Last Updated : 05 Nov, 2019 05:59 PM

 

Published : 05 Nov 2019 05:59 PM
Last Updated : 05 Nov 2019 05:59 PM

வைகை பழைய ஆயக்காட்டு பகுதியை பாதுகாக்க புதிய நீர்ப் பங்கீட்டு கொள்கை உருவாகுமா?- ஆற்றில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் கேள்விக்குறி

சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பழைய ஆயக்கட்டுப் பகுதிகளை பாதுகாக்க புதிய நீர்ப் பங்கீட்டு கொள்கைகளை உருவாக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுவரை வைகை ஆற்றில் தண்ணீர் திறக்காததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயம் கேள்விகுறியாகியுள்ளது.

வைகை ஆறு மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 374 கண்மாய்கள் மூலம் 1.36 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்றன.

பெரியாறு அணை கட்டிய பின்பும், பெரியாறு, வைகை நீர் ஒருங்கிணைந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளை வளம்கொழிக்க செய்தன. பல ஆண்டு கழித்து, ஏற்கனவே வைகை ஆயக்கட்டு பகுதியில் இருந்த கம்பம் பள்ளத்தாக்கு, வடக்கு, தெற்கு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து முல்லைப் பெரியாறு பாசன பகுதி உருவாக்கப்பட்டது.

பெரியாறு நீரை சேமித்து பாசன பகுதிகளுக்கு வழங்க தான், வைகை அணை கட்டப்பட்டது. அந்த அணையில் பெரியாறு, வைகை நீருக்கு தனித்தனி கணக்கீடு உள்ளது. வைகை அணை கட்டும்போதே பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வழங்கிய தண்ணீர் அளவு குறையாது என, அரசு உத்தரவாதம் கொடுத்தது.

பிற்காலத்தில் வைகை துணை ஆறுகளான வைரவனாறு, சுருளியாறு, முல்லையாறு, வரட்டலாறு, சுத்தகங்கை, கொட்டகுடியாறு, கல்லாறு, பாம்பாறு, குடமுருட்டியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய சிற்றாறுகள் குறுக்கே ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டன.

இதனால் வைகை நதிக்கான நீரின் அளவு குறைந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கொடுத்த உத்தரவாதமும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

இதனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு உரிய நீர்ப் பங்கீடு வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் உள்ளது. இந்த ஆண்டு வைகை அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்தும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பழைய ஆயக்கட்டுப் பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது:

125 ஆண்டுகளுக்கு முன், ஏற்படுத்திய பெரியாறு பாசன பகுதி இருபோக சாகுபடியும், பெரியாறு விரிவாக்க பகுதிகள் ஒருபோக சாகுபடியும் செய்து வருகின்றனர். ஆனால் வைகை ஆற்றில் முறையாக தண்ணீர் திறக்காததால் சங்ககாலத்தில் இருந்தே பயனடைந்த பழைய ஆயக்கட்டு விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டன.

அதேபோல் வைகையில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. வைகை அணையில் வைகை, பெரியாறு நீர் தனித்தனியாக கணக்கிடப்படுகிறது. இந்த நடைமுறை வேறுஎங்கும் இல்லை. இதை மாற்றி ஒரே நதி நீர்; சமநீர் பங்கீடு என்ற முறையை கொண்டு வரவேண்டும். பழைய ஆயக்கட்டு விவசாய பகுதிகளை பாதுகாக்க, புதிய நீர் பங்கீட்டு கொள்கையை உருவாக்க வேண்டும்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை நதி பழைய ஆயக்கட்டு 2-ம் பகுதியில் திருப்புவனம், மானாமதுரை வட்டங்களில் 87 கண்மாய்கள் உள்ளன. இதன்மூலம் 40,743 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

இதுவரை வைகையில் தண்ணீர் திறக்காததால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாதநிலை உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்தால் தண்ணீர் இழப்பு குறைவாகவே இருக்கும். உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x