Published : 31 Oct 2019 12:36 PM
Last Updated : 31 Oct 2019 12:36 PM

அன்புக்குப் பஞ்சமில்லை: 2- வாழ்க்கையைச் சொல்லும் தொடர்

வி.ராம்ஜி


வாழவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படாதவர்களோ கனவு காணாதவர்களோ, இங்கு எவருமில்லை. எது நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில், எது நம்மை மகிழ்ச்சிப் படுத்தும் என்பதில் சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கலாம். இது, ‘உங்களுக்கு ரசகுல்லா பிடிக்கும், எனக்கு மைசூர்பா பிடிக்கும்’ என்பது போலத்தான்!


காலுக்குச் சக்கரமும் தோளுக்கு றெக்கையும் மாட்டிக்கொண்டு இந்த சந்தோஷத்தைத் தேடித்தான், உத்வேகத்தை நாடித்தான், நிம்மதியை நோக்கித்தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதுவே நம் தேடலாகிப் போகிறது.


திருச்சியில், தாமஸ், வின்சென்ட் என்று இரண்டு சகோதரர்கள். இவர்களுக்கு நான்கு சகோதரிகள். எல்லோருமே தங்கைகள். எல்லோருக்கும் மூத்தவர் தாமஸ். ஆளுக்கொரு சைக்கிளில் இருவரும் சேர்ந்துதான் சர்ச்சுக்குச் செல்வார்கள். சந்தைக்கு வருவார்கள். கல்யாணம் முதலான நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். இருவரையும் தனித்தனியேப் பார்த்ததே இல்லை.


நண்பன் விஜயதேவராஜின் தாய்மாமாக்கள் இவர்கள். இவரைப் பேசும்போதெல்லாம் கண்ணில் புத்துணர்ச்சி பரவியிருக்கும் அவனுக்கு. காரணம்... அந்தக் குடும்பத்தையே தூக்கி நிறுத்தியவர்கள் இவர்கள். நான்கு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தது மட்டுமில்லாமல், அவர்களது குடும்பத்தின் மீதான வளர்ச்சியில் அடுத்தடுத்தும் அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்கள்.


ஒருநாள் தாமஸ் மாமாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் நிறைய சொன்னார். காலத்துக்கும் மறக்காது.


‘’பதிமூணு வயசுல அப்பா இறந்துட்டாரு. மொடாக் குடி. எங்க குடியையே கெடுத்துருச்சு. அம்மாவுக்கு படிப்பு இல்ல. ஆனா நல்லா சமைப்பாங்க. சாயந்திரமானா வீட்டு வாசல்ல, வடையும் பஜ்ஜியும் போடுவாங்க. காலைல நாலு வீட்ல பாத்திரம் கழுவி, வீடு கூட்டி வேலை பாத்தாங்க. அப்பா குடிகாரர்தான்னாலும் பொறுப்பானவர். அம்மா மேல அவருக்கு அப்படியொரு பிரியம். அதனால, அப்பாவோட இழப்பு, அம்மாவை கொஞ்சம் கொஞ்சமா உருக்கிப் போட்டுக்கிட்டே வந்துச்சு.


பதினாறாவது வயசுல லேத் பட்டறைக்கு வேலைக்குப் போனேன். நாலு வருஷம். அப்புறம் ரயில்வேல வேலை கிடைச்சது. மூணு வேளை சாப்பிட ஆரம்பிச்சது அப்பதான். அடுத்த ரெண்டாவது வருஷமே தம்பியையும் ரயில்வேல வேலைக்குச் சேர்த்துவிட்டேன். மாசக்கடைசில யாராவது அஞ்சோ பத்தோ வந்து கேட்டா, கொடுக்கிற நிலைமைக்கு வீடு மாறுச்சு. அம்மாவுக்கு பழைய தெம்பு வர ஆரம்பிச்சது. நாலு தங்கச்சிகளையும் படிக்க வைச்சோம். குருவி சேக்கற மாதிரி நகைகள் சேத்தோம். அடுத்த 12 வருஷத்துல, நாலு பேருக்கும் வரிசையா கல்யாணம் பண்ணி வைச்சோம். இந்த ஓட்டத்துல நானும் சரி, தம்பியும் சரி... கல்யாணம் பத்தி நினைக்கவே இல்ல. கல்யாண வாழ்க்கை இல்லாமலேயே வண்டி ஓடிருச்சு. இதுல எங்களுக்கு வருத்தமெல்லாம் இல்ல. மனசு முழுக்க ஒரு நிறைவு’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

படிக்கணும், வேலைக்குப் போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும், வீடு வாசல்னு சொத்து சேர்க்கணும் என்கிற டெம்ப்ளேட்டாக இருக்கிற சந்தோஷப் பட்டியல் கொண்ட வாழ்க்கைக் கணக்கு இங்கே! இதில், அண்ணனும் தம்பியும் சேர்ந்தே இருக்கவேண்டும், தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவேண்டும், அம்மாவை கெளரவமாக பூரிப்புடன் வாழச் செய்யவேண்டும் என்றெல்லாம் பட்டியலில் உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், சிலரின் வாழ்க்கையே இப்படியான சந்தோஷங்களில் நிறைவு பெறுகிறது, பூரித்துப் போகிறது என்பதற்கு அந்த தாமஸ் மாமா ஓர் உதாரணம்.


நான்கு மாதங்களுக்கு முன்பு, தெரிந்த பெட்டிக்கடைக்குச் சென்றேன். அங்கே அந்த அண்ணன், ‘வாங்க’ என்பது போல தலையசைத்தார். வழக்கம் போல் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார். செல்போனில் பேசியபடியே இருந்தார். அவர் பேச்சில் அப்படியொரு பூரிப்பு ப்ளஸ் படபடப்பு. பேசி முடித்தார். ‘மன்னிக்கணும் சார். எங்க பெரியப்பா பையன்... எனக்கு அண்ணன் முறைதானே. அவரோட பையன் கூட கடைல சிலசமயம் இருப்பானே. உங்களுக்குத்தான் தெரியுமே. அவனோட அண்ணனுக்கு பொண்ணு பாத்து, கல்யாணத் தேதியும் குறிச்சாச்சு. அதான் கல்யாணத்தை நல்லபடியா பண்ணனுமேன்னு ஓடிக்கிட்டே இருக்கோம்’’ என்றார்.


அவரின் உடன்பிறக்காத சகோதரன், பெரியப்பா மகன் இருபது வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் மனைவியும் அடுத்த சில வருடங்களிலேயே இறந்துவிட, அந்த இரண்டு பையன்களையும் மதுராந்தகம் பக்கமுள்ள கிராமத்தில் இருந்து சென்னையை அடுத்த மறைமலை நகருக்கு தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் . தன் பசங்களுடன் சேர்த்து இவர்களையும் படிக்கவைத்து, வளர்த்து ஆளாக்கினார். இப்போது மூத்தவன் கம்பெனி ஒன்று வைத்து இருபது பேருக்கு சம்பளம் தருகிறான். அவனுக்குத்தான் கல்யாணம். அடுத்தவன், தனியார் கல்லூரியில் பேராசிரியர்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘சார், ரெண்டு பசங்களும் சேர்ந்து, காசு சேர்த்து வீடு கட்டியிருக்காங்க சார். வீடுன்னா அப்படியிருக்கு. பெத்தவங்க இல்லாம வளர்ந்தவங்க. ஆனா, பொறுப்பா, நல்லதனமான குணங்களோட வளர்த்திருக்கோம்னு நிறைவா இருக்கு சார். இவங்க ரெண்டுபேர்ல, ஒருத்தன் சரியா இல்லேன்னா, ‘நல்லா வளர்த்திருக்கான்யா’னு எங்களைத்தானே ஏசுவாங்க சார். இந்தாங்க சார் இன்விடேஷன். குடும்பத்தோட அவசியம் வரணும் சார்’ என்று சொல்லும் போது, அவர் முகத்தில் இந்த உலகில், இந்த வாழ்க்கையில் ஏதோ சாதித்துவிட்டதான பூரிப்பு, பெருமிதம், நிறைவு.


நம்முடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் ஏகத்துக்கும் இருக்கின்றன. அது, பாகம் ஒன்று, இரண்டு என தடிமனான புத்தகங்கள் போல், போய்க்கொண்டே இருக்கும். அதேசமயம், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள், நமக்கு முன்னே நடந்துகொண்டே இருக்கின்றன. அதை உணர்ந்துவிட்டால், வாழ்வின் உன்னதம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதன் முட்டாள்தனம் புரிபட்டுவிடும்.


‘என்னய்யா, வீடு கட்டியாச்சா. கிரகப்பிரவேசம்னு சித்தப்பா பத்திரிகை கொடுத்தார்யா. அப்புறம்... உன்னையும் அண்ணனையும் ஆஹா ஓஹோன்னு புகழ்றாருய்யா உங்க சித்தப்பா’ என்றேன்.


அதுவரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டாவது பையன் ‘அவரை சித்தப்பான்னு சும்மா ஒறவுமுறைக்காகக் கூப்பிடுறோம் சார். எங்களுக்கு அப்பா, அம்மா எல்லாமே அவர்தான் சார்’ என்றான். பொசுக்கென கண்ணிலிருந்து கன்னம் வழிந்த கண்ணீரால், அவனால் பேச முடியவில்லை.


இங்கே உறவுகளின் உன்னதமும் புரியாமல், வாழ்வதன் அர்த்தமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘’சிவாஜி நடிச்ச ‘பாசமலர்’, ரஜினி நடிச்ச ‘ஆறிலிருந்து அறுபது வரை’ மாதிரி படங்களெல்லாம் அப்ப எடுத்தாங்க. ஓடுச்சு. இந்தப் படங்களை இப்போ ரீமேக் பண்ணினா, டப்பா டான்ஸாயிரும். இப்படியெல்லாமா நடக்கும்னு ஸ்டேட்ட்ஸ் போட்டு, படத்தை ஓட்டுஓட்டுன்னு ஓட்டிருவாய்ங்க’’ என்று 35 வயது மதிக்கத்தக்க நபர், ஜூஸ் கடை பாயிடம் புலம்பினார்.


’’சிவாஜியும் சாவித்திரியும் இல்லாம ‘பாசமலர்’ படத்தை நினைச்சுக் கூட பாக்கமுடியல. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி, இப்போ ரஜினி நடிச்சா எடுபடவே எடுபடாது’’ என்றும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.


‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே’


இப்படியெல்லாம் பாட்டு எழுத எவன்யா இருக்கான். கண்ணதாசன் கண்ணதாசன் தான்யா...’’ என்று சொல்லும்போதே அப்படியொரு கோபம் ஜூஸ் கடை பாய் முகத்தில்!


‘பாசமலர்’ மாதிரி இப்போது படமெடுக்க முடியுமா? நடிக்க ஆள் உண்டா? பார்க்க வருவார்களா? படம் ஓடுமா, புட்டுக்குமா? எனும் கேள்விகள் அடுக்கடுக்காக. உறவையும் உணர்வையும் நேர்க்கோட்டில் இணைத்த எத்தனையோ படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. இப்போது உறவையோ உணர்வையோ படங்கள் சொல்கிறதா? என்றெல்லாம் பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது.


அப்போது எனக்கு அந்த தாமஸ் மாமாவும் வின்சென்ட் மாமாக்களும் சட்டென்று வந்துபோனார்கள்.


இரண்டு சித்திகள் எனக்கு. அம்மாவுக்குக் கல்யாணமான கொஞ்சநாளில் பாட்டிக்கு சித்த சுவாதீனமில்லை. இறந்தும்விட்டாள். அப்போது நண்டும் சிண்டுமாக சித்திகள், மாமாக்கள். பெரிய சித்தி பள்ளியை நிறுத்திவிட்டு, வீட்டைக் கவனிக்கத் தொடங்கினாள். அப்பாவை, தங்கையை, தம்பிகளைப் பார்த்துக்கொண்டாள். வாழ்ந்துகெட்ட குடும்பம். அரிக்கேன் விளக்கு வெளிச்சம் பாயும் வீடு. ஒருகட்டத்தில், ‘மெஸ் வைக்கலாமே. காலேஜ் பக்கத்துல இருக்கே...’ என்று யாரோ சொல்ல, ‘சமைச்சுப் போட்ட மாதிரியும் ஆச்சு. நாமளும் குடும்பமா சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு’ என்று தம்பி சொல்ல, அக்கா சரியென்றாள். மெஸ் தொடங்கப்பட்டது.


‘’மூத்த அக்காவுக்கு கல்யாணமாகும் போது, நான் கைக்குழந்தை. ரெண்டு வயசாம் எனக்கு. அப்பாவுக்கு, என் இன்னொரு அக்காவுக்கு, அண்ணாவுக்கு சமைச்சுப் போட ஆள் வேணுமே. வீட்டைப் பாத்துக்க ஒருத்தர் வேணுமே. என்னோட ரெண்டாவது அக்கா, எனக்கு மட்டுமில்ல. எங்க அப்பாவுக்கு உட்பட எல்லாருக்குமே அம்மாவானா. அப்படித்தான் நான் உணர்ந்தேன்.


கல்யாணம் வேணாம்னுட்டா. கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா, உங்களையெல்லாம் யார் பாத்துப்பாங்கன்னு அவ சொன்னா. அப்போ சின்னப்பையன் நான். பெருசா தெரியல. வளர வளர, அதுவொரு வலியா, வேதனையா எனக்குத் தெரிஞ்சிச்சு. அக்கா வழக்கம் போல, வீட்டைத் தாங்கி நின்னா. கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கல. அக்காதான் அம்மா, அக்காதான் என் காட்ஃபாதர். அக்காதான் எங்க குலசாமி. அடுப்படிதான் அவ உலகம். ஒரு திங்கட்கிழமை... அதே அடுப்படில, வேலை பாத்துக்கிட்டிருக்கும் போது, நெஞ்சுவலின்னு சொன்ன அடுத்த நாலாவது நிமிஷம்... அங்கேயே சுருண்டு விழுந்தா. செத்துப் போனா.


85-ம் வருஷம் மெஸ் ஆரம்பிச்சோம். இன்னி வரைக்கும் மெஸ்தான் ஜீவனம் எங்களுக்கு. இப்போ என் மனைவி பாத்துக்கறா. ஒருவகைல, அக்கா போட்டுக்கொடுத்த கணக்கு இது. அதன்படியே இன்னிக்கும் மெஸ் நடத்திக்கிட்டிருக்கோம். ஆக, அக்கா இறந்து ஒன்பது வருஷமாச்சுன்னாலும், இப்ப வரைக்கும் அக்காதான் எங்களுக்கு சாதம் போட்டுக்கிட்டிருக்கா எங்களுக்கு’’ என்று மாமா நெகிழ்ந்து சொல்லக் கேட்டிருக்கிறேன்.


இன்றைக்குக் காரண காரியங்களே இல்லாமல், கல்யாணத்தைப் புறக்கணிக்கிற இளைஞர் கூட்டமும் உண்டு. ‘கல்யாணம் வேணாம்னு தோணுது’ என்று தோள் குலுக்கிச் சொல்கிற இளைஞர்களையும் ‘கல்யாணம் சுத்த வேஸ்ட். எவனுக்கோ ஒருத்தனுக்கு அடிமையாட்டம் இருக்க என்னால முடியாது’ என்று சொல்லும் பெண்களையும் பார்த்து பரிதாபமே ஏற்படுகிறது.


இதேசமயத்தில், ‘அக்காவுக்கு செய்யணும், தங்கச்சி பசங்களுக்கு செய்யணும்னு நீங்கதான் உருகுறீங்க. நம்ம பசங்களுக்கு இதுவரைக்கும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கிக் குடுத்திருப்பாங்களா அவங்க’ என்று கணவனை அட்டாக் செய்ய, நடுக்கூடத்தில் இப்படியான குண்டுகளைக் கொளுத்திப் போடுகிற உறவுகளும் இருக்கின்றன.


பொன்மலை ரயில்வே காலனியில், எங்கள் வீடு இருக்கிற வரிசைக்கு எதிர் வரிசையில் 12 வீடுகள். அதில் சரோஜினி அத்தையின் வீடும் ஒன்று. இப்போது அக்கம்பக்கம், பார்ப்பவர்கள் எல்லோரையும் அங்கிள், ஆன்ட்டி என்று பொத்தாம்பொதுவாக அழைக்கிறோம். ஆனால் அப்போது, அக்கம்பக்க வீடுகளில், நமக்கு கரீம் மாமா இருப்பார், ஜோஸப் அண்ணன் இருப்பார். எத்திராஜு சித்தப்பா இருப்பார். லலிதா சித்தி இருப்பார். இந்த உறவும் வார்த்தைகளும் எண்பதுகளின் இறுதி வரை இருந்ததாக நினைவு.


அந்த சரோஜினி அத்தை, என்னை மருமகனே என்றுதான் அழைப்பார். எப்போது போனாலும் ஏதேனும் சாப்பிடக் கொடுத்துவிடுவார். ‘மருமகனே. இன்னிக்கி எதுவும் சாப்பிடத் தரமாட்டேன். மட்டன் சமைச்சிருக்கேன்டா. அதான்’ என்பார். சரோஜினி அத்தையின் அன்புக்காகவும் அவர் வீட்டில் உள்ள ஊஞ்சலில் ஆடுவதற்காகவும் அடிக்கடி செல்வேன்.


சரோஜினி அத்தைக்கு ஒரேயொரு அண்ணன். பெங்களூருவில் இருந்தார். வருடத்துக்கு நான்கைந்து தடவை வருவார். அப்போது சரோஜினி அத்தை ரொம்பவே பிஸி. அவரைக் கையில் பிடிக்கமுடியாது. அதேபோல், பெங்களூருக்கு சரோஜினி அத்தை கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே வீடு ரணகளமாகிவிடும். ‘அண்ணனுக்கு இது புடிக்கும், அதை வாங்கு, அதைப் பண்ணனும்’ என்று வீட்டைப் பரபரப்பாக்கிவிடுவார்.


வாழ்வில் சில மரணங்கள் மறக்கவே மறக்காது. ‘சீரியஸ்’ என்று தந்தி வந்ததும், சரோஜினி அத்தை பெங்களூருவுக்கு ஓடினார். ஆறாம் நாள் அண்ணன் இறந்துவிட்டார். அடுத்த மூன்றாம் நாள் பால். அன்று காலை, சரோஜினி அத்தை எழுந்திருக்கவே இல்லை. நான்காம் நாள், சடலமாக சரோஜினி அத்தையைப் பார்த்தபோது, ‘அண்ணன் ஆஸ்பத்திரில இருந்த போதிருந்தே எதுவுமே சாப்பிடல. ஆஸ்பத்திரியிலேதான் இருந்தா. அவர் இறந்தப்ப, நாலு தடவை மயங்கி மயங்கி விழுந்தா. இதோ... அண்ணன் செத்ததும் மனசு உடைஞ்சு இவளும் போயிட்டா’’ என்று அய்யாசாமி மாமா நெஞ்சிலடித்துக்கொண்டு அழுதார்.


‘கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவை
பிரிக்க முடியாதடா!’

என்கிற கண்ணதாசன் வரிகளுக்கான அர்த்தத்தை, சரோஜினி அத்தையின் மரணத்தால் உணர்ந்தேன்.


’பாசமலர்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படங்களை ரீமேக் செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை. குடும்பத்தின் மொத்த சந்தோஷங்களுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கிற தாமஸ் மாமாக்கள், வின்சென்ட் மாமாக்கள், சித்திகள், சரோஜினி அத்தைகளை... நீங்களும் பார்த்திருப்பீர்கள். உணர்ந்திருப்பீர்கள்.


- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x