Published : 13 Nov 2019 01:15 PM
Last Updated : 13 Nov 2019 01:15 PM

அன்புக்குப் பஞ்சமில்லை  4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை!’

வி.ராம்ஜி


நம்பிக்கைதானே வாழ்க்கை. இந்த வார்த்தையை வேதாவாக்காகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தானே நாம்.


இங்கே, ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான நம்பிக்கை. தன் மீது, தாய்தந்தை மீது, திறமையின் மீது, நண்பர்கள் மீது, படித்த படிப்பின் மீது என எத்தனைவிதமான நம்பிக்கைகள். இவையெல்லாம் வாழ்வில் உயரவேண்டுமே என்கிற ஆசையின் உந்துதலால் வருகிற நம்பிக்கைகள்.
ஆனால், சாமான்யமாக சக மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பதுதான் இங்கே பெரும்பங்கு வகிக்கிறது. இந்த நம்பிக்கையின் படி நடக்காத போது எதிர்தரப்பில் இருப்பவர்கள், இதை எதிர்பார்ப்பு என்கிறார்கள். அதேபோல், நம்பிக்கை வைத்தவர்கள், அதன்படி நடக்காத தருணத்தில் நம்பிக்கைத் துரோகம் என்று அதைச் சொல்கிறார்கள். எதிர்பார்ப்பு என்பது கிழக்கு என்றால், நம்பிக்கைத் துரோகம் என்பது மேற்கு. ஆனால் இரண்டுக்குமான பிணைப்புதான், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்துகொண்டே இருக்கிறது.


நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஏரியாவில் தசரதன் என்றொரு நண்பன் இருந்தான். அவர்களின் குடும்பமே நாத்திகக் குடும்பம். வாசலில் மிகப்பெரிய பெரியாரின் படம் வைக்கப்பட்டிருக்கும். அவரின் அப்பா, ஸ்பஷ்டமாக ‘ழ’கரம் உச்சரிப்பதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அந்தக் குடும்பத்துக்கு மாதந்தோறும் பொருளாதார நெருக்கடி வரும். அந்தத் தருணங்களில் தெரிந்தவர்களிடம் நூறு இருநூறு கைமாற்று வாங்குவார். ‘சம்பளம் வந்ததும் திருப்பித் தரேன்’ என்பார்.


ஆனால் சம்பளம் வரும்போது புதிதான செலவுகள் வரிசைகட்டி நிற்கும். இதனால் பழைய கடனை, கைமாற்றைக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். சம்பளம் வந்த கையுடன், யாரிடம் பணம் வாங்கியிருந்தாரோ அவரிடம் நேராகச் செல்வார் தசரதனின் அப்பா. ‘இந்த மாதம் தடால்னு இந்த செலவெல்லாம் வரப்போவுது. அதனால உங்ககிட்ட வாங்கின இருநூறு ரூபாயை அடுத்த மாசம்தான் கொடுக்கமுடியும். என்னை மன்னிச்சிருங்க’ என்று இரண்டு கைகளையும் கூப்பிச் சொல்லுவார். ‘அட... இதைச் சொல்றதுக்கு மெனக்கெட்டு வரணுமா தட்சிணா?’ என்பார்கள்.


உடனே இவர், ‘அதெப்படி? பணத்தை நேரா வந்துதானே கேட்டேன். இத்தனாம் தேதி தரேன்னுதானே சொன்னேன். அந்தத் தேதில அந்தப் பணத்தை எதிர்பார்த்து நீங்க இருப்பீங்களோ இல்லியோ... சொன்ன தேதிக்கு கொடுக்கமுடியலைன்னு நான் வந்து சொன்னாத்தானே அந்தப் பணத்துக்கும் பணத்தைக் குடுத்த உங்களுக்கும் மரியாதை’ என்று சொல்லுவார்.


சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றுவது என்பது நம்பிக்கையின் முக்கியமான விஷயம். நம்பிக்கை மட்டுமின்றி சக மனிதர்கள் மீதான மரியாதை குறித்த, அன்பு தொடர்பான உள்விவரங்களும் அடங்கியிருக்கின்றன.
ஆனால் இங்கே, ‘பத்த வச்சிட்டியே பரட்டை’ என்பதாகத்தான் பலரும் இருக்கிறார்கள். இங்கே சொன்னதை அங்கேயும் அங்கே சொன்னதை இங்கேயுமாகச் சொல்லித் திரித்துவிடுபவர்கள், திரித்தே சொல்லுபவர்கள் நிறைந்த மிக மோசமான உலகில், அடையாளம் கண்டுணர்வது லேசுப்பட்ட விஷயமா என்ன?


‘உங்கிட்ட சொன்னா, நீ யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னுதானே உங்கிட்ட ஓப்பனாச் சொன்னேன். என் மனசுல இருக்கறதையெல்லாம் உங்கிட்டச் சொன்னேன் பாரு... என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும்’ என யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம்.
ரமேஷ் என்றொரு நண்பன். இவனும் ஸ்டீபனும் நல்ல நண்பர்கள். அப்போது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தோம். ஸ்டீபன், நைன்த் சி சுபத்ராவை லவ் பண்ணினான். அவளும்தான். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பேசிக்கொள்வார்கள். வாராவாரம் கூடுகிற சந்தையில் பத்தடி தள்ளி நின்று, சர்பத் ஆர்டர் செய்து குடிப்பார்கள். இருவர் குடித்துக் கொண்டிருக்கிற சர்பத் தம்ளரை, ரமேஷ்தான் அழகாக தடக்கென்று மாற்றிக் கொடுப்பான். டிரான்ஸ்ஃபர் செய்யும் பணியைச் செய்து முடிப்பான். இதற்காக, ரமேஷுக்கு இரண்டு தம்ளர் சர்பத் கிடைக்கும். இப்படியொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு.


இப்படித்தான்... அந்த நட்பும் காதலும் அதலபாதாளத்திற்குள் விழுந்து நொறுங்கியது. அதற்குக் காரணம்... புரோட்டா.
சிறுகச் சிறுகச் சேர்த்த காசைக் கொண்டு, புரோட்டாவை பார்சல் வாங்கிக் கொண்டு, ஸ்கூல் கிரவுண்டுக்குச் சென்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த மாலையில், இரவு ஏழு மணிபோல, ஸ்டீபனும் வேறு சில நண்பர்களும் சாப்பிட்டார்கள். ஏதோ காரணத்தால் ரமேஷ் லேட்டாகத்தான் வந்தான். ‘எங்கடா புரோட்டா?’ என்று கேட்டு இல்லையென்றதும் ஆவேசமானான். ‘திரும்பக் கடைக்குப் போய் வாங்கிட்டு வா’ என்றான். ஆனால் ஸ்டீபனிடம் காசு இல்லை. கடுப்பாகிவிட்டான் ரமேஷ்.


அடுத்த நாலாம் நாள்... சுபத்ராவின் அண்ணனும் அவனுடைய நண்பர்கள் மூவருமாக வந்து, ஸ்டீபனிடம் ஏதோ வம்பிழுத்து, வெளுத்துத் தள்ளினார்கள். அடுத்த ஐந்தாறு மாதத்தில், ரமேஷ் - சுபத்ரா காதலை போட்டுக் கொடுத்தது ரமேஷ் என்று தெரியவந்ததும் நொறுங்கிப் போனான் ‘உம் மேல எவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தேன். இப்படிப் பண்ணிட்டியேடா’ என்று வாய்ப்பேச்சு, அடிதடியாக வளர்ந்தது. பிறகு சுபத்ரா வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டாள். ஸ்டீபனும் ரமேஷும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள். அங்கே, காதல் முறிந்ததோ சுபத்ராவைப் பார்க்க முடியாத நிலையோ பெரிதாக இல்லை. ‘ரமேஷ் மேல எவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தேன் தெரியுமா? நன்றி கெட்டவன்’ என்று திட்டிக்கொண்டே இருந்தான் ஸ்டீபன். அந்த நம்பிக்கையின் மரணத்தைத்தான் அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.


நண்பர் சமீபத்திய சந்திப்பின் போது சொன்னார். ஆச்சரியமாக இருந்தது.


‘’என் மனைவியோட பெரியம்மா பொண்னு. ஒருநாள் போன் பண்ணி ஆயிரம் ரூபா கேட்டா. அப்போ என் மனைவி பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருந்தா. அந்தப் பொண்ணு இப்படி எங்கிட்ட பணம் கேக்கறது இதான் முதல் தடவை. சரின்னு பணம் கொடுத்தேன். ‘நான் கேட்டதோ நீங்க கொடுத்ததோ யாருக்கும் தெரியவேணாம். உங்க பொண்டாட்டிகிட்ட கூட சொல்லவேணாம்’னு கோரிக்கை வைச்சா. எனக்கு விதுக்குன்னு தூக்கிவாரிப் போட்டுச்சு.


ஊர்ல இருக்கிற பொண்டாட்டிக்கு போன் போட்டுச் சொன்னா, அவ ஒருமாதிரி ஆயிருவா. சொல்லாமலே இருந்து, பின்னால யார் மூலமாவோ ஏன்... அந்தப் பொண்ணே சொல்றான்னே வைச்சுக்குவோம். அப்ப, நாம ஏதோ தப்புத்தண்டா பண்ணினா மாதிரி, கூனிக்குறுகி நிக்கணும். அதனால, குழந்தை பொறந்ததும் பாக்கப் போயிருந்தப்ப, இதுமாதிரி இதுமாதிரி விஷயம்னு எல்லாத்தையும் சொல்லி, யார்கிட்டயும் சொல்லவேணாம்னு சொன்னாங்கற வரைக்கும் ஒய்ஃப்கிட்டச் சொல்லிட்டேன். எக்காரணத்தை முன்னிட்டும் அவகிட்ட கேக்கவேணாம். சொல்லவேணாம்னு நம்பிக்கையாச் சொன்ன பிறகு, சொல்லிட்டது தெரிஞ்சா நல்லாருக்காது’ன்னு சொன்னேன். மனைவியும் சரின்னு சொன்னா. இதுவரை யார்கிட்டயும் சொல்லலை. அவகிட்டயும் கேக்கலை.


பல வருஷங்கள் ஓடிருச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பணத்தேவை. கொஞ்சம் டைட். என் மனைவி, அவளுக்கு போன் பண்ணி, பணம் கேட்டா. ‘ரெண்டு மாசத்துல தரேன்’னு சொல்லித்தான் கேட்டா. போதாக்குறைக்கு நானும் கேட்டேன். ‘இந்தா தரேன் அந்தா தரேன்’ன்னு சொல்லி ஒரு பத்துநாள். அக்கவுண்ட் நம்பர் அனுப்பு, கூகுள் பே - ல இருக்கீங்களா என்னனு ஏகத்துக்கும் கேள்விகள். ஒருநாள் என் மனைவிக்கு அவ அம்மாகிட்டேருந்து போன்... ‘நீ ஏன் அவகிட்டலாம் பணம் கேக்கற? அவ அவங்க அம்மாகிட்ட சொல்லி, அவங்க அம்மா... அதான் உன் பெரியம்மா எங்கிட்டக் கேக்குறாங்க’ன்னு சொல்லித் திட்டினாங்க.


அன்னிக்கி நான் பணம் குடுத்தேன். நம்பிக்கையாவும் இருந்தேன். இன்னிக்கி, எங்களுக்குப் பணமும் கொடுக்கலை. நம்பிக்கையாவும் நடந்துக்கலை. என்ன ஒலகம் பாருய்யா’ என்று பொருமித்தள்ளினார்.


எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பணம் குறித்த கேள்விகள் வரும்போதெல்லாம் எனக்கு ரோஸ்லின் நினைவுக்கு வந்துவிடுவாள். பள்ளித் தோழி. சொல்லப்போனால், வாழ்வில் காதலாகிக் கசிந்துருகிய முதல் ஈர்ப்பு இவளிடம்தான். கிறிம்சன் எனும் என்னுடைய நண்பனுக்கும் எனக்கும் இதில்தான் முட்டிக்கொள்ளும் அளவுக்கு சண்டை வரும். அவனுக்கும் காதல்... கசிந்துருகி... ஈர்த்திருந்தது.
இதைவிட்டுவிட்டு, அந்த ரோஸ்லினுக்கு வருவோம்.


பிளஸ் டூ படிக்கும் போது படிப்பு நிறுத்தி, ஊருக்கு அனுப்பிவைத்தார்கள். ஏதோ காதல் என்றார்கள். தீவிரமாகிவிட்டது என்றார்கள். அவசரம் அவசரமாக, தூரத்து சொந்தத்தை திருமணம் செய்துவைத்தார்கள். பிறகு நான்கு வருடங்கள் கழித்து வேலையின்மை, வறுமை, குடிகாரக் கணவன் முதலான காரணங்களால் திருச்சிக்கு வந்தாள்.


எங்கள் வீட்டுக்கு எதிரில் உள்ள போஸ்ட் ஆபீசில், ரோஸ்லின் அம்மா உட்பட பலரும் பென்ஷன் வாங்குவார்கள். மாதக்கடைசி தேதியில் ஏகத்துக்குக் கூட்டம் இருக்கும். எங்கள் வீட்டு வாசலில் அடர்ந்த வேப்பமர நிழலில்தான் எல்லோரும் இளைப்பாறுவார்கள். அங்கே, அடிக்கடி அதாவது மாதந்தோறும் ரோஸ்லின் அவள் அம்மாவுடன் வருவாள். வந்து நிற்பவர்களுக்கு அம்மா, குடிக்க தண்ணீர் தருவாள். சிலசமயம் மோர் கொடுப்பாள்.


அன்றைக்கு வேப்பமர நிழலில் ஏகக் கூட்டம். காட்டுக் கூச்சல் போட்டபடி யாரையோ திட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்கோ சென்று விட்டு வந்தவன், எட்டிப் பார்த்தேன். கூட்டத்துக்கு நடுவே ரோஸி. பென்ஷன் தொகையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்காமல் சேர்த்து வைப்பாளாம் அவளின் வயது முதிர்ந்த அம்மா. கடன் பிரச்சினை தாங்கமுடியாமல், அம்மாவின் கையெழுத்து போட்டு, எட்டாயிரம் ரூபாயை எடுத்துவிட்டாளாம் ரோஸ்லின்.


‘உங்க அம்மா பணத்தையே இப்படித் திருடிட்டியே. என்ன பொம்பள நீ’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகத் திட்டிக்கொண்டே இருந்தார்கள். ‘மாசம் பொறந்தா பென்ஷன்ல பாதிக்காசு தரேனே. கேட்டா குடுத்திருப்பேனே. ஏன் இந்த ஏமாத்துற வேலை’ என்று அவளின் அம்மா, இடி விழுந்தது போல் உட்கார்ந்து புலம்பியபடி இருந்தாள்.


‘இந்தக் காலத்துல பெத்த புள்ளைங்களை நம்பவே கூடாதுய்யா. நம்மள நம்பவைச்சு, பாசத்தையெல்லாம் காட்டி, கழுத்தறுத்திரும். நட்டாத்துல நம்மள நிறுத்திவுட்ரும். பொறத்தியாரைக் கூட நம்பலாம். பெத்துப்போட்டதுகளை நம்பவே கூடாது’ என்று சொல்லி, கத்தினார்கள்.
தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் ரோஸ்லின். அப்போது, சுற்றியிருப்பவர்களைப் பார்த்தாள். என்னையும் பார்த்தாள். அதுவரை அமைதியாக இருந்தவள், திடுமென்று வெடித்து ஓலமிட்டு அழத்தொடங்கினாள்.


திருட்டுப் பட்டம், குடிகாரக் கணவன், கடன் தொல்லை என சிக்கித்தவிப்பவளுக்கு, ஏதோவொரு நம்பிக்கை பொய்த்துப் போன துக்கம்; எதிர்பார்ப்பு ஈடேறவில்லையே எனும் அவமானம்.


ரோஸ்லின், பென்ஷன் புத்தகத்தை அவள் அம்மா முகத்தில் வீசினாள். ‘நான் ஒண்ணும் யார் காசையும் திருடல. எங்களுக்கும் நல்லகாலம் வரும். அப்போ... இந்த எட்டாயிரம் ரூபாயைத் திருப்பிக் குடுத்துருவோம்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பிச் சென்றாள்.
இதுவும் ஓர் நம்பிக்கையின் வெளிப்பாடுதான். ஏதோவொரு எதிர்பார்ப்பில் சொன்ன உறுதியான வார்த்தைகள்தான்!


நம்பிக்கைதானே வாழ்க்கை!


-வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x