Published : 30 Oct 2019 02:23 PM
Last Updated : 30 Oct 2019 02:23 PM

துணைக்கண்டத்தின் சினிமா: 2- மதங்களைக் கடந்து இதயங்களைத் தேடும் படைப்புகள்


ஒரு காலத்தில் இந்தியாவை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தக் கூடிய இடத்தில் கொல்கத்தா இருந்தது. ஒருங்கிணைந்த வங்கமாக இருந்தபோது அன்றைய டாக்காவுக்கும் அந்தப் பெருமையில் கொஞ்சம் பங்குண்டு.

மிகச்சிறந்த இந்திய சிந்தனையை உலக அரங்கில் முன்னிறுத்தியதில் பெங்காலிகள் பங்கு என்ன என்று கேட்டால் ஒரு ரோஜாப்பூவில் இதழ்களின் பங்கு என்ன என்று கேட்பது போலாகும். ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ விவேகானந்தர் தொடங்கி மகாஸ்வேதா தேவி, தஸ்லிமா தஸ்லிமா நசுரீன் வரை காலந்தோறும் ஏற்பட்ட சமூக வாழ்வின் மாற்றங்களை தங்கள் சிந்தனைகளில் மிகச் சிறந்த முறையில் அவர்கள் பிரதிபலித்து வந்தனர்.

இருபதாம் நூற்றாண்டு தொடங்கி முதல் அரை நூற்றாண்டில் நடந்த அவ்வளவு சாதனைகளும் ஒரு மாயாஜாலம் என்றுதான் சொல்ல வேண்டும். ரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திர சட்டர்ஜி, பக்கிம் சந்திர சட்டர்ஜி, தாரா சங்கர் பானர்ஜி, தாரா சங்கர் பந்தோபாத்யாயா, விபூதி பூஷண் பந்தோபாத்யாயா தொடங்கி சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், நிமாய் கோஷ், உள்ளிட்ட கலை இலக்கிய ஆளுமைகளின் கோட்டையாக அது இருந்தது. அவர்களின் பல படைப்புகளும் மதங்களைக் கடந்து இதயங்களைத் தேடும் படைப்புகளாக அமைந்துள்ளன.

இன்று நாம் கொண்டாடும் நவீன தமிழ் இலக்கிய கதையாடல்களுக்கு எல்லாம் மூலக் கருவூலமாக வங்க மொழி திகழ்ந்தது. ஆனால் இதை உடனே மறுக்கத் தோன்றும். கடந்த காலங்களை வெகுவேகமாகக் கடக்க விழையும் மனம் அதை மறுக்கத்தான் செய்யும். மேற்குலக வாசலாகத் திகழ்ந்த வங்க மொழி நாவல்கள் அக்காலத்திய தமிழ் வார, மாத இதழ்கள் மற்றும் நூல் வெளியீடுகள் வாயிலாக த.நா.சேதுபதி, த.நா.குமாரசாமி போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளில் பரவசம்மிக்க கதைகளை அள்ளி வழங்கின. பிற்காலத்தில் வங்கப் படைப்புகளின் மொழிபெயர்ப்பு பொறுப்புகளை சு.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் ஏற்று அதை நன்றாகவே செய்தனர். ரவீந்திரநாத் தாகூரின் கதாபாத்திரங்களை விட நமது தாய்மொழி படைப்பாளர்களின் கதாபாத்திரங்களைவிட அதிக அளவில் குடும்பப் பெண்களின் இதயத்தில் இடம்பிடித்த கதாபாத்திரங்கள் சரத் சந்திரருடையவை.

ஒரு மிகப்பெரிய குடும்பம் சரிந்ததைப்போல அந்தக் கோட்டையின் வாசல்கள் இன்று சரிந்து கிடக்கின்றன. காலம் இவ்வளவு வேகமாக நம் எதிரே மாறும் என்று யார்தான் நினைத்திருக்கக்கூடும். அல்லது நாளடைவில் வளர்ந்துவந்த தகவல் தொடர்பு பரவலாக்கம் வங்கத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கலாம் என்று எண்ணலாம். ஆனால் அங்கிருந்து உன்னதமான கலை, இலக்கிய, இசைப் படைப்புகள் வருவதே கிட்டத்தட்ட நின்றுவிட்டன. அல்லது மாநிலத்திற்குள்ளேயே புழங்கக்கூடும்.

வங்காளத்தை அடியொற்றி உருவான தாக்கங்களில் முக்கியமானது கேரளா. ஆனால் கேரளாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே சிறந்தவை என்று சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் ஏராளமான கூறுகளை அது உள்வாங்கிக்கொண்டது. சர்வதேச அளவில் வியாபாரத்தில் ஒரு உறுதியான சினிமாத்துறையாக நின்று செயலாற்றும் தமிழ் சினிமாத் துறையைப்போல கேரளாவும் தமிழை அடியொற்றி ஏதோ ஒரு இடத்தில் நிற்கிறது. ஆனால் ஒரு சாதாரண சினிமாத்தொழில் துறையாகக் கூட இன்று நிற்கமுடியாமல் வங்க சினிமா சரிவைச் சந்தித்துள்ளது.

அதனால் எந்த இழப்புமில்லை. ஏனெனில் ஒரு துறையாக நிற்கவேண்டுமெனில் வங்கமும் தமிழ், பாலிவுட், தெலுங்குப் படங்களை முந்தும் காரியங்களில் இறங்க வேண்டும். நல்லவேளையாக இவர்கள் யாரையும் முந்தும் வேலையில் ஈடுபட்டு, படங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்துறையாக அது வெற்றிபெறாமல் போயிருக்கலாம். ஆனால் போலி சினிமாக்களை உருவாக்கி நகல் மக்களை உருவாக்கும் வேலையை மேற்கு வங்கம் ஒருநாளும் செய்ததில்லை. அதனால்தான் உலகம் போற்றும் அமர்த்தியா சென்களும் அபிஜித் பானர்ஜிகளும் அங்கு உருவாகிறார்கள்.

திரைப்படத்துறையைப் பொறுத்தவரை எப்போதோ துளிர்க்கும் நம்பிக்கைத் தளிராக சில பச்சையங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. அவர்களில் ஒருவர்தான் கவுதம் கோஷ். முந்தைய தலைமுறை கலைஞர்களுக்குப் பிறகு ஆளே இல்லையா என்ற கேள்வியை மறுதலித்தவர் அவர். அவரது பாதை ஒரு புரட்சிகர மெய்ஞான பாதை.

கன்னடத்தை பின்புலமாகக் கொண்ட மிகச்சிறந்த சமஸ்கிருதமொழி திரைப்பட இயக்குநர் ஜி.வி.அய்யர் உருவாக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுத்த மெய்ஞான பாதை அல்ல அது. அதையும் உள்ளடக்கிய சமகால வாழ்வின் யாத்திரை. சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பாதையும் கூட.

சமீபத்தில் ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் மஜீத் மஜீத் இயக்கிய 'பியான்ட் த கிளவுட்ஸ்' பார்க்க கிடைத்த வாய்ப்பில் முக்கியக் கதாபாத்திரத்தில் வந்த கவுதம் கோஷ் ஒரு சிறந்த கலைஞன் என்பதைக் காண முடிந்தது. எனினும் ஒரு திரைப்பட இயக்குநராகவே உலகம் அவரை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது.

கவுதம் கோஷ் இயக்கிய படங்களில் முக்கியமானது எது? முதல் பாடம் 'மாபூமி' தெலுங்கு தொடங்கி சமீபத்தில் மான்ட்ரீல் உலகத் திரைப்படவிழாவில் விருதுபெற்ற 'ஷாங்காச்சில்' வரை அனைத்துமே அரிய முயற்சிகளில் விளைந்த நல்ல படைப்புகள்தான்.

பிரிட்டிஷ் ஆட்சியில் தெலங்கானா விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிய 'மாபூமி' (1980), ஏழை விவசாயிகளுக்கு கல்வி அறிவூட்டி முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கும் கிராமத்து ஆசிரியர் நிலச்சுவான்தார்களால் கொல்லப்படும் 'பார்' (1984) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பத்மா டெல்டாவில் மீன்பிடி மக்களிடையே மத ஒற்றுமையைப் பேசிய 'பத்மா நதீர் மாஜிஹி' (1993), மனைவியின் அருமையை உடனிருக்கும்போது உணராமல் அவளது பிரிவுக்குப் பிறகு கவிதைகளை பாடித்
திரியும் வயதான பார்வைக் குறைபாடான கவிஞனின் கடந்த கால நினைவுகளைப் பேசும் (பாடும் என்று சொல்லலாம் அவ்வளவு பாடல்கள்) 'தேகா' (2001) போன்ற படங்கள் அனைத்துமே ஊரக கிராமப் பகுதி வாழ் எளிய மனிதர்களைப் பற்றியே இவரது படங்கள் பேசுகின்றன. மனிதர்கள்தான் எளியவர்களே தவிர படைப்புகள் ஒவ்வொன்றும் வலிமையானவை. சினிமா மொழியின் அழகியலுக்கு அர்ப்பணம் செய்யக்கூடியவை.

''மோனர் மானுஷ்'' (இதயத்தில் உள்ள மனிதன்) திரைப்படமும் கிட்டத்தட்ட இதேவகையான எளிய கதையாடல்தான். முஸ்லிம் ஃபக்கீர் ஒருவரைப் பற்றி தீர ஆராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட படம் இது. இதில் 19 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்து மறைந்த லாலன் என்ற இந்த அரிய மனிதர் 2000 ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அரபு நாடுகளில் ஜலாலுதீன் ரூமி போன்ற சூஃபியிசக் கவிஞர்கள் எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் ஏகாந்த வாழ்வில் பாடித் திரிந்தபடி இறைப் பாடல்களுக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். கிட்டத்தட்ட அதேவகையான முஸ்லிம் துறவிகள்தான் இந்த ஃபக்கீர்கள்.

ஜிப்பா அணிந்துகொண்டு டேப் அடித்தபடி பாடியவண்ணம் முஸ்லிம் வீடுகளில் யாசகம் கேட்டுச் செல்லும் சிலரை நாம் பார்த்திருக்கக் கூடும். அவர்களை ஃபக்கீர்கள் என சொல்வார்கள். பொதுவாக ஃபக்கீர்கள் என்பவர்கள் சூஃபிக்களின் வழித்தோன்றல்கள். சொந்தமாகப் பாடல் இயற்றிப் பாடும் ஞானம் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் பொன், பொருள், நிலம் எதையும் சொந்தம் கொண்டாட விருப்பமின்றி அனைத்தையும் துறந்துவிட்டுக் கடந்து செல்பவர்கள். கையில் ஒருபைசாகூட இன்றி நிறைவான மனநிலையோடு உலகைப் பார்ப்பவர்கள். ஆனால் இவர்கள் வாழும்போது இவர்களின் உண்மைத்தன்மை அறியாமல் இவர்களிடம் மோசமாக நடந்துகொண்டவர்களும் உண்டு.

வயதான நிலையில் லாலன் ஃபக்கீர், வங்கத்தில் ஜமீன்தார் ஜோதிரிந்திரநாத் தாகூரைச் சந்திக்கிறார். இவர் புகழ்பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர். ஜமீன்தார் ஜோதிரிந்திரநாத் தாகூர் 1889 ஆம் ஆண்டில் லாலனின் ஒரே உருவப்படத்தை பத்மா நதியில் படகு வீட்டில் அவரை அமரவைத்து வரைந்ததுதான் இன்று நமக்குக் கிடைத்துள்ள லாலனின் தோற்றத்திற்கான ஆதாரம். நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூர் உள்ளிட்ட வங்கக் கவிஞர்கள் பலரும் லாலன் ஃபக்கீரை தனது மானசீக குருவாக வரித்துக்கொண்டனர். எனவே, தாகூரின் கீதாஞ்சலி பாடல்கள் அனைத்தும் ஒரு சூஃபியிச பாடல்களைப் போல தோன்றுவது இயல்புதான்.

ஜமீன்தார் ஜோதிரிந்திரநாத் தாகூரிடம் ஓவியம் வரையும்போது படகில் தனது முந்தைய காலங்களைப் பற்றி ஃபக்கீர் லாலன் பகிர்ந்துகொள்வதுதான் 'மோனர் மானுஷ்' திரைப்படத்தின் அடிநாதம். நிகழ்காலமும் கடந்த காலமும் அதற்கும் முந்தைய நாட்களும் என படம் ஒரு பூமாலையில் சுற்றப்பட்ட மெல்லிய வண்ண இழைகளைப்போல மிகவும் கவித்துவமாக இயக்கப்பட்டிருக்கும்.

இனிய பாடல்களைப் பாடி மகிழ்விக்கும் இளைஞர் லாலனையும் அழைத்துக்கொண்டு பூரி ஜெகந்நாத் கோவில் யாத்திரைக்குச் செல்கிறார்கள் உள்ளூர் தனவந்தர்கள். வீட்டில் தனது மனைவி, தாய் தந்தையரைப் பிரிந்து அவர்களுடன் செல்கிறார். தாய் தந்தையரும் அவரது மனைவியும் லாலனின் பிரிவுக்காக வருந்துகின்றனர்.

யாத்திரையில் ஓரிடத்தில் அமர்ந்து இவரது பாடல்களை ரசிக்கிறார்கள். ஆனால் இவருக்கு அம்மை நோய் வந்தது கண்டு அவரை காளிகங்கா ஆற்றில் வாழைத்தண்டு தோணியில் மிதக்க விட்டுவிட்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். அம்மை கண்ட இளைஞர் லாலனை ஒரு முஸ்லிம் குடும்பம் கண்டெடுத்துக் காப்பாற்றுகிறது. முஸ்லிம் குடும்பத்தின் அன்பைப் பெறும் அந்த நாட்களில் அப்பகுதியில் வரும் ஃபக்கீர்களின் பாடல்களை அவர் கேட்கிறார். ஒரு கட்டத்தில் லாலனும் முஸ்லிம் ஃபக்கீராக மாறிவிட அந்த முஸ்லிம் குடும்பத்திலிருந்தும் பிரிகிறார். அவர்களது காலில் விழுந்து நன்றியுணர்ச்சியோடு விடைபெற்றுச் செல்லும்போது அவரது பிறந்த வீட்டில் உள்ளவர்கள் வருந்தியதைப்போலவே முஸ்லிம் குடும்பத்திலும் அவரது பிரிவுக்காக வருந்துகிறார்கள்.

லாலன் இறை நாட்டம் மிக்க தனிமைப் பயணம் காடு மேடு, நதி, சமவெளிகள் என நிர்ணயிக்காத பாதைகளால் அமைகிறது. அவரது பாதையில் அவரது சொந்த ஊரும் இடம்பெறுகிறது. ஆற்றங்கரையில் மனைவியையே அவர் சந்திக்கிறார். அவர் மனைவியோ வெள்ளுடை அணிந்திருக்கிறார்.

வெள்ளுடை கணவன் இறந்ததாக முடிவு செய்திருந்தால் மட்டுமே அணியக்கூடிய ஆடை. யாரோ ஒரு சாமியார் என நினைத்து காலில் ஆசிபெற நினைத்த மனைவி தனது கணவன்தான் என்றறிந்ததும் அவர் தண்ணீர் குடத்தைப் போட்டுவிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறார்.

லாலனின் மனம் உறவுகளை நினைக்கிறது. தாய், தந்தையரின் அன்புக்காகத் துடிக்கிறது. தற்செயலாக ஏற்பட்ட பிரிவுதான் வீட்டை விட்டுச் சென்றது. நான் ஒரு சாதாரண மனிதன்தான். எனக்குக் குடும்பத்தினரின் அன்பு தேவை என்று வீட்டுக்குச் செல்கிறார். தங்கள் மகன் லாலன் முஸ்லிம் ஃபக்கீர் ஆகிவிட்டது கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைகிறார்கள். ஊரே திரண்டு அவரது வீட்டுப்பக்கம் வருகிறது.

மிகப்பெரிய பாவக்காரியம் ஒன்றைச் செய்துவிட்டு வந்த ஒருவரைக் காண்பதுபோல காண்கிறது. லாலனின் மீது வெறுப்புச் சொற்களை உமிழ்ந்து அவரை ஒதுக்குகிறது. ஊர் தூற்றுவதை அவரது குடும்பத்தினர் பார்க்கிறார்கள். இந்து குடியானவர்கள் என்ற முறையில் முஸ்லிம் ஃபக்கீர் ஆகிவிட்ட லாலனை வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என குடும்பத்தினரும் வெளியேற்றி விடுகிறார்கள். இத்தனைக்கும் லாலன், தன்னைக் காப்பாற்றி உயிரோடு ஆளாக்கியது ஒரு முஸ்லிம் குடும்பம் தான். அவர்களது சூழ்நிலையில் நான் பல உண்மைகளை உணர்ந்தேன். மதத்தைவிட மனிதர்கள்தான் முக்கியம் என்று எடுத்துரைக்கிறார். ஆனால் அதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.

தான் மிகவும் நேசித்த தாய், தந்தையரின் புறக்கணிப்பு மனதில் வலியும் வேதனையுமாகப் பதிகிறது. 'மதம் மனிதனை ஏன் இவ்வளவு பாடுபடுத்துகிறது? அல்லது மதத்தை வைத்து மனிதன் இவ்வளவு வேறுபாடுகளை கற்பித்துக்கொள்கிறான்?' என்பதுதான் அவரது கேள்வி. இந்தக் கேள்வி அவரது எல்லாப் பாடல்களிலும் வருகிறது.

மனைவியுடனான காதல் நினைவுகளும் மெல்ல மெல்ல முகிழ்த்து மறைய, ஃபக்கீர் லாலன் ஷாவின் புதிய பயணம் விட்டேற்றியான ஆன்மிகப் பாடல்களோடு பரந்து விரிந்த எல்லையற்ற வெளியில் செல்கிறது.

அவரது பாடல்கள் முழுக்க மத வேறுபாடுகளைத் திணிக்கும் சமூக அமைப்புகளைக் கடுமையாக விமர்சனம் செய்கிறது. எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தாலும் லாலன் ஷா தனது சுயதரிசனத்திலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். அவரை மகாத்மா என்றும் அழைக்கிறார்கள். அவர் பாடியதாகச் சொல்லப்படும் 2000 பாடல்களில் 800தான் அவரே இயற்றியது என்றும் ஒரு கூற்று உண்டு. 'மோனர் மானுஷ்' திரைப்படத்தில் அவரது சில பாடல்கள் தகுந்த இசையோடு பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிற்சில இசை உபகரணங்களைக் கொண்டே படம் முழுவதும் நிறைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டமில்லாத வகையில் அனைத்துப் பாடல்களுக்கும் இதயத்தைக் கரைத்துப்போடும் மெல்லிய இசையை கவுதம்கோஷ் கம்போஸ் செய்துள்ளார். அவரது இசையை ஒருமுறை சத்யஜித்ரே பாராட்டியதையும் கவுதம் கோஷ் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

ஒரு ஃபக்கீரின் வாழ்வோடு பார்வையாளனை மனம் இசைந்து பிணைக்கும் லாவகத்தை இயக்குநர் கவுதம்கோஷ் மிகச் சிறப்பாக செய்துவிட்டார். மோனர் மானுஷுக்கு நல்ல வரவேற்பும் விருதுகளும் கிடைத்தன.

கவுதம் கோஷிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் ஒரு கேள்வி: ''என்றோ வாழ்ந்துவிட்டு மறைந்துவிட்ட ஒரு ஃபக்கீரைப் பற்றிய 'மோனர் மானுஷ்' படத்தை இன்று எடுக்கவேண்டிய அவசியம்....என்ன?''

அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்:

''1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. இந்த தேசம் பல மதங்களையும் வேறுபட்ட மனிதர்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து வைத்துள்ளது. புத்த மதம், ஜைன மதம், முஸ்லிம், இந்து என அனைத்துப் பிரிவினரும் அன்போடு சங்கமிக்கும் ஒரு கடந்து வந்த வரலாற்றை வரலாறாக அல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் கிராமங்களில் உள்ள சாதாரண மனிதர்களின் கதையாகச் சொல்ல விரும்பினேன். அதுதான் மோனர் மானுஷ்'' என்றார் கவுதம் கோஷ்.

- வளரும்...

பால்நிலவன், தொடர்புக்கு: sridharan.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x