Last Updated : 26 Aug, 2015 06:05 PM

 

Published : 26 Aug 2015 06:05 PM
Last Updated : 26 Aug 2015 06:05 PM

யூடியூப் பகிர்வு: மூன்றரை நிமிட பதிவில் சென்னையின் பெருமித முகம்

தென்னிந்தியாவின் கோட்டையாகவே திகழ்கிறது. எம்டன் குண்டுவிலிருந்து தப்பித்து ஒரு நூறாண்டாகிவிட்டது... என்றாலும் எந்த சிக்கலுமின்றி சென்னைக்கு நாளுக்கு நாள் வளர்முகம்தான்.

அப்போது மெட்ராஸ் என பெயரிடப்பட்ட சென்னை அன்று பார்த்ததுபோல் இன்று இல்லை. வெவ்வேறு தலைமுறை ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் கதைகள் வேறுவேறாகத்தான் இருக்கிறது.

இன்று இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக உலகில் காணவேண்டிய 52 இடங்களில் 26வது இடத்தை சென்னைக்கு வழங்கியுள்ளது நியூயார்க் டைம்ஸ்..

379 ஆண்டுகளாகிவிட்ட சென்னையைப் பற்றிய அறிமுகப்படுத்தும் மெட்ராஸ் டூ சென்னை இந்தக் குறும்படம் 3.45 நிமிடங்களே ஓடக்கூடியது. ஆனால் அதற்குள்தான் எவ்வளவு அழகான சித்தரிப்புகள்...

கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் தேவலாயம், உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரீனா, உத்வேகத்தை அளிக்கும் சென்னைக் கடற்கரையில் அமைந்துள்ள சான்றோர் பெருமக்களின் ஆளுயர சிலைகள், பழைமையான கவின்கலைக் கல்லூரி, கோட்டையில் உள்ள விலைமதிப்பற்ற அருங்காட்சியகம், பழைமையான ஹிக்கிம்பாதம்ஸ்.. பல வரலாற்று பெருமை மிக்க விஷயங்கள்..

அதேபோல இன்றைய நவீன சென்னையில் பிரமாண்டமான கோயம்பேடு பேருந்து நிறுத்தம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், சமீபத்திய மெட்ரோ ரயில், நவீனப்படுத்தப்பட்டுள்ள சென்னை பண்ணாட்டு விமான நிலையம், மிகப்பெரிய ஐடி பூங்காக்கள், என விரிந்துகொண்டிருக்கும் சென்னையின் நாளும் மாறும் காட்சிகள் நம் விழிகளை உயர்த்த வைக்கிறது...

ஸ்டீவ் ரோட்ரிகியூவ்ஸ் ஒளிப்பதிவில் ஜெராட் பெலிக்ஸ் இசையில் மற்றும் பலர் இணைந்து பணியாற்ற கட் கார்த்திக் இயக்கியுள்ள இக்குறும்படம் சென்னையைப் பற்றிய சிறிய அறிமுகம்தான் என்றாலும் செறிவான அறிமுகமாக அமைந்துள்ளதை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!