

விருதுநகர்
உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்குத் தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொடுத்த வள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தினர்.
செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்துத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மக்கள், அரசன், துறவி, ஆசிரியர், கணவன், மனைவி, மகன் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி அதிகாரங்களாகப் பிரித்து வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுத்துள்ள திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ல் திருக்கோயில் கட்டப்பட்டது. இன்றுவரை இங்கு சிறப்பான வழிபாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் வழித்தோன்றல்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமின்றி கிராம மக்கள் அனைவரும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அய்யன் திருவள்ளுவர் திருக்கோயில் நிர்வாகிகள் கூறியபோது, "வள்ளுவர் வழித்தோன்றல்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அய்யன் வள்ளுவர் சிலைக்கு நடத்தப்படும்.
அதைப்போன்று மாசி மாத பவுர்ணமி அன்று இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்பொழுது முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அய்யன் திருவள்ளுவரை வழிபட்டுச் செல்வார்கள்" என்றார்கள்.
அண்மையில் திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் ஆண்டாண்டு காலமாக அய்யன் திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வரும் கிராம மக்களின் பண்பாடு போற்றுதலுக்குரியது.