Published : 06 Nov 2019 11:27 AM
Last Updated : 06 Nov 2019 11:27 AM

துணைக்கண்டத்தின் சினிமா: 3- யதார்த்த பாணியில் லடாக்கின் புதிய அலை

வாக்கிங் வித் தி வின்ட் திரைப்படக் காட்சிகள்.

சினிமாவை நன்கு தெரிந்தவர்கள் தங்கள் படங்களில் வைக்கும் எந்த ஆப்ஜெக்ட்டும் அழகுதான். படம் முழுக்க ஒரு கன்றுக்குட்டியைக் காட்டி தாய்ப்பசுவிடம்பால் குடிப்பது, துள்ளி விளையாடுவது, அங்கங்கே சென்று பராக்கு பார்ப்பது என்று காட்டினால்கூட அதையும் சினிமாவை நன்கு தெரிந்தவர்கள் செய்தால், அதை ஒன்றரை மணிநேரம் என்ன? இரண்டரை மணிநேரம்கூட பார்க்கலாம்.

பிராந்திய மொழியைச் சேர்ந்த இயக்குநர் ஒருவரின் 10 படங்களை அப்பகுதி மக்கள் வெற்றியடையச் செய்துவிட்டனர் என்பதாலேயே அந்த இயக்குநருக்கு சினிமா தெரியும் என்று சொல்லிவிட முடியாது. மிகச்சரியாக முயற்சித்து பார்வையாளனின் நற்சிந்தனைக்கும் புதிய கலை ரசனைக்குமான திரைமொழியின் நுண் திறப்புகளை உருவாக்குபவர் எவரோ, அவரே தன் வாழ்நாளில் ஓரிரு படங்களைத் தந்திருந்தாலும் சிறந்த இயக்குநர்.

புதிய யூனியன் பிரதேசமான லடாக்கிலிருந்து வெளிவந்துள்ள யதார்த்த பாணி சினிமா 'வாக்கிங் வித் தி விண்ட் (2017)'. சென்ற ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓர் அரிய கலைப்படைப்பு என்பதை உணர முடிந்தது. இப்படம் சர்வதேச சினிமா ரசிகர்கள் கவனத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

80களில் டெல்லி தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் ஒவ்வொரு வாரமும் திரையிடப்பட்ட (இந்திய) மாநில மொழிப் படங்களைப் பார்த்துவிட்டு 'ஸ்லோமூவி' என்றவர்கள் அநேகம். ஆனால் அத்தகைய படங்களில் இடம்பெறும் வாழ்வின் மதிப்புகளும் இந்தியாவின் பல்வேறு மண்டலங்களின் நிலக் காட்சிகளின் திரட்சியும் வேறெந்த படங்களிலும் காணக் கிடைக்காதது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆனால் அதே யதார்த்த பாணியில் ஈரானில் 90களில் நிறைய படங்கள் வந்தன. இத்திரைப்படங்களை ஒரு கலைப்பண்பாடாகவே கருதி உலகம் போற்றத் தொடங்கியது.

ஈரானிய இயக்குநர்கள் சென்ற யதார்த்த பாணியிலேயே சென்று அதைவிட ஒரு உன்னதமான படத்தை லடாக்கிலிருந்து வெளிவந்துள்ள 'வாக்கிங் வித் தி விண்ட்' திரைப்படம் தந்துள்ளது. ஒரு மாநிலமாகக் கூட இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக சென்றவாரம் தான் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்திலிருந்து இந்த மாதிரி முயற்சிகளும் அதுவும் சிறப்பாக நடக்கிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழத்தான் செய்யும்.

'வாக்கிங் இன் தி விண்ட்' இயக்குநர் மோர்ச்சேல், தனது படங்களுக்கு ஈரானிய படங்களே உத்வேகம் என்றார். ஒரு நல்ல கதையைச் சொல்ல வணிக அம்சங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை எனில் இயற்கை எழில் அம்சங்கள், எளிய கதாபாத்திரங்கள், நுட்பமான சித்தரிப்புகள் ஆகியவற்றைத் திரையில் கொண்டுவர எந்தத் தடையுமில்லை என்கிறார் இவர்.

அவ்வகையில் ஒரு நீண்ட ஷாட் கொண்ட குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ஈரானைச் சேர்ந்த அதன் ஒளிப்பதிவாளர், இயக்குநரான முகம்மது ரேசா ஜோகன்பன்னாவை தனது படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பயன்படுத்திக்கொண்டார். நீண்ட ஷாட்கள் சில மனநிலைக்கு, சில சூழ்நிலைக்குத் தேவைப்படுகிறது. எல்லா காட்சிகளையும் எல்லா ஷாட்களிலும் பொருத்திவிடமுடியாது. அதை இப்படம் மிகச்சரியாக முன்வைத்துள்ளது. பிரவீண் மோர்ச்சால் படங்களில் நடிகர்கள் இடம் பெறுவதில்லை. அவர் எந்தப் பகுதி வாழ்க்கையைத் திரையில் கொண்டுவருகிறாரோ அங்குள்ளவர்களையே கதாபாத்திரங்களாக உருவாக்கிவிடுவார்.

ஒரு பாணியைப் பின்பற்றுவது என்பது ஒன்று. அந்தப் பாணியில் இயக்கப்பட்ட ஒரு படத்தின் சீரியத் தன்மையோடு கிட்டத்தட்ட அதற்கு இணையான ஒரு களத்திலிருந்து வேறொரு படத்தைத் தருவது இன்னொன்று. இயக்குநர் பிரவீன் மோர்ச்சேல் தன்னுடைய படத்தில் வரும் குழந்தையைப் போல மிகமிக நேர்மையானவர்.

'வேர் இஸ் தி மை ஃப்ரண்ட்ஸ் ஹோம்' படத்தில் வரும் ஒரு நேர்மையான சிறுவனின் செயல்களைப் போல இயக்குநர் ஒரு சிறுவனை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஈரான் படத்தில் வருவதுபோன்ற மலைப் பிரதேசம்... வகுப்பறை, வெகுதூர நடைப் பயணம்.....

2016-ல் மறைந்த இயக்குநர் அப்பாஸ் கியராஸ்தமியின் திரைப்படங்கள் சினிமா கலை மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான பாடங்கள். அவர் இயக்கியது பெரும்பாலும் குழந்தைகள் படங்கள்தான். ஈரானியத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் பிரெஞ்சு, ஜப்பானியப் படங்களை இயக்கும்போது அவரது பரிமாணங்கள் மாறத் தொடங்கின. அப்பாஸ் கியராஸ்தமியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட மோர்ச்சேல் அவருக்கே தன்னுடைய படைப்பு ஒன்றை சமர்ப்பணம் செய்துள்ளதில் வியப்பில்லை.

குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்கள் குழந்தைகள் மட்டும் பார்ப்பதற்காக அல்ல. நிறைய கல்விக் கூடங்களில் குழந்தைகள் படங்களைத் திரையிடுவார்கள். இது நகைப்புக்குரிய ஒன்று. கல்விக் கூடங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படும் இடங்களில் குழந்தைப் படங்கள் என்றில்லை, மிகச்சிறந்த புரிதல்களை உருவாக்க வேண்டிய அனைத்துப் படங்களும் திரையிடலாம்.

அதேபோல சர்வதேச வரவேற்பு பெற்ற குழந்தைகள் படங்களை குழந்தைகள்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, உலகின் சினிமா ஆர்வலர்கள் உள்ளிட்ட வெகுமக்கள் அனைவருமே பார்க்கக்கூடிய ஒன்றுதான். குழந்தைகள் தூய உள்ளத்துடன்தான் பிறக்கிறார்கள். அவர்களது வளர்ச்சிக் காலங்களிலும் துணிச்சலோடுதான் ஒரு தும்பைப்பூ போன்ற பொய்யற்ற வெண்மை மனதுடன்தான் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் போகப்போக நல்ல மற்றும் தவறான அனுபவங்களைக் கொண்ட பல பெரியவர்களால்தான் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர், நசுக்கப்படுகின்றனர். வளரும் சூழ்நிலைகளாலும் அவர்கள் மாற்றப்படுகின்றனர். சமூகத்தில் வேறுபட்ட சமூகப் படிநிலையில் உள்ள எவரும் இதில் விதிவிலக்கில்லை.

'வாக்கிங் வித் தி விண்ட்' (2017) படம் பார்வையாளனை உணர்ச்சி வயப்படுத்தாத ஒரு படைப்பு. அதேநேரம் நமக்கான அறிவின் விசாலம், நல்லுணர்வின் திறப்புகளை இப்படம் கொண்டுள்ளது.

சின்னச் சின்னக் காட்சிகளில் பரபர வேகம் கொள்வதுதான் நல்ல திரைப்பட முறை என்ற பாணியை நுனிப்புல் மேயும் இன்றைய சில இயக்குநர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் அத்தகைய பரபர வேகப் பாணியிலும் காட்சிகள் முன்னுக்குப் பின் அர்த்தமின்றி பாயும்போது பார்வையாளன் சலித்துக்கொள்வதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

யதார்த்தப் பாணியில் காட்சிகள் நீண்டதுதான். ஆனால் அது பார்வையாளனை உள்ளிழுத்துக்கொள்ளும் வித்தையைக் கொண்டுள்ளது. நீண்ட காட்சிக்கான நோக்கத்தை ஆரம்பத்திலேயே என்னவென்று உணர்த்திவிட்டால் பார்வையாளன் ஒன்றிவிடுவதை யாரும் தடுக்கமுடியாது.

'வாக்கிங் வித் தி விண்ட்' திரைப்படத்தில் 10 வயது மாணவன் டிசெரிங் ஒரு பள்ளிக்கூட நாற்காலியை வளைந்து வளைந்துசெல்லும் மலைப்பாதைகள் வழியே சுமந்து செல்கிறான். மேலும் மேலும் பல்வேறு அகடுமுகடான மலைச்சாரலில் அவன் பாதை செல்கிறது... செல்கிறது சென்றுகொண்டேயிருக்கிறது.... காரணம் சொல்லாமல் காட்டியிருந்தால் நிச்சயம் பார்வையாளன் பொறுமை இழப்பான். ஆனால் அவன் நாற்காலியைச் சுமந்து செல்வதற்கு முன்பாக நோக்கத்தை முதல் காட்சியிலேயே சொல்லிவிடுகிறார்கள். அதனால்தான் மிக நீண்ட காட்சிகள் ''அடுத்தது என்ன? அடுத்தது என்ன?'' என்ற விறுவிறு ஈடுபாட்டை நமக்குள் விதைக்கின்றன.

இப்படத்தின் இயக்குநர் பிரவீன் மோர்ச்சேல் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். குழந்தைகள் பெரியவர்களுக்கும் அல்லது பெரியவர்கள் குழந்தைகளுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும்போல என்று எந்தக் கற்பிதமும் அவரிடம் இல்லை. அத்தகைய தவறான குழந்தைகள் படங்களிலிருந்து இவர் வெகுதூரத்தில் விலகியிருக்கிறார். பூஞ்சையான நாடகத்தனமான அல்லது நம்பமுடியாத சாகசக் கதைகளையும் அவர் எடுத்துக்கொள்வதில்லை.

இமயமலைச் சாரலில் உள்ள ஒரு பள்ளிக்கூடம். அங்கு பயிலும் ஒரு மாணவன் ஆர்வத்தில் பட்டாம்பூச்சியைப் பிடிக்க முயல அதற்காக பக்கத்து மாணவனின் நாற்காலியைப் பயன்படுத்த அதன் ஒரு கால் உடைந்துவிடுகிறது. டிசெரிங் ஒரு கணம் அதிர்கிறான். பக்கத்து மாணவ நண்பன் எப்படி தேர்வெழுதுவான், இதைப்போய் உடைத்துவிட்டோமே என நினைத்து யோசிக்கிறான். அவன் கலங்கவில்லை. மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறான்.

மறுநாள் விடுமுறையில் தன்னுடைய கழுதையை ஓட்டிவந்து வகுப்பறை சன்னல் வழியாக உள்ளே நுழைந்து நாற்காலியை எடுத்துச் செல்கிறான். கழுதை மீது நாற்காலியைக் கட்டிவைத்துக்கொண்டு செல்கிறான் சென்றுகொண்டேயிருக்கிறான். மலைப்பாறைகள், கரடுமுரடான பாதைகள், பள்ளத்தாக்குகள், மேய்ச்சல் நிலப் பகுதிகள், நீரோடைகள், பார்லி வயல்வெளிகள் என அவனது நடைப்பயணமே ஒரு யாத்திரை. பிறகு எடுத்துக்கொள்ளலாம் என சின்னதான ஒரு குகையில் நாற்காலியை வைத்துவிட்டு வீடு திரும்புகிறான்.

நாலு பக்கமும் சூழ்ந்துள்ள லடாக் இமயமலைத் தொடர்களின் அழகில் யதார்த்த பாணியின் மெதுவான தன்மையே மறந்துவிடுகிறது. ஒவ்வொருநாளும் அவன் இப்படித்தான் 7 கி.மீ. கடந்து மலை மீதுள்ள பள்ளிக்கு வந்து செல்கிறான்.

இப்படத்தில் நண்பனின் நாற்காலியைச் சரிசெய்து மீண்டும் வகுப்பறைக்குள் கொண்டுபோய் சேர்ப்பதற்குள் ஒரு நான்கு நாட்களுக்குள் லடாக் மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், விவசாயம், மேய்ச்சல் நிலம், திருவிழா என காட்சிகள் வெவ்வேறாக விரிந்து செல்கின்றன.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஈரானைச் சேர்ந்த மொஹமட் ரெசா ஜஹான்பனா, மைனஸ் 12 டிகிரி வெப்பநிலையில் உள்ள கிராமத்தின் கண்கொள்ளா அழகை கண்முன் நிறுத்துகிறார். இமயமலைச் சாரலின் கடுமையான நிலப்பரப்புகளில் பார்வையாளனை அழைத்துச் செல்கிறார்.

லடாக் மக்களின் வீட்டின் உள்பகுதிகளே வேலைப்பாடுகள் மிக்கவை. லடாக் மக்களின் அனைத்து வீடுகளின் பழங்கால முறையிலேயே அமைந்துள்ளன. மலைகளின் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்குள் அவர்களது விருந்தோம்பல் படத்தின் பல இடங்களில் வருகிறது. மிகவும் மென்மையாகப் பேசுகிறார்கள். சொற்ப வருமானத்தில் பிறர்க்கு உதவும் சிந்தனையோடு வாழ்கிறார்கள். வரவேற்பறையில் விருந்தினர் வந்தால் அமரவைத்து தேநீர் வழங்க சிறு மேசையும் நாற்காலியும் ஒரே போல அனைத்து வீடுகளிலும் உள்ளன.

விஞ்ஞானத் தொழில்நுட்பத்துக்கு அடிமையாவது அல்ல, அதை நமக்குத் தேவையான கதைக்களன்களுக்குள் கொண்டு வருவதுதான் வளர்ச்சி என்பதை ஓரிடத்தில் இயக்குநர் புலப்படுத்தியிருப்பார்.

இப்படத்தில் மாவு அரைக்க வீட்டிலிருந்து டிசெரிங்கை அனுப்பி வைப்பார்கள். ஒரு பாறைக் குடைவுக்குள் அரவை ஆலை அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெண்மணி அரைத்துக்கொண்டிருக்க இவன் வெளியே காத்திருப்பான். ஏதோ யோசனை தோன்ற ''இதோ வந்துவிடுகிறேன்..'' என்று கூறிவிட்டு அவனுக்குத் தெரிந்த ஒரு தச்சரைத் தேடிச்செல்வான். அவரிடம் நாற்காலியை சரிசெய்யக் கேட்பான். அவரோ ''தொலைதூர நகரில் புத்தமடாலயத் திருவிழா செல்கிறேன், வர இரண்டு நாள் ஆகும்'' என்று சொல்லிவிட்டு குடும்பத்தோடு சென்றுகொண்டிருப்பார்.

ஏமாற்றத்தோடு பாறைக்குடைவு அரவை ஆலைக்கு வருவான். அந்தப் பெண்மணி ''அடுத்தது நீ அரைச்சுக்கோப்பா'' என்றுவிட்டு நகர இவன் செல்லும் போது அரவை இயங்குவது நின்றுவிட்டிருக்கும்....

வெளியே வந்துபார்ப்பான். ஒரு விவசாயி கால்வாயில் வேகமாகப் பாய்ந்து செல்லும் நீரைத் தனது விவசாய நிலத்திற்கு மடை மாற்றிக்கொண்டிருக்க இவன் அவரிடம் சென்று ''தயவுசெய்து நான் மாவு அரைச்சிட்டு போறவைக்கும் தண்ணீரை அதன்போக்கிலேயே விடுங்கள்'' என்று கேட்பான். அவரும் சரியென்று மீண்டும் தனது நிலத்தின் மடையை மூடிவிடுவார். பாறைக்குடைவு அரவை ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கும். நீர் பாய்ச்சுதலினால் அரவை ஆலை இயங்குகிறது என்பதுபோன்ற அறிவியல்பூர்வமான காட்சிகள் போன்று வெவ்வேறு தன்மையிலான வாழ்வியல் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.

இவன் தனது தங்கையோடு செல்லும் புத்த மடலாயத் திருவிழாக் காட்சிகள் உண்மையாக நிகழ்ந்த ஒரு திருவிழாவுக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாணவன் டிசெரிங் உள்ளிட்ட நாட்டுப்புற மக்கள் நகரின் புத்த மடாலயத் திருவிழாவுக்கு சின்னச்சின்ன வாகனங்களில் செல்வதே ஒரு அலாதியான பயணம். லடாக் மக்களின் வாழ்வில் 4 மாதம் தான் விவசாயம். அதற்குத்தான் அங்குள்ள பருவநிலை அமைப்பு உள்ளது. மீதியுள்ள மாதங்களில் திருவிழாக்கள்தான். கலாச்சாரப் பரிவர்த்தனைகள், கொண்டாட்டங்கள்தான்.

திருவிழாவிலிருந்து திரும்பிய பின்னர் டிசெரிங்குக்கு மீண்டும் ஒரு மரத் தச்சரைத் தேடும் படலம். தச்சர் என்று நினைத்து ஒரு பட்டறைக்குள் நுழைகிறான். அவரிடம் பிரச்சினையைச் சொல்வான். அவர் சொல்கிறார், ''நாங்கள் தச்சர் அல்ல. ஆர்டிஸ்ட்... சிற்பிகள்'' என்று. அப்போதுதான் பார்க்கிறான் அங்குள்ளவை அனைத்தும் மிகமிக அற்புதமான மரச் சிற்பங்கள். என்றாலும் அவன் சமாதானமாகவில்லை. ''அதனாலென்ன நாற்காலி பழுதுபார்க்கக்கூடாது'' என்று சட்டமா? என்று வாக்குவாதம் செய்வான்.

அந்த நேரம் பார்த்து அவரது மாடு ஒன்று அவிழ்த்துக்கொண்டு போய்விட்டதாக தகவல் வர, அவர் வெளியே வந்து அங்குமிங்கும் அலைவார்.

டிசெரிங் சொல்கிறான், ''அந்த மாட்டை நான் பிடிச்சிக்கிட்டு வர்றேன்...''

''எப்படி பிடிப்பாய் அது காட்டுக்குள் போய்விட்டது...'' என்பார்...

''அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். காட்டுக்குள் சென்று மாட்டைப் பிடித்து வருவது என் வேலை... எனது நாற்காலியைச் சரி செய்வது... உங்கள் வேலை.''

அவர் சிரித்தபடி ஒப்புக்கொள்வார்.

குழந்தைகள் இடம்பெறும் படம் அல்லது குழந்தை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட படம் என்பது அது குழந்தைகளுக்கான படம் என்ற அளவில் நாம் புரிந்துவைத்துள்ளோம். உண்மையில் அவை குழந்தைகளுக்கான படங்கள் மட்டும் இல்லை. நாமும் குழந்தைகளாக இருந்து வந்தவர்கள்தான். அவர்களை எப்படி புரிந்துகொள்ளப் போகிறோம், நாம் மறந்துபோன, கைவிட்டுவிட்ட நமது நல்ல குணங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்ற அடிப்படையில்தான் அத்தகைய படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதை இயக்குநர் புரிய வைத்துவிடுகிறார். சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளைப் பெற்ற படம் இது. மேலும் கிராண்ட் பிரிக்ஸ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதோடு, சர்வதேச திரை விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்படத்தில் ஆங்காங்கே லடாக் இயற்கை காட்சிகளை தனது கேன்வாஸில் ஓவியமாக வரைந்துகொண்டிருக்கும் ஒரு தொப்பியணிந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி காட்டப்படுகிறார். அவரது முகம் காட்டப்படாமல் படத்தில் வரும் இக்காட்சிகளில் மேலே சொன்ன கதையின் காட்சிகளும்கூட அவரது ஓவியங்களில் இடம்பெறும்.

இறுதிக் காட்சியில், டிசெரிங் சரிசெய்யப்பட்ட நாற்காலியை கழுதையின் முதுகில் கட்டிவைத்துக்கொண்டு நீரோடை, மலைப்பாறைகள் வழியே செல்கிறான். நீரோடையைக் கடந்து அழகான வானத்து மேகங்களின் பின்னணியில் அவன் செல்லும்போது இக்காட்சியை அந்தத் தொப்பியணிந்த வெளிநாட்டுப் பெண்மணி கேன்வாஸில் வரைகிறார்.

அக்காட்சி திரையில் முழுவதுமாக பிரதிபலிக்க அக்காட்சியின் ஊடே 'இப்படம் ஈரான் இயக்குநர் அப்பாஸ் கியராஸ்தமிக்கு சமர்ப்பணம்' என்ற வாசகம் இடம்பெறுகிறது.

பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x