மனைவி மதிக்கிறாங்கறது எவ்ளோ பெரிய நிறைவான விஷயம். அதேசமயத்துல, எதுக்கெடுத்தாலும் நம்மளை அம்மாகிட்ட போட்டுக்கொடுத்துடுறாப்பா. அது கொடுமை’’ என்று சிரித்துக் கொண்டே சொன்ன நண்பனுக்குப் பின்னே, அவனது மனைவியும் அம்மாவும் சிரித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

‘கரெக்ட்டா நாம பஸ் ஸ்டாப்ல நிக்கும்போதுதான், இந்தப் பாழாப் போன பஸ்சே வராது. மத்த நாள்ல பாருங்க... சர்சர்ருன்னு வரிசையா வந்துகிட்டே இருக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னே தெரியல’ என்று சொல்லாதவர்கள் யாராவது இருந்தால், கை தூக்குங்களேன்.

அப்படித்தான் இதுவும். உறவுகளில், உறவுச்சூழல்களில் இப்படியான எகிடுதகிடான விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். பள்ளி வாகனங்களில் ‘வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது’ என்றொரு வாசகம் எழுதப்பட்டிருப்பது போல், குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் உறவுச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சில கருவிகள் உள்ளன.

அம்மாவுக்கும் மனைவிக்கும் நடுவே ‘கோதாவரி... ஒரு கோட்டைக் கிழி’ என்று ஆரம்பத்திலேயே கிழித்துப் பிரிப்பதுதான் நம்முடைய பெருந்தவறு. அப்படிக் கிழிக்கும் போது ஒரு பார்வையாளராக மட்டுமே நாம் இருந்துவிடுவதுதான் ஆகப்பெரிய குற்றம். இதில் இருந்துதான் தொடங்குகின்றன ஒவ்வொரு தவறுகளும்!

ஆலங்குளம் மாமியாருக்கு போன் போட்டு, ’ஒருநாலு நாள் இங்கே வந்து இருந்துட்டுத்தான் போகணும்’ என்று அந்த மருமகள் சொல்லும் காலமும் வரலாம். ‘இப்பலாம் என் மனைவி அப்படியில்லடா. வீடு கட்ட ஆரம்பிச்சோம் பாரு. அதுலேருந்து அவ மாறிட்டா. பக்கத்துத் தெருவுல தெரிஞ்ச வீட்டுப் பொண்ணு பெரியவளாயிட்டா. நம்ம பொண்ணும் இப்படிப் பெரியவளாகற நேரம் வருமேனு யோசிச்சா. கொஞ்சம் கோபம் குறைய ஆரம்பிச்சிருச்சுடா’ என்று டீக்கடையில் டீ குடித்தபடி, ஆனால் சிகரெட் புகைக்காமல் நண்பன் பெருமிதம் பொங்கச் சொன்னாலும் சொல்வான் ஓர்நாள்.

கணவனை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கும் அக்கா, அம்மா இறந்து ஒருவருடமான நிலையில் பேச்சுவாக்கில் சொன்னாள்... ‘’போன வருஷம் அப்பா இறந்தார். ஆஸ்பத்திரி செலவுலேருந்து ஈமச்சடங்கு வரைக்கும் எல்லாம் பண்ணினே. அடுத்த மாசமே அம்மாவுக்கு முடியல. டயாலிசிஸ் பண்ணி, இந்த ஒருவருஷமும் அம்மாவுக்கு எல்லாத்தையும் பாத்துக்கிட்டே. நாந்தான் எதுவுமே செய்யலடா. ஒரேயொரு தடவை டயாலிசிஸ் பண்றதுக்குக் கூட காசு தரல. ‘எனக்கு மட்டும்தான் ஏன் இப்படிலாம் நடந்துச்சோ? புருஷனைப் பறிகொடுத்தேன். அப்புறம் அப்பா. இப்போ அம்மா. எதுவுமே செய்ய முடியாம நிக்கிறேன். உனக்குத் துணையா பண பாரத்தை ஏத்துக்க வக்கில்லை எனக்கு’’ என்று சொல்லிவிட்டு பொசுக்கென அழுதாள்.

‘காசு யாரு வேணா செலவு செய்யலாம். ஆனா இத்தனை வருஷமும் அப்பா, அம்மா ரெண்டுபேரையும் அப்படிப் பாத்துக்கிட்டியே. அதுக்கு ஈடே இல்ல’ என்று சொல்லித் தேற்றினேன். அது உண்மையும் கூட!

‘வீட்டை என் பேருக்கு எழுதி வைன்னு அண்ணி சொல்லுது. ‘இந்த வீடு உங்களுக்குத்தான். இந்த வீட்லேருந்து எனக்கு எந்தப் பங்கும் வேணாம் அண்ணி’ என்று சொல்லிவிட்டு வந்ததை அந்த நண்பர் சொன்னார்.

சுடச்சுட, இனிக்க இனிக்க, நெய் மணக்க, ஒரு கிண்ணத்தில் தருகிற கேசரியிலும் கேட்கிற கேசரியிலும் இருக்கிறது மன்னிப்பு.

இவற்றுக்கெல்லாம் மற்றொரு பெயர் உண்டு. அது... அன்பு.

-வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x