Published : 06 Nov 2019 12:56 pm

Updated : 06 Nov 2019 14:22 pm

 

Published : 06 Nov 2019 12:56 PM
Last Updated : 06 Nov 2019 02:22 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 3- ‘செத்தாலும் மூஞ்சில முழிக்காதே!’ 

anbukku-panjamillai-3

வி.ராம்ஜி


எண்ணங்கள் மிக வலிமையானவை. அதேபோல், வார்த்தைகள் இருமடங்கு வலிமை கொண்டவை. ‘செளக்கியமா இருக்கணும்’ என்று ஒருவரைப் பற்றி நினைக்கும்போது, அந்த நினைப்பே அவருக்கு பல செளக்கியங்களை, நல்லதுகளை, உயர்வுகளைத் தரும் என்பார்கள். அதேபோல், ஒருவரைப் பார்த்து, ‘நல்லா இருக்கணும்’ என்று சொல்லும்போது, அந்த வார்த்தைகள், அங்கே அந்த இடத்தில் விழுந்து, காற்றில் இரண்டறக் கலந்துவிடுகிறது. அதனால், அவர்களைச் சுற்றி இந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் சூழ்ந்துகொள்ள... அவரின் செயல்களிலெல்லாம் இந்த வாழ்த்து நல்ல நல்ல அதிர்வுகளைத் தந்து, அவர்களுக்குள் பல சந்தோஷங்களைத் தருகின்றன. மந்திரத்துக்குப் பல மடங்கு பலன் உண்டு என்பதற்கு, அந்த மந்திரச்சொற்கள்தானே காரணம்!ஊரில் பெரியவர் ஒருவர், யாரைப் பார்த்தாலும் ‘கிருஷ்ணா’ என்றுதான் கூப்பிடுவார். அவர் பெயர் முருகேசனாக இருக்கும். ரமேஷாக இருக்கும். ஸ்டீபனாக இருக்கும். காஜாவாக இருக்கும். ஆனாலும் இவர் வார்த்தைக்கு வார்த்தை, ‘கிருஷ்ணா... கிருஷ்ணா’ என்றுதான் அழைப்பார். சிறுவயதில், இவர் இப்படிச் சொல்வதைக் கேட்க, சிரிப்பு வரும். பிறகு அவரின் கிருஷ்ண பக்தியும் ‘சகலமும் கிருஷ்ணார்ப்பணம்’ என்கிற சரணாகதி புத்தியும் தெரிந்து வியந்தேன்.


தேவர் பிலிம்ஸ் சின்னப்பதேவர் கூட, ‘முருகா, அந்த வேலை என்னாச்சு?’, ‘முருகா, எல்லாரும் சாப்பிட்டுட்டாங்களா?’, ‘முருகா, உனக்கு இப்ப உடம்பு பரவாயில்லியா?’ என்று எல்லோரையும் ‘முருகன்’ ஆக்கிவிடுவார் என்பார்கள். சிதம்பரத்தில் எனக்கு நெருங்கிய தீட்சிதர், ‘நடராஜர் இஷ்டம்’ என்று அடிக்கடி சொல்லுவார். ‘நான் பாஸ் பண்ணிட்டேன்’ என்று யாரேனும் சொன்னால், ‘நடராஜர் இஷ்டம் நடராஜர் இஷ்டம்’ என்று சொல்லுவார். இதற்கு, எல்லாச் செயல்களுக்கும் நடராஜரே காரணம். இன்னும் நற்செயல்கள் செய்ய நடராஜன் அருளுவார் என்பதன் சூட்சும வார்த்தை அது; ஆத்மார்த்த ஆசி!


இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.


அவர் எனக்கு தூரத்து உறவு. கும்பகோணத்துக்காரர். எப்போதும் மணக்க மணக்க, புகையிலையும் சீவலும் வெற்றிலையும் கொண்டு அதக்கியபடியே இருப்பார். வாயெல்லாம் சிகப்பாக இருக்கும் அவருக்கு, பேச்சு மட்டும் பச்சைபச்சையாக இருக்கும். போதாக்குறைக்கு, அபசகுன வார்த்தைகள் சரளமாக விழுந்துகொண்டே இருக்கும். ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில், வி.கே.ராமசாமி, எதற்கெடுத்தாலும் ‘பிளெடி பிளெடி’ என்பாரே. அதுபோல, இவர் யார் என்ன சொன்னாலும் ‘எழவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். நல்லதுகெட்டது என்றில்லாமல் எதுவாக இருந்தாலும் ‘எழவு’ எனும் வார்த்தை தடக்தடக்கென்று விழுந்துகொண்டே இருக்கும், வெளியே!


இப்படியான நல்ல வார்த்தைகள், அபசகுன வார்த்தைகள் பற்றி யோசிக்கும் போது, பேசவே பேசாமல் இருப்பவர்கள் பற்றிய நினைப்பும் வந்தது.
என் அத்தைக்கு ஐந்து மகன்கள். எல்லார் பெயரும் குமார் குமார் என்று முடியும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது, அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்காக, அத்தை வீட்டுக்கு வந்திருந்தேன். அப்போது, மூன்றாவது மகனும் நாலாவது மகனும் பேசிக்கொள்வதில்லை எனத் தெரிந்தது. என்ன காரணம் என்பது மறந்துவிட்டது. அப்படி மறந்துவிட்டதாலேயே, அதுவொரு உப்புப்பெறாத விஷயத்துக்கான சண்டை என்பது புரிந்திருக்கும். இத்தனைக்கும் இரண்டுபேரும் சேர்ந்துதான் என்னை சினிமாவுக்கு, கடற்கரைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனாலும் அவர்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும், ‘என்னடா இவங்க. பேசிக்காமலே இருக்காங்க’ என்று எனக்கு வருத்தமாக இருக்கும். பல வருடங்கள் கழித்து, மூன்றாவது மகனுக்குத் திருமணம் நடந்தபோது, மாங்குமாங்கென நாலாவது மகன் வேலை செய்தாலும், இரண்டுபேரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள். ‘அட பேசுங்கப்பா. இத்தனை வருஷத்தை பேசாம வுட்டுட்டீங்களே’ என்பேன்.


கணவனுக்கும் மனைவிக்கும், அப்பாவுக்கும் மகனுக்கும், அம்மாவுக்கும் சித்திக்கும் என நடக்கிற மூன்று நிமிட சண்டை... அதன் பின்விளைவுகளை இன்னும் பல மணி நேரங்கள் கூட காட்டிக்கொண்டே இருக்கும். சண்டையும் விவாதமும் முடிந்துவிட்டாலும் அடுத்து சகஜ நிலையுடன் முதலில் யார் பேசுவது என்பதில் மிகப்பெரிய தயக்கம் உண்டு. அந்தத் தயக்கத்தின் உள்ளார்ந்த பெயர்... ஈகோ.
இப்படியான ஈகோவில், 18 வருடங்களாக பேசிக்கொள்ளாத கணவன் மனைவியைத் தெரியுமா உங்களுக்கு?


முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் அந்த அண்ணன் வேலை பார்த்தார். சுருட்டை முடியும் நெற்றி நிறைய விபூதிப் பட்டையுமாக களையான முகத்துடன் இருப்பார் அவர். டீக்கடையில் சந்திக்கும்போது, ஐந்து பத்து நிமிடங்கள் பேச ஆரம்பித்தோம். பிறகு குடும்பக்கதைகளை மனம் விட்டுப் பேசிக்கொள்ளும் அளவுக்கு மனசுக்கு நெருக்கமானோம்.


ஒருநாள்... மதிய உணவு வேளையில், ‘என்னண்ணே சாப்பாடு. அண்ணி என்ன கொடுத்துவுட்ருக்காங்க’ என்று கேட்டேன். ‘தெரியலியேண்ணே. டப்பாவைப் பிரிச்சுப் பாத்தாத்தான் தெரியும்’ என்றார். அவரும் அன்பின் நிமித்தம் அண்ணன் என்றுதான் அழைப்பார். ‘அட... நீங்களும் நம்மள மாதிரிதானா. இதைப் பண்ணு, அதைச் செஞ்சு கொடுன்னு நான் கேக்கமாட்டேன். நீங்களும் அப்படித்தான் போல’ என்றேன்.
‘உங்களையும் உங்க வீட்டம்மாவையும் நம்ம லிஸ்ட்ல சேக்காதீங்கண்ணே. இது தனிக்கதை. சூப்பர் ஸ்டோரி’ என்றார். ‘சாப்பிட்டு கடைக்கு வருவீங்கதானே. அப்போ பேசுவோம்’ என்றார்.


அங்கே, அந்த டீக்கடையில் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனேன்.


‘’எங்க அம்மா சொல்றதைக் கேக்கறதும் என் தங்கச்சிக்கு ஒரு புடவை துணிமணின்னு எடுத்துக் கொடுக்கறதும் சாதாரண விஷயம்தான். எல்லார் வீட்லயும் இப்படி நடக்கும். அதுக்கு மருமகள்கள் கொடி பிடிக்கறதும் சகஜம்தான். ஆனா அதுக்கு என் பொண்டாட்டி ஆடுன ஆட்டம் இருக்கே. சாகற வரைக்கும் மறக்காது.


இறந்து போன எங்க அப்பாவோட ஏதோவொரு பணம் வந்துச்சு. அம்மா கழுத்துல ஒரு செயின் கூட கிடையாது. அந்தப் பணத்துக்கு தங்கச்சங்கிலி வாங்கச்சொன்னாங்க அம்மா. கூட ரெண்டாயிரத்து முந்நூறு ரூபா போட்டு, செயின் வாங்கி அம்மாவுக்குக் கொடுத்தேன். அவ்வளவுதான். என் பொண்டாட்டி பேய் பிடிச்சவ மாதிரி கத்துனா. பேச்சு தடிச்சிக்கிட்டே போச்சு. ஒருகட்டத்துல, ‘தாலி அத்தவளுக்கு தங்கச்செயின் ஒருகேடா?’ன்னு அவ கேட்டதும் வெறிபிடிச்சமாதிரி அவளை அடிச்சேன். அதுதான் நானும் அவளும் பேசிக்கிட்ட கடைசி நாள்.
நியாயத்துக்கு இவ்ளோ தடிச்ச பேச்சு பேசின அவளை நான் தான் மன்னிக்கக்கூடாது. ஆனா நான் மன்னிச்சேன். மன்னிக்கத்தானே வேணும். ஆனா, அவ என்னை மன்னிக்கல. அடிச்சத்தையும் மறக்கல. டைனிங் டேபிள்ல காலைல காபி வந்து வைப்பா. அப்புறம் டிபன் வைப்பா. அது எப்போ வைச்சானே தெரியாது. ஆறி அவலாகியிருக்கும். கிளம்பும் போது சோத்துடப்பா இருக்கும். மாசம் பொறந்ததும் சம்பளப் பணத்தை கொண்டு வந்து சாமிகிட்ட வைச்சிருவேன். நல்லநாள் பெரியநாள்னாலும் கூடுதலா பணம் வைச்சிருவேன். ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டுபேரும் அவங்க அம்மாகிட்ட எவ்வளவோ சொல்லிப்பாத்தாங்க. ஆனா அவ கேக்கவே இல்ல. அப்படி இப்படின்னு 18 வருஷம் ஓடிருச்சு. பிடிவாதம். முரட்டுப் பிடிவாதம். இதனால இத்தனை வருஷ சந்தோஷத்தை இழந்து, நரகமாட்டம் வீடு ஆயிருச்சு. இப்போ... இதெல்லாம் பழகிருச்சு எனக்கு. ஒரு ஜுரம், காய்ச்சல்னா கூட ‘ஏங்க, டாக்டரைப் பாத்தீங்களா, கஷாயம் வைச்சுத் தரட்டுமான்னு எதுவும் கேக்கமாட்டா. ஆனா அவளுக்கு மாதவிடாய் பிரச்சினை வந்தப்பவும் சரி, நீர்ச்சத்து குறைபாட்டால கால் வீங்கினப்பவும் சரி... லீவு போட்டுட்டு, அவளை ஆட்டோல ஏத்திக்கிட்டு, ஆஸ்பத்திரியே கதின்னு கிடந்தேன். ஒரு புருஷனா நான் சரியாத்தான் இருந்துக்கிட்டிருக்கேன். ஆனா என்னண்ணே... நாம மட்டும் சரியா இருந்தாப் போதுமா? எதிர்ல இருக்கறவங்களும் சரியா இருக்கணும்’’ என்று சொல்லும்போது, சட்டென்று முகம் திருப்பிக்கொண்டு, முதுகு குலுங்க அழுதார் அந்த அண்ணன்.


மனித வாழ்வில், சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட முட்டிக்கொள்கிறோம். தப்பில்லை. ஆனால் முறுக்கிக்கொள்ளக் கூடாது. அறுத்துக்கொள்வது ஆபத்தான விஷயம். இப்படி முட்டிக்கொள்ளும்போது, இருதரப்புப் பேச்சும் முற்றிப் போய், ‘நான் செத்தாலும் என் மூஞ்சில முழிக்காதே’ என்கிற வார்த்தையைக் கொட்டுகிறோம். நம்பிக்கையைக் காப்பாற்றாத தருணத்தில், எதிர்பார்த்தபடி நடந்துகொள்ளாத போது, நமக்குத் தெரியாமல் யாரோ ஏதோ சீட்டுப் போட்டு சேமிக்கிற வேளையில், உண்மையாய் இல்லாத பட்சத்தில், உண்மையாய் இருந்து உண்மையைச் சொன்ன போது நடந்த மோதலில்... என சண்டைகளுக்கு ஆயிரம் றெக்கைகள்; பல்லாயிரம் திக்குகள். அப்போது உச்சபட்சமாக நாம் உதிர்க்கிற கடும்சொல்... ‘செத்தாலும் மூஞ்சில முழிக்காதே’. நாம் ஒருவரைப் புறக்கணிப்பதுதான் அவருக்கு நாம் தருகிற மிகப்பெரிய தண்டனை.


‘’என்னய்யா... எப்பப் பாத்தாலும் நீயும் அவனும் தான் சுத்துவீங்க. ரெண்டுபேரையும் சேர்ந்து பாக்கவே முடியறதில்ல’’


‘’ஒரு சின்ன பிரச்சினை. நாங்க பாத்துக்கிட்டே மூணு வருஷமாச்சு’’


’’உங்க சித்தி பொண்ணும் நீயும் நல்லாத்தானே ஈஷிக்கிட்டு இருந்தீங்க. ஆனா, நீ ஒரு பக்கமா இருக்கே. அவ ஒரு பக்கமா இருக்கா. ஏன்...’’ - ஏதொவொரு கல்யாணம்காட்சியில் யாரோ கேட்பார்கள்.


‘என் சித்தி பொண்ணு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பத்தாயிரம் ரூபா கடனாக் கொடு. மூணு மாசத்துல தரேன்னா. நம்மகிட்ட ஏது அவ்வளவோ பணம். சரி... பணத்தைக் குடுத்துட்டு தரலேன்னா, இவ பின்னாடி ஓடியாடிக்கிட்டிருக்க முடியுமா. அதான் அப்படி இப்படின்னு பேச்சைக் குறைச்சிட்டேன். பேசினாப் போதுமே... ஒடனே அத்தக் குடு இத்தக் குடுன்னு கேட்டுட வேண்டியது. அதான், சுத்தமா கட் பண்ணிட்டேன்’ என்று நீட்டி முழக்கிச் சொல்லுவார்கள்.


பார்ப்பது இல்லை. பார்த்தாலும் பேசிக்கொள்வதில்லை.


என் சித்தப்பாவுக்கு வாரிசு இல்லை. எனவே அதை வைத்து என் சித்தி, எங்களுடன் சண்டை போட்டு பிரித்துவிட்டாள். சித்தப்பாவுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை. திருச்சியில் இருந்த அப்பாவுக்கு, டிரான்ஸ்ஃபர். எக்மோரில் வேலை. ஒருநாள்... பீச் ஸ்டேஷனில் சித்தப்பா ஏற, அதேபெட்டியில் எக்மோரில் அப்பா ஏற... இருவருமே பேசிக்கொள்ளவே இல்லை. ஊருக்கு வந்த அப்பா, எங்களிடம் விஷயம் சொல்லிவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே விழுந்து கதறியழுதார். பேச்சில் இனிமை. அதிருக்கட்டும். பேசுவதே பரமசுகம். இதை ஏன் நாம் உணருவதே இல்லை.
என் நண்பனின் அக்கா காதல் திருமணம். வேறு ஜாதி. அவனுடைய தாய்மாமாவுக்கு நிச்சயதார்த்தம். எல்லோரும் வா வா என அழைக்கவே, அவளின் அக்கா, கணவர், குழந்தைகள் என எல்லோரும் தாத்தா வீட்டுக்கு வந்தார்கள். அவன் அக்காவுக்கு ஏக சந்தோஷம். அங்குதான் அவள் ஒண்ணாம் வகுப்பில் இருந்து ஒன்பதாவது வரை படித்தாள். ஆனால் அவளும் அவள் குடும்பமும் வந்தது, மாமாவுக்குப் பிடிக்கவில்லை. வெளியே போகச் சொல்லி கத்தினார். தம்பிக்காரன் பார்த்தான். அந்த நிமிஷமே அம்மா, அப்பா, அக்கா குடும்பத்தார் என எல்லோரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


’’என் தாத்தா கெஞ்சினார். வாசல்ல நடுவீதில, தடால்னு என் கால்ல விழுந்து அழுதார். ‘நீ செத்தா சொல்லச் சொல்லுய்யா. அப்போ வரேன்னு சொல்லிட்டு, எல்லாரையும் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஏதோவொரு வீம்பு. முட்டாள்தனம். மூர்க்கம். ஒரு அலட்டல். மாமாவோட கல்யாணத்துக்கும் போகல. எதுக்கும் போகல. அப்போ சொன்ன மாதிரியே எங்க தாத்தா சாகக் கிடந்தப்பதான் போனேன். காலைல மூணரைக்குப் போனேன். அஞ்சேமுக்காலுக்கு செத்துட்டாரு. நான் வந்தது கூட அவருக்கு நினைவு இல்ல. ‘செத்தா சொல்லச் சொல்லு. வரேன்...’ - இந்த வார்த்தை என்னை சாகற வரைக்கும் கொன்னுக்கிட்டே இருக்கு’ என்று நண்பன் சொன்ன போது, மனமே விண்டுபோனது.
உறவோ நட்போ... தெரிந்தவர்களோ அறிந்தவர்களோ... இங்கே இந்தப் பிறவியில் இப்படியாக அறிமுகம் செய்துகொண்டு, பேசிக்களித்துக் கொண்டிருக்கிறோம். எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. எல்லோர் நம்பருமா நம்மிடம் இருக்கிறது. எல்லோர் நம்பரும் தெரியும். அதற்காக எல்லோரிடமுமா பேசிக்கொண்டிருக்கிறோம். பரந்துபட்ட இந்த உலகில், நம்மைத் தெரிகிறவர்களும் நமக்குத் தெரிகிறவர்களும் மிகச் சொற்பம்தானே.


கூடுமானவரை அவர்களைத் தொடர்பு கொண்டு, நல்லதாய் நாலு வார்த்தை பேசுவதில்தானே இருக்கிறது, வாழ்க்கையின் சுவையும் பேரானந்தமும்.


எப்பேர்பட்ட சண்டைகள் வந்தாலும் ’சாகறவரைக்கும் என் மூஞ்சியில முழிக்காதே’ என்ற வார்த்தையைச் சொல்லாதீர்கள். ’அய்யோ... நான் என் நண்பன்கிட்ட நாலுவருஷத்துக்கு முன்னாடி சொல்லிருக்கேன்’ என்றோ, ‘என் அக்காகிட்ட சொல்லிருக்கேன்’, ‘என் மாமாவைப் பாத்து சொல்லிருக்கேன்’ என்றோ சொல்லியிருந்தால், உடனடியாக அவர்களை நேரில் பார்த்து ஒரு பத்து நிமிடம் பேசுங்கள். அந்தத் தருணத்தில் யார் தவறு செய்திருந்தாலும், மன்னிப்புக் கேட்கும் இடத்தில் அவர்களே இருந்தாலும் ‘மன்னிச்சிருப்பா. நடந்ததையெல்லாம் மறந்துருவோம். இருக்கிற சொச்ச காலத்துலா, பாத்துக்காம, பேசிக்காம இருக்கவேணாம்பா’ என்று சொல்லுங்கள்.


அங்கே... அன்புக்குப் பஞ்சமில்லை!


-வளரும்


அன்புக்குப் பஞ்சமில்லை 3 : ‘செத்தாலும் மூஞ்சில முழிக்காதே!’அன்புக்குப் பஞ்சமில்லைவாழ்வியல் தொடர்வாழ்க்கையை உணர்த்தும் தொடர்அன்பைச் சொல்லும் தொடர்வி.ராம்ஜி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author